இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - முகவுரை

மோயீசன் தேவ ஏவுதலால் எழுதித் தந்தருளிய இரண்டாம் ஆகமமாகிய இந்தப் பிரபந்தத்திற்கு, ஈயாத்திரைடு என்னும் பெயர் வழங்கி வந்த காரணம் யாதெனில், தேவப் பிரஜை எஜிப்த்து இராச்சியத்திலே ஏறக்குறைய 430 வருஷகாலம் வாசம் பண்ணி நெடுநாளாய் (90 வருஷம்) மகா கொடுமையான அடிமைத்தனத்திலிருந்து துன்பங்கள் பலவும் அடைந்த பின்னர், அந்தத் தேசத்திலிருந்து புறப்பட்ட வரலாறுகளும், வழியிலே தேவன் கற்பித்த வழிப்பாடுகளும், காண்பித்தருளிய அற்புத அதிசயங்களும் இப்பிரபந்தத்திலே விவரமாய் வர்ணிக்கப் பட்டிருக்கின்றதினால் தானே.

இவ்வாகமத்திலே சுமார் 145 வருடங்களாய் நடந்தேறிய வர்த்தமானங்கள் அடங்கியிருக்கின்றன. இவைகளையும் மூன்று வகுப்புகளாகப் பிரித்து விபரிப்பது தகுதியானது. எவ்வாறென்றால்:

1-வது: எஜிப்த்து தேசத்திலே குடியேறி ஆச்சரியமான விதமாய்ப் பெருகி வர்த்தித்த யாக்கோபுடைய சந்ததியாரின் எண்ணிக்கையும், இவர்களின்மேல் பொறாமை கொண்டு எஜிப்த்து இராயன் நடத்திய உபத்திரவங்களும், மோயீசனுடைய பிறப்பும், வளர்ப்பும் ஆகிய வர்த்தமானங்களும் முதலாம் வகுப்பாகவும்,

2-வது: மோயீசன் கடவுளாலே இஸ்றாயேலித்தாருக்குத் தலைவனாகத் தெரிந்து கொள்ளப்பட்ட விபரமும், அவன் தேவ வல்லபத்தினாலே நிஷ்டூரமான பரவோனிராஜாவை ஆக்கினையிட்டு நானாவித ஆச்சரியமான புதுமைகளைக் காட்டித் தேவ பிரஜையை அடிமைத்தனத்தினின்று விடுதலை செய்த வரலாறும் இரண்டாம் வகுப்பாகவும்,

3-வது: கடவுள் சீனாயி மாமலையிலே தமது பிரஜைக்குக் கட்டளைகளையும் பிரமாணச் சட்டங்களையும் கற்பித்தருளிய பிரதாப வரலாறு மூன்றாம் வகுப்பாகவும் இருக்கின்றன.

ஆதியாகமத்தைப் பக்தியாய் வாசித்திருப்பவர்கட்கு இவ்விரண்டாம் ஆகமமானது இன்பந் தருவதுமன்றி, கடவுளின் மட்டிலே நன்றியறிதலையும் பற்றுதலையும் வற்புறுத்தும். ஆகையால் இதை வாசிக்கும்பொழுது, ஆதியாகமத்திலே எழுதப்பட்ட தேவவாக்குத்தத்தங்களுக்கு இஃது திஷ்டாந்தமென்று நிதானித்துக் கொள்ளக்கடவார்கள்.