இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நித்தியத்திற்கும் கடவுளை தரிசித்தலும், அவரை அனுபவித்தலும்

புனிதர்களின் அழகும், பரலோக இசையும், மோட்சத்தின் மற்ற இன்பங்களும் அதன் பெரும் பொக்கிஷங்களில் மிகச் சிறிய பாகமாக மட்டுமே இருக்கின்றன. ஆத்துமத்திற்கு முழுமையான பேரின்பத்தை அளிக்கும் காரியம், அன்பின் தேவனை முகமுகமாய் தரிசிப்பதேயாகும். நரகத்திலுள்ள சபிக்கப்பட்டவர்கள் தமது திருமுகத்தைக் காணு அவர் அவற்றை அனுமதிப்பார் என்றால், நரகம், தனது எல்லா வாதைகளோடும் அவர்களுக்கு ஒரு மோட்சமாக மாறிப் போகும் என்று அர்ச். அகுஸ்தினார் சொல்கிறார். இவ்வுலகிலும் கூட, கடவுள் ஓர் ஆன்மாவுக்கு ஜெபத்தில் தமது இனிய பிரசன்னத்தின் சுவையைத் தரும்போதும், ஓர் ஒளிக் கீற்றின் மூலம் தமது நன்மைத்தனத்தையும், அந்த ஆன்மாவின்மீது தாம் கொண்டுள்ள அன்பையும் அது அறியச் செய்வார் என்றால், அந்த ஆன்மா அனுபவிக்கிற மகிழ்ச்சி எவ்வளவு பெரியதாக இருக்குமென்றால், அது, தான் அன்பில் கரைந்து உருகிப் போவதாக உணரும். இருந்தாலும், இவ்வாழ்வில் கடவுள் இருக்கிற படி அவரைக் காண்பது நமக்கு சாத்தியமில்லை. நாம் மங்கலாக, ஒரு கனத்த திரை வழியாகப் பார்ப்பதுபோல் அவரைப் பார்க்கிறோம். அப்படியானால், அந்தத் திரையை நமக்கு முன்பிருந்து கடவுள் அகற்றி விட்டுத் தம்மை முகமுகமாக, முற்றிலும் திறப்பாகக் காண அனுமதிப்பார் என்றால், அது எத்தகைய நிலையாக இருக்கும்! ஓ ஆண்டவரே, உம்மிடமிருந்து நான் திரும்பிக் கொண்டதால், இனி உம்மைக் காண நான் தகுதியற்றவனாகவே இருக்கிறேன். ஆயினும், உமது நன்மைத்தனத்தில் நம்பிக்கை கொண்டு, மோட்சத்தில் என்றென்றும் உம்மைக் காண்பேன் என்றும், உம்மை நேசிப்பேன் என்றும் நான் நம்பியிருக்கிறேன். எனக்கு மோட்சத்தைத் தருவதற்காக இறந்தவராகிய ஒரு கடவுளிடம் பேசுகிறேன் என்பதால்தான் நான் இப்படிப் பேசுகிறேன்.

