அர்ச். தோமையார் வரலாறு - பெரியமலை (பரங்கிமலை)

இது ஒரு குன்று. முன் சொன்ன சின்னமலையை விட இது பெரியதானதால் பெரியமலை என்று அழைக்கப்படுகின்றது. 

கடல் மட்டத்துக்குமேல் 300 அடி உயரமுள்ளது. இம் மலை  மேல்தான் புனித தோமையார் நம் ஆண்டவருக்காக இரத்தம் சிந்தினாரென்பது பாரம்பரை. 

ஆதிகாலத்தில் இம் மலை உச்சியினின்று இரவுக் காலத்தில் ஒரு ஒளி தென்படுமாம். அவ்வொளியைக் கொண்டு மாலுமிகள் கரையைக் கண்டு நங்கூரம் போடுவார்களென்று கொரேயா என்னும் வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபோது, இம் மலையைக் கண்டு அப்பக்கம் குடியேறினர். சிலர் அம் மலையில் பாளையம் இறங்குவதும் சாதாரணம். 

இந்தியர்கள் ஐரோப்பியரை அக்காலம் பரங்கியர் என்று அழைத்து வந்தமையால், அவர்கள் தங்கியிருந்த காரணம் பற்றி இந்த இடத்தைப் பரங்கிமலை என்றும் அழைக்கலாயினர். 

போர்த்துக்கீசியர் உத்தம கத்தோலிக்கராகையால் அவர்கள் சென்ற இடமெல்லாம் முந்த முந்த வெற்றி விருதாகிய இயேசுவின் திருச்சிலுவையையே நாட்டி வந்தனர். அவ்வண்ணமே மலையின் உச்சியில் அவர்கள் ஒரு சிறிய கோயிலைக் கட்டியுள்ளார்கள்.