இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுகிறீஸ்துநாதரின் உயிர்ப்பு

நம் இரட்சகரும், நம் தந்தையும், நாம் சொந்தமாகக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த நண்பருமானவரின் உயிர்ப்பின் மகிமையில் அவரைக் கண்டு நாம் அகமகிழ்ந்து களிகூர்வோமாக. நம் பொருட்டும் நாம் களிகூர்வோமாக. ஏனெனில் சேசுநாதரின் உயிர்ப்பு நமக்கு நம் சொந்த உயிர்ப்புக்கும், நம் ஆத்துமத்திலும், சரீரத்திலும் ஒரு நாள் மோட்சத்தில் நாம் சொந்தமாகக் கொண்டிருப்போம் என நாம் நம்பியிருக்கும் மகிமைக்கும் ஒரு நிச்சயமான வாக்குத்தத்தமாக இருக்கிறது.

சேசுநாதர் நம்மை மீட்டு இரட்சிப்பதற்காக மட்டுமின்றி, தமது முன்மாதிரிகையால், எல்லாப் புண்ணியங்களையும், குறிப்பாக தாழ்ச்சியையும், அதனுடன் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் பரிசுத்த தரித்திரத்தையும் நமக்குக் கற்பிப்பதற்காகவும் உலகிற்கு வந்தார். இதற்காகவே, ஒரு குகையில் பிறப்பதை அவர் தேர்ந்து கொண்டார்; முப்பது ஆண்டுகள் ஓர் ஏழை மனிதனாக, ஒரு தச்சுப் பட்டறையில் வாழ்வதை அவர் தேர்ந்து கொண்டார்; இறுதியாக, ஒரு சிலுவையின் மீது, ஏழையாகவும், நிர்வாணியாகவும் மரிப்பதை அவர் தேர்ந்துகொண்டார். தமது கடைசி மூச்சை வெளியிடுமுன், தமது ஆடைகள் போர்ச் சேவகர்களால் பிரித்துக்கொள்ளப் படுவதை அவர் கண்டார்; அதே சமயத்தில், தமது மரணத்திற்குப் பிறகு, தமது அடக்கத்திற்குரிய பரிவட்டச் சீலையைக் கூட அவர் மற்றவர்களிடமிருந்து பிச்சையாகப் பெற்றுக் கொண்டார்.

பரலோக, பூலோக அரசராயிருந்தும், தமது பேறுபலன்களாலும், கொடைகளாலும் நம்மை வளப்படுத்தும்படியாக, தரித்திரத்தில் வாழ்ந்து மரிப்பதைத் தேர்ந்துகொண்ட சேசுநாதரைக் காண்பதில் ஏழைகள் ஆறுதலடைவார்களாக. ""நமது ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் செல்வந்தராயிருந்தும், தம்முடைய தரித்திரத்தால் நீங்கள் செல்வந்தர்களாகும்பொருட்டு, அவர் உங்கள் நிமித்தம் தரித்திரர் ஆனார்'' (2 கொரி.8:9). 

ஓ என் சேசுவே, உமது உயிர்ப்பைப் பார்த்து, என்றென்றும் அடியேன் உம்மைத் துதித்துக் கொண்டும், நேசித்துக் கொண்டும் இருக்குமாறு, பரலோகத்தில் உம்மோடு எப்போதும் இணைந்திருக்கும்படி, இறுதி நாளில் உம்மோடு நானும் மகிமையோடு அரசாளச் செய்தருளும்படியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆகவே, சேசுநாதர் கடவுளாக மட்டுமின்றி மனிதனாகவும் பரலோகத்திலும், பூலோகத்திலும் எல்லா அதிகாரத்தையும் கொண்டிருக்கும் மகிமையோடு, மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். எனவே சகல தேவதூதர்களும், சகல மனிதர்களும் அவருக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நம் இரட்சகரும், நம் தந்தையும், நாம் சொந்தமாகக் கொண்டிருக்கிற மிகச் சிறந்த நண்பருமானவரை இப்படி மகிமையில் காண்பதில் நாம் அக்களிப்போமாக.

