இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் மீது உண்மைப் பக்தி - முகவுரை.

BISHOP'S HOUSE. TUTICORIN-628 001.
S. INDIA. 7-3-1977.


மேதகு . அம்புரோஸ் ஆண்டகையின் முகவுரை.

அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய Treatis on the True Devotion to the Blessed Virgin'' என்ற புகழ் பெற்ற நூலினை 'மரியாயின் மீது உண்மைப் பக்தி" என்ற தலைப்பில் தமிழில் வெளியிட முன் வந்துள்ளார் அருட் தந்தை அந்தோனி பர்னாந்து அவர்கள். இந்நூல் தமிழகக் கத்தோலிக்க மக்களுக்கு தக்கதோர் ஏடாகத் திகழும் என்பதில் ஐயமில்லை, ஏனெனில் தேவ அன்னையின் மீது நமக்குள்ள பக்தி வளர்வதற்கு மட்டுமல்லாமல், அப்பக்தி உண்மையானதாக இருக்கவும் இந்நூல் உதவும் என எதிர்பார்க்கலாம்.

அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல் அந்நாட்களுக்கு ஏற்றதாய் இருந்திருக்கலாம். இன்றைய விஞ்ஞான உலகிற்கு அது ஏற்றதாகுமா? என ஒரு சிலர் எண்ணலாம், தேவ அன்னையைப் பற்றி நம் புனிதர் எழுதிய நூல் சத்தியத்தையும் வேதாகம உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டது. சத்தியமும் வேதாகம உண்மைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடுபவையல்ல. எனவே புனிதர் கூறும் கருத்துக்கள் இன்றைய உலகிற்கு ஏற்றவையல்ல என சொல்லிவிட முடியாது.

உதாரணமாக, தேவ அன்னையின் பக்திக்கு அடிப்படையாயிருப்பது அன்னைக்குத் தன் குமாரன் கிறிஸ்துவின் மட்டிலுள்ள நெருங்கிய உறவும், தொடர்பும் செல்வாக்குந்தான். இந்த உண்மைக்கு சுவிசேஷம் சான்று பகிர்கின்றது. லூர்து பாத்திமா நகரங்களிலே இன்றைய நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் இதனை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. கிறீஸ்துவின் வாழ்விலும், மீட்புப் பணியிலும் மரியன்னை பிரிக்கவொண்ணா வண்ணம் பின்னிப் பிணைந்துள்ளார்கள்.

கிறீஸ்துவை உருவாக்கிய பெருமை மட்டுமல்ல, பிறப்பு முதல் இறப்பு வரை அவரோடு இணைந்தே வாழ்ந்த மகிமையும் அன்னைக்கு உண்டு. மீட்பராம் கிறிஸ்துவின் அன்னை என்ற முறையில் அவருக்கு மீட்புப் பணியில் நெருங்கிய பங்கு உண்டு. திருச்சபை கிறிஸ்துவின் மறையுடல் என்ற முறையில் திருச்சபையிலும் அன்னைக்குத் தான் சிறந்தபணி உண்டு.

எனவேதான் அன்னையின் மீது நாம் கொள்ளும் பக்தி கிறீஸ்துவைக் கண்டடைய நமக்கிருக்கும் நிச்சயமான வழி என்று புனிதர் கூறுகிறார்: Ad Jesum per Mariam" "மரியன்னை வழியாய் கிறீஸ்துவை அடைதல்' என்பது தான் மரியன்னை மீது நமக்குள்ள உண்மையான பக்தியின் அடிப்படை என்றும் அர்ச். மோன்போர்ட் கூறுகிறார்.

எனவே தமிழில் வெளியாகும் இந்நூலை வரவேற்கிறோம். எல்லாரும் அதனைப் படித்துப் பயனடைய வேண்டும் என விழைகிறோம். குறிப்பாக மரியாயின் சேனை மாதா சபைகள் போன்ற பக்தி சபை உறுப்பினர் இந் நூலைத் தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண் டால் நலம் பல அடைவார்கள் எண்பது திண்ணம்.

. இதனைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த அருட்தந்தை அவர்களையும், அச்சேற்றி வெளியிட்ட அருட்தந்தை அந்தோனி பர்னாந்து அவர்களையும் பாராட்டுகிறோம். அன்னை வ ழி யா ய் கிறீஸ்துவை அடைந்து, கிறிஸ்துவின் நற்சான்றுகளாய் நாம் எல்லாரும் திகழ இந் நூல் வழிவகுப்பதாக. அன்னையின் மன்றாட்டால் இறைவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.


மேதகு ஆண்டகை
M. AMBROSE தூத்துக்குடி ஆயர்.