இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவாலயத்தில் வேத சாஸ்திரிகளுடன் சேசுவின் தர்க்கவாதம்.

28 ஜனவரி  1944.

சேசுவை நான் காண்கிறேன்.  அவர் ஒரு இளைஞன்.  அவர் தம் பாதம் வரையிலும் வெண்சணல் அங்கி அணிந்திருக்கிறார்.  அதன்மேல் நீண்ட சதுரமான வெளிறிய சிவப்பு சால்வை.  தலையில் எதுவும் அணியவில்லை.  அவருடைய முடியின் நிறம் அவர் குழந்தையாயிருந்தபோது இருந்ததைவிட கருமையாக உள்ளது.  அவர் நல்ல வலுவுடையவராகவும் தம் வயதுக்குமேல் வளர்ந்துமிருக்கிறார்.  அவரின் முகத்திலிருந்து அவர் இளமையோடிருப்பது தெரிகிறது.

அவர் என்னைப் புன்னகையுடன் பார்த்து என்னை நோக்கிக் கரங்களை நீட்டுகிறார்.  அவர் வளர்ச்சி பெற்ற மனிதனானபின் செய்யும் புன்னகை போலவே அது உள்ளது.  சேசு மட்டுமே காணப்படுகிறார்.  அவர் ஒரு தாழ்வான சுவரில் சாய்ந்தபடி நிற்கிறார்.  தற்சமயம் வேறு எதையும் நான் காணவில்லை.  அது ஒரு சின்ன தெரு.  ஏற்றமும் இறக்கமும் கற்கள் பரவியும் உள்ள இடம்.  அதன் நடுவில் ஒரு குழி - அது மழை நேரத்தில் ஓடையாகி விடும்.  இப்பொழுது அது காய்ந்து கிடக்கிறது.  நல்ல சீதோஷ்ண நிலை.

அந்தத் தாழ்வான சுவர்ப்பக்கம் நானும் போவதாகத் தெரிகிறது.  சேசு செய்வதுபோல் நானும் சுற்றிலும் கீழேயும் பார்க்கிறேன்.  அங்கே சில வீடுகள் தெரிகின்றன.  சில உயர்ந்தும் சில தாழ்ந்தும் உள்ளன.  அவை ஒழுங்கில்லாமல் எப்பக்கமும் சிதறியிருப்பதுபோல் தெரிகிறது - கரிசல் நிலத்தில் சிதறிப் போடப்பட்ட வெள்ளைக் கற்கள் போல.  இந்த உதாரணம் நன்றாயில்லாவிட்டாலும் பொருத்தமானது.  தெருக்களும் சந்துகளும் அந்த வெள்ளைப் பரப்பில் நரம்புகள் போலிருக்கின்றன.  சுவர்களிலிருந்து சில செடிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளியே தெரிகின்றன.  பல செடிகள் பூத்திருக்கின்றன.  மற்றவை இலைகள் நிரம்பியுள்ளன.  இளந்தளிர் காலமாயிருக்க வேண்டும்.

என் இடதுபுறத்தில் தேவாலயத்தின் பிரம்மாண்டமான கட்டிடம் உள்ளது.  அது மூன்று அடுக்கான மேடைகளாக அமைந்துள்ளது.  அமைப்புகளும் கோபுரங்களும் முற்றங்களும் மண்டப வளைவுகளுமாகக் காணப்படுகின்றது.  இவற்றின் மையத்தில் மிகச் சிறந்த ஆடம்பரமான உயர்ந்த கட்டிடம் அதன் இருண்ட விமானங்களுடன் மேலே எழும்புகின்றது.  அந்த உருண்டை விமானங்கள் சூரிய ஒளியில் பொன்னாலும் செம்பாலும் மூடப்பட்டவைபோல் பிரகாசிக்கின்றன.  போர் அரண் போன்ற மதில்கள் சூழ்ந்து, அவை சேருமிடம் கோட்டை போலிருக்கின்றது.  ஒரு ஒடுக்கமான மேலே செல்லும் பாதையின் மீது கட்டப்பட்டுள்ளது.  மற்றெல்லாக் கோபுரங்களையும்விட உயர்ந்த கோபுரம்.  அதிலிருந்து பார்க்க அந்தக் கட்டிடம் முழுவதும் தெளிவாகத் தெரியும்.  அது ஒரு கடுமையான காவல் கூடம் போலிருக்கிறது.

சேசு அந்த இடத்தை உற்று நோக்குகிறார்.  பிறகு திரும்பி அவர் சாய்ந்து நின்ற சுவரில் முன்போல் சாய்ந்து நின்று அந்தக் கட்டிடத்தின் எதிலே நிற்கிற குன்றைப் பார்க்கிறார்.  அக்குன்றின் அடிப்பாகம் முழுவதும் வீடுகளால் நிரம்பியுள்ளது.  மற்றப் பாகங்கள் வெறுமையாயிருக்கின்றன.  அந்தப் பகுதியில் ஒரு தெரு ஒரு மண்டப வளைவில் வந்து முடிகிறது.  அதற்கப்பால் சதுரக் கற்கள் பாவிய சாலை மட்டும் உள்ளது.  அந்தக் கற்கள் நிரப்பில்லாமல் சிதறிப் போட்டவை போலுள்ளன.  அவை பெரிய கற்களல்ல. உரோமையரின் சாலைக் கற்களைப் போலில்லாமல் விய்யாரெஜியாவின் பாட்டையின் கற்கள் போலிருக்கின்றன.  (அந்த ராஜபாட்டை எதுவும் இப்போது உள்ளதா எனத் தெரியவில்லை).  கற்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படவில்லை.  அது ஒரு கரடான சாலை.

