இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே!

இயற்கை நியாயங்கள் அல்லது காரணங்களைக் கொண்டு, எதிர்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை நாம் முன்னதாகவே அறியலாம். பல நாட்களுக்குப் பின் வரவிருக்கும் பருவ மழையைப் பற்றியும், புயற்காற்றைப் பற்றியும் முன்னதாகவே திட்டமாய் அறியலாம். 

வான் வீதியில் பவனிவரும் கோடானுகோடி விண்மீன்களின் போக்கை விளக்கலாம். வால் நட்சத்திரம் வருங்காலத்தில் எப்பொழுது தோன்றுமென வான சாஸ்திரிகள் கணிக்கலாம். ஆனால், இயற்கையின் எத்தகைய சாதனங்களைக் கொண்டும் அறிய முடியாத எதிர்காலச் சம்பவங்களை முன்னறிவிப்பது யாவருக்கும் எளிதன்று. 

ஏனெனில் தீர்க்க தரிசனம் எனப்படும் இச்செயலுக்கு சர்வேசுரனின் வரப்பிரசாதம் வேண்டும். “தீர்க்கதரிசனமானது எக்காலத்திலாவது மனிதருடைய மனதினால் உண்டானதல்ல. சர்வேசுரனுடைய பரிசுத்த மனிதர்கள் இஸ்பிரீத்து சாந்துவினால் ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 இரா. 1:21). 

எனவே சர்வேசுரனுடைய பெயரால் பிரசங்கித்து, தேவ சித்தத்தையும், இயற்கை நியாயங்களைக் கொண்டு முன்னறிய முடியாத சம்பவங்களையும் இனிமேல் வரவிருப்பதாக சர்வேசுரனிடமிருந்து தெரிந்து அவைகளை சந்தேகத்துக்கு இடமின்றி அறிவிக்கிறவர்களே தீர்க்கதரிசிகள் ஆவர்.

இத்தீர்க்கதரிசிப் பட்டம் பழைய ஏற்பாட்டில் ஒரு சிலருக்கே உரித்தாயிருந்தது. சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப் பட்ட யூத ஜனங்கள், தேவனுக்குகந்தவர்களாய் நடக்காவிட்டால் அவர்களுக்கு வரவிருந்த சாபங்களையும், தண்டனைகளையும் முன்னறிவித்தவர்களும், மனுக்குல இரட்சணியத்தின் பொருட்டு உலகில் அவதரிக்க விருந்த மெசியாவின் பிறப்பையும், பாடுகளையும், மகிமையையும் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன் எடுத்துக் கூறியவர்களும் தீர்க்கதரிசிகள் எனப்படுவர். 

இவர்கள் யாவரும், சர்வேசுரன் தம் வேலைக்குக் கையாண்ட கருவிகள் அல்லது ஆயுதங்கள் என்று சொல்ல வேண்டும். இவர்களைக் கொண்டே அரும் பெரும் காரியங்களை அவர் வெளியிட்டார். இவர்கள் வழியாகவே கடவுள் பேசினார். இதினிமித்தமே, தீர்க்கதரிசிகள் கடவுளின் தூதர்கள் என்றும், ஆண்டவரின் அடியார்கள் என்றும், கடவுளின் வாய் என்றும் வருணிக்கப்பட்டார்கள்.

இத்தீர்க்கதரிசிகளில் சிலர்--உதாரணமாக, தாவீது அரசர், இசையாஸ், எரேமியாஸ், எசேக்கியேல், தானி யேல், யோனாஸ், மிக்கேயாஸ், மலாக்கியாஸ் -- பின்னால் வரவிருந்த சம்பவங்களை, தேவ ஏவுதலால் கண்டு, அவைகளை எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இவ்விதம் இவர்கள் எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ள புத்தகங்கள் பழைய ஏற்பாட்டுத் தொகுதியில் (Canon of the Old Testament) இடம் பெற்றுள்ளன.

