இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சிருஷ்டிகருடைய மாதாவே!

பிரார்த்தனையின் ஆரம்பத்தில் மரியன்னையை நோக்கி “சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே” என வேண்டினோம். அத்துடன் திருச்சபை திருப்தியடையவில்லை. கன்னிமாமரி கடவுளின் தாய் என்னும் சத்தியமாகிய வற்றாத ஊற்றிலிருந்து அவர்களை நோக்கி ஓடிவரும் சகல புகழ்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி அவர்களை அழைக்கத் திருச்சபை ஆசிக்கிறது. அவர்களை “சிருஷ்டிகருடைய மாதாவே” எனப் புகழ்ந்தேற்ற நம்மைத் தூண்டுகிறது. இப்புகழின் முழு உண்மையையும் கண்டுணர, “சிருஷ்டிப்பு” என்றால் என்ன; “சிருஷ்டிகர்” என்றால் யார் என்று அறிதல் அவசியம்.

சிருஷ்டித்தல் அல்லது படைத்தல் என்ற சொல் ஒனறுமில்லாமையிலிருந்து ஒரு பொருளை உண்டாக்குதல் என விரியும். இது நமது புத்திக்கு திகைப்பையும் வியப் பையும் அளிக்கின்றது. இது எங்ஙனம் இயலும் என்று அறிவு ஆராய முயலுகிறது. ஆனால் தோல்விதான் கண்ட பலன். இதை ஆராய்ந்தறிய முயன்று, தப்பறையென்னும் படுகுழியில் விழுந்த தத்துவ ஞானிகள் பலர். ஆம், ஒன்று மில்லாமையிலிருந்து ஒரு பொருளை உண்டாக்குதல் எப்படி என்று அறிவது நம் புத்திக்குட்பட்டதல்ல. படைத்தல் ஒரு தெய்வீகத் தொழில்; அதற்குத் தெய்வீக ஆற்றல் வேண்டும். ஆகவே, சர்வேசுரன் ஒருவரே சிருஷ் டிகர். அவர் ஒருவரே ஒன்றுமில்லாமையிலிருந்து ஒரு பொருளை உருவாக்க முடியும்--அவர் ஒருவரே சிருஷ்டிப்பின் மர்மத்தை அறிவார். மனிதனின் அறிவுக்கோ இது என்றும் மறைந்தே இருக்கும்.

“சர்வேசுரன் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று ஆதியாகமத்தில் வாசிக்கிறோம். ஆம், பரலோகத்தையும், பூலோகத்தையும், அவைகளிலடங்கிய சகலத்தையும் படைத்தவர் சர்வேசுரன். ஆனால் கடவுள் ஏன் இவைகளைப் படைக்க வேண்டும்? இவைகளெல்லாம் அவருக்குத் தேவையாயிருந்தனவோ? இல்லை. சகல நன்மைகளும் உருவான தேவனுக்கு தேவையென்பது இல்லை; அவர் இவைகளைச் சிருஷ்டிக்க வேண்டிய அவசியமே இல்லை; சிருஷ்டிகளினால் அவரது புகழ் சிறிதேனும் கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. எனவே படைப்புக்கு முக்கிய காரணம் “தேவை” அன்று. அவரது அன்பும் தயாள குணமுமே அதற்குக் காரணம். சர்வேசுரனே நன்மைத்தனம்--அவரே தயாள குணம். இந்நன்மைத்தனத்தைச் சுகித்து அனுபவிக்கவே சிருஷ்டிகள் இருக்கின்றன. என்னே, சிருஷ்டிகரின் அன்பும் ஆற்றலும்! இத்தகைய அளவில்லா அன்பும், ஆற்றலும் நிறைந்த சிருஷ்டிகருக்குத் தான் பாவ மாசற்ற பரிசுத்த கன்னிமாமரி தாயாகும் பேறு பெற்றார்கள்.

கடவுள் எண்ணிக்கையற்ற விதங்களில் வல்லமை மிக்கவ ரெனினும் சிருஷ்டிகர் என்ற தன்மையில் அவரது ஆற்றல் உச்ச நிலையை அடைகிறது என்று சொல்ல வேண்டும். இதை நன்குணர்ந்த நம் தாயாகிய சத்திய திருச்சபை, கன்னிமரியாயின் பெருமையையும் மகிமை யையும் பன்மடங்கு பெருக்க வேண்டி, “சிருஷ்டிகரின் மாதா” என்னும் சிறப்புப் பட்டத்தால் அவர்களை அழைத்து அகமகிழ்கிறது. நாமும் நமதன்னையை அவ்வண்ணமே “சிருஷ்டிகரின் மாதாவே” என்று வாயாரப் போற்றி மனமார வாழ்த்தி அவர்கள்பால் நம் அன்பையும், வணக்கத்தையும் மென்மேலும் அதிகரிக்க வேண்டுமென்று திருச்சபை வெகுவாய் ஆசிக்கின்றது.

