இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசு கூறுகிறார்

28 பெப்ருவரி  1944.

எங்கள் விசுவாசம் செத்துக் கொண்டிருக்கிறது என்று உணரும் ஆன்மாக்களே!  இப்பொழுது உங்களுக்கு நான் என்ன சொல்லட்டும்?  கீழ்த்திசை ஞானிகளுக்கு உண்மையைப் பற்றி உறுதி கொடுக்க எதுவும் இருக்கவில்லை.  இயற்கைக்கு மேலாக எதுவுமில்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் வானசாஸ்திரக் கணிப்பும், கண்டிப்பான நேர்மையுள்ள வாழ்க்கையினால் உத்தமமாக்கப்பட்ட அவர்களுடைய சொந்த சிந்தனைகளும்தான்.  அப்படியிருந்தும் அவர்களிடம் விசுவாசம் இருந்தது.  எல்லாவற்றின் மீதும் விசுவாசம் இருந்தது.  விஞ்ஞானத்தின்மீது, அவர்களுடைய மனச்சாட்சியின் மீது, கடவுளுடைய நன்மைத்தனத்தின்மீது.

விஞ்ஞானம் அந்தப் புது நட்சத்திரத்தின் அடையாளத்தை அவர்கள் விசுவசிக்கும்படி செய்தது.  நூற்றாண்டுகளாய் மனுக்குலம் எதிர்பார்த்திருந்த விண்மீன் அதுவாகவே இருக்க முடியும்:  “மெசையா” என்ற நட்சத்திரம். அவர்களுக்குத் தங்கள் மனச்சாட்சியின் நிமித்தம், அம்மனச்சாட்சியின் குரலின் மீது விசுவாசம் இருந்தது.  அந்த மனச்சாட்சி பரலோகக் “குரல்களை”க் கேட்டது.  அக்குரல்கள் “மெசையா வருவதை அறிவிக்கும் விண்மீன் இதுவே” என்று உரைத்தன.  கடவுளின் நன்மைத்தனத்தின் காரணமாக அவர் ஏமாற்றமாட்டார் என அவர்கள் விசுவசித்தார்கள்.  அவர்களுடைய நோக்கம் நேர்மையானதா யிருந்ததால், அவர்களின் குறிக்கோளை அடைய அவர் எல்லா வகையிலும் உதவி செய்வார் என விசுவசித்தார்கள்.

அதிலே அவர்கள் வெற்றியடையவும் செய்தார்கள்.  அடையாளங்களை ஆராய விரும்பிய அநேகருள் அவர்கள் மட்டுமே அந்த அடையாளத்தைக் கண்டுகொண்டார்கள்.  ஏனென்றால் அவர்களுடைய ஆன்மாக்கள் மட்டுமே ஓர் நேரிய நோக்கத்துடன் கடவுளின் வார்த்தையை அறியத் தேடின.  அந்த நோக்கத்தின் முதல் குறிக்கோள் கடவுளை நேரடியாக வாழ்த்தி மகிமைப் படுத்தவதே.

அவர்கள் எந்த சுயலாபத்தையும் தேடவில்லை.  மாறாக அவர்கள் கஷ்டங்களைச் சந்தித்து செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது.  ஆனால் மனித முறையிலான எந்த வெகுமானத்தையும் அவர்கள் தேடவில்லை.  அவர்கள் கடவுளிடம், தங்களை அவர் நினைத்துக் கொள்ளும்படியும், நித்திய வாழ்வுக்கு அவர்களைக் காப்பாற்றும்படியுமே கேட்டார்கள்.