இவர்கள் தவிர பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோயீசன், நாதான், எலியாஸ், எலிசேயுஸ், ஆரோன், மரியாள் (மோயீசனின் சகோதரி) போன்ற இன்னும் அநேக தீர்க்கதரிசிகளும் இருந்தனரென பரிசுத்த வேதாகம வாயிலாக அறிகின்றோம். 

மேலும் புதிய ஏற்பாட்டில், சக்கரியாஸ், சிமியோன், அன்னாள், ஸ்நாபக அருளப்பர் முதலானோர் மெசையாவைப் பற்றிய சம்பவங்களை முன் அறிவித்த தீர்க்கதரிசிகளாவர். அர்ச். ஸ்நாபக அருளப்பர் மெசையாவின் அரசாட்சி சமீபித்து வருவதைப் பற்றி மக்களுக்குப் போதித்து, அவருடைய வருகைக்காக ஜனங்களை ஆயத்தம் செய்தார்.

ஆண்டவரது ஆலோசனையில் நிலைத்து, ஆண் டவருடைய நாமத்தில் பேசி, அவருடைய திருவாக்கை மக்களுக்கு அறிவிக்க அனுப்பப்பட்ட இப்புண்ணிய தீர்க்கதரிசிகளின் இராக்கினி, பார் புகழ் பரிசுத்த மாமரி. இத்தீர்க்கதரிசிகளில் சிலர் மாமரியைப் பற்றித் தெளிவாக வும், மற்றும் சிலர் உவமைகள் (metaphors) மூலமாகவும் அறிவித்துள்ளனர்.

பரிசுத்த வேதாகமத்தில் பரிசுத்த கன்னிமாமரி யைக் குறிக்கும் தீர்க்கதரிசன வசனங்களுக்குக் கணக்கில்லை. “ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழ் சந்திரனும், சிரசின் மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தது” என அர்ச். அருளப்பர் தமது காட்சியாகமத்தில் புகழ்ந்தேற்றும் ஸ்திரீ கன்னிமாமரியல்லாது வேறு யார்? 

பழைய ஏற்பாட்டில் தேவதாயைப் பற்றித் தெளிவாகக் கூறும் இத்தகைய வசனங்களும், உவமைகளாலும், வேறு அடையாளங்களாலும் மறைமுகமாக மாமரியைக் குறிக்கும் தீர்க்க தரிசன வசனங்களும் பல பரந்து கிடக்கின்றன. 

கன்னி மாமரி இவ்வுலகில் தோன்றுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே தீர்க்கதரிசிகளின் உள்ளங்களில் உதித்தார்கள். அவர்கள் இவ்வுத்தமியின் பண்புகளையும் பாக்கியத்தையும் பார்த்து மகிழ்ந்தனர். தாங்கள் கண்ட அக்கன்னிகையை தீர்க்கதரிசன வார்த்தைகளால் சித்தரித்தனர்.

ஆதியாகமத்தில், “உனக்கும், ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவளுடைய வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்” (ஆதி. 3:15) என எழுதப்பட்டிருக்கிறது. இங்கு குறிக்கப்பட்டிருக்கும் ஸ்திரீ, சேசுவை ஈன்றவர்களும், பசாசாகிய பாம்பின் தலையை நசுக்கியவர்களுமான பரிசுத்த கன்னிமாமரியல்லவா? 

“பெத்சாபி என்பவள் அதோனியாவுக்காக சாலமோன் அரசரிடத்தில் பரிந்து பேசப் போனாள். அப்போது அரசன் எழுந்து அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிம்மாசனத் தின் மேல் அமர்ந்து, அரசனின் அன்னைக்கு வலது புறம் ஓர் ஆசனமிட அதில் அவள் அமர்ந்தாள்” (3 அரசர் 2:19). அரசராகமத்தில் வரும் இந்த பெத்சாபி, நமக்காக மகனும், அரசருமான சேசு அரசரிடத்தில் மனுப்பேசுகிறவர்களும், அவரால் மதிக்கப்பட்டு அவருடைய வலது பக்கத்தில் உட்காரும் பாக்கியம் பெற்றவர்களுமான மரியாயைக் குறித்துக் காட்டுகிறாள் அன்றோ!! 

