லூர்து அன்னை

பெர்நதெத் சூபிரூ ஏழைப் பெற்றோரிடம் பிறந்தவள். அவளுக்கு வயது பதினான்கு. நேர்மையானவள், கீழ்ப்படிந்து நடப்பவள், தன் வாழ்நாளில் மனது பொருந்தி அற்பப் பாவமே செய்யாதவள். அவளுக்கு ஜெபம் என்றால் பிரியம். வயல் வெளிகளில் அடிக்கடி ஜெபமாலை ஜெபிப்பாள்.

1858-ம் ஆண்டு பெப்ருவரி 11-ம் நாளன்று பெர்நதெத், அவளுடைய சகோதரி அந்துவானெற், ஜோன் அபதி என்னும் சிநேகிதி, இம் மூவரும் ஒரு குறுகிய ஓடைப்பக்கமாய் நடந்து கொண்டிருந்தனர். ஓடையின் அகலம் முப்பது அல்லது நாற்பது அடி இருக்கும். அன்று வெகு குளிராயிருந்தது. அவர்கள் மூவரும் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தனர். ஓடையின் இடது பக்கமாக அவர்கள் நடந்து சென்று மசபியேல் கெபிக்கு எதிராக வந்தார்கள். சப்பாத்து களையும் கால் உறைகளையும் கழற்றிவிட்டு, தண்ணீ ரில் நடந்து, ஓடையின் மறுபக்கத்தையடைந்து விறகு பொறுக்குவோம் என பெண்களில் ஒருத்தி கூறினாள். குளிர்ந்த நீரில் நடந்தால் தனக்கு இளைப்பு வியாதி வரும் என பெர்நதெத் அஞ்சி,ஜோனை நோக்கி “என்னை உன் தோளில் வைத்து தூக்கிக் கொண்டு போ' என்றனள். "உனக்கு வரப்பிரியமில்லையானால் இருந்து கொள்'' என அவள் சொல்லி விட்டாள். பெர்நதெத்தைத் தனியே விட்டு இருவரும் மறுபக் கம் சென்றனர்.

பெர்நதெத் தன் கால் உறையைக் கழற்ற ஆரம் பிக்கையில் . புயல் போல் பெரும் சத்தம் கேட்டது. பெர்நதெத் அங்குமிங்கும் பார்த்தாள். ஒன்றையும் காணோம். சற்று பின், முன் போல் அதே சத்தம் பெர்நதெத் பயந்து நிமிர்ந்து நின்று மசபியேல் கெபிப் பக்கம் திரும்பினாள். குகையினுள்ளிருந்து தங்க நிறமான மேகம் ஒன்று வெளிவந்தது. அதற்குப் பின் ஒரு பெண். வாலிபப்பெண்: மிக அழகுடனிருந்தாள். "அவள் என்னைத் தாயன்புடன் நோக்கி, புன்சிரிப்பு காண்பித்து, வரும்படி எனக்கு சயிக்கினை காட்டி னாள். பயம் என்னை விட்டகன்றது. கண்களை கசக்கி மூடித் திறந்தேன். அந்தப் பெண் அதே இடத்தில் இன்னும் புன்முறுவலுடன் நின்றாள். என்னையும் அறியாமலே ஜெபமாலையைக் கையில் எடுத்து முழந் தாளிட்டேன். இது தனக்குப் பிரியம் எனத் தெரிவிக் குமாப்போல் அந்தப் பெண் தலையை அசைத்து, தன் வலது கையில் தொங்கிய ஜெபமாலையை எடுத்தாள். ஜெபமாலை தொடங்கு முன் சிலுவை அடையாளம் வரைய வேண்டும். வலது கரத்தால் நெற்றியைத் தொட முயன்றேன். கையை உயர்த்த முடியவில்லை. திமிர்வாதம் போல் இருந்தது. அந்தப் பெண் சிலுவை அடையாளம் வரைந்த பின்னரே, நான் என் கையை உயர்த்தக்கூடியவளானேன். நான் தனியே ஜெபமாலை செய்தேன், அவள் மணிகளை உருட்டிக் கொண்டிருந்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பத்துமணி ஜெபத்துக்குப் பின் என்னுடன் சேர்ந்து "பிதாவுக்கும் சுதனுக்கும்'' என்ற திரித்துவ ஆராத னையைச் சொன்னாள். ஜெபமாலை முடிந்ததும், அவள் குகையினுள் திரும்பினாள். அவளுடன் பொன் நிற மேகமும் மறைந்தது. அவளுக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும்'' என்று பெர்நதெத் பின்னர் தெரிவித்தாள்.

