இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இரவு விருந்தாளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பு வாதங்கள்

அந்தக் குழுவினரில் ஒருவன் துணிந்து அவரிடம்: “ஆனால் சுவாமி, பாவசங்கீர்த்தனத்திற்கு இவ்வளவு அதிக நேரம் ஒதுக்குவதற்குப் பதிலாக, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அவர்களுடைய உலகத் தேவை களைப் பூர்த்தி செய்வதும், மக்களினங்களுக்குக் கல்வியறிவு தருவதும் அதிக நல்லதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்க வில்லையா? வறுமையும், நிர்ப்பாக்கிய நிலையும், அதன் விளைவான அறியாமையும்தான் குற்றங்கள் பெருகுவதன் அடிப்படைக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறீஸ்துவின் சட்டமே பிறர் சிநேம்தானே?'' என்று கேட்டான்.

“ஒரு வகையான தீமைகளை ஊன்றிக் கவனிக்கும் போது, மற்ற தீமைகளை அலட்சியம் செய்து விடக் கூடாது'' என்றார் சுவாமி மெல்மில்லோத். அவரே தொடர்ந்து,

“ஏழைகளுக்காகவும், நோயாளிகளுக்காகவும், அறியாமையில் உள்ளவர்களுக்காகவும், இளம் பருவத்தின ருக்காகவும், முதியவர்களுக்காகவும் தங்களை முழு இருதயத்தோடு அர்ப்பணித்துள்ள உறுப்பினர்களைக் கொண்ட எண்ணற்ற துறவற சபைகளைப் பற்றி நீங்கள் அறிந்ததில்லையா?

“சில சபைகள் தங்கள் நிறுவனங்களில் இருபாலாரு மான முதியவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வசதியான தங்குமிடமும், நல்ல உணவும், மிகுந்த நேசமுள்ள கரிசனமும் தருகின்றன. ஏழைகளின் சிறிய சகோதரிகள் இவர்கள்.

“வேறு சில சபைகள் அநாதை மடங்களை நிறுவு கின்றன. அவற்றில் அவர்கள் வாழ்வின் போராட்டத்திற்காக சிறுவர் சிறுமியரைத் தயார் செய்கிறார்கள். அவர்களை நல்ல கணவர்களாகவும், மனைவியராகவும் ஆக்கும் நம்பிக்கையில் அவர்களுடைய மனங்களுக்குள் ஆரோக் கியமான நல்லொழுக்கக் கொள்கைகளைப் புகுத்து கிறார்கள். வாழ்வுக்கு வேண்டியதைச் சம்பாதிக்க, அவர் களுக்கு ஏதாவது ஒரு தொழிலை அல்லது வியாபார முறைகளைக் கற்றுத் தருகிறார்கள்.

“சில சபைகள் ஏழைகளை அவர்களுடைய வீடு களுக்கே சென்று சந்தித்து, தேவையில் இருப்பவர்களின் நிவாரணத்திற்காக கடவுளின் இனிய சிநேகம் தாங்கள் செய்யும்படி தூண்டுகிற எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்.

“சாத்தியமான எல்லாத் தேவைகளுக்குமாக மருத்துவமனைகளும், ஆதரவற்றவர்களுக்குத் தஞ்ச மளிக்கும் இல்லங்களும் இருக்கின்றன. பிறர்சிநேகச் சகோதரிகளைப் பற்றி யார்தான் கேள்விப்பட்டிருக்க மாட் டார்கள்? அன்பிற்குரியவரே, ஏழைகளுக்கு உதவும்படி கத்தோலிக்கத் திருச்சபையால் செய்யப்படாத பிறர்சிநேகச் செயல்கள் எதுவுமில்லை. என்றாலும் இவை எல்லா வற்றிலும் மிக உயர்ந்த வேலை பாவசங்கீர்த்தனம் ஆகும். அது கிறீஸ்துநாதருடைய சொந்த, ஆசீர்வதிக்கப்பட்ட வேலையாக இருக்கிறது. “நீதிமான்களையல்ல, பாவி களையே அழைக்க வந்தேன்'' (மத்.9:13) என்றார் ஆண்டவர்.

“ஆன்ம ரீதியான துன்பங்கள் இலெளகீகத் துன்பங்களை விட பாரதூரமான அளவுக்கு மிகக் கடுமை யானவை, அவையே மனிதத் தீமைகளில் எல்லாம் பெரியவை. அவையே தனி மனிதர்களையும், குடும்பங் களையும், சமூகத்தையும், நாட்டையும் பெருமளவில் அச்சுறுத்துகிற பெரும் தீமைகள் என்பதை என்னுடன் சேர்ந்து நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இவை எல்லா வகுப்பினரையும், வயதினரையும், நிலையினரையும் பாதிக்கின்றன.

“பாவசங்கீர்த்தனத்தில் மூலம் நாங்கள் வேரறுக் கவும், அழிக்கவும் முயல்வது எல்லா அருவருப்பான வடிவங் களிலும் வெளிப்படும் குற்றத்தையும், நல்லொழுக்கச் சீர்கேட்டையும், கட்டுப்படுத்தப்படாத மனித ஆசாபாசத் தையும்தான். 

“கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே இதற்கான ஓர் அமைப்பை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?