அவர்களிடம் வருங்காலத்தில் எந்த மனித சன்மானத்தைப் பற்றிய ஆசையும் இல்லாததால், அவர்கள் தங்கள் பயணத்தைத் திட்டஞ் செய்யும்போது எந்தவித மனித சம்பந்தமான கவலையும் படவில்லை.  நீங்களாயிருந்தால் உங்களுக்கு நூற்றுக்கணக்கான பிரச்னைகள் வந்திருக்கும்.  வேறு மொழிகளைப் பேசும் மக்களிடையிலும் வேற்று நாடுகளிலும் இத்தனை நீண்ட பயணத்தை எப்படி என்னால் செய்ய முடியும்?  அவர்கள் என்னை நம்புவார்களோ அல்லது ஒற்றன் என்று சிறையில் தள்ளுவார்களோ?  பாலைவனங்களையும் நதிகளையும் மலைகளையும் கடந்து செல்ல அவர்கள் எனக்கு உதவுவார்களா?  உஷ்ணத்தை எப்படி சமாளிப்பது?  மேட்டு நிலங்களின் காற்றுகளைத் தாங்குவதெப்படி?  தேங்குநீர்ப் பிரதேசங்களின் மலேரியா காய்ச்சலுக்கு எப்படித் தப்புவது?  வெள்ளப்பெருக்குகளை?  கடும் மழைகளை?  வேறுபட்ட உணவுகளை?  வேற்று மொழிகளை?  இன்னும் எத்தனை எத்தனை!... இப்படி நீங்கள் சிந்திப்பீர்கள்.  ஆனால் அவர்கள் அப்படி நினைக்கவில்லை.  எதார்த்தமுள்ள புனித துணிச்சலுடன் அவர்கள் சொல்கிறார்கள்:  “தேவனே!  நீர் எங்கள் இருதயங்களை அறிவீர்.  எங்கள் நோக்கத்தையும் நீர் பார்க்கிறீர்.  உமது கரங்களை நம்புகிறோம்.  உலகத்தை இரட்சிப்பதற்காக சரீரம் எடுத்துள்ள உம்முடைய இரண்டாம் ஆளை ஆராதிக்கிற சுபாவத்துக்கு மேலான மகிழ்ச்சியை எங்களுக்குத் தாரும்” என்கிறார்கள்.

அதோடு அவர்கள் தொலை தூரமான இந்திய நாடுகளிலிருந்து புறப்படுகிறார்கள்.  அப்போது சேசு என்னிடம் கூறுகிறார்:  “இந்திய நாடுகள் என தாம் குறிப்பிடுவது, மத்திய தரை ஆசியா என்று.  துருக்கி, ஆப்கானிஸ்தானம், பெர்சியா ஆகியவை உள்ள பிரதேசங்கள்.  கழுகுகளுக்கும் பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் உறைவிடமும், காற்றுகளுடையவும், நீர்ப்பாய்ச்சல்களுடையவும் பேரிரைச்சலைக் கொண்டு, நிலச்சரிவுகளின் மகா பெரிய பக்கங்களில் தமது மறைபொருளான வார்த்தைகளை இறைவன் எழுதுகிறதுமாகிய மங்கோலிய மலைத் தொடர்கள்.  நைல்நதி புறப்பட்டு தன் நீலப் பச்சை நீர்களுடன் மத்திய தரைக்கடலின் இளநீல தண்ணீர்களுடன் கலக்கின்ற பிரதேசங்கள்.  மலைகளும், காடுகளும், மணல்களும், கடல்களை விட ஆபத்தான பாலைவனங்களும் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.  இரவில் அந்த நட்சத்திரம் அவர்கள்மேல் ஒளிவீசி அவர்கள் உறக்கத்தைத் தடை செய்கிறது.  ஒருவன் கடவுளைத் தேடிச் செல்லும்போது சுபாவப்படியான பழக்கங்கள் மனிதத்தன்மைக்கு மேலான எண்ணங்களுக்கும் தேவைகளுக்கும் இடமளிக்க வேண்டும். 

அந்த நட்சத்திரம் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் அவர்களை வழிநடத்துகிறது.  கடவுளின் ஓர் அற்புதத்தால் அம்மூவருக்கும் அது ஒரே இடத்தை நோக்கி முன்னேறுகிறது.  அவரின் இன்னொரு அற்புதத்தால், அநேக மைல்களுக்குப் பின், அந்த இடத்தில் அவர்களை ஒன்று சேர்க்கிறது.  மேலும் மற்றொரு அற்புதத்தால், பெந்தகோஸ்த் புதுமையை அவர்களுக்கு முன்கூட்டியே செய்கிறது - அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள், கண்டுபிடிக்கவும் படுகிறார்கள் - மோட்சத்தில் உள்ளதுபோல்.  மோட்சத்தில் ஒரே ஒரு மொழிதான் பேசப்படுகிறது:  கடவுளின் மொழி.

