இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வியாகுல மாதா திருநாள்

வேதசாட்சிகள் என்ன துன்பம் அனுபவித்தார்கள் என்று நமக்குக் காட்டும்படியாக, அவர்கள் தங்கள் வேதசாட்சியத்தின் கருவிகளோடு சித்தரிக்கப்படுகிறார்கள்; அர்ச். பிலவேந்திரர் ஒரு சிலுவையோடும், அர்ச். சின்னப்பர் ஒரு வாளோடும் தோன்றுகிறார்கள். மாமரியோ, தனது கரங்களில் தனது திருமகனின் மரித்த திருச்சரீரத்தோடு தோன்றுகிறார்கள். ஏனெனில் அவர் மட்டுமே அவர்களது வேதசாட்சியத்தின் காரணமாக இருந்தார்; அவர் மீதுள்ள தயவிரக்கம்தான் தேவ அன்னையை வேதசாட்சிகளின் இராக்கினியாக ஆக்கியது. 

சேசுநாதர் கல்வாரிக்குச் செல்லும் சாலையில் தம் தோளில் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்வதை அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் பின்வருமாறு தியானிக்கிறார். அவர் தம் தாயாரை நோக்கித் திரும்பி, ""ஐயோ, என் சொந்த, பிரியமுள்ள அன்னையே, எங்கே போகிறீர்கள்? எப்பேர்ப்பட்ட ஒரு காட்சியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்! என் துன்பங்களைக் கண்டு நீங்களும், உங்கள் துன்பங்களைக் கண்டு நானும் அவஸ்தைப்படப் போகிறோம்'' என்று சொல்கிறார். ஆனால் நேசமிக்க திருத்தாயார் , அவரது மரணத்தின் போது அவருக்கு அருகில் இருந்தால், தான் மரணத்தை விடக் கொடிய வாதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அறிந்திருந்தும் கூட, அவரைப் பின்செல்கிறார்கள். தன் திருமகன் தாம் அறையப்பட இருக்கும் சிலுவையைச் சுமந்து செல்வதை அவர்கள் காண்கிறார்கள். அவர்களும் தன் வியாகுலங்களாகிய சிலுவையைச் சுமந்து கொண்டு, அவரோடு தனது சிலுவையில் அறையப்படும்படியாக, அவரைப் பின்தொடர்ந்து போகிறார்கள்.

"மாமரி, தனது திருமகனின் திருப்பாடுகளைத் தானே அனுபவித்திருந்தால், எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்களோ, அதை விட மிக அதிகமாக, அவருடைய திருப்பாடுகளில் துன்பப் பட்டார்கள்; ஏனெனில் அவர்கள் தன்னை நேசித்ததை விட எவ்வளவோ அதிகமாகத் தன் சேசுவை நேசித்தார்கள்'' என்று முத். அமதேயுஸ் எழுதுகிறார். இதனாலேயே ""மாமரியின் துன்பங்கள் ஒருங்கிணைந்த அனைத்து வேதசாட்சிகளின் துன்பங்களுக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தன'' என்று வலியுறுத்திக் கூற அர்ச். இல்டஃபோன்ஸ் சற்றும் தயங்கவில்லை. அர்ச். ஆன்செல்ம், திவ்விய கன்னிகையிடம் பேசும் விதமாக: ""பரிசுத்த வேதசாட்சிகளின் மீதுகட்டவிழ்த்து விடப்பட்ட மிகக் கொடிய சித்திரவதைகள், அம்மா, உங்கள் வேதசாட்சியத்தோடு ஒப்பிடும்போது, அவை மிகவும் அற்பமானவையாக அல்லது ஒன்றுமில்லாமையாக இருந்தன'' என்கிறார். அதே புனிதர் தொடர்ந்து: ""உண்மையாகவே, ஓ இராக்கினியே, வாழ்வின் ஊற்றாகிய உங்கள் திருச்சுதன் உங்களைப் பாதுகாத்திராவிட்டால், உங்கள் துன்பங்களின் காரணமாக நீங்கள் இறந்திருப்பீர்கள் என்னும் அளவுக்கு, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உங்கள் துன்பங்கள் மகா கொடியவையாக இருந்தன'' என்கிறார். அர்ச். சியென்னா பெர்னார்தீன் இன்னும் ஒரு படி மேலே சென்று, மாமரியின் துன்பங்கள் துன்பப்படத் திறனுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் என்றால், அவற்றைத் தாங்க முடியாமல், அந்தக் கணமே அவர்கள் இறந்திருப்பார்கள் என்னும் அளவுக்கு, அவை மிகக் கொடியவையாக இருந்தன என்கிறார். அப்படியிருக்க, மாமரியின் வேதசாட்சியம் ஒப்பற்றது என்பதிலும், அது அனைத்து வேதசாட்சிகளின் துன்பங்களையும் கூடப் பெரியதாயிருந்தது என்பதிலும் யார் சந்தேகம் கொள்ள இயலும்? அர்ச். அந்தோனினுஸ் கூறுவதுபோல, ""வேதசாட்சிகள் தங்கள் சொந்த உயிர்களின் பலியில் துன்புற்றார்கள்; ஆனால் திவ்விய கன்னிகையோ, தன் சொந்த உயிரை விடப் பாரதூரமான அளவுக்குத் தான் நேசித்த தன் திருமகனின் உயிரைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்ததால் துன்பப்பட்டார்கள்.''

