மாதா தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படல்.

30 ஆகஸ்ட் 1944.
 மரியா தன் தந்தை தாய்க்கு நடுவே ஜெருசலேம் தெருக்கள் வழியாக நடந்து செல்வதைக் காண்கிறேன்.

முழுவதும் வெண்ணுடை அணிந்து மெல்லிய மேலாடை மூடிய அழகிய இச்சிறுமியை வழியே செல்வோர் நின்று பார்க்கின்றனர்.  அம்மேலாடையின் இள நிறப் பின்னணியில் சற்று இருண்ட நிறத்தில் கிளைகளும், பூக்களும் பின்னப் பட்டிருக்கின்றன.  இதிலிருந்து, இந்த மேல் வஸ்திரத்தையே அன்னம்மாளும் தன் சுத்திகரத்திற்கு அணிந்திருந்ததாகத் தெரிகிறது.  ஒரே வித்தியாசம் என்னவென்றால், அது அன்னம்மாளின் இடுப்பு வரைதான் எட்டியது.  ஆனால் சிறுமியான மரியாயின் கரண்டை வரையிலும் அது கவிழ்ந்து அவர்களை ஒரு சிறிய பிரகாசமாக ஒளிரும் மிக அபூர்வ அழகிய மேகத்தில் மூடியிருக்கிறது.

மரியாயின் அழகிய முடி அவர்கள் தோள்களில்,        அதாவது மெல்லிய கழுத்தில் அவிழ்ந்தபடி படிந்து, மேலாடையின் பூ வேலை இல்லாத இளநிற பாகத்தினூடே துலக்கமாய்த் தெரிகிறது.  அந்த மேல் துகில் அவர்களின் நெற்றியில் ஒரு வெளிறிய நீல நாடாவால் பிடிக்கப்பட்டுள்ளது.  அதிலே வெள்ளி நூலால் சிறிய லீலிகள் பூ வேலையாகத் தைக்கப்பட்டிருக்கின்றன.  இது அன்னம்மாளின் வேலைதான் என்பதில் ஐயமில்லை.

மரியாயின் வெண்ணுடை கால் வரையிலும் தொங்குகிறது.  அவர்களுடைய வெண்ணிறக் காலணியணிந்த பாதங்கள்         மட்டும் அவர்கள் நடக்கும்போது தெரிகின்றன.  அவர்களின் கரங்கள் இரு தாழம்பூவிதழ்கள் போல் நீண்ட சட்டைக் கைகளிலிருந்து எட்டிப் பார்க்கின்றன.  அந்த நீல நாடாவைத்        தவிர வேறு எந்த நிறமும் இல்லை.  எல்லாம் வெண்மை.  மரியம்மாள் வெண்பனியால் உடுத்தப்பட்டது போலிருக்      கிறார்கள்.

சுவக்கீன், சுத்திகரச் சடங்கிற்கு அணிந்திருந்த  ஆடையையே இப்போதும் அணிந்திருக்கிறார்.  ஆனால் அன்னம்மாள் ஒரு மிக இருண்ட ஊதா உடையும், அதே           நிறத்தில் அவள் தலையையும் மூடும் மேல் வஸ்திரமும் அணிந்துள்ளாள்.  அது அவள் கண்களின் கீழ் வரை கவிழ்ந்திருக்கும்படி அதைப் பிடித்திருக்கிறாள்.  கண்ணீர் விட்டுச் சிவந்து போன பரிதாபமான தாயின் கண்கள்.  அவை அழ விரும்பவில்லை.  - அதை விட அழுவதாகக் காணப்பட விரும்பவில்லை.  அவை அந்த மேல் வஸ்திரத்தின் மறைவில் கண்ணீர் சொரிகின்றன.  அந்தப் பாதுகாப்பு, வழியே போகிறவர்களையும் சுவக்கீனையும்  பொறுத்த வரையில் சரிதான்.  வழக்கமாக சுவக்கீனின் கண்கள் தெளிவாக இருக்கும்.  ஆனால் இன்று அவை அவர் சிந்திய, இன்னும் சிந்துகிற கண்ணீர்களால் மங்கிச் சிவந்து உள்ளன.   அவர் கூனிக் கொண்டு நடக்கிறார்.  தலைப்பாகை வடிவில் ஒரு துகிலால் தலையை மூடியிருக்கிறார்.  அதன் மடிப்புகள் அவர் முகத்தில் சரிந்து விழுகின்றன.

