26 ஜனவரி 1944.
நீ காணும் காட்சிகள் உனக்கும் மற்றவர்களுக்கும் பாடங்களைக் கொண்டுள்ளன. அவை: தாழ்ச்சி, விட்டுக் கொடுக்கும் மனம், நல்ல இணக்கம் ஆகியவை. இது கிறீஸ்தவக் குடும்பங்களுக்கெல்லாம், விசேஷமாக இந்தத் துயர காலங்களிலே வாழும் கிறீஸ்தவக் குடும்பங்களுக்கு முன்மாதிரிகையாகக் கொடுக்கப்படுகிறது.
நீ ஒரு வறிய வீட்டைப் பார்த்தாய். அந்நிய நாட்டில் வறிய வீடாயிருப்பதைவிட அதிக கவலைக்குரியது எது?
பலர் தாங்கள் ஏறக்குறைய நல்ல கத்தோலிக்கர்களாக இருப்பதினால், ஜெபம் செய்து, நற்கருணையில் என்னை உட்கொண்டு, தங்கள் தேவைக்காக - அவர்கள் ஆத்தும தேவைக்காக அல்ல, கடவுளின் மகிமைக்காகவும் அல்ல, ஏனென்றால் ஜெபிக்கிறவர்கள் மிக அரிதாகவே சுயநலமில்லாமல் ஜெபிக்கிறார்கள் - அப்படி ஜெபித்து வருகிறதனால் செழிப்பான, மகிழ்ச்சியான, இலகுவான, சிறு வேதனைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட உலக வாழ்வைக் கொண்டிருப்பதாக பாசாங்கு செய்கிறார்கள்.
சூசையப்பரும் மாதாவும், உண்மைக் கடவுளான என்னைத் தங்கள் மகனாகக் கொண்டிருந்தபோதிலும் தாங்கள் வறியவர்களாக இருப்பது தங்கள் சொந்த நாட்டில் என்ற திருப்திகூட இல்லாதிருந்தார்கள். சொந்த நாட்டில் அவர்கள் அங்கே அறியப்பட்டிருப்பார்கள் - அங்கே அவர்களுடைய சொந்த வீடு இருக்கும் - அவர்களுடைய பல பிரச்னைகளுடன், தங்கம் வீட்டைப் பற்றிய பிரச்னையும் சேர்ந்திராது. தெரிந்த நாட்டிலென்றால் வேலை தேடுவதும் வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எளிதாயிருந்திருக்கும். அவர்கள் என்னைக் கொண்டிருந்த காரணத்தினாலேயே இரு அகதிகளாயிருந்தார்கள். வேறுபட்ட சீதோஷ்ணம்,வேற்று நாடு - அது கலிலேயாவின் இனிய கிராமப்புறத்தோடு ஒப்பிடும் போது எவ்வளவோ துயரமாயிருந்தது - வேற்று மொழி, வேறுபட்ட பழக்க வழக்கங்கள்! தங்களை அறியாத மக்களிடையே அவர்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் பொதுவாகவே தங்களுக்குத் தெரியாதவர்களையும் அகதிகளையும் சந்தேகிக்கிறவர்கள்.