நமக்காகவும் நாம் அக்களிப்புக் கொள்வோமாக. ஏனெனில் சேசுகிறீஸ்துநாதரின் உயிர்ப்பு நம் சொந்த உயிர்ப்புக்கும், ஒரு நாள் பரலோகத்தில் நம் ஆத்துமத்திலும் சரீரத்திலும் நாம் கொண்டிருக்கப் போகிறோம் என்று நம்பியிருக்கும் மகிமைக்கும் ஒரு நிச்சயமான வாக்குத்தத்தமாக இருக்கிறது. வேதசாட்சிகள் வாழ்வில் எல்லாத் தீமைகளையும், கொடுங்கோலர்களின் மிகக் கொடூரமான வாதைகளையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்க அவர்களுக்குத் தைரியம் தந்தது இந்த நம்பிக்கையே. ஆயினும், இவ்வுலகில் சேசுவோடு துன்பப்பட மனதாயிருப்பவர்களைத் தவிர வேறு யாரும் அவரோடு அக்களித்திருக்க மாட்டார்கள் என்பதிலும், தனக்கு நியமிக்கப்பட்டுள்ளபடி போராடாதவன் நித்திய முடியைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதிலும் நாம் உறுதியாயிருப்போம். ""மல்யுத்தம் பண்ணுகிறவன் சட்டப்படி யுத்தம் பண்ணினாலன்றி முடிசூட்டப்பட மாட்டான்'' (2 திமோ.2:5). அதே சமயம், இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் மோட்சத்தில் நாம் அனுபவிப்போம் என்று நம்பியிருக்கிற மட்டற்ற, நித்தியப் பேரின்பங்களோடு ஒப்பிடப்படும்போது, அவை குறுகியவை, இலகுவானவை என்று அதே அப்போஸ்தலர் சொல்லும் காரியத்திலும் நாம் உறுதியாயிருப்போம் (2 கொரி.4:17). கடவுளின் வரப்பிரசாதத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க நாம் உழைப்போம்; கடவுளின் நட்பில் நிலையாயிருக்கத் தொடர்ந்து ஜெபிப்போம். தொடர்ச்சியான ஜெபமின்றி, நாம் நிலைமை வரத்தை அடைய முடியாது. நிலைமை வரமின்றி, நாம் இரட்சிக்கப்பட முடியாது.

ஓ, முழு நேசத்திற்குத் தகுதியுள்ளவராகிய இனிய சேசுவே, உமது அன்பைக் காட்டும்படியாக, ஓர்அவமானச் சிலுவையில் காயப்பட்டவராகவும், அவமதிக்கப்பட்டவராகவும் மரிக்க நீர் மறுக்கவில்லை என்னும் அளவுக்கு, மனிதர்களை நீர் எப்படி இவ்வளவு அதிகமாக நேசித்தீர்? ஓ என் தேவனே, தங்கள் முழு இருதயத்தோடு உம்மை நேசிப்போர் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு குறைவாக எண்ணிக்கையில் இருப்பது எப்படி? ஓ என் பிரியமுள்ள இரட்சகரே, இந்த ஒரு சிலரில் ஒருவனாக நான் அருக்க ஆசிக்கிறேன். கடந்த காலத்தில் உமது அன்பை மறந்து, அற்பமான இன்பங்களுக்காக உமது வரப்பிரசாதத்தை இழந்து போன நிர்ப்பாக்கியப் பாவியாக நான் இருக்கிறேன்! நான் செய்த தீமை என்னவென்று நான் அறிவேன். அதைப் பற்றி என் முழு இருதயத்தோடு துக்கப்படுகிறேன், இது பற்றி துக்கத்தினால் மரிக்கவும் நான் விரும்புகிறேன். ஓ என் அன்புள்ள மீட்பரே, இப்போது என்னை விட அதிகமாக உம்மை நான் நேசிக்கிறேன், உமது நட்பை இழப்பதை விட ஓராயிரம் தடவை மரிக்கவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன். சேசுவே, நீர் எனக்குத் தந்திருக்கிற ஒளிக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். சேசுவே, என் நம்பிக்கையே, என் சொந்தக் கரங்களில் என்னை விட்டு விடாதேயும். மரணம் வரைக்கும் எனக்கு உதவி செய்தருளும்.

ஓ மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, சேசுவிடம் எனக்காக ஜெபியும்.