“உங்களிடம் காவல்துறையும், நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும், தண்டனைகளும் இருக்கின்றன. இவை எல்லாம் தேவைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்கள் தண்டனையின்றி குற்றவாளிகளைத் திருத்தி அவர்களின் நிலையை உயர்த்துகிறோம். அவர்கள் மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை நாங்கள் பயன் படுத்துகிறோம். எங்களிடம் வரும்படி நாங்கள் அவர்களை வற்புறுத்துவதில்லை. தங்கள் சொந்த சுயாதீன சித்தப்படி அவர்கள் எங்களிடம் வருகிறார்கள். துயரத்தில் ஆழ்ந்தவர் களாகவும், பாவத்திலும், துன்பத்திலும் அமிழ்த்தப்பட்ட வர்களாகவும் அவர்கள் வருகிறார்கள். ஆனால் மகிழ்ச்சி யோடும், புதுப் பிறப்படைந்தவர்களாகவும், புதுப்பிக்கப் பட்ட பலத்தோடும், நல்ல சித்தத்தோடும் அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். கிறீஸ்துநாதரால் எங்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு, அவர்களுடைய கடந்த காலத்திற்கு மன்னிப்பையும், இனி பாவம் செய்யா திருக்கத் தேவையான பலத்தையும் நாங்கள் அவர்களுக்குத் தருகிறோம்'' என்று கூறி முடித்தார் சுவாமி மெர்மில்லோத்.

“நல்ல தந்தாய், ஓர் அதியற்புதமான வல்லமை உங்களிடம் இருப்பதாக நிச்சயமாக நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள். ஆனால் அதை ஒப்புக்கொள்வது அவ்வளவு எளிதானதாகத் தோன்றவில்லையே?''

 “இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிப்பின்றி விடப்படும்'' (அரு.20:22-23) என்ற கிறீஸ்து நாதரின் வார்த்தைகளை நீங்கள் வாசித்ததில்லையா?

“இந்த அதிகாரத்தைப் பற்றிய சில நடைமுறை சார்ந்த உதாரணங்களை நான் தருகிறேன். பாவசங்கீர்த் தனம் கேட்கும் ஒவ்வொரு குருவும் எதிர்கொள்ளும் காரியங்கள் இவை.

“எங்கள் பாவசங்கீர்த்தனத் தொட்டிகளைச் சுற்றிக் கூடுபவர்களில் மிகப் பெரும்பாலானோர் சந்தேகமின்றி, நல்ல வாழ்வு நடத்துகிற, பக்தியார்வமுள்ள கத்தோலிக்கர் கள்தான். ஆனால் சில சமயங்களில் மனுக்குலத்தின் மிக ஈனமான மனிதர்களையும், கொடிய பாவங்களில் வருடக்கணக் காக மூழ்கிக் கிடப்பவர்களையும், திரும்பத் திரும்பப் பாவங்களைக் கட்டிக் கொண்டதால் பலவீன மானவர்களையும், பாவத்தில் விழுந்து அவமானப்பட்டுப் போன மரிய மதலேனைப் போன்ற பெண்களையும் கூட நாங்கள் சந்திக்கவும் நேரிடுகிறது. ஒழுங்காக தொடர்ந்து பாவசங்கீர்த்தனம் செய்யவும், நாங்கள் அவர்களுக்குத் தருகிற மிக எளிய, நடைமுறை ரீதியிலான அறிவுரையைக் கடைப்பிடிக்கவும் இந்தப் பரிதாபத்திற்குரியவர்களைத் தூண்ட எங்களால் முடிந்ததென்றால், நிச்சயமாக அவர்களை நாங்கள் மேலெழும்பச் செய்து, சமூகத்தில் பயனுள்ள, நம்பத் தகுந்த மனிதர்களாக அவர்களை ஆக்கி விடுவோம்.''

மற்றொரு விருந்தினர், “ஆனாலும் பாவசங்கீர்த் தனம் மிகவும் வித்தியாசமான ஒரு விளைவையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆண்களும் பெண்களும் பாவம் செய்து விட்டு, அதன்பின் மன்னிப்பிற்காக குருவிடம் ஓடி வருகிறார்கள் என்றால், அது பாவம் செய்வதை சர்வ சாதாரணமாக்குகிற காரியமாக ஆக்கி விடுகிறது. உண்மையில் அது பாவத்திற் கான தூண்டுதலாகவே இருக்கிறது'' என்று குற்றஞ் சாட்டினார்.

“நீங்கள் இதை மிகவும் தவறாகப் புரிந்து கொண் டிருக்கிறீர்கள். பாவசங்கீர்த்தனம் செய்யும் எந்த ஒரு சாதாரண கத்தோலிக்கனுக்கும் இப்படிப்பட்ட எண்ணம் இருப்பதில்லை. கடவுளை இப்படி மேலோட்டமான விதமாக நடத்தக்கூடாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் ஒருவேளை குருவை ஏமாற்றலாம், ஏன் தன்னையே கூட ஏமாற்றிவிடலாம். ஆனால் கடவுளை ஏமாற்றத் தன்னால் இயலாது என்பதை அவன் மிக நன்றாக அறிந்திருக்கிறான். உண்மையில் மன்னிப்பவர் கடவுள்தான், குரு அவருடைய கருவியாக மட்டுமே இருக்கிறார்.

“எங்கள் விசுவாசிகளில் மிகத் தாழ்ந்தவர்களும் கூட, கடவுளிடமிருந்து மன்னிப்பையும், இனி பாவம் செய்யாதிருக்க தேவ உதவியையும் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், பாவத்தை அடியோடு விலக்குவதாக ஒரு நேர்மையான, உறுதியான பிரதிக்கினை செய்ய வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆபத்தான பாவசந்தர்ப்பங்களை விட்டு விலகுவதோடு, திடதைரியத்தோடு நல்வாழ்வு நடத்தப் பாடுபடவும் வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில், நான் திரும்பவும் சொல்கிறேன், பாவசங்கீர்த்தனம் குறிப்பிடத் தக்க மிக நல்ல விளைவுகளை உண்டாக்குகிறது.''