சுவக்கீன் மிக மூப்பாகி விட்டார்.  யாரும் அவரைப் பார்த்தால், அவர் தம் கையில் பிடித்திருக்கும் சிறுமியின்            தாத்தா  அல்லது தாத்தாவின் தகப்பன் என்றுதான் நினைக்க வேண்டும். மரியாயை இழக்கப் போகும் வேதனையில் அவர் கால்களை இழுத்தபடி நடக்கிறார்.  அவர் எவ்வளவு சோர்வாயிருக்கிறாரென்றால் 20 வருடம் மூப்பாகத்            தெரிகிறார்.  அவர் எவ்வளவு துயரமும் களைப்பும் கொண்டுள்ளாரெனில், ஒரு நோயாளி போல் காணப்       படுகின்றார்.  அவருடைய வாய் துடிக்கிறது.  அவருடைய        மூக்கின் இரு புறமும் உள்ள வரிகள் இன்று மிக ஆழமாயிருக்கின்றன.

அவர்கள் இருவரும் தங்கள் கண்ணீர்களை மறைக்க முயலுகிறார்கள்.  ஆனால் மற்றவர்களிடம் அதில் வெற்றி பெற்றாலும் மரியா குழந்தையிடம் முடியவில்லை.  தன் உயரத்தின் காரணமாக மரியா கீழிருந்தபடி தலையை உயர்த்தி, தன் தந்தை தாயை  மாற்றி மாற்றிப் பார்க்கிறார்கள்.  பெற்றோர் அவர்களை நோக்கி நடுங்கும் வாயால் புன்னகை செய்ய முயற்சிக்கிறார்கள். தங்களை மரியா பார்த்துச் சிரிக்கிற ஒவ்வொரு தடவையும் அவர்கள் பிள்ளையின் கரத்தை இறுகப் பிடிக்கிறார்கள்.  “ஐயோ, ஒவ்வொரு புன்சிரிப்பும் ஒரு தடவை குறைவாகிறதே” என்று  அவர்கள் நினைத்திருக்க   வேண்டும்.

அவர்கள் மெதுவாக நடக்கிறார்கள்.  மிக மெதுவாக          தங்கள் பயணத்தை எவ்வளவு கூடுமோ அவ்வளவு நீடிக்க விரும்புவதாகத்  தெரிகிறது.  எந்த ஒரு சாக்கும் நின்று விடக் காரணமாகிறது... ஆனால் எப்படியும் ஒரு பயணம் முடிவுக்கு வரத்தானே வேண்டும்!  இந்தப் பயணமும் முடியப் போகிறது.  அதோ அங்கே இந்த சாலை முடிகிற இடத்தில் தேவாலய மதில் சுவர்கள் எழும்புகின்றன.  அன்னம்மாள் முனகியபடி மகளின் கையை இறுக்கிப் பிடிக்கிறாள்.

அப்போது: “அருமை அன்னா!  இதோ நானும் வந்து விட்டேன்” என்று சாலையின் சந்திக்கு மேல் அமைந்த ஒரு தாழ்வான வளைவின் நிழலிலிருந்து ஒரு குரல் வருகிறது.  எலிசபெத்தம்மாள் இவர்களுக்காகக் காத்து நின்றவள் வந்து அன்னம்மாளை அணைத்துக் கொள்கிறாள்.  அன்னம்மாள் அழுவதைக் கண்டு:  “இந்த நண்பர் வீட்டிற்கு சற்று நேரம் வா.  பிறகு நாம் சேர்ந்து போகலாம்.  சக்கரியாஸும் இங்கேதான் இருக்கிறார்” என்கிறாள்.

அவர்கள் எல்லாரும் ஒரு தாழ்ந்த இருண்ட அறைக்குட் செல்கிறார்கள்.  அங்கு எரிகிற நெருப்பு மட்டுமே வெளிச்சம் கொடுக்கிறது.  அந்த வீட்டுக்காரி எலிசபெத்தின் சிநேகிதி            எனத் தெரிகிறது.  ஆனால் அன்னம்மாளுக்கு அவள்        பழக்கமில்லை.  அவள் இவர்களை விட்டு விட்டு உள்ளே போய் விடுகிறாள்.