பெர்நதெத் ஜெபித்துக்கொண்டிருப்பதை அந்து வானெற்றும் ஜோனும் பார்த்தனர். “அங்கு ஜெபித் துக் கொண்டிருக்கும் அவளுக்குப் பைத்தியம் பிடித் திருக்க வேண்டும். கோவிலில் அநேக ஜெபங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது பற்றாதா? ஜெபிப்பதைத் தவிர வேறு எதற்கும் அவள் உதவ மாட்டாள் ” என ஜோன் கூறினாள்.

விறகு பொறுக்கி விட்டு பெண்கள் இருவரும் கெபிப்பக்கமாய்த் திரும்பினர். பெர்நதெத் இன்னும் ஜெபித்துக் கொண்டிருந்தாள். மும்முறை அவளை அழைத்தார்கள், அவள் பதிலளிக்கவில்லை. கல் எறிந் தார்கள். ஒரு கல் அவள் தோள் மேல் அடித்தது. அதற்கும் அவள் அசையவில்லை. அவள் செத்துப் போனாளோ என அந்துவானெற் அஞ்சினாள். “செத் துப்போனால் கீழே விழுந்திருப்பாளே'' என ஜோன் சொல்லி அவளது பயத்தை அகற்றினாள். அவர்கள் இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையில் பெர்நதெத் திடீரென பாவத்தை விட்டு விழித்தாள்.

வீட்டுக்குப் போகும் வழியில், தான் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும், அவள் வெள்ளையும் நீலமும் தரித்திருந்தாளென்றும், ஒவ்வொரு பாதத் தின் கீழும் ஒரு மஞ்சள் ரோஜா மலர் இருந்ததென் றும், பெர்நதெத் அறிவித்தாள். யாருமே இதை நம்பவில்லை.

இன்னொரு நாள் பெர்நதெத் தன் சிநேகிதிகளுட னும் இன்னும் இருபது சிறுவர்களுடனும் மசபி யேல் கெபியருகே நிற்கையில் அந்தப் பெண் தோன் றினாள். பெர்நதெத் கெபியில் தீர்த்தத்தைத் தெளித் தாள். உடனே அந்தப் பெண் புன்முறுவல் காண் பித்தாள்,

அந்தப்பெண் யாராயிருக்கலாமென பலர் பலவித மாய்ப் பேசினார்கள். உதவி கேட்டு, உத்தரிக்கிற ஸ் தலத்திலிருந்து வந்த ஆத்துமம் என சிலர் நினைத் தார்கள். இவ்விதம் நினைத்தவர்களில் ஒருவர், பெர்ரு தெத்தைப் பார்த்து, "அடுத்த முறை அந்தப் பெண் வந்ததும் அவளுக்குபேனா, மை, காகிதம் இவற்றைக் கொடுத்து, அவளது விருப்பத்தை எழுதும்படி கேள். தான் வருவதன் நோக்கத்தையாவது எழுதட்டும்'' என்றார். பெர்நதெத் அவ்விதமே செய்தாள். அந்தப் பெண் சிரித்துக் கொண்டு, “நான் சொல்ல இருக்கும் செய்தியை எழுத அவசியமில்லை. இங்கு தொடர்ந்து பதினைந்து நாட்களாக ஒவ்வொரு நாளும் வருவாயா?'' என்றனள். பெர்நதெத் சரி என்றதும். அந்தப் பெண் "இந்த உலகத்திலல்ல, ஆனால் மறு உலகத்தில் உன்னை நான் பாக்கியவதியாக்குவதாக வாக்களிக்கி றேன்'' என்றாள்.

1858-ம் ஆண்டு தபசு காலத்தின் முதல் ஞாயிறன்று மாதா ஆறாவது முறையாகக் காட்சி யளித்தாள். பெர்நதெத்திடமிருந்து தன் பார்வையை அவள் அகற்றி கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரது முகத்தையும் நோக்கினாள். உடனே மாதாவின் முகத் தில் துயர் பரவியது. திரும்ப அவள் பெர்நதெத்தை நோக்கி, "பாவிகளுக்காக ஜெபி" என முறையிடு கிறாப்போல் மொழிந்தாள்.