ஒரே ஒரு தடவைதான் அவர்கள் தத்தளிக்கிறார்கள் - அந்த நட்சத்திரம் மறைந்தபோது.  அவர்கள் உண்மையிலே உயர்ந்தவர்களாயிருந்ததினால் தாழ்ச்சியுடனிருந்தார்கள்.  ஆதலால் மற்றவர்களுடைய தீங்கால் நட்சத்திரம் மறைந்தது என்று அவர்கள் எண்ணவில்லை.  கெட்டுப் போயிருந்த ஜெருசலேம் வாசிகள் அந்த நட்சத்திரத்தைக் காணத் தகுதி பெறவில்லை.  அவர்களோ, கடவுளுக்குத் தாங்கள்தான் தகுதி பெற்றிருக்கவில்லை என்று நினைக்கிறார்கள்.  அச்சத்தோடும் மனஸ்தாபத்தோடும் மன்னிப்புக் கேட்க ஆயத்தத்தோடும் தங்களையே பரிசோதிக்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய மனச்சாட்சிகள் அவர்களுக்குத் திடமளித்தன.  அவர்களுக்குத் தியான ஜெபம் செய்வது பழக்கப்பட்டிருந்தது.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் நுட்பமான மனச்சாட்சி இருந்தது.  எப்போதும் கவனத்துடன் இருந்து, உட்பரிசோதனைகள் செய்வதன் மூலம் அதை அவர்கள் கூர்மையாக வைத்திருந்தார்கள்.  அதனால் அவர்களின் உள்ளம் ஒரு கண்ணாடி போலிருந்தது.  அது அன்றாட செயல்களின் மிக அற்பத் தவறுகளையும் பிரதிபலித்துக் காட்டியது.  அவர்களுடைய ஆசிரியர் அவர்களின் மனச்சாட்சியே.  அது ஒரு குரல்.  மிகச் சிறிய தவறைக் கண்டு அல்ல, தவறை நோக்கிய ஒரு சிறு சரிவைக் கண்டும் அறிவிப்புக் கொடுத்து எச்சரிக்கிற குரல்.  மனிதத்தன்மையிலுள்ள அனைத்தைப் பற்றியும், “தன் திருப்தி” என்னும் எதைப் பற்றியும் அக்குரல் அவ்வாறு எச்சரிப்புச் செய்கிறது.  இதனால் இந்த உபாத்தியாயருடைய முன்னிலையிலும், இந்தக் கடுமையான தூய கண்ணாடியின் முன்பாகவும் அவர்கள் தங்களையே நிறுத்தும்போது, அது பொய் கூறாது என்று அவர்களுக்குத் தெரிகிறது.  அது அவர்களைத் திடப்படுத்தி ஊக்கமளிக்கிறது.

“ஓ!  கடவுளுக்கு எதிரானது நம்மிடத்தில் எதுவுமில்லை என்று உணர்வது எவ்வளவு இனிமையானது!  அவர் அன்புடன் தம் பிரமாணிக்கமுள்ள பிள்ளையின் ஆத்துமத்தைப் பார்க்கிறார், ஆசீர்வதிக்கிறார் என்று உணருவது எவ்வளவு இனிமையானது! அந்த உணர்வினால் விசுவாசம், நம்பிக்கையுறுதி, எதிர்பார்த்தல், பலம், பொறுமை ஆகியவை அதிகரிக்கின்றன.  அத்தருணத்தில் புயல் எழும்புகிறது.  ஆனால் அது கடந்துபோகும்.   ஏனென்றால் கடவுள் என்னை நேசிக்கிறார்;  நான் அவரை நேசிக்கிறேன் என அவர் அறிவார்.  இன்னும் எனக்கு உதவ அவர் தவற மாட்டார்” - நேர்மையான மனச்சாட்சியிலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிக்கிறவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்.  அதுவே அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் அரசியாக விளங்குகிறது.