அன்னம்மாள் அழுதபடியே:  “என மனம் மாறி விட்டதென்றோ, அல்லது என் பொக்கிஷத்தை நான் மனம் இல்லாமல் ஆண்டவருக்குக் கொடுக்கிறேன் என்றோ எண்ணாதீர்கள்.  என் இருதயம்... ஆ! என் வயதான இருதயம், குழந்தையற்ற தனிமைக்கு மறுபடியும் திரும்புவதைப் பற்றி வேதனைப்படுகிறது.  நீங்கள் இதை உணரக் கூடும் என்றால்...”

“அன்னா, எனக்குப் புரிகிறது...  நீ நல்லவள்.  ஆண்டவர் உன் தனிமையில் உனக்கு ஆறுதலளிப்பார்.  மரியா தன்                 தாயின் அமைதிக்காக மன்றாடுவாள்.  அப்படிச் செய்வாயல்லவா மரியா?”

மரியா தன் தாயின் கரங்களை தன் முகத்தோடு வைத்து அன்பு பாராட்டி முத்தமிடுகிறார்கள்.  அன்னம்மாள் தன்  பிள்ளையின் முகத்தைக் கரங்களில் எடுத்து முத்தமாரி  பொழிகிறாள்.

அப்போது சக்கரியாஸ் உள்ளே வந்து:  “நீதிமான்களுடன் ஆண்டவரின் சமாதானம் இருப்பதாக!” என்கிறார்.

சுவக்கீன் அதற்குப் பதில் மொழியாக: “ஆம்.  எங்கள் அமைதிக்காக மன்றாடுங்கள்.  ஆபிரகாம் மலையில் ஏறும்            போது, நடுங்கியதைப் போல, எங்கள் இருதயங்கள் எங்கள் காணிக்கையைப் பற்றி நடுங்குகின்றன.  ஆனால் இதற்கு              மாற்றுப் பலிப் பொருள் எங்களுக்கு அகப்படாது.  அதை                 நாங்கள் விரும்பவுமில்லை.  ஏனென்றால் நாங்கள்  ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் வேதனைப் படுகிறோம்.  சக்கரியாஸே,  நீர் கடவுளின் குருவாயிருப்பதால் தயவு செய்து எங்களைப் புரிந்து கொண்டு கலக்கமடையாதிரும்.” 

“நான் கலங்க மாட்டேன்.  மாறாக, நியாயமான       வரம்பைத் தாண்டாததும், உங்கள் விசுவாசத்தை அசைக்காததுமான உங்கள் துயரம், கடவுளை எப்படி நேசிப்பது என எனக்குக்        கற்றுத் தருகின்றது.  திடங் கொள்ளுங்கள்.  தாவீதுடையவும், ஆரோனுடையவும் மலரான இக்குழந்தையை தீர்க்கதரிசினியான அன்னாள் கவனித்துக் கொள்வாள்.  தற்சமயம், தாவீதின்              புனித சந்ததியாக தேவாலயத்தில் இருப்பது மரியா மட்டுமே.  ஆகவே ஓர் இராஜ முத்துப் போல் அவள் கவனித்துக்            கொள்ளப்படுவாள்.  மெசையா வரப் போகிற காலத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.  தாவீதின் கோத்திரத்தைச்       சேர்ந்த ஸ்திரீகள் தங்கள் பெண் மக்களை தேவாலயத்திற்கு அர்ப்பணிக்க ஆவலாயிருக்க வேண்டும்.  ஏனென்றால் தாவீதின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கன்னியிடமே மெசையா பிறப்பார்.  ஆயினும் பொதுவாக ஏற்பட்டுள்ள விசுவாசத் தளர்வினால் தேவாலயத்தில் கன்னியர்களின் இடம் காலியாகவே இருக்கின்றது.  வெகு சிலரே உள்ளனர்.  அவர்களும் அரச கோத்திரத்தார்         அல்ல.  மூன்று வருடங்களுக்கு முன் எலிசாவின் மகள் சாராள் திருமணஞ் செய்ய தேவாலயத்தை விட்டுச் சென்றபின் இப்படி உள்ளது.  உண்மைதான்.  மெசையாவின் வருகைக்காகக் குறிக்கப்பட்ட காலத்திற்கு இன்னும் முப்பது ஆண்டுகள்          உள்ளன.  ஆனால்... தேவாலய புனிதத் திரையின் முன்பாக             நிற்கப் போகும் தாவீதின் குலக் கன்னியர்கள் அநேகருள்                 மரியா முதலானவளாக இருப்பாள் என நம்புவோம்.             அப்போது... யார் அறிவார்கள்?”  இதற்கு மேல் சக்கரியாஸ் வேறொன்றும் கூறவில்லை.  ஆனால் அவர் சிந்தித்துக்  கொண்டே மரியா மீது பார்வையைச் செலுத்துகிறார்.  பின்னும் தொடர்ந்து:  “நானும் அவளைக் கவனித்துக் கொள்வேன்.  நான் ஒரு குரு;            இங்கு எனக்கு செல்வாக்கு உண்டு.  இந்த சம்மனசுக்கென              அதை நான் பயன்படுத்துவேன்.  எலிசபெத்தும் அடிக்கடி அவளைப் பார்க்க வருவாள்” என்கிறார்.

