இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சினம் கொள்ளத் தாமதியுங்கள்

கோபமே எல்லாத் துர்க்குணங்களும் ஆன்மாவினுள் நுழைவதற்கான வாசலாக இருக்கிறது என்று அர்ச். ஜெரோம் சொல்கிறார். அர்ச். பொனவெந்தூர் கூறுகிறபடி, கோபமுள்ள மனிதன் எது நல்லது, எது தீயது என்று பிரித்தறிய இயலாதவனாக இருக்கிறான். ""மனிதனுடைய கோபம் தேவ நீதியைப் பிறப்பிக்காது'' (யாகப்.1:20). கோபம் கொள்கிறவன் கடவுளுக்கு, அல்லது தன் அயலானுக்கு எதிராகக் கனமான பாவத்தில் விழும் பெரும் ஆபத்தில் இருக்கிறான். இவ்வாறு, நமக்கு ஓர் அவமானம் வரும்போது, நாம் நம்மையே வலுவந்தம் செய்து, நம் கோபத்தை அடக்கிக்கொள்ள வேண்டும். ஒன்றில் சாந்தத்தோடு பதில் சொல்வோம், அல்லது மவுனமாக இருந்து விடுவோம்; இவ்வாறு நாம் வெற்றி பெறுவோம் என்று அர்ச். இசிதோர் சொல்கிறார். ஆனால் கோபத்தோடு நீ பதில் சொல்வாய் என்றால், உனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்பவன் ஆவாய். உன்னைத் திருத்துபவனுக்குக் கோபத்தோடு பதில் சொல்வது இன்னும் அதிக மோசமாக இருக்கும். முகஸ்துதியின் மூலம் தங்கள் ஆத்துமங்களைக் காயப்படுத்துபவர்கள் மீது கோபப்பட வேண்டியிருந்தும் கோபப்படாத சிலர் இருக்கிறார்கள் என்று அர்ச். பெர்னார்ட் சொல்கிறார். ஆனால் அவர்கள் தங்கள் ஒழுங்கீனங்களைக் குணமாக்குவதற்காகத் தங்களைத் திருத்துபவன் மீது இவர்கள் எரிச்சலும் கோபமும் கொள்கிறார்கள். திருத்தப் படுவதை வெறுக்கும் மனிதனுக்கு எதிராக, அழிவின் தீர்ப்பு கூறப்பட்டு விட்டது என்று ஞானியானவர் கூறுகிறார்: ""ஏனெனில் அவர்கள் என் கண்டிப்புகளைப் புறக்கணித்தார்கள். . . ""மதியீனர்களின் செல்வாக்கு அவர்களை அழித்து விடும்'' (பழ. 1:30,32). மூடர்கள் திருத்தப்படுவதிலிருந்து விடுபட்டிருப்பதை, அல்லது தாங்கள் பெறும் அறிவுரைகளைப் புறக்கணிப்பதை செல்வாக்கு என்று மதிக்கிறார்கள்; ஆனால் இத்தகைய செல்வாக்கு அவர்களுடைய அழிவுக்குக் காரணமாக இருக்கிறது. ""சீக்கிரத்தில் கோபித்துக்கொள்ள வேண்டாம்'' (சங்கப்.7:10). பிறர் தங்களுக்கு முரண்படும் ஒவ்வொரு முறையும் சிலர் நிறம் மாறுகிறார்கள், கோபப்படுகிறார்கள். கோபமூட்டும் ஒரு சந்தர்ப்பத்தை நீ எதிர்கொள்ளும்போது, அது உன் இருதயத்திற்குள் நுழைந்து விட அனுமதிக்காதபடி நீ விழிப்பாயிருக்க வேண்டும். கோபம் உள்ளே நுழையள அனுமதி பெற்றதும், அது தங்களை எங்கே வழிநடத்துகிறது என்பது யாருக்கும் தெரியாது. இதன் காரணமாக, இத்தகைய சந்தர்ப்பங்களை நம் தியானங்களிலும் ஜெபங்களிலும் நாம் முன்னறிந்திருப்பது அவசியம். ஏனெனில் அவற்றை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக இராவிடில், மூர்க்கமான