“கன்னிமாமரி சிருஷ்டிகருடைய மாதா”-- அநேகருக்கு இது முரண்பாடாகத் தோன்றலாம். சிருஷ்டிகரின் மாதா என்ற இரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று எதிர்மாறானவையாகத் தோன்றலாம். என்ன! ஓர் அருவி தன் உற்பத்தி ஸ்தானத்தைத் தானே உண்டாக்கிக் கொள்வதா? படைக்கப்பட்ட ஒரு பொருள் தன்னை உண்டுபண்ணினவரையே உண்டாக்குவதா? ஒரு சிருஷ்டி தன் சிருஷ்டிகரையே உருவாக்குவதா?--என்று கேள்விமாரி பொழியலாம். உண்மை; உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கியவரையே சிருஷ்டித்தல் என்பது எதிர்மாறான தத்துவம். சிருஷ்டிகர் என்றும் சிருஷ்டிகரே; அவர் ஒருநாளும் சிருஷ்டியாக முடியாது.

இக்கூற்று, சேசுநாதர் சுவாமிக்கு தேவ சுபாவம் என்ற ஒரே சுபாவம் மாத்திரம் இருக்குமானால் முற்றிலும் உண்மையாகும். அப்பொழுது “சிருஷ்டிகரின் மாதா”என்ற சிறப்புப் பட்டம் மாமரிக்கு ஒருக்காலும் பொருந்தாது. ஏனெனில் தேவசுபாவம் நித்தி யத்திற்கும் தன்னிலேதானே உள்ளது; அதற்கு வேறு யாதொரு ஆதாரமும் வேண்டியதில்லை. ஆனால் நாம் அறிந்தது போல சேசுநாதர் சுவாமிக்கு தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு. மனித சுபாவத்தில் தான் சேசுநாதர் சுவாமி நம்மை மீட்க மனுமகனாய்ப் பிறந்தார். இம்மனித சுபாவத்தில் தான், முப்பொழுதும் கன்னியான மாமரி ஒப்பற்ற புதுமையினால் சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாகும் பாக்கியம் பெற்றார்கள். “வார்த்தையானது மாமிசமாகி நம்முடனே கூட வாசமா யிருந்தது” என்று சுவிசேஷகர் அருளப்பர் கூறுவதும் இதைப்பற்றியே (அரு. 1:14).

ஆனால் “மாமிசமான அவ்வார்த்தை மனுவுரு வெடுத்த அப்பாலகன், எல்லாவற்றிலும் பிதாவுக்கும், இஸ்பிரீத்துசாந்துவுக்கும் சரிசமானமான இரண்டா மாளாகிய சுதனாகிய சர்வேசுரன். இம்மூன்று தெய்வீக ஆட்கள்தான் பிரிக்கமுடியாத ஒரே சித்தத்தினால் சகலத் தையும் சிருஷ்டித்தனர்.” “அவர் திருவுளம்பற்றவே எல் லாம் சிருஷ்டிக்கப்பட்டது; அவர் கட்டளையிடவே எல் லாம் உண்டாக்கப்பட்டது” (சங். 148:5). எனவே சுதனா கிய சர்வேசுரன் தேவ சுபாவத்தில் சிருஷ்டிகர்; மனித சுபாவத்திலோ ஒரு சிருஷ்டி; ஏனெனில் அவர் கன்னி மரியாயின் வழியாகவே இவ்வுலகில் பிறக்க வேண்டியிருந் தது. வான மண்டலமே கொள்ளாத ஆண்டவர் மரியா யின் திருவுதரத்தில் வாசம் செய்தார். ஒன்பது மாத மளவாய் அச்சிறு குடிலில் சயனித்து, கன்னிமரியா யிடமிருந்து அற்புதமாய்ப் பிறந்தார். கன்னிமாமரி சுதனாகிய சர்வேசுரனின் அன்னையானார்கள்; சுதனாகிய சர்வேசுரனின் சரீரம் மாமரியின் சரீரம்; அவரது உடலில் ஓடும் இரத்தம் மாமரியின் இரத்தம். அவர் ஓர் மனிதன்; அதே சமயத்தில் அவர் கடவுள், சிருஷ்டிகர்; அவர்--கடவுள்-மனிதன். எனவே பரிசுத்த மாமரி அவருடைய தாய்--சிருஷ்டிகரின் மாதா. என்னே தேவதாயின் மேன்மை! “மாமரியின் மகத்தான இப்பெருந் தன்மையை அளவிட்டுக் கூற வல்லவர் யார்?” என்று தமியான் இராயப்பர் வியப்பது எவ்வளவு உண்மை!