சேசுவின் முகம் எவ்வளவு கனமாகிறதென்றால் அவருடைய துயரத்தின் காரணத்தை அறிய நான் அந்தக் குன்றைப் பார்க்கின்றேன்.  ஆனால் விசேஷமாக ஒன்றும் காணப்படவில்லை.  அது ஒரு வெறுமையான குன்று.  அவ்வளவே.  நான் மறுபடியும் சேசுவிடம் திரும்பியபோது அவரை இழந்துவிட்டேன்.  அவர் அங்கில்லை.  இந்தக் காட்சியோடு என்னை உறக்கம்  மேற்கொள்கிறது.

அந்த ஞாபகத்தோடு நான் மறுபடி விழிக்கிறேன்.  நான் மீண்டும் திடம் பெற்று மன அமைதியடைந்த போது, மற்ற எல்லாரும் உறங்க, நான் இதுவரையிலும் கண்டிராத ஒரு இடத்தில் இருக்கக் காண்கிறேன்.  அங்கே முற்றங்களும் நீர்ச் சுனைகளும் மண்டப வளைவுகளும் வீடுகள் அதாவது மாளிகைகளும் காணப்படுகின்றன.   புராதன யூதர்களைப்போல உடையணிந்த பெருங்கூட்டமான மக்களைக் காண்கிறேன்.  ஒரே இரைச்சலாக உள்ளது.  நான் சுற்றிலும் பார்க்கும்போது, சேசு பார்த்துக் கொண்டிருந்த கட்டிடத்தினுள் நான் இருப்பதாகத் தெரிகிறது.  ஏனென்றால் அதைச் சுற்றிலுமுள்ள காவல் மதில் சுவர் தெரிகிறது.  காவல் கூடற்கோபுரம் தெரிகிறது.  நடுவில் எழும்பும் சிறப்பான கட்டிடம் காணப்படுகிறது.  அதைச் சுற்றிலும் அழகிய மண்டப வளைவுகள் பற்பல காரியங்களைச் செய்வதில் ஈடுபட்டுள்ள பல மக்களையும் காண்கிறேன்.

ஜெருசலேமில் தேவாலயத்தின் அடைப்பிற்குள் நான் இருப்பதைக் காண்கிறேன்.  நீண்ட அங்கிகளை அணிந்திருக்கிற பரிசேயர்களையும், லினன் ஆடைகளையும் அவற்றின்மேல் விலையுயர்ந்த பட்டயங்களை மார்பிலும் நெற்றியிலும் அணிந்திருக்கிற குருக்களையும் பார்க்கிறேன்.  அவர்களின் பலவகையான உடையில் மின்னும் சில பொருள்கள் உள்ளன.  உடைகள் வெண்மையாகவும் அகன்றும் அரிய இடைவார்களால் இடுப்பில் கட்டப்பட்டும் உள்ளன.  இதைவிடக் குறைந்த அலங்காரமுடையவர்களையும் பார்க்கிறேன்.  அவர்களும் குருக்களாகவே இருக்க வேண்டும்.  இளம் சீடர்கள் அவர்களைச் சுற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் வேதப் பிரமாணப் பண்டிதர்கள் என்று தெரிகிறது.

இவர்கள் நடுவில் நான் ஏன் இருக்கிறேன் என்றும் அங்கே என்ன செய்கிறேன் என்றும் அறியாமலிருக்கிறேன்.  இப்பொழுது தான் நான் ஒரு வேத சாஸ்திர தர்க்கவாதத்தைத் தொடங்கியுள்ள சில சாஸ்திரிகளின் பக்கம் நான் போகிறேன்.  என்னைப்போல் அநேகர் வருகிறார்கள்.

அந்த சாஸ்திரிகளுக்குள் கமாலியேல் என்ற பெயருடையவரின் தலைமையில் ஒரு குழு உள்ளது.  தர்க்கவாதத்தில் கமாலியேலை ஆதரித்துப் பேசுகிறார் ஒருவர்.  அவர் ஏறக்குறைய கண்பார்வை இழந்தவராயிருக்கிறார்.  இவருடைய பெயர் ஹில்லல் என்று சொல்லக் கேட்கிறது.  (அப்பெயரின் தொடக்கத்தில் மூச்சுவிடும் ஒலிபோல் கேட்பதால் நான் “ஹி” என்ற எழுத்தோடு தொடங்கி  “ஹில்லல்” என்கிறேன்.)  இவர் ஓர் ஆசிரியர் அல்லது கமாலியேலின் உறவினராயிருக்க வேண்டும்.  ஏனென்றால் ஹில்லல் இவரை மரியாதையுடனும் உரிமையுடனும் நடத்துகிறார்.  கமாலியேலின் குழு பரந்த மனப்பான்மையுடன் உள்ளது.  இன்னொரு அதைவிட பெரிய குழு ஷாமெய் என்பவரின் தலைமையில் உள்ளது.  அது அதிக இறுக்கமாகவும் சகிப்புத்தன்மை குறைந்தும் தெரிகிறது.  சுவிசேஷத்தில் இது நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கோப்பான சீடர் குழுவால் சூழப்பட்ட கமாலியேல் மெசையாவின் வருகையைப் பற்றிப் பேசுகிறார்.  தானியேலின் தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு, மெசையா ஏற்கெனவே பிறந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்.  ஏனென்றால் தேவாலய புனரமைப்பின் கட்டளை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தீர்க்கதரிசனம் கூறுகின்ற எழுபது வாரங்கள் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் முடிந்துபோயிற்று என்று கூறுகிறார்.