ஓ, இனிய நேசத்தின் தாயாரே, இந்த உங்களது அழகிய ஆத்துமத்தின் வேதசாட்சியத்தால், என் அன்புள்ள ஆண்டவரும், தேவனுமானவருக்கு எதிராக நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தருகிறீர்கள். இந்தப் பாவங்களுக்காக என் முழு இருதயத்தோடு நான் மனஸ்தாபப்படுகிறேன். சோதனைகளில் என்னை ஆதரித்துக் காத்தருளுங்கள், இந்த நிர்ப்பாக்கியமான அந்நிய தேச வாழ்வுக்குப் பிறகு, நித்தியத்திற்கும் சேசுவினுடையவும், உங்களுடையவும் ஸ்துதிகளை நான் பாடும்படி பரலோகத்திற்கு வந்து சேரும்படியாக, சேசுவின் பேறுபலன்களின் வழியாகவும், உங்கள் பேறுபலன்களின் வழியாகவும் என் ஆத்துமத்தை நான் இரட்சித்துக் கொள்ளுமாறு, என் மரண நேரத்தில் எனக்கு செய்தருளுங்கள். ஆமென்.

வேதசாட்சிகள் கொடுங்கோலர்களால் தங்களுக்குச் செய்யப் பட்ட வாதைகளின் கீழ் துன்புற்றார்கள். ஆனால் தமது ஊழியர்களை ஒருபோதும் கைவிடாதவராகிய நம் ஆண்டவரோ, அவர்களது துன்பங்களுக்கு மத்தியில் எப்போதும் அவர்களைத் தேற்றினார். அவர்களது இருதயங்களில் எரிந்து கொண்டிருந்த தேவசிநேகம், அவர்களது வேதனைகள் அனைத்தையும் இனியதாகவும், இன்பமானவையாகவும் ஆக்கி விட்டது. இதன் காரணமாக, சேசுநாதரின் மீது அவர்களது அன்பு எவ்வளவு பெரிதாயிருந்ததோ, அவ்வளவுக்குக் குறைவாகவே அவர்கள் தங்கள் வேதனைகளை உணர்ந்தார்கள்; மேலும், அவை அனைத்திற்கும் மத்தியிலும், கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளின் நினைவு ஒன்றே கூட அவர்களைத் தேற்றப் போதுமாயிருந்தது.