“நான் நிச்சயமாக வருவேன்.  கடவுள் எனக்கு எவ்வளவு தேவையாயிருக்கிறாரென்றால், நான் இச்சிறு பிள்ளையிடம் வந்து அதைச் சொல்வேன்.  அதை அவள் நித்தியரிடம் சொல்வாள்” என்கிறாள் எலிசபெத்தம்மாள்.

அன்னம்மாள் மீண்டும் திடமடைகிறாள்.  அவள் துயரத்தை மேலும் குறைக்கும்படி எலிசபெத்தம்மாள் கேட்கிறாள்:  “இது உன் திருமண முக்காடல்லவா?  அல்லது மஞ்சள் லினனில் புதியது நெய்தாயா?” என்று.

“இது அதே முக்காடுதான்.  அவளுடன் இதையும்              நான் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  எனக்கு இப்போ        கண் பார்வை சரியாக இல்லை... எங்கள் சொத்தும் வரி       விதிப்பாலும் இடர்ப்பாடுகளாலும் குறைந்து விட்டது...           என்னால் பெரும் செலவு செய்ய இயலவில்லை.  அவள் ஆண்டவருடைய வீட்டில் இருக்கும் வரை தேவையான உடுதுணிகளைத்தான் தேடியுள்ளேன்.  அதற்குப் பிறகு... அவள் திருமணத்திற்கு அவளை உடுத்துவிக்க நான் இருப்பேனென்று நினைக்கவில்லை... ஆயினும் அவளைத் திருமணத்திற்குத் தயாரிப்பதும், அவளுக்கு லினன்களையும், ஆடைகளையும் நெய்வதும் அவளுடைய தாயின் கரங்களாகவே இருக்க வேண்டும், அவை குளிர்ந்தும் அசைவற்றும் இருந்தாலும் கூட.” 

“நீ ஏன் அதை நினைக்கிறாய்?” 

“எனக்கு வயதாகி விட்டது.  இப்பெரிய வேதனையில் அதை உணருவது போல் ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை.   இந்த மலரைப் பெறவும், போஷிக்கவும் என் வாழ்வின்                    எல்லாப் பலத்தையும் கொடுத்திருக்கிறேன்.  இப்போது அவளை இழக்கும் துயரம் என் இறுதிப் பலத்தையும் இழுத்துச் சிதறடிக்கிறது.” 

“சுவக்கீனுக்காக நீ அப்படிச் சொல்லாதே.” 

“நீங்கள் சொல்வது சரி.  என் பத்தாவுக்காக நான் வாழ முயற்சிக்கிறேன்.” 

சுவக்கீன் இதைக் கேட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.  சக்கரியாஸ் சொல்வதைக் கேட்பதில் ஈடுபட்டிருக்கிறார்.  ஆயினும் அவர் காதில் இது விழுந்து ஆழ்ந்த பெருமூச்சு விடுகிறார்.  அவர் கண்களில் நீர் பெருகுகிறது.

“நேரம் மூன்றாம் மணிக்கும், ஆறாம் மணிக்கும் நடுப்பட்டதாகிறது.  நாம் புறப்பட வேண்டியதுதான்” என்கிறார் சக்கரியாஸ்.

எல்லாரும் எழுந்து புறப்பட தங்கள் மேல் வஸ்திரங்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.