உண்மையில் சிருஷ்டிகருடைய மாதாவின் மகிமை பெரிது, பெரிது! அவர்களது தாய்மை சிருஷ்டிகளுக் கெல்லாம் மேலாக அவர்களை உயர்த்தித் தெய்வத் தன்மையின் எல்லைக்கே அவர்களை இட்டுச் செல்கின் றன. அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், ஏன்-- சம்மனசுக்களுக் குமே அளிக்கப்படாத விசேஷ வணக்கம் (Hyperdulia) செலுத்தப்படும் தனி உரிமையை தேவ தாய்க்குப் பெற்றுத் தருவது அவர்களது தாய்மை. அதனால் தான் இன்று உலகமெங்கும் மக்கள் கன்னிமரியாயைப் போற்றி அவர் களுக்கு விசேஷ வணக்கம் செலுத்துகின்றனர்; “சிருஷ்டிகரின் மாதாவே” என்று அழைத்து மகிழ்கின்றனர் மரியாயின் மைந்தர்கள்.

இவ்வளவு மகிமைப் பிரதாபமுள்ள மாமரி நம் தாயாக இருப்பது நம் பாக்கியமே. சிருஷ்டிகரின் மாதாவே என்று நாம் நம் அன்னையைப் போற்றும்போது, அவர்களின் மைந்தர்களாகிய நாம் பெருமிதம் கொள்ளு தல் இயல்பே. தாயின் மகிமை பிள்ளையின் பெருமை யல்லவா? ஆனால் “சிருஷ்டிகரின் மாதா” என்னும் பட்டத்தின் முழு அர்த்தத்தையும் அறிந்து அன்னையை வணங்குகிறவர்கள் சிலர் என்றே கூற வேண்டும். எனவே இக்குறையை நீக்கி, நாம் கூறுவதன் கருத்தை உணர்ந்து, அன்புடன் அவர்களின் பாதத்தண்டை போவோம். நம் தாய் சிருஷ்டிகரின் மாதா; ஆகையால் மாதா வழியாக சிருஷ்டிகரிடத்தில் போவோம். மாதாவின் மன்றாட்டை மகன் புறக்கணிக்க மாட்டார். ஏனெனில், சிருஷ்டிகரை ஈன்றதால் கன்னிமாமரி அடைந்த மகிமையைப் போலவே, அவர்களது அதிகாரமும், வேண்டுதலும் அளக்க முடியாதது. சிருஷ்டிகரே கன்னிமாமரிக்குக் கீழ்ப்படிந்திருந்தார். சேசுநாதர் சுவாமியின் முப்பது வருட மறைந்த ஜீவியத்தை, “அவர் அவர்களுக்குக் கீழ்ப்படிந் திருந்தார்” (லூக். 2:51) என்ற ஒரே வாக்கியத்தில் விளக்குகிறார் அர்ச். லூக்காஸ். இங்ஙனம், அன்னையின் மனங்கோணாது நடந்த சேசு இன்று அவர்களின் வேண்டுதலைத் தட்ட மாட்டார்.

“சிருஷ்டிகருடைய மாதாவே! எங்கள் தாயே! இதோ உமது பாதத்தண்டையில் வந்து நிற்கும் உம் மைந்தர்களாகிய எங்களைக் கருணைக் கண்ணோக்கி யருளும். பாவிகளாகிய எங்களது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, சிருஷ்டிகரிடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசும். பரிசுத்த மரியாயே! சிருஷ்டிகரின் மாதா என்னும் இவ்வரிய உரிமையின் பெருமையையும், மகிமையையும் நன்கு உணர்ந்து நாங்கள் என்றும் உம்மை மன்றாட அனுக்கிரகம் செய்தருளும்.” 


சிருஷ்டிகருடைய மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!