ஷாமெய், கமாலியேலை மறுத்து, தேவாலயம் புனரமைக்கப் பட்டது உண்மையாயிருந்தால் இஸ்ராயேலின் அடிமைத்தனம் அதிகரித்துள்ளதே!  தீர்க்கதரிசிகள் “சமாதானத்தின் அரசர்” என்றழைக்கிற மெசையா கொண்டு வருவதாயிருந்த சமாதானம் உலகத்தில் இல்லையே!  குறிப்பாக ஜெருசலேமில் அது இல்லை.  பட்டணம் எதிரியால் நசுக்கப்படுகிறது.  அவன் எவ்வளவு  தைரியம் கொண்டு விட்டானென்றால் தேவாலயத்தின் வளைவிற்குள்ளேயே தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறான்.  நாட்டின் விடுதலைக்காக எழும் எந்தப் புரட்சியையும் தங்கள் வாளால்   வீழ்த்த ஆயத்தமாயிருக்கிற உரோமைப் படைகள் நிரம்பிய “அந்தோணியா” கோட்டையிலிருந்து அந்த ஆதிக்கம் நடக்கிறது என்கிறார்.

குற்றங்காணும் வாதப்பிரதிவாதங்கள் முடிவில்லாமல் நீளுகின்றன.  எல்லாப் பண்டிதர்களும் தாங்கள் கற்ற அறிவை வெளிக்காட்டுகிறார்கள்.  எதிரியை வெல்லுவதையல்ல, தங்களைக் கேட்போரின் வியப்பான பாராட்டுக்கு தங்களைக் காட்டுவதிலேயே நோக்கமாயிருக்கிறார்கள்.  அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

விசுவசிக்கிறவர்களின் நெருங்கிய கூட்டத்திலிருந்து: “கமாலியேல் கூறுவதே சரி” என்று ஒரு சிறுவனின் தெளிந்த குரல் கேட்கிறது.

உடனே ஜனக் கூட்டத்திலும் பண்டிதர்களின் குழுவிலும் ஒரு கிளர்ச்சி உண்டாகிறது.  இடைமறித்துப் பேசியது யார் என அவர்கள் தேடுகிறார்கள்.  அது யாரென்று தேட அவசியம் ஏற்படவில்லை.  ஏனென்றால் அவர் ஒளிந்து கொள்ளவில்லை.  அவர் மக்கள் கூட்டத்தின் நடுவே நடந்து வந்து “போதகர்களின்” கூட்டத்திற்கருகே செல்கிறார்.  இளைஞரான என் சேசுவை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன்.  அவர் சுய நிச்சயத்தோடும் திறந்த உள்ளத்தோடும் நிற்கிறார்.  அவருடைய கண்கள் அறிவொளியால் மிளிருகின்றன.  

“யார் நீ?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

“வேதப்பிரமாணம் கூறுகிறதை நிறைவேற்ற வந்த இஸ்ராயேலின் ஒரு மகன்.” 

சேசுவுடைய தைரியமான திறந்த பதில் மதிக்கப்படுகிறது.  அது அவருக்கு அங்கீகாரமும் ஆதரவுமான புன்சிரிப்புகளை தேடித் தருகிறது.  அந்த இளம் இஸ்ராயேலனிடம் அவர்களுக்கு ஈடுபாடு ஏற்படுகிறது.

“உன் பெயரென்ன?” 

“நாசரேத் சேசு.” 

ஷாமெயின் கூட்டத்தாரின் தயாள உணர்வு மங்குகிறது.  ஆனால் கமாலியேல், ஹில்லலுடன் தன் உரையாடலை நல்லுணர்வோடு தொடருகிறார்.  அவர் ஹில்லலிடம் மரியாதையோடு: “அந்தப் பையனிடம் கொஞ்சம் கேளுங்களேன்” என்று  ஆலோசனையாகக் கூறுகிறார்.

ஹில்லல் சேசுவைப் பார்த்து:

“உன் நிச்சயத்தின் காரணம் எதிலே இருக்கிறது?” (இவ்விடத்தில் தெளிவையும் சுருக்கத்தையும் முன்னிட்டு பெயர்களை பதில்களின் தொடக்கத்தில் எழுதுகிறேன்.)