“அவர்கள் உண்மையிலே உயர்ந்தவர்களாயிருந்ததினால் தாழ்ச்சியுடனிருந்தார்கள்” என்று நான் கூறினேன்.  இதற்கு மாறாக உங்கள் வாழ்வில் நடப்பதென்ன?  ஒருவன் உயர்ந்தவனா யிருப்பதினால் அவன் தாழ்ச்சியுடனிருப்பதில்லை.  ஆனால் அவன் தன் இறுமாப்பினால் ஆதிக்கம் பண்ணி தன்னைப் பெரியவனாக்கிக் கொள்வதாலும், நீங்கள் அற்பத்தனமாய் அவனை வணங்குவ தாலுமே.   சில பரிதாபத்திற்குரிய மனிதர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் ஒரு மேட்டிமைக்காரனுக்கு சமையல் பார்ப்பவர் களாகவோ அல்லது ஏதாவது ஓர் அலுவலகத்தில் வாசல் பணியாளனாகவோ அல்லது ஒரு சிறு கிராமத்தில் உத்தியோகஸ்தனாகவோ மொத்தத்தில் தங்களை நியமித்த எஜமானுக்கு வேலைக்காரர்களாக இருந்து கொண்டே குட்டித் தெய்வங்களைப் போல நடப்பார்கள்.  இவர்கள் இரங்கப்பட வேண்டியவர்கள்...

அம்மூன்று ஞானிகளும் உண்மையாகவே உயர்ந்தவர்கள்.  முதலாவதாக அவர்களிடம் சுபாவத்திற்கு மேலான புண்ணியங்கள் இருந்தன.  அடுத்து, அவர்களிடம் விஞ்ஞான அறிவு இருந்தது.  மூன்றாவது அவர்களுடைய செல்வத்தினாலும் அவர்கள் உயர்ந்திருந்தார்கள்.  ஆயினும் அவர்கள் தாங்கள் ஒன்றுமில்லை யென்று உணர்ந்தார்கள்.  மிக உந்நதரான கடவுளுடன் ஒப்பிட்டால் தாங்கள் பூமியின் தூசி என்றே மதித்தார்கள்.  அவர் ஒரு புன்னகையால் உலகங்களைப் படைக்கிறார்; நட்சத்திரங்களாகிய இரத்தினங்களைக் கொண்டு சம்மனசுக்களின் கண்களுக்குத் திருப்தியளிக்கும்படியாக தானிய மணிகளைப் போல அவைகளைச் சிதறித் தெளிக்கிறார்.

தாங்கள் வாழ்கிற பூகோளத்தை வகைவகையான தன்மைகளுடன் படைத்த மகோந்நதரான கடவுளுடன் ஒப்பிட்டால் தாங்கள் வெறும் ஒன்றுமில்லாமை என அவர்கள் உணர்ந்தார்கள்.  அளவிலடங்காத வேலைகளின் எல்லையிலாச் சிற்பி, தமது பெருவிரலின் தொடுதலால், ஒரு மலைத்தொடர் சங்கிலியை இங்கேயும், மலைகளின் கூடல்வாய்களும் அவற்றின் உச்சிகளும் எழும்புகிற கல்மலை கட்டுக்கோப்புகளை அங்கேயும் வைத்தார்.  அவைகளை இந்த பிரம்மாண்ட உடலான பூமிக்கு முதுகெலும்பு போல் அமைத்தார்.  ஆறுகளே அதன் நரம்புகள்.  ஏரிகள் அதன் அகல் பாத்திரங்கள்.  சமுத்திரங்கள் அதற்கு இருதயங்களாம்.  அதன் ஆடைகளோ காடுகளாம்.  அதன் திரைத் துகில்கள் மேகங்களாம்.  அதன் அலங்காரங்கள் படிகச் சரிவுகள்.  பைந்நீல இரத்தினங்களும் மரகதங்களும் பல்நிறக் கற்களும் பாடும் நீர்களின் கடல்வண்ணக் கற்களும் அதன் இரத்தினக் கற்களாம்.  மரமடர்ந்த காடுகள், காற்றுகள் எல்லாம் ஆண்டவருக்குத் துதிபாடும் பெரிய கூட்டு இசைகளாம்.