அவர்கள் வெளியே செல்லுமுன் மரியா முழங்காலிட்டு கைகளை விரித்து:  “அப்பா!  அம்மா!  என்னை ஆசீர்வதியுங்கள்” என்று கேட்கிறார்கள் - மன்றாடும் ஒரு கெருபீன் போல.           மரியா, தைரியமுள்ள பிள்ளை.  அழவில்லை.  ஆனால்          உதடுகள் நடுங்குகின்றன.  பொருமும் குரல் உடைகிறது.  அது ஒரு சிறு புறாவின் நடுங்கும் கூவுதல் போலிருக்கிறது.  முகம் வெளிறியிருக்கிறது.  அமைந்த மனத்தின் துயரப் பார்வை.            இதே பார்வையை மறுபடியும் நான் கல்வாரியிலும்,    கல்லறையிலும் காண்பேன்.  அங்கே அது எவ்வளவு அதிக கூர்மையாயிருந்ததென்றால், மிஞ்சிய வேதனையில்லாமல் அவர்களைப் பார்க்கக் கூடாததாயிருந்தது.

பெற்றோர் மரியாயை ஆசீர்வதிக்கின்றனர்.  முத்தமிடுகின்றனர்.  பல தடவைகள்.  எலிசபெத் மவுனமாய் அழுகிறாள்.  சக்கரியாஸ் கண்ணீரை மறைக்க முயன்று            உணர்ச்சி வசமாகிறார்.  மரியா தன் பெற்றோருக்கு நடுவே முன்போல் நடக்க, அவர்கள் வெளியேறி புறப்பட்டுச் செல்கின்றனர்.  சக்கரியாஸும், எலிசபெத்தும் முன்னால் நடக்கிறார்கள்.

தேவாலயத்தின் சுவர்களுக்குள் அவர்கள் வருகின்றனர்.  “நான் பெரிய குருவிடம் போகிறேன்.  நீங்கள் பெரிய மெத்தைக்குப் போங்கள்” என்கிறார் சக்கரியாஸ்.

அவர்கள், அடுக்கடுக்காய் உள்ள மூன்று பெரிய முற்றங்களையும் கடந்து, மூன்று பெரிய சாலை அறைகளையும் கடந்து மேலே போகிறார்கள்.  இப்போது அவர்கள் பொன்னால் மேல்  பாகம் அமைந்த பெரிய கன சதுர சலவைக் கல்லின் அடியில் நிற்கிறார்கள்.  ஒவ்வொரு குவி மாடமும் கவிழ்த்திய அரை ஆரஞ்சுப் பழம் போல் சூரிய ஒளியில் பிரகாசிக்கிறது.  அம்மகத்தான கட்டிடத்தைச் சுற்றிய பெரிய முற்றத்தில் சூரியன் நேராகக் காய்கிறது.  பெரிய சதுக்கத்திலும் ஆலயத்துக்கு ஏறிச் செல்லும் அகன்ற படிக்கட்டிலும் கூசும்படி ஒளி வீசுகிறது.  படிகளுக்கு எதிரேயுள்ள வளைவு மண்டபத்திலும், கட்டிடத்தின் முகப்பிலும் மட்டும் நிழல் படுகிறது.   மிக உயரமான வெண்கலமும், பொன்னுமான கதவு கூடுதல் நிழல் பட்டாலும், அவ்வளவு வெளிச்சத்தில் கம்பீரமாய்த் தோன்றுகிறது.

இத்தனை சூரிய ஒளியில் மரியா பனியை விட வெண்மையாய்க் காணப்படுகிறார்கள்.  இப்போது அவர்கள் படிக்கட்டுகளின் அடியில் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் நிற்கிறார்கள்.  அவர்களுடைய இருதயங்கள் எவ்வளவு வேகமாய் அடித்துக் கொள்ளும்!  எலிசபெத்தம்மாள் ஒரு அரை எட்டு அன்னம்மாளுக்குப் பின்னால் நிற்கிறாள்.

வெள்ளி எக்காளங்கள் முழங்குகின்றன.  ஆலயக்                கதவு அதன் கீல்களில் சுழல்கிறது.  அது வெண்கல          உருளைகளில் சுழலும்போது கம்பித் தந்திகளுள்ள இசைக் கருவியின் ஓசையை எழுப்புகிறது.  ஆலய உட்பாகம் காணப்படுகிறது.  அதன் கடைக் கோடியில் விளக்குகள் தெரிகின்றன.  கதவை நோக்கி ஒரு பவனி வருகிறது.  ஒரு பிரமாதமான பவனி.  வெள்ளி எக்காளங்களுடனும், தூபப் புகை மேகங்களுடனும் ஒளி விளக்குகளுடனும் வருகிறது.