சேசு: “காலத்தையும் அடையாளங்களையும் பற்றி தவறக் கூடாத தீர்க்கதரிசனத்திலும், அது நிறைவேறிய காலத்தில் நடைபெற்ற அடையாளங்களிலும் என் காரணம் உள்ளது.  செசார் இராயன் நம்மேல் அதிகாரம் செய்கிறார் என்பது உண்மையே.  ஆனால் அவ்வரசன் தன் இராச்சியங்களில் குடிக்கணக்கு எடுக்க உத்தரவிடும் அளவிற்கு உலகமும் பலஸ்தீன் நாடும் அந்த எழுபது வாரங்களின் முடிவில் சமாதானத்தில் இருந்தன.  அவருடைய சாம்ராச்சியத்தில் போர்களும் பலஸ்தீனத்தில் குழப்பங்களும் இருந்திருந்தால் அப்படி கட்டளையிட்டிருக்க முடியாது.  காலம் அப்படி நிறைவேறியதால் அதுபோல் மற்ற அறுபத்து இரண்டு கூட்டல் ஒன்று ஆகிய வாரங்களும் தேவாலயம் முடிவு பெற்றதிலிருந்து பார்த்தால், நிறைவுபெறுகின்றன.  இதனால் மெசையாவானவர் அபிஷேகம் பெறவும், அவரை விரும்பாதவர் களுக்கு தீர்க்கதரிசனத்தின் மீதிப் பாகம் நிறைவேறவும் கூடுமாகிறது.  இதை உங்களால் சந்தேகிக்க முடியுமா?  கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் கண்ட நட்சத்திரம் உங்களுக்கு ஞாபகமில்லையா?  யூதாவின் பெத்லகேம் வானத்தின்மேல் அது நின்றதல்லவா?  யாக்கோபிடமிருந்து தொடர்பாக வந்த தீர்க்கதரிசனங்களும் காட்சிகளும் அந்த இடத்தை மெசையாவின் பிறப்பிடமாகக் குறித்துக் காட்டவில்லையா?  மெசையாவானவர் யாக்கோபுடைய மகனுடைய பேரன் அல்லவா?  அவர் தாவீதின் வழி வந்தவரல்லவா?  தாவீது பெத்லகேமில் உள்ளவரல்லவா?  பாலாமை உங்களுக்கு நினைவில்லையா?  “யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம் தோன்றும்.” கீழ்த்திசை ஞானிகளுடைய பரிசுத்தமும் விசுவாசமும் அவர்களுடைய கண்களையும் காதுகளையும் திறக்க, அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டு, அதன் பெயர் “மெசையா” என அறிந்து கொண்டார்கள்.  அவர்கள் உலகில் இறங்கி வந்திருந்த ஒளியை ஆராதிக்க வந்தார்கள்.” 
ஷாமெய்: (சேசுவை விழித்துப் பார்த்தபடி): “நட்சத்திரம் தோன்றிய காலத்தில் பெத்லகேம் - எப்பிராத்தாவில் மெசையா பிறந்தார் என்று நீ சொல்கிறாயா?” 

சேசு: “ஆம்.” 

ஷாமெய்:  “அப்படியானால் இப்பொழுது மெசையா இல்லை.  பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள எல்லாக் குழந்தைகளையும் இரண்டு வயதுக்குட்பட்டவர்களை ஏரோது கொன்றுவிட்டான் என்பது உனக்குத் தெரியாதா குழந்தாய்?  வேதாகமங்களில் இவ்வளவு புத்திசாலியாக இருக்கிற நீ இதையும் தெரிந்திருக்க வேண்டும்: “ராமாவிலே ஒரு குரல் சத்தம் கேட்டது.  அது ராக்கேல் தன் பிள்ளைகளுக்காக அழுவதாகும்.”  மரித்த ராக்கேலின் கண்ணீர்களைச் சேகரித்த பெத்லகேமின் பள்ளத்தாக்குகளும் குன்றுகளும் கண்ணீர்களால் நிரப்பப்பட்டன.  கொலைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி மீண்டும் அழுதார்கள்.  அவர்களில் நிச்சயமாக மெசையாவின் தாயும் இருந்திருப்பாள்.” 

சேசு:  “மூப்பரே, நீங்கள் சொல்வது சரியல்ல.  ராக்கேலின் அழுகை ஓசான்னாவாக மாறியது.  எப்படியென்றால் ராக்கேல் “தன் துயரத்தின் பிள்ளையைப் பெற்ற” அங்கேயே புதிய ராக்கேல் பரமபிதாவின் பெஞ்சமினை, அவருடைய வலதுகரப் புதல்வனை, கடவுளுடைய மக்களை தம் செங்கோலின் கீழ் சேகரித்து அவர்களை மிக அஞ்சத்தக்க அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முன்குறிக்கப்பட்டவரை உலகிற்குக் கொடுத்திருக்கிறாள்.” 

ஷாமெய்:  “அவர் கொல்லப்பட்டுவிட்டால் அது எப்படி நடக்கும்?” 