கடவுளை நேசிக்கும் ஆன்மாக்களே இவ்வுலகில் மற்ற அனைவரையும் விட அதிக மகிழ்ச்சியானவர்கள் என்றாலும், இங்கே பூமியில் முழுமையானதும், நிறைவுற்றதுமான ஒரு மகிழ்ச்சியை அவர்களால் அனுபவிக்க முடியாது. தங்கள் தகுதி பெற்றிருப்பது தங்கள் அன்பு இரட்சகரால் நேசிக்கப்படுவதற்கா, அல்லது வெறுக்கப்படுவதற்கா என்று தெரியாததால் வருகிற அந்த பயம் ஓர் இடையறாத துன்பத்தில் அவர்களை வைத்திருக்கிறது. ஆனால் பரலோகத்தில் ஆத்துமம், தான் கடவுளை நேசிப்பதைப் பற்றியும், கடவுளால் நேசிக்கப்படுவது பற்றியும் உறுதி கொண்டிருக்கிறது. கடவுளோடு அதைப் பிணைத்திருக்கிற அந்த அன்பின் இனிய கட்டு நித்திய காலமும் இனி அவிழ்க்கப்படாது என்று அது காண்கிறது. மனிதனாக அவதரித்ததிலும், அந்த ஆத்துமத்திற்காக அவர் மரிக்க சித்தங்கொண்டதிலும், தேவ நற்கருணையில் அவர் தம்மையே அதற்கு உணவாகத் தந்ததிலும், கடவுள் கொண்டிருந்த அளவற்ற அன்பைப் பற்றித் தான் அப்போது கொண்டிருக்கும் அதிகத் தெளிவான அறிவினால், அதன் நேசச் சுவாலைகள் அதிகரிக்கும். மேலும், தன்னை மோட்சத்திற்கு அழைத்து வருவதற்காக அவர் தனக்குத் தந்தருளிய வரப்பிரசாதங்களை அவற்றின் தெளிவான காட்சியில் காண்பதன் மூலம் அந்த ஆத்துமத்தின் அன்பு அதிகமாகும். தனது உலக வாழ்வின் போது தனக்கு அனுப்பப்பட்ட சிலுவைகள் அனைத்தும், தன்னை மகிழ்விக்கும்படி அவர் உருவாக்கிய அற்புதக் கருவிகள் என்பதையும் அது காணும். மேலும் அவர் தனக்குத் தந்தருளிய இரக்கங்களையும், பல ஞான வெளிச்சங்களையும், தவம் செய்வதற்கான அழைத்தல்களையும் அது காணும். அந்த ஆசீர்வதிக்கப்பட்ட மலையின் உச்சியிலிருந்து, தனது சொந்தப் பாவத்தை விடக் குறைவான பாவங்களுக்காக இப்போது நரகத்தில் இருக்கும் பல ஆன்மாக்களை அது பார்க்கும், தான் இப்போது இரட்சிக்கப்பட்டிருப்பதையும், கடவுளைச் சொந்தமாகக் கொண்டிருப்பதையும் அது கண்டு, இனி நித்தியத்திற்கும் அவரைத் தான் ஒருபோதும் இழக்கப் போவதில்லை என்ற அறிவில் உறுதிப்படுத்தப்படும். என் சேசுவே, என் சேசுவே, அந்த அளவுக்கு மீறிய மகிழ்ச்சியின் நாள் எனக்கு எப்போது வந்து சேரும்?

ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமம் இப்போது அனுபவிக்கிற கடவுளை, நித்தியத்திற்கும் தன்னால் துய்த்தனுபவிக்க முடியும் என்று அது முழு நிச்சயத்தோடு அறிந்து கொள்ளும்போது, அதன் மகிழ்ச்சி பூரணமாக்கப்படும். தாங்கள் இப்போது அனுபவிக்கிற கடவுளை ஒருவேளை தாங்கள் இழக்க நேரிடலாம் என்ற மிக அற்பமான சந்தேகம் கூட பரலோக வாசிகளிடம் இருக்குமானால், பரலோகம் இனி பரலோகமாக இராது. ஆனால் இல்லை! ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மா கடவுளின் இருத்தலைப் பற்றி எவ்வளவு உறுதி கொண்டுள்ளதோ, அதே அளவுக்கு, தான் இப்போது அனுபவிக்கிற அதே நன்மைத்தனத்தை இனி என்றென்றும் அனுபவிக்க இருக்கிறது என்பதிலும் உறுதி கொண்டிருக்கும். மேலும் அந்த மகிழ்ச்சி காலப்போக்கில் குறைந்து போகாது. மாறாக, அது எப்போதும் புதியதாக இருக்கும். ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஆத்துமம் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கும், அந்த மகிழ்ச்சியின் மீது அது எப்போதும் தாகம் கொண்டிருக்கும்.

ஆகவே, நாம் வாழ்வின் துன்பங்களால் வேதனைப்படுத்தப் படுவதைக் காணும்போது, நம் கண்களைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, ""பரலோகம்! இந்தத் துன்பங்கள் ஒருநாள் முடிந்து போகும்; அதை விட மேலாக, அவை தாங்களே என் அக்களிப்பிற்குரிய காரணங்களாக மாறிப் போகும்'' என்று சொல்லி நம்மை நாமே தேற்றிக் கொள்வோம். புனிதர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள்; தேவதூதர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள். அர்ச். மாமரி நமக்காகக் காத்திருக்கிறார்கள்; சேசுநாதருக்கு நாம் பிரமாணிக்கமாக இருப்போமானால், நமக்குத் தாம் சூட்ட இருக்கும் மகிமையின் முடியைத் தமது கரத்தில் ஏந்தியபடி அவர் நிற்கிறார். ஆ என் சர்வேசுரா, உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ளும் படியாகவும், உம்மை நோக்கி, ""என் அன்பரே, இனி உம்மை என்னால் இழக்க முடியாது!'' என்று சொல்லும்படியாகவும், அந்த நாளுக்குநான் எப்போது வந்து சேர்வேன்! ஓ மரியாயே, என் நம்பிக்கையே, மோட்சத்தில் உங்கள் திருப்பாதங்களின் அருகில் பாதுகாப்பாக நீங்கள் என்னைக் காணும் வரை, எனக்காக ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள்!