பவனி வாசலுக்கு வந்து விட்டது.  முதலில் வருகிறார் பெரிய குரு.  கம்பீரமானவர்; வயது முதிர்ந்தவர்;  மிக நுண்ணிய லினன் துகில் அணிந்துள்ளார்.  அதன்மேல் ஒரு குறு அங்கி.  அதற்கு மேல் ஒரு வகை ஆயத்தம்.  அது பல வர்ணத்தில் பூசை ஆயத்தத்திற்கும், தியாக்கோனின் “டல்மாடிக்”கிற்கும் இடைப்பட்ட வடிவில் உள்ளது.  ஊதாவும், பொன்னிறமும், ஊதாவும் வெள்ளையும் மாறி மாறி சுடர் விடுகின்றன,  சூரிய ஒளி பட்ட இரத்தினம் போல்.   அவருடைய தோளின் உச்சியில் இரண்டு உண்மையான இரத்தினக் கற்கள் அதிக ஒளியோடு பிரகாசிக்கின்றன.  அவை விலையுயர்ந்த ஆபரணம் பதிக்கும் கொளுவியில் உள்ளதாக இருக்கலாம்.  அவருடைய மார்பில் மணிக்கற்கள் பதித்து, சுடர் வீசும் அகன்ற உலோகத் தகடு தங்கச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது.  அவருடைய குறு அங்கியில் தொங்கல்களும், தொங்கும் பூ நுனிகளும் உள்ளன.  அவருடைய நெற்றிக்கு மேலே தலைச் சீராவில் பொன் பிரகாசிக்கிறது.   அது ரோமன் கத்தோலிக்க மேற்றிராணிமாரின் முனைகள் உள்ள “மைற்றர்” தொப்பியைப் போலல்லாமல் கீழ்நாட்டு ஆர்த்தடாக்ஸ் பிரிவினைக்காரரின் குமிள் வடிவமாயிருக்கிறது.

அவர் படிகள் வரையிலும் தனியாக வருகிறார்.  பொன்மயமான சூரிய ஒளி அவரை இன்னும் அதிக அலங்காரமாக்குகிறது.  மற்றவர்கள் மண்டபத்தின் நிழலில் வாசலுக்கு வெளியே வட்டமாகக் காத்து நிற்கிறார்கள்.  இடது பக்கத்தில் வெண்ணுடையணிந்த நங்கையரும்,                தீர்க்கதரிசினி அன்னாளும், ஆசிரியைகளான மற்ற ஸ்திரீகளும் நிற்கிறார்கள்.

பெரிய குரு நம் சிறுமியைப் பார்த்து புன்னகை செய்கிறார்.  எஜிப்திய கோவில்களுக்குரியவை போல் காணப்படும் படிக்கட்டின் அடியில் நிற்கும் மரியா மிகச் சிறிய                 உருவமாகக் காட்சியளிக்கிறார்கள்.  குரு தன் கரங்களை         வானத்தை நோக்கி உயர்த்தி ஜெபிக்கிறார்.  நித்திய மகத்துவத்துடன் உரையாடும் குருத்துவ மகத்துவத்தின் முன்பாக, அவர்கள் அனைவரும் முழு தாழ்ச்சியுடன் தலைவணங்குகிறார்கள்.

பின், பெரிய குரு சின்ன மரியாயை அழைக்கிறார்.           கவர்ந்து இழுக்கப்பட்டது போல் மரியா தன் தாயையும், தந்தையையும் விட்டு படிக்கட்டில் ஏறுகிறார்கள்.  புன்னகை அரும்புகிறது. ஆலய நிழலில், மதித்தற்குரிய திரை                 தொங்கும் இடத்தில் நின்று புன்னகை புரிகிறார்கள்... இப்பொழுது            அவர்கள் உச்சிப்படியில் பெரிய குருவின் பாதத்தடியில்                   வந்து விட்டார்கள்.  அவர் மரியாயின்  தலைமேல் கரங்களை வைக்கிறார்.  பலிப்பொருள் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.  இதை விடப் புனிதமான பலிப் பொருளை இத்தேவாலயம் எப்போது ஏற்றது?

பின்னர் பெரிய குரு திரும்பி சிறுமியின் தோளில்                  கரம் வைத்து, பீடத்திற்கு மாசற்ற செம்மறியை நடத்துவது              போல், ஆலய  வாசலுக்கு நடத்திச் செல்கிறார்.  அவர்களை உள்ளே போகவிடுமுன் கேட்கிறார்:  “தாவீதின் மரியா, உன் வார்த்தைப்பாட்டை நீ உணர்ந்திருக்கிறாயா?” என்று.  அதற்கு மரியா, “ஆம்” என்று கணீரென்ற குரலில் பதிலளிக்கிறார்கள்.  “அப்படியானால் உள்ளே செல்.  என் சந்நிதியில் நடந்து உத்தமமாயிரு” என்கிறார் குரு.