குதிரைக்குக் கடிவாளமிடுவதைப் போல, கோபத்தை அடக்குவதும் கடினமானதாக இருக்கும். ஆயினும், கோபம் ஆத்துமத்தினுள் நுழைய அனுமதித்து விட்ட பரிதாப நிலையில் நாம் இருந்தால், அது தொடர்ந்து அங்கே தங்கியிருக்க அனுமதிக்காதபடி நாம் கவனமாயிருப்போம். ஒரு சகோதரன் தன் மீது மனத்தாங்கலாக இருப்பதாக உணரும் எவனும், முதலில் அவனோடு சமாதானம் செய்து கொள்ளாமல் பீடத்தருகில் வந்து காணிக்கை செலுத்தலாகாது என்று சேசுநாதர் கூறுகிறார். ""முதலில் உன் சகோதரனுடன் உறவாடப் போ; பிறகு வந்து உன் காணிக்கையைச் செலுத்து'' (மத்.5:9). எந்த விதத்திலாவது நோகடிக்கப்பட்ட ஒருவன் தன் இருதயத்திலிருந்து கோபம் முழுவதையும் மட்டுமல்ல, மாறாக தங்களை நோகச் செய்த மனிதர்கள் மீது தங்களுக்குள்ள ஒவ்வொரு கசப்புணர்வையும் வேரறுத்து விட முயல வேண்டும். ""சகலவித கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், தூஷணமும், இது முதலான எவ்வித துர்க்குணமும் உங்களை விட்டு விலகக்கடவது'' (எபே.4:31). கோபம் உன்னிடம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் வரையிலும், செனேக்காவின் அறிவுரையைப் பின்பற்று: ""நீ கோபமாக இருக்கும்போது, எதுவும் செய்யாதே. எதுவும் சொல்லாதே, அது கோபத்தால் தூண்டப்பட்டதாக ஆகி விடலாம்.'' தாவீதைப் போல மவுனமாயிரு, நீ தொந்தரவு செய்யப் படுவதாக உணரும்போது எதுவும் பேசாதே. ""நான் கலங்கியிருந்தபடியால் பேசாமலிருந்தேன்'' (சங்.76:5). எத்தனை பேர், கோபத்தால் பற்றியெரியும்போது, வாய்க்கு வந்தபடி பேசி விட்டு, அல்லது எதையாவது செய்து விட்டு, பிறகு தாங்கள் அமைதி யடைந்தபின் அதற்காக வருந்துகிறார்கள்!தன் இருதயத்திலிருந்து கோபம் முழுவதையும் மட்டுமல்ல, மாறாக தங்களை நோகச் செய்த மனிதர்கள் மீது தங்களுக்குள்ள ஒவ்வொரு கசப்புணர்வையும் வேரறுத்து விட முயல வேண்டும். ""சகலவித கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், தூஷணமும், இது முதலான எவ்வித துர்க்குணமும் உங்களை விட்டு விலகக்கடவது'' (எபே.4:31). கோபம் உன்னிடம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் வரையிலும், செனேக்காவின் அறிவுரையைப் பின்பற்று: ""நீ கோபமாக இருக்கும்போது, எதுவும் செய்யாதே. எதுவும் சொல்லாதே, அது கோபத்தால் தூண்டப்பட்டதாக ஆகி விடலாம்.'' தாவீதைப் போல மவுனமாயிரு, நீ தொந்தரவு செய்யப் படுவதாக உணரும்போது எதுவும் பேசாதே. ""நான் கலங்கியிருந்தபடியால் பேசாமலிருந்தேன்'' (சங்.76:5). எத்தனை பேர், கோபத்தால் பற்றியெரியும்போது, வாய்க்கு வந்தபடி பேசி விட்டு, அல்லது எதையாவது செய்து விட்டு, பிறகு தாங்கள் அமைதி யடைந்தபின் அதற்காக வருந்துகிறார்கள்!