மிக உந்நதரான கடவுளுடன் ஒப்பிடும்போது தங்களின் ஞானம் ஒன்றுமேயில்லை என அவர்கள் உணருகிறார்கள்.  அவரிடமிருந்தே தங்களுக்கு ஞானம் வருகிறது.  பொருள்களைப் பார்க்கின்ற தங்கள் இரு விழிகளைவிட அதிக சக்தியுள்ள கண்களை அவர் தங்களுக்குத் தந்திருக்கிறார்.  அவை அவர்களுடைய ஆன்மாக்களின் கண்கள்!  அவை மனிதக் கரங்களால் எழுதப்படாமல் கடவுளின் நினைவுப் பொருள்களில் பொறித்துள்ள வார்த்தையை வாசிப்பதற்குத் தெரிந்திருந்தன.

தங்கள் செல்வத்தைப் பற்றியும் தாங்கள் ஒன்றுமில்லை என்று அவர்கள் உணருகிறார்கள்.  பிரபஞ்சத்தின் சொந்தக்காரரின் செல்வங்களுடன் ஒப்பிட்டால் தங்களுடையவை ஓர் அணு அளவே.  அவரோ, நட்சத்திரங்களிலும் கோளங்களிலும், உலோகங்களையும் இரத்தின மணிகளையும் சிதறிப் போட்டிருக்கிறார்.  தம்மை நேசிக்கிறவர்களின் இருதயங்களில், வற்றாத, சுபாவத்துக்கு மேற்பட்ட முடிவில்லா திரவியங்களைப் பொழிகிறார்.

அந்த ஞானிகள் யூதேயாவின் மிக வறிய பட்டணத்தில் வறிய அவ்வில்லத்தின் முன்பாக வந்து சேர்ந்தபோது, “இதாக இருக்க முடியாது” என்று தங்கள் தலையை அவர்கள் அசைக்கவில்லை.  ஆனால் தங்கள் முதுகையும் முழங்காலையும், அதற்கும் மேலாக தங்கள் இருதயத்தையும் பணிய வைத்து ஆராதிக்கிறார்கள்.  அங்கே அந்த எளிய சுவருக்குப் பின்னால் சர்வேசுரன் இருக்கிறார்.  அவர்கள் எப்பொழுதும் மன்றாடிய  கடவுள் அவரே.  தாங்கள் அவரைக் காண்போமென்று அவர்கள் நினைத்ததுமில்லை.  அவர்கள் மனுக்குலம் அனைத்தின் நலனுக்காகவும் மன்றாடுகிறார்கள்.  தங்களுடைய நித்திய நலனுக்காகவும் வேண்டுகிறார்கள்.  அது மட்டுமே அவர்களுடைய ஒரே ஆசை.  விடிதலும் அஸ்தமித்தலும் இல்லாத வாழ்வில் அவரைப் பார்க்கவும் அறியவும் கொண்டிருக்கவுமே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆண்டவர் அந்த எளிய  சுவருக்குப் பின்னால் இருக்கிறார்.  கடவுளுடைய இருதயமாக இருக்கிற அந்தக் குழந்தையின் இருதயம், வீதியின் தூசிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிற அந்த மூன்று இருதயங்களையும் கண்ணோக்குமா?  அவ்விருதயங்கள்: “பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர், நமது ஆண்டவராகிய கடவுள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.  மிக மேலான பரலோகத்தில் அவருக்கு மகிமை உண்டாகட்டும்.  அவருடைய ஊழியர்களுக்கு சமாதானம் வரட்டும்.  மகிமை, மகிமை, மகிமை!  ஆசீர்வாதங்கள்!” என்று கூப்பிடுகின்றனவே!  அவர்கள் அன்பின் அதிர்வுகளோடு ஆச்சரியத்தில் மூழ்கி நிற்கிறார்கள்.  குழந்தையான கடவுளுடன் ஒன்றிப்பதற்காக, இரா முழுவதும், மறுநாட் காலையிலும் மிக ஆர்வமுள்ள ஜெபங்களுடன் தங்கள் ஆத்துமங்களைத் தயாரிக்கிறார்கள்.