சேசு:  “எலியாசைப் பற்றி நீங்கள் வாசிக்கவில்லையா?  அவர் அக்கினி இரதத்தில் கொண்டு செல்லப்பட்டாரே?  அப்படியானால் ஆண்டவராகிய கடவுள் தமது ஜனங்களை இரட்சிப்பதற்காக தமது எமானுவேலனை காப்பாற்றியிருக்க முடியாதா?  இஸ்ராயேலர் தங்கள் நாட்டை நோக்கிச் செல்கையில் கட்டாந்தரையில் நடக்கும்படியாக மோயீசனின் முன்பாக செங்கடலை திறக்கச்    செய்த அவர், தமது குமாரனை, தம்முடைய கிறீஸ்துவை,   மனிதனின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற தம் சம்மனசுக்களை அனுப்பியிருக்க முடியாதா?  இதோ நான் கூறுகிறேன்:  கிறீஸ்துவானவர் உயிரோடிருக்கிறார்.  உங்கள் நடுவில் இருக்கிறார்.  அவருடைய நேரம் வரும்போது தம் வல்லபத்தில் தம்மைக் காண்பிப்பார்.”  இங்கே துலக்க எழுத்தில் நான் எழுதியுள்ள வார்த்தைகளை சேசு சொல்லும்போது அவருடைய குரல் கூர்மையாகி ஆகாயத்தை நிரப்புகிறது.  அவருடைய கண்கள் என்றுமில்லா பிரகாசத்துடன் காணப்படுகின்றன.  கட்டளையிடுவதும் வாக்குறுதி கொடுப்பதும் போன்ற கையசைவுகளைச் செய்கிறார்.  தமது வலது கரத்தை நீட்டியும் தாழ்த்தியும் சத்தியப்பிரமாணம் செய்பவர்போல் தோன்றுகிறார்.  அவர் ஒரு பையன்தான்.  ஆயினும் ஒரு மனிதனுக்குரிய தோரணையில் காணப்படுகிறார்.

ஹில்லல்:  “குழந்தாய், இவ்வார்த்தைகளை உனக்குக் கற்பித்தது யார்?” 

சேசு: “கடவுளின் ஆவியானவர்.  எனக்கு மனித உபாத்தியாயர் யாருமில்லை.  இது உங்களுடன் என் வாயின் வழியாகப் பேசுகிற கடவுளின் வார்த்தையாகும்.” 

ஹில்லல்:  “எங்கள் பக்கத்தில் வா குழந்தாய், உன்னை நான் பார்க்கட்டும்.  என் நம்பிக்கை உன்னுடைய விசுவாசத்தால் புதுப்பிக்கப்படட்டும்.  என்னுடைய ஆத்துமம் உன் ஆத்துமத்தின் பிரகாசத்தினால் வெளிச்சம் பெறட்டும்.” 

அப்போது அவர்கள் சேசுவை ஒரு உயரமான இருக்கையில் கமாலியேலுக்கும் ஹில்லலுக்கும் நடுவில் அமரச் செய்கிறார்கள்.  சில வேதாகமச் சுருள்களைக் கொடுத்து அவர் அவைகளை வாசித்து விளக்கும்படி சொல்கிறார்கள்.  இது ஒரு பொருத்தமான பரீட்சை.  ஜனங்கள் கூடிவந்து கவனிக்கிறார்கள்.

சேசு தம் தெளிந்த குரலில் வாசிக்கிறார்.

“நமது ஜனமே ஆறுதலடையுங்கள்.  தேறுதல் கொள்ளுங்கள்.  ஜெருசலேமின் இதயத்தோடு பேசி அதன் துன்பங்கள் ஒழிந்ததென்றும், அதன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றும் ... திடப்படுத்துங்கள்.  கானகத்து குரல் சத்தத்தைக் கேளுங்கள்.  ஆண்டவருடைய பாதையை முஸ்திப்புச்   செய்யுங்கள்.  அப்போது ஆண்டவருடைய மகிமை பிரசன்ன மாகும்...” (இசை. 40:1-3).

ஷாமெய்: “நசரேயனே, இதைப் பார்.  இங்கே ஒரு அடிமைத்தனத்தின் முடிவைப் பற்றிக் கூறப்படுகிறது.  ஆனால் இப்பொழுது நாம் அடிமையாயிருக்கிறதுபோல் வேறு எப்பொழுதுமே இருந்ததில்லை.  மேலும் இங்கே ஒரு முன்னோடி பற்றிக் கூறப்படுகிறது.  அவரை எங்கே?  நீ பேசுவது அபத்தம்.”

சேசு:  “முன்னோடியாக வந்தவருடைய எச்சரிப்பு வேறு யாரையும்விட உமக்கே கூறப்பட வேண்டும். உமக்கும் உம்மைப் போன்றவர்களுக்கும் என்கிறேன்.  அல்லாவிடில் நீங்கள் ஆண்டவருடைய மகிமையைக் காண மாட்டீர்கள்.  அவருடைய வார்த்தையைக் கண்டுபிடிக்கவுமாட்டீர்கள்.  ஏனென்றால் இழிமனமும் அகங்காரமும் பொய்யும் உங்கள் பார்வையையும் கேள்வியையும் தடை செய்துவிடும்.” 

ஷாமெய்:  “ஒரு போதகரிடம் இப்படிப் பேச எப்படித் துணிகிறாய்?” 