அவர்களுடைய “சிறிய” வீட்டில் அவர்களுக்கு இருந்த செளகரியமான, விருப்பமான தட்டுமுட்டுகளையும் அங்கேயிருந்து எளிய, அவசியமான சாமான்களையும் இழந்தார்கள். அப்போது அவை அவ்வளவு அவசியமானவையாகத் தெரியவில்லை. ஆனால் இங்கே அவர்களைச் சுற்றியிருக்கிற வெறுமையில் அவை செல்வந்தர்களின் வீடுகளைக் கவர்ச்சியுள்ளதாக்கும் சொகுசான பொருள்களைப் போல அழகானவையாகத் தெரிகின்றன. இதனால் அவர்கள் தங்கள் வீட்டையும் நாட்டையும் நினைத்து ஏக்கங் கொண்டார்கள். அவர்கள் விட்டுவந்த வறிய பொருள்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். அவர்களுடைய காய்கறித் தோட்டம் - அந்த திராட்சைகளையும் அத்திகளையும் மற்ற பயனுள்ள செடிகளையும் யார் பேணுவார்கள்? இப்போது ஒவ்வொரு நாளும் உணவு, உடை, நெருப்பு முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. என்னை கவனிக்க வேண்டியிருந்தது. நான் அவர்கள் உண்ணும் உணவை உட்கொள்ள முடியாதிருந்தது. அவர்கள் தங்கள் வீட்டின் நினைவாலும் எதிர்காலத்தின் நிச்சயமின்மையினாலும் இங்குள்ள மக்களுடைய, அதிலும் முதல் தொடக்கத்தில் இனந்தெரியாத இருவருக்கு வேலை கொடுக்கத் தயங்கிய அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டும் துயரப்பட்டார்கள்.
இவை இப்படியிருந்தாலும், நீயே பார்த்தபடி அந்த வீட்டில் அமைதியும், புன்னகைகளும், இணக்கமும் நிறைந்திருந்தன. இந்தச் சிறு தோட்டம் அவர்கள் விட்டுவந்த நல்ல தோட்டத்தை அதிகம் ஒத்திருக்கும்படி பொதுவான ஒப்புதலால் அதை அதிக அழகுறச் செய்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு எண்ணம்தான்: நான் கடவுளிடமிருந்து வந்ததால் இந்த நாடு எனக்குக் காட்டும் எதிர்ப்பும் இதன் அசெளகரியமும் குறைந்த அளவில் இருக்க வேண்டுமென்பதே. அவர்கள் விசுவாசமுடையவர்கள், எனக்கு உறவுடையவர்கள். அவர்களின் அன்பு பலவகையிலும் வெளிப்பட்டது. அநேக மணி நேரங்கள் அதிகப்படியாக உழைத்து அந்த பாலாட்டை வாங்கினார்கள். மரத்துண்டுகளில் எனக்கு விளையாடும் பொம்மைகளைச் செய்தார்கள். தங்களுக்குரிய உணவை மறுத்து எனக்கு மட்டும் பழம் வாங்கினார்கள்.
ஓ! பூமியில் என் அருமைத் தந்தையாயிருந்தவரே! கடவுளால் நீர் எப்படி நேசிக்கப்பட்டிருந்தீர்! மிக உந்நத மோட்சத்தில் பிதாவினாலும், உலகத்தில் இரட்சகராக வந்த சுதனாலும் எவ்வளவு நேசிக்கப்பட்டீர்!
அந்த இல்லத்தில் முற்கோபம் என்பதே இல்லை. முகங் கோணுதல் இல்லை. கடுகடுப்பான முகத்தைக் காண முடியாது. ஒருவரையயாருவர் குற்றஞ்சாட்டுதல் இல்லை. அவர்களுக்கு லெளகீக சம்பத்தைக் கொடுக்காத கடவுளின் மேலும் இப்படி யாதொன்றும் அவர்களிடம் காணப்படவில்லை. சூசையப்பர் தன் செளகரியக் குறைவுகளுக்காக மாதாவை குறை ஏதும் சொன்னதில்லை. சூசையப்பரால் அதற்கு மேல் உலக காரியங்களை சம்பாத்தியம் செய்ய முடியவில்லையென்று மாதா ஒருபோதும் சொன்னதில்லை. அவர்கள் ஒரு புனிதமான முறையில் ஒருவரையயாருவர் நேசித்தார்கள். வேறெதுவும் அங்கில்லை. ஆதலால் தங்கள் சொந்த செளகரியத்தைப் பற்றி அவர்கள் கவலையே படவில்லை. ஒருவர் மற்றவருடைய வசதிகளைப் பற்றியே கவலைப்பட்டார்கள்.