“என் மகளே, பூவுலகிலுள்ள சகல ஸ்திரீகளுக்குள்ளும் நீ உன்னத பரம கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (யூதித்.13:23) என்ற இவ்வாக்கியம் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட அருள் நிறைந்த மாமரிக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகிறது! 

“அதோ, தன் அன்புடையான் மேல் ஊன்றிக் கொண்டு, இன்ப சுகங்களால் நிறைந்து வனாந்தரத்திலிருந்து எழும்பி வரும் இவள் யாரோ?” (உந். சங். 8:5), 

“வெள்ளைப் போளத்தினாலும், சாம்பிராணித் தூபத்தினாலும்... உண்டாகிய வாசனைப் புகை போல் வனாந்தரத்தின் வழியாக எழும்பி வருகிற இவள் யாரோ?” (உன். சங். 3:6), 

“லீபானின்று வா, மணாளியே, லீபானின்று இறங்கி வா, மகுடாபிஷேகம் பண்ணப்படுவாய்” (உந். சங். 4:8), 

“இராக்கினி தங்கமய ஆடையை அணிந்து உமது வலது பாரிசங்களில் பலவித அணிகள் பூண்டு நிற்கிறாள்” (சங். 44:10)

-- இவ்வாக்கியங்களால் புகழப்படும் மாதரசி ஆத்தும சரீரத்தோடு மோட்சத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டு மணிமகுடம் சூட்டப்பட்ட இராக்கினி கன்னி மாமரியே என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கு கிறதல்லவா? 

“ஜெஸ்ஸே தண்டினின்று ஓர் தளிர் கிளம்பும்; அதன் வேரில் நின்று ஒரு புஷ்பம் எழும்” (இசை. 11:1) எனத் தீர்க்கதரிசி இசையாஸ் குறிப்பிடும் ஜெஸ்ஸே தண்டு, புஷ்பமாகிய சேசு பாலனைத் தாங்கி நின்ற மாமரியே. 

“ஆதலில் பெற வேண்டியவள் (இரட் சகரைப்) பிரசவிக்கும் கால பரியந்தம் தம் பிரஜையை ஆண்டவர் எதிரிகள் கையில் அளிப்பார்” (மிக்கே. 5:3). இவ்வசனத்தில் “பெற வேண்டியவள்” கன்னிமாமரி அல்லாது வேறு யாராக இருக்க முடியும்? 

“இதோ ஒரு கன்னிகை கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள்” (இசை. 7:14) என்று இசையாஸ் பல வருடங்களுக்கு முன்பே சொன்ன கன்னிகை எப்பொழுதும் கன்னிமை கெடாத எம்மானுவேலின் தாயே என்பது மறுக்க முடியாத உண்மை.

இவைகளன்றி உந்நத சங்கீதத்தில் மணவாளியாக வும், ஞானாகமத்தில் கடவுளின் முதல் குமாரத்தியாகவும், பரலோக இராக்கினியாகவும், வேறு பல இடங்களில் ஞான வெளிச்சத்தின் அருணோதயமென்றும், ஞானத்தின் அவதாரமென்றும், சாலமோனின் சிம்மாசனம், ஆரோ னுடைய செளந்தரியத் தண்டுகோல் என்றும் பலவிதமாக வருணித்துப் புகழப்படுவதும் நம் அன்னை கன்னிமரியாயே!