சேசு:  “இப்படி நான் பேசுகிறேன்.  என் மரணம் மட்டும் இப்படியே பேசுவேன்.  ஏனென்றால் எனக்கு மேலாக ஆண்டவரின் காரியங்கள் இருக்கின்றன.  சத்தியத்தின் மட்டில் சிநேகம் இருக்கின்றது.  அவருடைய குமாரன் நான்.  மேலும் போதகரே, தீர்க்கதரிசியும் நானும் கூறுகிற அடிமைத்தனம் நீங்கள் நினைக்கிற ஒன்றல்ல.  நீங்கள் சிந்திக்கிற அரசுரிமையும் நீங்கள் நினைக்கிறபடி அல்ல.  மாறாக, மெசையாவின் பேறுபலன்களைக் கொண்டு, கடவுளிடமிருந்து மனிதனைப் பிரித்து வைக்கிற தீமையின் அடிமைத்தனத்திலிருந்து அவன் விடுவிக்கப்படுவான்.  எல்லா நுகத்திலுமிருந்து விடுவிக்கப்பட்டு நித்திய இராச்சியத்தின் பிரஜைகளாக ஆக்கப்பட்ட உள்ளங்களில் கிறீஸ்துவின் அடையாளம் இருக்கும்.  ஓ தாவீதின் வீட்டாரே!  உன்னிடம் பிறக்கும் தளிர் மரமாக வளர்ந்து உலகம் முழுவதையும் மூடி மோட்சம் நோக்கி எழும்பும்.  அவர் முன்பாக எல்லா தேசங்களும் தலைவணங்குவர்.  பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லா நாவும் அவருடைய நாமத்தைப் புகழும்.  கடவுளின் அபிஷேகம் பெற்றவரின் முன்பாக எல்லாரும் தங்கள் முழங்கால்களை மடக்குவார்கள்.  அவர் சமாதானப் பிரபு, வழிகாட்டுபவர்.   அவர் தம்மையே கொடுப்பதால் மனந்தளர்ந்து போய் பசித்துக் களைத்திருக்கும் ஒவ்வொரு ஆன்மாவையும் மகிழ்ச்சியாலும் ஊட்ட உணவாலும் நிரப்புவார்.  பரலோகத்திற்கும் பூலோகத்திற்கு மிடையே ஓர் உடன்படிக்கையை ஸ்தாபிப்பார்.  அது எஜிப்திலிருந்து கடவுள் இஸ்ராயேலரை வெளியே கொண்டு வந்தபோது மூப்பர்களுடன் செய்த உடன்படிக்கையைப் போல் இராது.  அதிலே அவர்கள் இன்னமும் ஊழியர்களாகவே நடத்தப்பட்டார்கள்.  ஆனால் இதிலே மீட்பருடைய பேறுபலன்களைக் கொண்டு வரப்பிரசாதத்தை மீண்டும் கொடுத்து மனிதர்களின் ஆத்துமங்களிலே ஒரு மோட்சத்திற்குரிய பிதாத்துவம் கொடுக்கப்படும்.  அவர் மூலமாக எல்லா நல்ல மனிதரும் ஆண்டவரை அறிய வருவார்கள்.  அதன்பின் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலம் ஒருபோதும் உடைக்கப்பட்டு அழிக்கப்படாது.” 

ஷாமெய்:  “தேவதூஷணம் பேசாதே.  தானியேலை நினைத்துக் கொள்.  அவர் சொல்கிறார், கிறீஸ்துவின் மரணத்திற்குப் பிறகு தேவாலயமும் பட்டணமும் தூரத்திலிருந்து வரும் ஒரு சனத்தாலும் தலைவனாலும் அழிக்கப்படும் என்று.  ஆனால் நீ கடவுளின் பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படாது என்கிறாய்.  தீர்க்கதரிசிகளுக்கு மதிப்புக் கொடு.” 

சேசு:  “இதோ நான் உமக்குச் சொல்கிறேன்.  தீர்க்கதரிசிகளுக்கு மேலாக ஒருவர் இருக்கிறார்.  அவரை நீர் அறியவில்லை.  அறியவும் மாட்டீர்.  ஏனென்றால், நீர் அறிய விரும்பவில்லை.  நான் கூறுவது உண்மை என்று சொல்கிறேன்.  உண்மையான பரிசுத்த ஸ்தலம் மரணத்திற்கு உட்படாது.  அது, தன்னை அர்ச்சிக்கிறவரைப் போல் நித்திய வாழ்க்கைக்கு எழும்பும்.  உலகத்தின் முடிவில் அது மோட்சத்தில் வாழும்.”

ஹில்லல்:  “குழந்தாய், நான் சொல்வதைக் கேள்:  ஆக்ஹே சொல்கிறார்: “ஜனங்களால் எதிர்பார்க்கப்பட்டவர் வருவார்.  இந்த வீட்டின் மகிமை அப்போது பெரிதாயிருக்கும்... இப்பிந்தியதின் மகிமை முந்தியதிலும் அதிகமாயிருக்கும்” என்று.  ஒருவேளை அவர் நீ சொல்கிற பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிக் கூறுகிறாரோ?” 

சேசு:  “ஆம் போதகரே.  அதுவே அவருடைய கருத்து.  உம்முடைய நேர்மை உம்மை ஒளியை நோக்கி கூட்டி வருகிறது.  கிறீஸ்துவின் பலி நிறைவேறும்போது உமக்கு சமாதானம் வரும்.  ஏனென்றால் கெடுமதி இல்லாத இஸ்ராயேலன் நீர்.” 