உண்மை அன்பில் சுயநலம் இல்லை. உண்மையான அன்பு எப்பொழுதும் கற்புடையதாயிருக்கும். கன்னி விரதம் பூண்ட இருவரின் அன்பைப்போல் கற்பில் உத்தமமான பரிசுத்தமாயிராவிட்டாலும் கூட, உண்மை அன்பு பரிசுத்தமாகவே இருக்கும். அன்புடன் இணைக்கப்பட்ட கற்பானது ஏராளமான மற்ற புண்ணியங்களையும் விளைவிக்குமாதலால் கற்பின் பரிசுத்தத்தோடு ஒருவரையயாருவர் நேசிக்கும் இருவர் உத்தமர்கள் ஆகிறார்கள்.
மரியாயுடையவும் சூசையப்பருடையவும் அன்பு உத்தமமாயிருந்தது. ஆதலால் மற்ற எல்லாப் புண்ணியப் பயிற்சிக்கும் அது தூண்டுதலாயிருந்தது. விசேஷமாக தேவ சிநேகத்தைத் தூண்டுவதற்கு ஏதுவாயிருந்தது. அவர்களுடைய மாம்சத்திற்கும் இருதயத்திற்கும் தேவனுடைய சித்தம் வேதனையாயிருந்தாலும் கூட அது ஒவ்வொரு நேரத்தையும் ஆசீர்வாதமாக்கியது. அது ஆசீர்வாதமாயிருக்கக் காரணம், மாம்சத்திற்கும் இருதயத்திற்கும் மேலாக, அவர்களுடைய உள்ளம் அதிக உயிருடனும் வலுவாகவும் இருந்தது. அவ்விரு அர்ச்சிஷ்டவர்களும் தாங்கள் தேவனுடைய நித்திய குமாரனின் காப்பாளராக தெரிந்தெடுக்கப்பட்டதற்காக நன்றியோடு அவரை உயர்த்திக் கொண்டாடினார்கள்.
அந்த இல்லத்தில் அவர்கள் ஜெபித்தார்கள். இக்காலத்தில் நீங்கள் உங்கள் இல்லங்களில் மிகக் குறைவாக ஜெபிக்கிறீர்கள். சூரியன் உதிக்கிறது, மறைகிறது. நீங்கள் உங்கள் அலுவலைத் தொடங்குகிறீர்கள். நீங்கள் ஒரு புதுநாளைக் காண்பதற்குக் கொடுத்த ஆண்டவரைப் பற்றி ஒரு நினைவும் இல்லாமல் சாப்பிட அமருகிறீர்கள். அவர் நீங்கள் இன்னொரு இரவைக் காண்பதற்கு அருளியிருக்கிறார். உங்கள் உழைப்பை ஆசீர்வதித்திருக்கிறார்.
அதைக் கொண்டு உங்கள் மனித வாழ்வுக்கு மிக அவசியமான உணவையும் நெருப்பையும், உடைகளையும், இல்லத்தையும் வாங்குவதற்கு வகை செய்திருக்கிறார். நல்லவரான கடவுளிடமிருந்து வருவது எல்லாம் நல்லதே. அது எளியதும் கொஞ்சமுமாயிருந்தாலும் அன்பு அதற்கு மணமும் உருவமும் ஊட்டுகிறது. அந்த அன்பு நித்தியரான சிருஷ்டிகரிடத்தில் உங்களை நேசிக்கிற தந்தையை நீங்கள் காண உங்களுக்கு ஏதுவாயிருக்கிறது.