மரியா உள்ளே செல்கிறார்கள்.  அங்குள்ள இருள்          அவர்களை மறைத்து விடுகிறது.  கன்னியர்கள், ஆசிரியைகள்,            பின் லேவியர்கள் ஆகியோரின் வரிசைகள் மரியாயை மேலும் மறைத்து பிரிக்கின்றன... இப்பொழுது அவர்களைக் காண முடியவில்லை...

தேவாலயத்தின் கதவும், தன் இனிய நாதமெழுப்பும் கீல்களும் மூடுகிறது.  கதவின் இடைவெளி மேலும் மேலும் சிறிதாகிறது.  அதனூடே பரிசுத்தத்திலும் பரிசுத்த ஸ்தலம் நோக்கி பவனி செல்வதைக் காண முடிகிறது. இப்பொழுது அந்த இடைவெளி ஒரு நூல் போலாகிறது - அதுவும் இல்லாமலாகிறது - கதவு மூடி விட்டது.

கதவின் கீல்களுடைய இசையான ஓசைக்கு இரு வயதான பெற்றோர்களின் அழுகையும் பதிலளிக்கின்றன. அவர்கள் இருவரும் சேர்ந்து புலம்புகிறார்கள்:  “மரியா! மகளே!” என்று.  பின் ஒருவரையயாருவர் துயரமாய்க் கூப்பிடும் குரல்கள்:  “அன்னா; சுவக்கீன்!” என்று கேட்கின்றன.  அதன் பின் அவர்கள் மெல்லிய குரலில் இப்படிக் கூறி முடிக்கிறார்கள்:  “அவளைத் தம் இல்லத்தில் ஏற்று, தம் பாதையிலேயே அவளை  வழிநடத்தும் ஆண்டவரை நாம் மகிமைப்படுத்துவோம்.” 

காட்சி முடிவடைகிறது.


சேசு கூறுகிறார்: 

“என் சந்நிதியில் நடந்து உத்தமமாயிரு” என்று பெரிய குரு சொன்னார்.  உத்தமதனத்தில் கடவுளுக்கு மட்டுமே தாழ்ந்திருந்த மாதிடமே தான் பேசுவதாக அவர் அறியாதிருந்தார்.  ஆனால் அவர் கடவுளின் பெயரால் பேசினார்.  அதனால் அவருடைய கட்டளை சங்கைக்குரியதாயிருந்தது.  அது, ஞானத்தால் நிரம்பியிருந்த கன்னிகையைப் பொறுத்த மட்டில் எப்போதும் சங்கைக்குரியதாகவே இருந்தது.

“ஞானமானது மாமரிக்கு முந்தி நடக்கவும், அது முதலில் அவர்களுக்குத் தன்னையே வெளிப்படுத்தவும்” அவர்கள் தகுதி பெற்றிருந்தார்கள்.  ஏனென்றால், மரியம்மாள் “தன் நாளின் தொடக்கத்திலிருந்தே ஞானத்தின் வாசலில் காத்திருந்து, ஞானத்தால் தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஆசித்து, அன்பினால் பரிசுத்தமாயிருக்கவும்,  உத்தம அன்பை அடையவும், தன் ஆசிரியராக ஞானத்தைக் கொண்டிருக்க தகுதி பெறவும்” விரும்பினார்கள்.

பிறக்கு முன்பே ஞானத்தை உடையவர்களாக தான் இருந்ததை, தன் தாழ்ச்சியால் அவர்கள் அறியாதிருந்தார்கள்.  ஞானத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஐக்கியம்           பரலோகத்தின் தெய்வீகத் துடிப்பின் தொடர்ச்சியே என்றும் அறியாதிருந்தார்கள்.  அவர்களால் அப்படி நினைக்க         முடியவில்லை.  அவர்களுடைய இருதய ஆழத்தில் கடவுள் உந்நதமான வார்த்தைகளை மெல்லக் கூறிய போது, அவர்கள்           தன் தாழ்ச்சியினால், அவை அகங்காரத்தின் நினைவுகள்              என்று கருதி, தன் மாசற்ற இருதயத்தைக் கடவுளை நோக்கி                எழுப்பி, “ஆண்டவரே!  உம்முடைய அடிமையின் மேல் இரக்கமாயிரும்” என்று மன்றாடினார்கள்.