கமாலியேல்:  “சேசு!  இதிலே என்னைத் தெளிவிக்க வேண்டும்.  அதாவது போரினால் இம்மக்களுக்கு அழிவு வருகிறதாயிருந்தால் தீர்க்கதரிசிகள் கூறுகிற சமாதானம் வருமென்று நம்புவதெப்படி?  எனக்குத் தெளிவு தரும்படிக் கேட்கிறேன்.” 

சேசு: “ஆசிரியரே!  கிறீஸ்து பிறந்த இரவில் அங்கிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்பது உமக்கு நினைவில்லையா?  சம்மனசுக்கள் “நல்ல மனதுள்ள மனிதர்களுக்கு சமாதானம்” என்று பாடியதாகக் கூறினார்களே!  ஆனால் இந்த ஜனத்திடம் நல்ல மனம் இல்லை. அதனால் அதற்கு சமாதானம் இராது.  இந்த ஜனம் தன் அரசனை, நீதிமானை, இரட்சகரை ஒப்புக்கொள்ளாது.  ஏனென்றால் அவரை மனித அதிகாரமுள்ள அரசனாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  ஆனால் அவரோ உள்ளங்களின் அரசராயிருக்கிறார்.  கிறீஸ்துவானவர் போதிப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால் அவரை நேசிக்க மாட்டார்கள்.  கிறீஸ்துவானவர் தம் எதிரிகளை அவர்களுடைய இரதங்களைக் கொண்டும் குதிரைகளைக் கொண்டும் தோற்கடிக்க மாட்டார்.  ஆனால் அவர் ஆண்டவருக்காக சிருஷ்டிக்கப்பட்ட மனித இருதயத்தை நரகத்தில் சிறைப்படுத்த முயற்சி செய்யும் ஆன்மாவின் எதிரிகளை முறியடிப்பார்.  இஸ்ராயேல் அவரிடமிருந்து எதிர்பார்க்கிற வெற்றி இது அல்ல .  ஜெருசலேமே, உனது அரசர் “வேசரிமீதும், அதன் குட்டி மேலும்” வருவார்.  அதாவது, இஸ்ராயேலில் நீதியுள்ளவர்களும், புற இனத்தாரும்.  ஆனால் நான் கூறுகிறேன், வேசரிக்குட்டி அவருக்கு அதிக பிரமாணிக்க மாயிருக்கும்.  சத்தியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் வழிகளில் அவரைப் பின்செல்வதில் வேசரிக்குட்டி வேசரியை முந்திக் கொள்ளும்.  இஸ்ராயேலோ, தன் கெட்ட மனத்தால் தன் சமாதானத்தை இழக்கும்.  பல நூற்றாண்டுகள் துன்பப்படும்.  தன் அரசரையும் துன்பப்பட வைக்கும்.  அவரை இசையாஸ் கூறும் துயரத்தின் அரசராக்கும்.” 

ஷாமெய்:  “நசரேயனே, உன் வாய் ஒரே சமயத்தில் பாலையும் தேவ தூஷணத்தையும் சுவைக்கிறதே.  நீ சொல், முன்னோடி எங்கே?  அவரை நாம் எப்போது கொண்டிருந்தோம்?” 

சேசு:  “முன்னோடி இருக்கிறார்.  “எனக்கு முன்பாக என் வழியை ஆயத்தம் செய்ய என் தூதனை அனுப்பப் போகிறேன்.  நீங்கள் தேடுகிற ஆண்டவர் திடீரென்று தன் ஆலயத்தில் நுழைவார்.  நீங்கள் ஆவலுடன் தேடுகிற உடன்படிக்கையின் சம்மனசு அவரே” என்று மலாக்கியாஸ் சொல்லவில்லையா?  ஆகவே முன்னோடியா யிருப்பவர் கிறீஸ்துவுக்கு உடனடியாக முன்செல்வார்.  கிறீஸ்து இருப்பதுபோல் முன்னோடியும் ஏற்கெனவே இருக்கிறார்.  கிறீஸ்துவுக்கும் ஆண்டவருடைய வழிகளை ஆயத்தம் செய்கிறவருக்குமிடையே ஆண்டுகள் கழிவதாயிருந்தால் அவ்வழிகள் எல்லாம் மீண்டும் தடைப்பட்டு திருகிப் போகும்.  கடவுள் அறிகிறார், முன்கூட்டியே ஏற்பாடு செய்கிறார்.  முன்னோடியாயிருப்பவர் போதகருக்கு ஒரு மணி நேரமே முந்துவார்.  இந்த முன்னோடியை நீங்கள் பார்க்கும்போது:  “கிறீஸ்துவின் அலுவல்கள் தொடங்குகின்றன” என்று நீங்கள் சொல்லக் கூடும்.  உங்களுக்கு நான் சொல்கிறேன், கிறீஸ்துவானவர் இவ்வழியாய் வரும்போது அநேக கண்களையும் அநேக காதுகளையும் திறப்பார்.  ஆனால் உங்களுடையவைகளையும் உங்களைப் போன்றவர் களுடையவைகளையும் அவர் திறக்க மாட்டார்.  ஏனென்றால் உங்களுக்கு சீவியம் கொண்டு வருகிறவரை நீங்கள் கொன்று போடுவீர்கள்.  ஆனால், இந்த தேவாலயத்தைவிட உயர்ந்ததும், பரிசுத்ததிலும் பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருக்கிற பேழையிலும் மேலாயிருப்பதும், கெருபின்களால் தாங்கப்படுகிற மகிமையிலும் மேலாயிருப்பதுமான தமது அரியாசனத்தில், தமது பீடத்தில் இரட்சகர் அமரும்போது அவருடைய ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து கடவுளைக் கொலை செய்தவர்களுக்கு சாபமும், புற இனத்தாருக்கு சீவியமும் பாய்ந்து வழியும்.  ஏனென்றால் ஓ போதகரே, நீர் இதை அறியவில்லை - அவர், நான் மீண்டும் கூறுகிறேன், ஒரு மனித இராச்சியத்தின் அரசர் அல்ல.  அவர் ஒரு ஞான இராச்சியத்தின் அரசர்.  அவருடைய பிரசைகள் யாரென்றால் அவருக்காக, தங்கள் உள்ளத்தில் மறுபிறப்படைய கற்றுக்கொள்கிறவர்களேயாகும்.  யோனாசைப்போல், பிறந்தபின் மறுகரைகளிலே “கடவுளின் கரைகளிலே” ஒரு ஞானப் பிறப்பால் மறுபிறப்படைய கற்றுக் கொள்கிறவர்களேயாகும்.  மனுக்குலத்திற்கு உண்மையான சீவியத்தை அளிப்பவரான கிறீஸ்துவின் வழியாக அது நடைபெறும்.” 