அந்த இல்லத்தில் சிக்கனமிருந்தது. அங்கே ஏராளமான செல்வம் இருந்திருந்தாலும் சிக்கனம் இருந்தே இருக்கும். அவர்கள் உயிர்வாழ உண்கிறார்கள். பேருண்டிப் பிரியர்களின் திருப்தி யடையாமையுடனும் நோயுறும் அளவிற்கு தங்களை உணவால் நிரப்பி, விலையுயர்ந்த தீனிகளை வாங்குவதில் அதிக பணம் செலவழித்து, உணவில்லாமல் இருக்கிறவர்களைப் பற்றி ஒரு சிந்தனை கூட இல்லாமலிருப்பவர்களைப் போல் தங்கள் போஜனப் பிரியத்தை திருப்தி செய்வதற்காக அவர்கள் உண்பதில்லை. பேருண்டி உண்பவர்கள், தாங்கள் மிதமாய் உண்டால் அநேக மக்கள் தங்கள் பசியின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்பதைச் சிந்திப்பதில்லை.
அந்த இல்லத்தில் அவர்கள் உழைப்பை விரும்பினார்கள். அங்கே ஏராளமான செல்வம் இருந்திருந்தாலும் அவர்கள் உழைப்பை விரும்பியேயிருந்திருப்பார்கள். ஏனென்றால் உழைப்பவன் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறான்; தீமையிலிருந்து தன்னை விடுவிக்கிறான். அசைக்கக் கூடாத பாறைகளைப் போலிருக்கிற சோம்பேறி ஆட்களை, தீமையானது, பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும் படர்கொடி போல் அவர்களைத் திணறச் செய்கிறது. நீங்கள் நன்றாக உழைத்திருக்கும்போது உணவு நல்லதாகிறது; ஓய்வு அமைதியுடன் உள்ளது; ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையிலுள்ள ஓய்வை நீங்கள் அனுபவிப்பீர்கள். பல கிளைகளையுடைய தீமையானது உழைப்பை விரும்பும் மனங்களிலும் இல்லங்களிலும் எழுவது இல்லை. அப்படி தீமையில்லாத இல்லங்களில் அன்பும் மதித்தலும் ஒருவர்க்கொருவர் மரியாதையும் வளர்கின்றன. இளங்குழந்தைகள் தூய்மையான சூழ்நிலையில் வளருகிறார்கள். இவ்வாறு அவர்கள் வருங்காலத்தில் புனிதமான குடும்பங்களின் மூலமாகிறார்கள்.
அந்த இல்லத்தில் தாழ்ச்சி ஆட்சி செய்கிறது. ஆங்காரிகளுக்கு அது எத்தகைய தாழ்ச்சியின் பாடமாயிருக்கிறது! மனித முறையில் பார்த்தால், சூசையப்பர் மாமரியைப் பற்றிப் பெருமைப்படுவதற்கும் அவர்களை ஆராதிப்பதற்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தன. அநேக ஸ்திரீகள் தங்கள் கணவர்களைவிட தாங்கள் கூடுதல் கற்றிருப்பதால் அல்லது உயர்குடியில் பிறந்ததால் அல்லது கூடுதல் செல்வமுள்ள குடும்பத்தில் தோன்றியதால் பெருமை பாராட்டு கிறார்கள். மாமரி கடவுளின் தாயும் சதியுமாயிருக்கிறார்கள். ஆயினும் ஊழியம் புரிகிறார்கள். ஊழியம் செய்யப்பட அவர்கள் விரும்பவில்லை. அர்ச். சூசையப்பரிடம் முழு அன்பாயிருக் கிறார்கள். அவர்தான் அக்குடும்பத்தின் தலைவர். அப்படியிருக்கத் தகுதியுடையவரென்று கடவுளால் தீர்மானிக்கப்பட்டவர். மனிதாவதாரமெடுத்த தேவ வார்த்தையானவருக்கும் நித்தியரான தேவ ஆவியின் மணவாளிக்கும் பாதுகாப்பாளராயிருக்கும்படி ஏற்படுத்தப்பட்டவர். அப்படியிருந்தும் அவர் மாதாவை வேலை செய்வதிலிருந்து விடுவிக்கத் தேடுகிறார். மாதா களைத்துப் போய்விடாதபடி வீட்டிலுள்ள மிகத் தாழ்ந்த வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார். அது மட்டுமல்ல, தம்மால் முடிந்தபோதெல்லாம் மாதாவை மகிழ்விக்கவும் அந்த இல்லத்தை அவர்களுக்கு வசதியுள்ளதாக்கவும் அவர்களுடைய சிறிய தோட்டத்தை அதிக அழகுடையதாக்கவும் தம்மால் முடிந்ததையெல்லாம் செய்கிறார்.