ஆ!  உண்மையான ஞானமுள்ள கன்னிகை, நித்திய கன்னிகை.  தன் நாளின் தொடக்க முதலே, ஒரே ஒரு               எண்ணமே கொண்டிருந்தார்கள் என்பது உண்மை.  வாழ்வின் காலைப் பொழுதிலிருந்தே தன் இருதயத்தைக் கடவுளை              நோக்கி எழுப்ப வேண்டும், ஆண்டவருக்காகக் காத்திருக்க வேண்டும், மிக உந்நதரின் முன்னிலையில் மன்றாட வேண்டும், தன்னுடைய தாழ்ச்சி தனக்கு உறுதியளித்தபடி தன்              இருதயத்தின் பலவீனங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே அது.  இப்படிச் செய்ததில் அவர்கள், உயிர் விடும்                  தன் குமாரனுடன் சிலுவையடியில் பாவிகளுக்காக தான்            மன்றாடப் போவதை இப்பொழுது முன்கூட்டியே செய்வதாக அறிந்திருக்கவில்லை.

“பேர் பெரும் ஆண்டவர் தீர்மானம் செய்யும்போது அவர்கள் புத்தியின் இஸ்பிரீத்துவால் நிரப்பப்படுவார்கள்.”  அப்போது அவர்கள் தன் பெரும் அலுவலைப் புரிந்து  கொள்வார்கள்.  தற்சமயம் அவர்கள் ஒரு குழந்தைதான்.  தேவ ஆலயத்தின் புனித அமைதியில், தன் கடவுளுடன் நெருக்கமான, அதிக நெருக்கமான தொடர்புகளையும், பாசத்தையும், ஞாபகங்களையும் ஏற்படுத்துகிற, மீண்டும் ஏற்படுத்துகிற, குழந்தையாக இருந்தார்கள்.

இது எல்லாருக்கும் கூறப்பட்டது.

ஆனால் சின்ன மேரி, உன் ஆசிரியர் உனக்குத் தனியாக யாதொன்றும் சொல்வதற்கில்லையா?  “என் சந்நிதியில் நடந்து உத்தமமாயிரு.”  இந்தத் திருவசனத்தை சற்று மாற்றி, அதை உனக்குக் கட்டளையாக நான் தருகிறேன்:  அன்பில்      உத்தம மாயிரு, தாராள குணத்தில் உத்தமமாயிரு, துன்பப்படுவதில் உத்தமமாயிரு.

தாயை இன்னொரு முறை ஏறிட்டுப் பார். அநேகர் புறக்கணிப்பதை அல்லது புறக்கணிக்க விரும்புவதை சிந்தனை                      செய்.  ஏனென்றால் துயரம் என்பது அவர்களுடைய                சுவைக்கு, அவர்களுடைய மனதிற்கு அதிக உபத்திரவமாயிருக்கிறது.  துயரம்!  மாதா தன் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே துயரத்தை அனுபவித்தார்கள்.  அவர்கள் உத்தமமாயிருந்தார்களே, அதற்கு உத்தமமான நுண் உணர்தலும் தேவையாயிருந்தது. அதன் காரணமாக, பரித்தியாகமும் கூடுதல் குத்தித் துளைப்பதாயிருந்தது.  அதனால் அது அதிகப் பேறுபலனுடையதாகவும் இருந்தது.  தூய்மையைக் கொண்டிருப்பவன் அன்பைக் கொண்டிருக்கிறான்.  அன்பைக் கொண்டிருக்கிறவன் ஞானத்தைக் கொண்டிருக்கிறான்.  ஞானத்தைக் கொண்டிருக்கிறவன் தாராள தன்மையையும்,                  வீர வைராக்கியத்தையும் கொண்டிருக்கிறான். ஏனென்றால்              தான் எதற்காக அத்தியாகத்தைச் செய்கிறான் என அறிந்திருக்கிறான்.

சிலுவை உன்னைக் குனிய வளைத்தாலும், உன்னை முறித்தாலும், உன்னைக் கொன்றாலும், உன் உள்ளத்தை உயர எழுப்பு.  கடவுள் உன்னோடிருக்கிறார்.