ஷாமெய்யும் அவருடைய குழுவும்:  “இந்த நசரேயன் சாத்தானாயிருக்கிறான்!” 

ஹில்லலும் அவருடைய குழுவும்:  “இல்லை!  இந்தக் குழந்தை கடவுளின் தீர்க்கதரிசி!  குழந்தாய் நீ என்னுடன் இரு.  நான் அறிந்துள்ளவைகளை என் முதிர் வயது உன்னுடைய அறிவுக்குட் செலுத்தும்.  நீ கடவுளுடைய மக்களின் போதகனாயிருப்பாய்.”

சேசு:   “இதோ நான் உமக்குக் கூறுகிறேன்:  உம்மைப் போல் பலர் இருப்பார்களானால் இஸ்ராயேலுக்கு இரட்சிப்பு வரும்.   ஆனால் என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை.  மோட்சத்திலிருந்து குரல்கள் என்னுடன் பேசுகின்றன.  என் நேரம் வரும் வரையில் நான் தனிமையில் அவைகளைச் சேகரிக்க வேண்டும்.  அப்போது என் உதடுகளாலும் என் இரத்தத்தினாலும் ஜெருசலேமுடன் பேசுவேன்.  அப்போது ஜெருசலேமினால் கல்லால் எறியப்பட்டு, கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் கதியே என்னுடைய கதியாகவுமிருக்கும்.  ஆனால் என் உயிருக்கும் மேலாக ஆண்டவராகிய கடவுள் இருக்கிறார்.  என்னை அவருடைய மகிமையின் இருக்கையாக்கும்படியாக அவருக்கு ஒரு பிரமாணிக்கமுள்ள ஊழினொக என்னையே கீழ்ப்படுத்துகிறேன்.  உலகத்தை அவர் கிறீஸ்துவின் பாதத்தில் ஒரு மணை ஆக்குவாரென காத்திருப்பேன்.  என்னுடைய தருணத்திற்குக் காத்திருங்கள்.  இந்தக் கற்கள் என் குரலை மீண்டும் கேட்கும்.  அவை என் கடைசி வார்த்தையைக் கேட்டு அதிரும்.  அந்தக் குரலில் கடவுளையே கேட்டு அவரை அதனிமித்தம் விசுவசிக்கிறவர்கள் பாக்கிய வான்கள்.  அவர்களுக்கு கிறீஸ்துநாதர் அந்த இராச்சியத்தைக் கொடுப்பார்.  அது ஒரு மனித அரசு என்று உங்கள் சுயநலம் எண்ணிக் கொள்கிறது.  ஆனால் அது பரலோகத்திற்குரிய அரசாகும்.  ஆதலால் நான் கூறுகிறேன்: “இதோ ஆண்டவரே, உமது சித்தத்தை நிறைவேற்ற வந்துள்ள ஊழியன் நான்.  அந்த சித்தம் நிறைவேறுவதாக!  ஏனென்றால் அதை நிறைவேற்ற நான் ஆவலாயிருக்கிறேன்.” 

இதைக் கூறும்போது சேசுவின் முகம் ஞான ஆர்வத்தால் எரிகிறது.  மோட்சத்தை நோக்கியவாறு திரும்பியிருக்கிறது.  அவருடைய கரங்கள் விரிந்திருக்கின்றன.  அவரை ஆச்சரியத்தால் நோக்கிக் கொண்டிருக்கிற சாஸ்திரிகள் நடுவில் அவர் நிற்கிறார்.  காட்சி முடிகிறது.  (இப்போது பகல் மணி 3.30, 29-ம் தேதி.)