அந்த இல்லத்தில்: சுபாவத்துக்கு மேலான, அதன்பின் தார்மீகமான, அதற்குப் பின் லெளகீகமான என்ற கிரமம் அனுசரிக்கப்படுகிறது.
சுபாவத்துக்கு மேலான முதல் வரிசை: இறைவனே யாவற்றுக்கும் தலைவர். அவர் அங்கே வழிபடப்பட்டு நேசிக்கப்படுகிறார். தார்மீகமான 2-ம் வரிசை: சூசையப்பர் குடும்பத்தில் தலைவராக நேசிக்கப்படுகிறார். மதிக்கப்படுகிறார், கீழ்ப்படியபடுகிறார். லெளகீகமான 3-ம் வரிசை: அந்த வீடும் அதிலுள்ள ஜாமான்கள் துணிமணிகள் யாவும் கடவுளின் கொடை எனக் கருதப்படுகின்றன. கடவுளின் பராமரிப்பு ஒவ்வொன்றிலும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆட்டிற்கு கம்பளியையும் பறவைகளுக்கு இறக்கைகளையும், மேட்டு நிலங்களில் புற்களையும், மிருகங்களுக்கு வைக்கோலையும், பறவைகள் தின்ன தானியத்தையும் தங்கியிருக்க மரக்கிளைகளையும் கொடுத்தவர் அவரே. அவரே பள்ளத்தாக்கின் லீலி மலர்களுக்கு உடையை நெய்து கொடுக்கிறவர். அந்த வீடு, ஆடைகள், வீட்டுச் சாமான்கள் இவையெல்லாம் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவைகளை நல்கும் தெய்வ கரத்தை அவர்கள் வாழ்த்துகிறார்கள். அவைகள் கடவுளின் கொடைகள் என மதித்து அவற்றைப் பேணுகிறார்கள். தாங்கள் ஏழைகளாயிருப்பதற்காக எந்த மனக்கசப்பும் அடையவில்லை. தகாத வகையில் எதையும் பயன்படுத்துவதில்லை. தேவ பராமரிப்பை அவமதிப்பதில்லை.
அவர்கள் நாசரேத் மொழியில் பேசிய வார்த்தைகளை நீ கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் ஜெபித்ததும் உனக்கு விளங்கவில்லை. ஆயினும் நீ காணப்பெற்றவை ஒரு பெரிய பாடமாகும். கடவுளுக்குரிய எத்தனையோ விஷயங்களில் தவறிழைத்ததனால் இப்பொழுது இவ்வளவு துன்பப்படுகிற நீங்கள் எல்லாரும் இவற்றை சிந்தித்துப் பாருங்கள். அப்புனித தம்பதிகள், என் தந்தையும் தாயுமாக இருந்தவர்கள் இவ்விஷயங்களில் ஒருபோதும் தவறியதில்லை.
ஆனால் நீ சின்ன சேசுவை நினைத்து மகிழ்ச்சியாயிரு. அவர் குழந்தைப் பருவத்தில் எடுத்து வைத்த எட்டுகளை எண்ணி புன்முறுவல் கொள். கொஞ்ச நாளில் அவர் சிலுவையின் அடியில் நடந்து போவதைக் காண்பாய். அப்போது அது கண்ணீரின் காட்சியாக இருக்கும்.