பெப்ருவரி 25-ம் நாள் வியாழக்கிழமை ஒன்பதா வது காட்சி. “போய் ஊற்று நீரில் கழுவி அதைப் பருகும்படி ' தேவதாய் பெர்நதெத்திடம் சொன்னாள். அங்கு ஊற்று ஒன்றும் கிடையாது. ஊற்று அகப் படுமா எனத் தேடிப் பார்த்தாள், ஒன்றும் அகப்பட வில்லை, ஆதலின் அவள் கெபிப் பக்கமாய்த் திரும்பி அன்னை மொழிந்த வார்த்தைகளின் பொருளை வின வினாள். பெர்நதெத் கெபியின் பின்பக்கமாய் ஏறி, முழந்தாளிட்டு, மணல் கிடந்த ஓர் இடத்தில் தன் கைகளால் தோண்டினாள். அதுவரை அங்கு ஊற்று கிடையாது. பெர்நெதெத் தோண்டியதும் சிறிது நீர் வந்தது.

கழுவவேண்டும், குடிக்கவேண்டும் என மாதா சொல்லியிருந்தாள். மண் கலந்திருந்த அந்த நீரை எடுத்து பெர்நதெத் தன் முகத்தில் பூசி, ஊற்றிலிருந்து வந்த நீரை மண்ணோடு குடித்தாள். இன் னொரு விசுவாச முயற்சியையும் தேவதாய் கேட்டாள். அருகிலிருந்த சில இலைகளைச் சாப்பிடும்படி தேவ தாய் சொன்னதும் பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

இந்த நிலையில் அவள் தன் பழைய இடத்துக்கு வருவதைக் கண்ட மக்களில் விசுவாசிகள் விசனித் தார்கள், அவிசுவாசிகள் சத்தமாய்க் கேலி செய்தார் கள். பின் பெர்நதெத் தன் முகத்தைக் கழுவிக் கொண்டு மாதாவை நோக்கலானாள்.

அந்த அற்புத ஊற்று சீக்கிரம் உலகப் பிரசித்தி யடைந்தது. மறுநாளே அந்த ஊற்று நீர் பெருக்கெ டுத்து கேவ் நதியில் போய் விழத் தொடங்கியது. லூயி பூரியெட் என்னும் கல்வெட்டும் குருடன் அந்த ஊற்று நீரில் கண்களைக் கழுவினான். உடனே கண் பார்வை பெற்றான். இதுவே லூர்து நாயகியின் முதற் புதுமை. வைத்தியர்களால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு குழந்தையை அதன் தாய், ஊற்று நீரில் குளிப்பாட்டினாள். குழந்தை உடனே முழுச் சுகமும் பலமும் பெற்றது, மக்களின் அவிசு வாசம் அகன்றது.

“பாவிகளுக்காக'' இன்னொரு தாழ்ச்சி முயற்சி யும் தபசு முயற்சியும் செய்யும்படி தேவதாய் பெப்ரு வரி 26-ம் நாளன்று, அதாவது, பத்தாவது காட்சியில் அறிவித்து, “தவம்!, தவம்!, தவம்!" என்றாள். “பாவி களுக்காகத் தரையை முத்தி செயீ" என அன்னை கூறியதும், பெர்நதெத் அவ்விதமே செய்தாள். ஆற்றை நோக்கி வந்த சரிவில் கெபியின் முன் முழந் தாளிட்டு அப்படியே நகர்ந்து தரையை முத்தமிட்டுக் கொண்டே உயர ஏறினாள். மக்களும் அவளைப் பின் பற்றி தரையை முத்தி செய்தார்கள். அவள் சயிக் கினை காட்டியதும் அநேகர் முழந்தாளிட்டு பாவிகளுக்காக தரையை முத்தி செய்துகொண்டே உயர ஏறினார்கள். இவ்விதம் பல முறை நடந்தது.

பதினோராவது முறையாக காட்சியளிக்கையில் அந்தப் பெண், "குருக்களிடம் போய், இங்கு எனக்கு ஒரு கோவில் கட்டச் சொல்” என்றாள்.

