இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நமக்காக மரிப்பதில் சேசுவின் அன்பு

நம் மீது தமக்குள்ள அன்பு நம் இருதயங்களை முழுமையாக ஆட்கொள்ளும்படியாக, சேசுநாதர் நமக்காக இறந்தார். "கிறீஸ்து நாதர் மரித்தோருக்கும், ஜீவியருக்கும் கர்த்தராயிருக்கும் பொருட்டே மரித்து உயிர்த்திருக்கிறார்'' (உரோ.14:9). சேசுநாதரின் திரு மரணத்தையும், மனிதர்களுக்காக மரிப்பதில் அவர் வெளிப்படுத்திய அன்பையும் தியானித்து, புனிதர்கள் அவர் நிமித்தமாகத் தங்கள் உடைமைகளையும், பதவிகளையும், உயிரையும் துறந்து விடுவதும் கூட மிகச் சிறிய காரியமே என்று நினைத்தார்கள்.

பிரபஞ்சத்தின் ஆண்டவரும், தேவ சுதனுமானவர் உண்மையாகவே சிலுவையின் மீது நம் அன்பிற்காகத் துன்புற்று மரிக்கவில்லை என்றால், அவர் அப்படிச் செய்யக் கூடும் என்று யார் நினைத்திருக்க முடியும்? சிருஷ்டிகர் தமது சிருஷ்டிகளின் மீதுகொண்ட நேசத்தால் மரிப்பதை விட அளவற்ற மிகுதியான நேசம் வேறு எது இருக்க முடியும்?

என் பிரியமுள்ள மீட்பரே, உமது அன்பிற்குப் பிரதியன்பு செலுத்தும்படியாக, உமக்காக இன்னொரு கடவுள் மரிப்பதுதான் அவசியமாக இருக்கும். ஆகவே, பூமியின் பரிதாபத்திற்குரிய புழுக்களாகிய நாங்கள் அனைவரும் உமக்காக, நீர் தந்த உயிரைக் கையளித்தாலும் அது மிக அற்பமானதாக, அல்லது வெறுமையாக மட்டுமே இருக்கும்.

அவரை நேசிக்க இன்னும் அதிகமாக நம்மைத் தூண்ட வேண்டிய காரியம், தமது வாழ்நாளில் தமது மரண நேரத்தை ஏக்கத்தோடு தேடுவதில் அவருக்கிருந்த மிகுதியான ஆசையாகும். இந்த ஆசையைக் கொண்டு, நம்மீது தமக்குள்ள அன்பு எவ்வளவு மேலானது என்று உண்மையாகவே அவர் எண்பித்தார். ""நான் பெற வேண்டிய ஸ்நானம் ஒன்றுண்டு; அது நிறைவேறுமளவும் எவ்வளவோ நெருக்கிடைப்படுகிறேன்'' (லூக்.12:50). மனிதர்களின் பாவங்களைக் கழுவிப் போக்குவதற்கு நான் என் சொந்த இரத்தத்தால் ஞானஸ்நானம் பெற வேண்டும். என் கசப்பான திருப்பாடுகள் மற்றும் மரணத்தின் மீதுள்ள ஆசையால் நான் எப்படி இறந்து கொண்டிருக்கிறேன்! என் ஆத்துமமே, உன் கண்களை உயர்த்தி, அவமானச் சிலுவையில் தொங்கும் உன் ஆண்டவரை நோக்கிப் பார்; அவரது திருக்காயங்களிலிருந்து ஒழும் திரு இரத்தத்தை உற்றுநோக்கு; உருக்குலைக்கப்பட்ட அவரது திருச்சரீரத்தைப் பார், இவையெல்லாம் அவரை நேசிக்க உன்னை அழைக்கின்றன. உன் மீட்பர் தமது துன்பங்களில், பரிதாப உணர்வின் வழியாகவாவது நீ அவரை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

சேசுவே, உமது உயிரையும், விலைமதிக்கப்படாத திரு இரத்தத்தையும் எனக்குத் தர நீர் மறுக்கவில்லை. நீர் என்னிடம் கேட்கும் எதையாவது நான் உமக்கு மறுப்பேனா? இல்லை, நீர் எதையும் ஒதுக்கி வைத்துக் கொள்ளாமல், உம்மையே எனக்குத் தந்திருக்கிறீர். நானும் எதையும் ஒதுக்கி வைக்காமல், என்னை முழுமையாக உமக்குக் கையளிப்பேன்.

"கிறீஸ்துநாதரின் தேவசிநேகம் நம்மை நெருக்குகிறது'' (2 கொரி. 5:14) என்ற அர்ச். சின்னப்பரின் வார்த்தைகளைப் பற்றிப் பேசும் போது அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுவதாவது: ""மெய்யான சர்வேசுரனாக இருக்கிற சேசுநாதர் நமக்காகத் தம் உயிரைக் கையளிக்கும் அளவுக்கு, அதுவும், ஒரு சிலுவையில் மரிக்கும் அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார் என்று அறிந்திருக்கும் போது, நம் இருதயங்கள் திராட்சை பிழியும் இயந்திரத்தில் வைத்து அழுத்தப்படுவதாகவும், வலுவந்தமாக நெருக்கப்படுவதாகவும், மிகுந்த வல்லமையுள்ளதாகவும், அதே சமயம் மிகுந்த அன்பிற்கு உரியதாகவும் இருக்கிற ஒரு வன்முறையால் நெருக்கப்பட்டு அவற்றிலிருந்து அன்பு வெளிப்படுவதாகவும் நாம் உணர வில்லையா?"' அதன்பின் அவர் தொடர்ந்து, ""ஆகவே, நம் மீதுள்ள அன்பிற்காகச் சிலுவையின் மீது மரித்தவருக்காக, சிலுவையில் அறையுண்ட சேசுநாதர் மீது நாம் ஏன் நம்மையே வீசியெறிவதில்லை? நான் அவரோடு ஒட்டிக் கொள்வேன், ஒருபோதும் அவரை விட்டுப் பிரிய மாட்டேன்; அவரோடு மரிப்பேன், அவரது அன்பின் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவேன் என்று நாம் சொல்ல வேண்டும். என் சேசு தம்மையே முழுமையாக எனக்குத் தந்தார்; நானும் என்னை முழுமையாக அவருக்குத் தருவேன். அவரது திருமார்பின் மீது நான் வாழ்ந்து இறப்பேன்; வாழ்வோ சாவோ இனி ஒருபோதும் அவரிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது. ஓ நித்திய நேசமே, என் ஆத்துமம் உம்மைத் தேடுகிறது, அது நித்தியத்திற்கும் உம்மைத் தன் மணவாளராக ஏற்றுக்கொள்கிறது!'' என்கிறார்.