இங்ஙனம், தீர்க்கதரிசிகளால் தேவதாய் புகழப் பட்டதினிமித்தம் அவர்களின் இராக்கினியாக இடம் பெற்றதோடு அவர்களே ஓர் சிறந்த தீர்க்தரிசியாகவும் திகழ்ந்தார்கள். இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலோடு மாத்திரமல்ல, அவரே தன் மேல் நிழலிட்டு அற்புதமான விதத்தில் தன்னில் வசிக்க அரும் பெரும் காரியங்களை அவர்கள் சாதித்தாள். 

எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் சென்ற சமயத்தில், இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப் பட்டு, தீர்க்கதரிசனமாகப் பாடிய “மாக்னிபிக்காத்” (Magnificat) என்ற உன்னத கீதத்தை யார் மறக்க முடியும்? 

“ஆகையால், இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறை களும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” (லூக். 1:48) என கன்னிமாமரி சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசனம் எத்துணை உண்மை! 

கடந்த ஆண்டுகளை ஆராய்ந்து பார்ப்போமானால் மரியாயின் பக்தி அதிகரித்துக் கொண்டே வந்திருப்பதை அறிவோம். தலைமுறை தலைமுறையாகத் தேவ அன்னையை மக்கள் வாழ்த்தினார்கள்; இனிமேலும் வாழ்த்துவார்கள். இன்றைய உலகிலோ அவர்களின் மகத்துவத்தை எடுத்தோதத் தேவை இல்லை. 

இது மரியாயின் சகாப்தம். உலகமெங்கும் பரவியுள்ள பல்வேறு மக்களின் உள்ளங் களில் பரவியுள்ள பல்வேறு மக்களின் உள்ளங்களில் சிறந்த ஸ்தானம் வகிக்கிறார்கள் பரலோக பூலோக இராக்கினி. பாரெங்கும் சுற்றிவந்த பாத்திமா அன்னையின் பவனியும், அவர்கள் பரலோகத்திற்கு ஆரோபணமான உண்மை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்யப்பட்ட சம்பவமுமே மரியாயின் பக்திக்குச் சிறந்த சான்றாகும். 

எனவே இக்காரணங்களை முன்னிட்டுக் கன்னி மாமரியை “தீர்க்கதரிசிகளின் இராக்கினி” என்று அழைப்பது மிகப் பொருந்தும்.

“மாதாவே, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் அனைவரும், பின்னால் வரவிருந்த மெசியாவைப் பற்றி அநேக விஷயங்களை தேவ ஏவுதலால் முன்னறிவித்தனர்; மெசியாவின் வருகைக்காக தேவ பிரஜைகளை ஆயத்தம் செய்தனர். மெசியாவைக் காண எவ்வளவோ ஆவலுற்றிருந்தனர். ஆயினும் அப்பாக்கியம் அவர்களுக்குக் கிட்டவில்லை. அவர்கள் கூறிய தீர்க்கதரிசனங்கள் யாவும் உம்மூலம் நிறைவேறின. 

மெசியவைக் காணும் பாக்கியம் மட்டுமன்றி, அவருடைய மாதாவாகும் உன்னத பாக்கியத்தையும் நீர் அடைந்தீர். உமது வாழ்நாளில் நீரே தீர்க்கதரிசனமும் கூறியுள்ளீர். நீர் மோட்சானந்தத்தை அநுபவிக்கும் போதும் எங்களை மறவாமல், பாத்திமாவில் காட்சியளித்த போதும், மனிதர் தபசு செய்து தங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்தாவிடில் வரவிருக்கும் தேவ கோபத்தைப் பற்றி எங்களை எச்சரித்துள்ளீர். 

உமது எச்சரிக்கைக்குச் செவிசாய்த்து நாங்கள் ஜெபதவம் செய்ய உதவி புரியும். நீர் வாக்களித்தபடி உமது மாசற்ற இருதயத்தின் வெற்றியையும், ரஷ்யாவின் மனந்திரும்புதலையும் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கக் கடவதாக.” 


தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!