நீங்கள் செய்வதைப் போல், தங்கள் உள்ளங்களில் நிரம்பிய புறக்கவலைகளோடு தெய்வீக அப்பத்தை தாங்கியிருக்கிற மாதாவின் கன்னிமை பொருந்திய மடியாகிய பீடத்திற்கு அவர்கள் செல்லவில்லை.  அவர்கள் உணவையும் உறக்கத்தையும் மறக்கிறார்கள்.  அவர்கள் மிக அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் என்றால் அது மனிதர்களுக்குக் காணப்படும் படியாக அல்ல, அரசர்க்கரசரை மகிமைப்படுத்துவதற்காகவே.  அரச மாளிகைகளில் உத்தியோகஸ்தர்கள் சிறந்த அழகிய உடைகளை அணிகிறார்கள்.  அந்த அரசரிடம் இந்த ஞானிகள் தங்களுடைய மிகச் சிறந்த ஆடைகளில் போக வேண்டிய தில்லையா?  இதைவிட மேலான சந்தர்ப்பம் அவர்களுக்கு வேறு ஏது?

அவர்களுடைய தொலைவான நாடுகளில் அநேகந் தடவைகளில் தங்களைப் போன்ற மனிதர்களுக்காக அவர்கள் தங்களை அலங்காரம் செய்ய வேண்டியிருந்தது.  அவர்களை வரவேற்கவும் மகிமைப்படுத்துவதற்கும்.  ஆகவே, அவர்கள் அரச ஆடைகளையும் ஆபரணங்களையும் பட்டுக்களையும் விலைமதிப்புள்ள தோகைகளையும் உந்நத அரசரின் பாதங்களில் படைப்பது நியாயமே.  பூமியின் நார்களையும் மணிக் கற்களையும் தோகைகளையும் உலோகங்களையும் அவருடைய இனிய சிறு பாதங்களிலே, இவை யாவும் தங்கள் சிருஷ்டிகரை ஆராதிக்கும் பொருட்டு சமர்ப்பிப்பது நியாயமே.  இவை யாவும் அவருடைய கைவேலை அல்லவா?  இந்த சின்ன சிருஷ்டியானவர் தம் சின்னப் பாதங்களால் நடக்கும்பொருட்டு உயிருள்ள விரிப்புகளாக பூமியில் தங்களைக் கிடத்தும்படி அவரே கட்டளையிட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.  ஏனென்றால் தூசியாகிய அவர்களிடம் வரும் பொருட்டு அவர் நட்சத்திரங்களை விட்டு இறங்கினாரே!

மேலிருந்து வந்த குரல்களுக்கு அவர்கள் தாழ்ச்சியுடனும் தாராளத்துடனும் கீழ்ப்படிந்தார்கள்.  அக்குரல்கள் புதிதாய்ப் பிறந்துள்ள அரசருக்கு காணிக்கைகளைக் கொண்டு செல்லும்படி கூறின.  அவர்களும் அவற்றைக் கொண்டு வந்தார்கள்.  “அவர் செல்வந்தர், இவை அவருக்குத் தேவையில்லை, அவர் கடவுள், எனவே இறக்க மாட்டார்” என்று அவர்கள் சொல்லவில்லை.  அவர்கள் கீழ்ப்படிகிறார்கள்.  இரட்சகருடைய வறுமையில் அவர்களே முதலாவதாக அவருக்கு உதவுகிறார்கள்.  அகதியாக ஓடிப்போக இருப்பவருக்கு அந்தப் பொன் எவ்வளவு பயனுடையதாயிருக்கும்!  சீக்கிரமே கொல்லப்படப் போகிற அவருக்கு இந்த மீறை எவ்வளவு அர்த்தமுள்ளதாயிருக்கும்!  தம்முடைய அளவில்லா பரிசுத்ததனத்தைச் சுற்றி எழும்பப் போகிற மனித ஆபாசத்தின் நாற்றத்தை முகர வேண்டியிருக்கிற அவருக்கு இந்த தூபம் எவ்வளவு பக்திக்குரியதாயிருக்கும்!

