இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நீ முடிசூட்டப்படுவாய்

இவ்வுலகிலிருந்து புறப்பட்டு, தேவ இஷ்டப்பிரசாத நிலையில் நித்தியத்திற்குள் நுழையும் ஓர் ஆன்மாவை நாம் கற்பனை செய்வோம். தாழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைந்ததாக அது தனது நடுவரும், இரட்சகருமான சேசுநாதருக்கு முன்பாகத் தோன்றுகிறது. சேசுநாதர் அதை அரவணைத்து, தமது ஆசீர்வாதத்தை அதற்குத் தந்து, ""வா, என் மணவாளியே, வா. நீ முடிசூட்டப்படுவாய்'' என்ற இனிய வார்த்தைகளை அது கேட்கச் செய்கிறார். அந்த ஆன்மா சுத்திகரிக்கப்பட வேண்டிய தேவையில் இருந்தால், அவர் அதை உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு அனுப்புகிறார். முற்றிலும் அமைந்த மனதோடு அது இந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், தான் முழுமையாக சுத்திகரிக்கப்படாத வரைக்கும், அந்த மாசற்றதனத்தின் நாடாகிய மோட்சத்திற்குள் நுழைய அதுவே விரும்புவதில்லை. அதன் காவல் தூதர் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு அதை வழிநடத்திச் செல்கிறார்; அது தனது வாழ்நாள் முழுவதும் அவர் தனக்குச் செய்த உதவிகளுக்காக அவருக்கு முதலில் நன்றி செலுத்துகிறது. அதன்பின் கீழ்ப்படிதலோடு அவரைப் பின்செல்கிறது. ஆ, என் தேவனே, நான் இந்த ஆபத்துக்கள் நிறைந்த உலகத்திலிருந்து, இனி உம்மை இழக்கும் ஆபத்தில்லை என்ற பாதுகாப்புணர்வோடு புறப்பட்டுச் செல்லும் நாள் எப்போது வரும்? ஆம், என்னுடையதாக இருக்கப் போகிற உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு நான் மன உவப்போடு செல்வேன்; அதன் எல்லா வேதனைகளையும் மகிழ்ச்சியோடு அணைத்துக் கொள்வேன்; அங்கே வேறு யாரையுமன்றி உம்மை மட்டுமே நான் நேசிப்பேன் என்பதால், அந்த நெருப்பில் உம்மை என் முழு இருதயத்தோடு நேசிப்பது எனக்குப் போதுமானதாக இருக்கும்.

உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுத்திகரிப்பு முடிந்தவுடன் தேவதூதர் திரும்பி வந்து அந்த ஆத்துமத்திடம்: வா, அழகிய ஆத்துமமே, தண்டனை முடிந்து விட்டது; வா, மோட்சத்தில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிற உன் சர்வேசுரனுடைய பிரசன்னத்தை அனுபவிக்க வா என்று சொல்கிறார். இதோ, அந்த ஆன்மா மேகங்களுக்கு அப்பால் இப்போது கடந்து போகிறது. வானமண்டலத்தின் பெருவெளிகளையும், நட்சத்திரங்களையும் கடந்து அது பறந்து சென்று, இதோ, மோட்சத்திற்குள் நுழைகிறது. ஓ சர்வேசுரா, அந்த அழகிய நாட்டிற்குள் அது நுழைந்து, தனது முதல் பார்வையை அந்த இன்பங்களின் நகரத்தின் மீது வீசும்போது அது என்ன சொல்லும்! தேவ தூதர்களும், புனிதர்களும், குறிப்பாக அதன் சொந்த, பரிசுத்த பாதுகாவலர்களும், அதற்காகப் பரிந்துபேசியவர்களும் அதைச் சந்திக்கச் செல்வார்கள், ""வரவேற்கிறோம், ஓ எங்கள் சொந்த நண்பனே, உன்னை வரவேற்கிறோம்!'' என்று சொல்லிப் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் அதை வரவேற்பார்கள். ஆ என் சேசுவே, இதற்கு நான் தகுதி பெறச் செய்தருளும்.

தனக்கு முன்பாக மோட்சத்திற்குள் நுழைந்திருந்த உறவுகளையும், நண்பர்களையும் சந்திக்கும்போது, அந்த ஆன்மா எத்தகைய ஆறுதலைத்தான் அனுபவிக்காது? ஆனால் தனது இராக்கினியாகிய மாமரியன்னையைத் தரிசிப்பதில் அதன் மகிழ்ச்சி எத்தனையோ மடங்கு அதிகமாகும். அவர்களுடைய திருப்பாதங்களை முத்தமிட்டு, அவர்கள் அதற்குக் காட்டிய எண்ணற்ற கருணைகளுக்காக அவர்களுக்கு நன்றி கூறுவதில் அது அளவற்ற மகிழ்ச்சியடையும். தேவ இராக்கினி அதை அரவணைத்து, தானே சேசுவுக்கு முன்பாக அழைத்துச் சென்று அவரிடம் சமர்ப்பிப்பார்கள். அவர் தனது மணவாளியாக அதை வரவேற்பார். அதன்பின் சேசுநாதர் தமது திவ்விய பிதாவிடம் அதை சமர்ப்பிக்க, பிதா அதை அணைத்து, ""உன் ஆண்டவரின் மகிழ்ச்சியில் பிரவேசி'' என்று சொல்லி அதை ஆசீர்வதிப்பார். இவ்வாறு தாமே அனுபவித்து மகிழும் பரலோகப் பேரின்ப பாக்கியத்தில் அந்த ஆத்துமத்தையும் அவர் பங்குபெறச் செய்வார். ஆ, என் தேவனே, நித்தியத்தில் அளவுக்கு அதிகமாக உம்மை நான் நேசிக்கும்படியாக, இவ்வாழ்வில் உம்மை அளவுக்கு அதிகமாக நான் நேசிக்கச் செய்யும். நீர் நேசிக்கப்பட பூரண தகுதியுள்ளவராக இருக்கிறீர்; என் முழு அன்பிற்கும் நீர் தகுதியுள்ளவராக இருக்கிறீர்; நான் வேறு யாரையுமன்றி உம்மை மட்டுமே நேசிப்பேன். உமது வரப்பிரசாதத்தால் எனக்கு உதவியருளும். மரியாயே, என் மாதாவே, என் பாதுகாவலியாக இருங்கள்.