பெர்நதெத் போன சமயத்தில், பங்குக் குருவான பெரமால் சுவாமியார் தோட்டத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார். தோட்ட வாசலைத் திறந்த சத்தம் கேட்டதும் ஏறெடுத்துப் பார்த்து, ''யார்? என்ன வேண்டும்?'' என்றார்.

'நான் பெர்நதெத் சூபிரூ” என அவள் கூறியதும், அவர் அவளை உச்சிமுதல் பாதம் வரை நோக்கிவிட்டு “ஓ நீயா அந்தச் சிறுமி? உன்னைப்பற்றி பல அபூர்வ கதைகளைக் கேட்டிருக்கிறேன். உள்ளே வா'' என்றார்.

தான் வந்த நோக்கத்தை பெர்நதெத் அறிவித் தாள். அவளிடம் அவர் பல கேள்விகள் கேட்க, யாவற்றிற்கும் அவள் தக்க பதிலளித்தாள். விசாரணை முடிந்ததும் அவர் எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவியபின், பெர்நதெத்தின் முன் நின்று, "உன்னை அனுப்பிய அந்த அழகிய பெண்ணிடம் பின்வருமாறு சொல்: தான் அறியாதவர்களுடன் ஒன்றும் வைத் துக்கொள்ள பங்கு சுவாமி விரும்புவதில்லை; எல்லா வற்றிற்கும் முன் அவள் தன் பெயரைச் சொல்ல வேண்டும்; கோவில்கட்ட தனக்கு உரிமை உண்டென அவள் எண்பிக்க வேண்டும்; கோவில் கட்டப்பட அவளுக்கு உரிமை உண்டானால், நான் சொல்வதன் பொருள் அவளுக்கு விளங்கும். அவளுக்கு விளங்கா விட்டால் பங்குக் குருவுக்கு இனி மேலாக செய்தி சொல்லி அனுப்பலாகாது' என அவளிடம் சொல்'' என்றார்.

மார்ச் 2-ம் நாள் பதினான்காம் முறையாக அந்தப் பெண் தோன்றினாள். கோவில் கட்டப்பட வேண்டும் என்றதுடன், சுற்றுப்பிரகாரங்கள் அங்கு வர தான் விரும்புவதாகவும் அவள் தெரிவித்தாள்.

இன்னொருமுறை பெர்நதெத் பங்குக் குருவை அணுகினாள். இம்முறை அவர் கோபித்தார். “நீ பொய் சொல்கிறாய். அவளுக்காக எப்படி நாம் சுற்றுப்பிரகாரங்களை நடத்துவது? உன்னைப்போன்ற வர்களை லூர்து நகரில் வைத்திருப்பதே துன்பம். பட்டணத்தையே நீ குழப்பிவிடுகிறாய். மக்கள் உன் பின் ஓடும்படி செய்சிறாய். உனக்கு ஒரு மெழுகு திரி தருகிறேன். நீயே சுற்றுப்பிரகாரமாயிரு. அவர்கள் உன்னைப் பின் செல்வார்கள். குருக்கள் தேவையில்லை'' என்றார்.

“நான் எவரையும் என் பின் வரும்படிச் சொல்ல வில்லை. அவர்கள் தாமாக வருகிறார்கள். சுற்றுப்பிர காரங்களைப் பற்றி அந்தப் பெண் கேட்டதை நான் எவரிடமும் சொல்லவில்லை; உங்களிடம் மாத்திரமே சொல்லியிருக்கிறேன்'' என பெர்நதெத் மொழிந்த தும், அவர் பெர்நதெத் பக்கமாய்த் திரும்பி, “நீ ஒன் றையும் பார்க்கவில்லையா? குகையிலிருந்து ஒரு பெண் வர முடியாது. அவள் பெயர் உனக்குத் தெரியாது. அப்படியானால் அங்கு ஒன்றும் இருக்க முடியாது'' என்றார்.