மிக அநேக சூழ்நிலைகளுக்கு மத்தியில், கோபத்தின் ஒவ்வொரு தூண்டுதலிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விடுபட்டிருப்பது மனித பலவீனததிற்கு சாத்தியமேயில்லை என்பதை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்பது உண்மைதான். செனேக்கா கூறுவது போல, இந்தக் கோபத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருப்பவன் ஒருவனுமில்லை. ஆத்துமத்தில் வெடித்துக் கிளம்பும் கோப உணர்வுகளை அடக்குவதற்குத்தான் நாம் முழு முயற்சி எடுக்க வேண்டும். அவற்றை எப்படி அடக்குவது? சாந்தத்தால்! இது செம்மறிக்குட்டியின் புண்ணியம்--அதாவது சேசுநாதரின் நேசத்திற்குரிய புண்ணியம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அவர் ஒரு செம்மறிப்புருவையைப் போல, கோபம் கொள்ளாமலும், எந்த முறைப்பாடும் சொல்லாமலும், தமது திருப்பாடுகள் மற்றும் சிலுவையில் அறையப்படுதலின் துன்ப துயரங்களை அனுபவித்தார். ""ஆடானது தன்னைக் கழுத்தறுப்பான் முன் வாய்த் திறவாதிருப்பதுபோல, அவர் தம் கொலைஞர் முன் மெளனங்காத்தார்'' (இசை.53:7). இதனாலேயே தம்மிடமிருந்து சாந்தத்தையும், இருதயத் தாழ்ச்சியையும் கற்றுக்கொள்ளும்படி அவர் நமக்குக் கற்பித்தார்: ""நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனென்று என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்'' (மத்.11:29).

ஓ, சாந்தமுள்ளவர்கள் கடவுளின் பார்வைக்கு எவ்வளவு பிரியமானவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் சமாதானத்தில் தங்களுக்கு வரும் எல்லாச் சிலுவைகளுக்கும், நிர்ப்பாக்கியங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், காயங்களுக்கும் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். சாந்த குணமுள்ளவர்களுக்குப் பரலோக இராச்சியம் வாக்களிக்கப்பட்டுள்ளது: ""சாந்த குணமுள்வர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் நாட்டைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்'' (மத்.5:4); அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவார்கள்: ""சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் தேவமக்கள் எனப்படுவார்கள்'' (மத்.5:9). சிலர் எந்த அடிப்படையுமின்றித் தங்கள் சாந்த குணத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்வார்கள்; ஏனெனில் தங்களைப் புகழ்பவர்களும், நன்மை செய்பவர்களுமான மனிதர்களிடம் மட்டுமே அவர்கள் சாந்தத்தோடு இருக்கிறார்கள். ஆனால் தங்களைக் காயப்படுத்துகிற அல்லது கண்டனத்துக்கு உள்ளாக்குகிற மனிதர்களிடமோ, அவர்கள் முழுவதும் கடுங்கோபவெறியும், பழிவாங்கும் ஆசையும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். சாந்தம் என்னும் புண்ணியம் நம்மை வெறுப்பவர்களும், தவறாக நடத்துபவர்களுமான மனிதர்களிடமும் சாந்தமாகவும், சமாதானத்தோடும் இருப்பதில் அடங்கியிருக்கிறது. ""சமாதானத்தை வெறுப்பவர்களோடு நான் சமாதானமாயிருந்தேன்'' (சங்.119:7).