மாமரியின் காரியத்திலோ, இது நேர் எதிராக இருந்தது; ஏனெனில் சேசுநாதரின் வாதைகளே, அவர்களது வேதசாட்சியமாக இருந்தன. சேசுவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே அவர்களை வாதிப்பவனாக இருந்தது. ""உன் நெருக்கிடை கடலைப் போல் அபாரமாயிருக்கின்றதே, உன்னைக் குணப்படுத்துபவர் யார்?'' என்ற எரேமியாஸின் வார்த்தைகளை இங்கே நாம் திரும்பவும் சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். கடல் முழுவதும் கசப்பு நிரம்பியதாகவும், இனிப்பாயிருக்கும் ஒரே ஒரு துளி நீரைக் கூடத் தனக்குள் கொண்டிராததாகவும் இருப்பது போலவே, மாமரியின் இருதயமும் முற்றிலும் கசப்பாகவும், மிக அற்பமான ஆறுதலும் அற்றதாகவும் இருந்தது: ""உன்னைக் குணப்படுத்துபவர் யார்?'' அவர்களது திருமகன் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் தரவும், அவர்களைக் குணப்படுத்தவும் முடியும்; ஆனால் மாமரி கிறீஸ்துவின் மீது கொண்டிருந்த அன்பே அவர்களது வேதசாட்சியத்துக்குக் காரணமாக இருந்ததால், சிலுவையில் அறையுண்ட தனது திருமகனிடமிருந்து வரும் தனது மிகக் கொடிய வேதனையில் மாமரி என்ன ஆறுதலைத்தான் பெற்றுக்கொள்ள முடியும்?

ஆகவே, மாமரியின் துக்கம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அவர்களது திருமகனின் மீது அவர்ள் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கொர்னேலியுஸ் ஆ லாப்பிதே கூறுகிறார். ஆனால் இந்த அன்பை அளக்க யாரால் முடியும்? ""தனது மகன் என்ற முறையில் அவர்கள் அவர் மீது கொண்டிருந்த சுபாவமான அன்பும், தனது கடவுளாக அவர் மீது அவர்கள் கொண்டிருந்த சுபாவத்திற்கு மேற்பட்ட அன்பும் மாமரியின் திரு இருதயத்தில் ஒன்றாக இணைந்திருந்தன.'' இந்த இரண்டு அன்புகளும் ஒன்றாகக் கலந்திருந்தன. இந்த அன்பு எவ்வளவு பெரிதாயிருந்தது என்றால், "ஒரு மாசற்ற சிருஷ்டியால் எந்த அளவுக்கு சேசுவை நேசிக்க முடியுமோ, அந்த அளவுக்கு'' மாமரி சேசுவை நேசித்தார்கள் என்று பாரிஸின் வில்லியம் தயக்கமேயின்றி வலியுறுத்துகிறார். இவ்வாறு, அர்ச். விக்டரின் ரிச்சர்ட் என்பவர் கூறுவது போல, "மாமரி சேசுவை நேசித்ததை விட அதிகமாக வேறு எந்த சிருஷ்டியும் அவரை ஒருபோதும் நேசித்ததில்லை என்பதால், எந்த ஒரு துயரமும் மாமரியின் துயரத்திற்கு ஈடானதாக இருக்க ஒருபோதும் சாத்தியமில்லை'' என்று அர்ச். விக்டரின் ரிச்சர்ட் கூறுகிறார்.

என் வியாகுலத் தாயாரே, உம் நேசத் திருக்குமாரன் மரணத்திற்கு இட்டுச் செல்லப்பட்டதைக் காண்பதில் நீங்கள் அனுபவித்த துயரத்தைப் பார்த்து, கடவுள் எனக்கு அனுப்பும் துன்பங்களை நானும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளத் தேவையான வரப்பிரசாதத்தை எனக்குப் பெற்றுத் தாரும். என் சிலுவையுடன் என்மரணம் வரை உங்களோடு எப்படி சேர்ந்து வருவது என்பதை மட்டும் நான் அறிந்திருப்பேன் என்றால், நான் பேறுபெற்றவன். நீங்கள் உங்கள் சேசுவோடு--நீங்கள் இருவருமே மாசற்றவர்கள் மற்றவற்றை விட மிக அதிக பாரமான சிலுவையைச் சுமந்தீர்கள். அப்படியிருக்க, நரகத்திற்கே தகுதி பெற்றிருககிற நீசப் பாவியாகிய நான் என் சிலுவையைச் சுமந்துசெல்ல மறப்பேனா? ஆ, மாசற்ற கன்னிகையே, எல்லாச் சிலுவைகளையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ள நீங்கள் எனக்கு உதவி செய்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன். ஆமென்.