பெர்நதெத் பயந்து, சுண்டெலியைப் போல் தன்னை அடக்கி ஒடுக்கிக் கொண்டாள். சுவாமியா ருக்கு முரட்டுச் சத்தம். அங்குமிங்கும் நடந்து கொண்டு, ''யாராவது இப்பேர்ப்பட்ட கதையைக் கேட்டதுண்டா? ஒரு பெண்ணாம்! அவளுக்குச் சுற் றுப்பிரகாரங்கள் வேண்டுமாம்!" எனக் கத்தினார். பின் அவர், “கெபியில் ஒரு காட்டு ரோஜாச் செடி மேல் அவள் காட்சியளிப்பதாகச் சொல்கிறாய். அந்தச் செடி பூக்கும்படி அவள் செய்யட்டும். அப்படியானால் நீ சொல்வதை நான் நம்புவேன். உன்னுடன் நானும் மஸபியேல் கெபிக்கு வருவதாக வாக்களிக்கிறேன்'' என்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்டு இருபதாயிரம் மக்கள் கெபியருகே கூடி விட்டார்கள். இராணுவ வீரர்களை அங்கு கொண்டுவரவேண்டியிருந்தது. உருவிய வாளை ஏந்திய ஒருவன் துணையாக நின்று பெர்நதெத்தை பத்திரமாய் அழைத்துச் சென்றான்.

அந்தப்பெண் தோன்றியதும் பங்குசுவாமியாரது விருப்பத்தை பெர்நதெத் தெரிவித்தாள். பெண் சிரித்தாளேயொழிய தான் இன்னார் எனச் சொல்ல வில்லை .

மார்ச் 24-ம் நாளன்று பெர்நதெத் கெபிக்குச் சென்றாள். ஏற்கனவே அந்தப் பெண் அங்கு நின்றாள். அவளைக் காத்திருக்கப் பண்ணிய தற்காக பெர்நதெத் மன்னிப்புக் கேட்டாள். மன்னிப்புக் கேட்கத் தேவை யில்லை என அந்தப் பெண் கூறியதும், பெர்நதெத் தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் எடுத்துக் கூறி, ஜெபமாலையை எடுத்தாள். ஜெபிக்கையில் ஒரு யோசனை வந்தது.. அவள் யார் எனக் கேட்க ஆசை உண்டாயிற்று. “தான் யாரெனச் சொல்லும்படி அவளைக் கெஞ்சிக் கேட்டேன். அந்தப் பெண்ணோ இதற்குமுன் செய்தது போலவே செய்தாள்; தலை குனிந்து புன்சிரிப்பு காண்பித்தனள்; பதிலளிக்க வில்லை. எனக்கு இன்னும் சற்று துணிவு வந்தது. தயவுசெய்து உங்கள் பெயரைத் தெரிவியுங்கள் என் றேன். முன்போலவே அவள் தலைகுனிந்து புன்னகை காட்டினாளேயொழிய பதிலொன்றும் சொல்லவில்லை, மௌனமாயிருந்தாள். நான் அவளது பெயரை அறிய பாத்திரவதியல்ல என அங்கீகரித்து மூன்றாம் முறை யாகக் கேட்டேன்.

“அந்தப் பெண் ரோஜாச் செடி மேல் நின்று கொண்டிருந்தாள். புதுமைச் சுரூபத்தில் மாதா நிற்கிறாப்போல் நின்றாள். நான் மூன்றாம் முறையாக என் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், அவளது முகம் மாறியது. தாழ்ச்சியுடன் தலை குனிந்தாள். கரங்களைக் குவித்து அவற்றை மார்புவரை உயர்த்தினாள். பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து, மெது வாகக் கரங்களை விரித்து, என் பக்கமாய் சிறிது சாய்த்து, “அமல உற்பவம் நானே'' என்று சொல்லி உடனே மறைந்தாள். - அந்த வார்த்தைகளை மறந்து விடாதபடி பெர்நதெத் வீட்டுக்கு வரும் வழியில் அவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தாள். நேரே பங்குசுவாமியாரிடம் போய்த் தெரிவித்தாள். கோவில் கட்ட பணம் இருக் கிறதா? என அவர் கேட்க, பெர்நதெத் இல்லை என் றாள். “என்னிடமும் கிடையாது. அந்த பெண்ணைத் தரச் சொல்” என அவர் கூறினார்.

*** அந்தப் பெண் கேட்ட கோவில் அவளுக்குக் கிடைத்தது. பெரமால் சுவாமியே அதைக் கட்டினார். இன்று அது தற்கால உலகிலேயே மிக்க அழகு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாய்த் திகழ்கிறது.

அந்த அழகிய பெண்ணை பெர்நதெத் கடைசி முறையாகப் பார்த்தது 1858-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் கர்மேல்மாதா திருநாளன்று. அன்றைய காட்சி பதினைந்து நிமிடம் நீடித்தது.