அர்ச். சின்னப்பர் சொல்வது போல, எல்லா மனிதர்களிடமும் நாம் இரக்கத்தை அணிந்துகொண்டவர்களாக இருந்து, ஒருவரை யொருவர் தாங்கிக் கொள்ள வேண்டும். ""சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட நீங்கள் பரிசுத்தரும், பிரியமுள்ளவர்களுமாய்த் தயாளமான உள்ளத்தையும், சாந்தத்தையும், தாழ்ச்சியையும், அடக்கவொடுக்கத்தையும், பொறுமையையும் உடுத்திக்கொண்டு, ஒருவரொருவரைத் தாங்கி, எவனுக்காவது மற்றொருவன்மேல் முறைப்பாடு இருந்தால், அதைப் பொறுத்துக் கொண்டு, ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் உங்களுக்குள் ஒருவர் ஒருவரை மன்னித்துக்கொள்ளுங்கள்'' (கொலோ.3:12). உன் குறைகளை மற்றவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், உன் தவறுகளை அவர்கள் மன்னிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்; அதே விதத்தில் நீயும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். ஆகவே, உனக்கு எதிராகக் கோபவெறி கொண்டுள்ள ஒருவன் உன்னை அவமானப்படுத்தும்போது, ""சாந்தமுள்ள பதில் கடுங் கோபத்தை முறிக்கிறது'' (பழ.15:1). தீயவர்கள் தங்களுக்கு வரும் அவமானங்களைத் தங்கள் ஆங்காரத்தை அதிகரித்துக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவர்களோ நிந்தை அவமானங்களைத் தாழ்ச்சியில் வளரத் தங்களுக்குத் தரப்பட்ட ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். ""அவமானத்தைத் தாழ்ச்சியாக மாற்றிக் கொள்பவனே தாழ்ச்சியுள்ளவனாக இருக்கிறான்'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார்.

"சாந்தமுள்ள மனிதன் தனக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான்'' என்கிறார் அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர். சுவாமி ஆல்வாரெஸ் கூற்றுப்படி, நிந்தை அவமான நேரம் சாந்த குணமுள்ளவர்களுக்குப் பேறுபலன்களின்நேரமாக இருக்கிறது என்பதால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே, தம் சீடர்களைப் பற்றி மற்றவர்கள் இல்லாதது பொல்லாததெல்லாம் கூறி, அவர்களைத் துன்புறுத்தும்போது அவர்கள் பாக்கியவான்கள் என்று சேசுநாதர் கூறுகிறார். ""என்னைப்பற்றி மனிதர் உங்களைச் சபித்துத், துன்பப்படுத்தி, உங்கள் மேல் சகல தின்மையையும் அபாண்டமாய்ச் சொல்லும்போது, நீங்கள் பாக்கியவான்கள்'' (மத்.;5:11). இதனாலேயே சேசுநாதர் நிந்தித்துப் புறக்கணிக்கப்பட்டது போலத் தாங்களும் புறக்கணிக்கப்பட வேண்டுமென்று புனிதர்கள் எப்போதும் விரும்பினார்கள். சாந்தமுள்ளவர்கள் மற்றவர்களுக்குப் பயனுள்ளவர்களாக இருப்பது எப்படியெனில், அதே அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் சொல்வது போல, சாந்தமும், சந்தோஷ உற்சாக மனநிலையும் கொண்ட கிறீஸ்தவன் காயப்படுத்தப் படுவதை அல்லது அவமதிக்கப்படுவதைக் காண்பதை விட கடவுளிடம் மற்றவர்களை ஈர்க்கக் கூடிய காரியம் வேறு எதுவுமில்லை. ஏனெனில் புண்ணியம் சோதிக்கப்படும்போதுதான் அறியப்படுகிறது; பொன் நெருப்பால் பரிசோதிக்கப்படுவது போல, மனிதரின் சாந்த குணம் அவமானத்தால் எண்பிக்கப்படுகிறது. ""பொன்னும் வெள்ளியும் நெருப்பினால் சுத்தமாவது போல, மனிதரும் தாழ்ச்சியின் உலையில் தகுதியானவர்கள் ஆகிறார்கள்'' (சீராக்.2:5).