அந்த ஞானிகள் ஒருவர்க்கொருவர் தாழ்ச்சியுடனும் தாராளத்துடனும் கீழ்ப்படிதலுடனும் மரியாதையுடனும் இருந்தனர்.  புண்ணியங்கள் மற்றப் புண்ணியங்களை எப்போதும் பிறப்பிக்கின்றன.   கடவுள் மட்டிலான புண்ணியங்களிலிருந்து , மனிதர் மட்டியிலான புண்ணியங்கள் மருவி வருகின்றன.  மரியாதை என்பது பிறர்சிநேகம்.  அவர்களுள் மூப்பராயிருப்பவர் மற்றவர்களின் சார்பில் பேச விடப்படுகிறார்.  அவரே இரட்சகரின் முத்தத்தை முதலில் பெற்று அவருடைய சின்னக் கரத்தைப் பிடிக்கிறார்.  மற்றவர்கள் இரட்சகரை மீண்டும் காணக் கூடியவர்கள்.  ஆனால் அந்த மூப்பர் இனி அவரைக் காண மாட்டார்.  ஏனென்றால் அவர் வயோதிபர்.  அவர் கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கு அதிக நாள் இல்லை.  கிறீஸ்துவை, நெஞ்சைப் பிளக்க வைக்கும் அவருடைய மரணத்துக்குப் பிறகு அவர் காண்பார்.  கிறீஸ்து மோட்சத்திற்கு மறுபடியும் போகும்போது மற்ற புண்ணிய ஆத்துமாக்களுடன் அவரும் அவரைப் பின்செல்வார்.  ஆனால் இவ்வுலகில் அவர் மறுபடியும் கிறீஸ்துவைக் காணமாட்டார்.   ஆதலால் அவருடைய சுருக்கங்களுள்ள கரத்திற்குள்ளிருக்கிற பாலகனுடைய சிறிய கரத்தின் வெப்பம் அவருக்கொரு அவஸ்தை பூசுதலாயிருக்கட்டும்.

மற்றவர்களிடமும் பொறாமை இல்லை.  மாறாக, இந்த மூப்பரான ஞானியின்மீது அவர்களுடைய மரியாதை அதிகரிக்கிறது.  அவர்களிலும் இவர் அதிக பாக்கியத்தைப் பெறவும் அதிக நேரம் அதைப் பெறவும் தகுதியாயிருந்தார்.  குழந்தைக் கடவுள் அதை அறிவார்.  தேவனுடைய வார்த்தையானவர் இன்னமும் வாய் பேசவில்லை.  ஆயினும் அவருடைய ஒவ்வொரு செயலும் ஒரு வார்த்தையாக இருக்கிறது.  அவருடைய இம்மாசற்ற வார்த்தை ஆசீர்வதிக்கப்படுவதாக.  ஏனெனில் அம்மூப்பரைத் தம் சலுகை பெற்றவராக அது குறித்துக் காட்டியது.

என் அன்புள்ள பிள்ளைகளே, இக்காட்சியில் இன்னும் இரண்டு பாடங்கள் உள்ளன.

அர்ச். சூசையப்பரின் நடத்தை:  அவர் தம்மை எந்த இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென அறிந்திருந்தார்.  தூய்மைக்கும் அர்ச்சிஷ்டதனத்திற்கும் காவலராக அவர் அங்கிருந்தார்.  அவர்களுடைய உரிமைகளைப் பறிப்பவராக அல்ல.  சேசுவுடன் மாதாதான் ஞானிகளின் வணக்கத்தையும் வார்த்தைகளையும் ஏற்கிறார்கள்.  மாதாவைப் பற்றி அர்ச். சூசையப்பர் மகிழ்கிறார்.  தாம் இரண்டாவதாக இருப்பதைப் பற்றி அவர் வருந்தவேயில்லை.  சூசையப்பர் நீதிமான்.  நீதிமான் என்பவர் அவரே.  அவர் எப்போதும் நீதிமானாயிருந்தார்.  இந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படியே.  விழாவின் புகைகள் அவர் எண்ணத்திற்குள் நுழையவில்லை.  அவர் தாழ்ச்சியும் நீதியும் உடையவராகவேயிருந்தார்.

அந்தக் காணிக்கைகளைப் பற்றி சூசையப்பருக்கு மகிழ்ச்சி தான்.  தமக்காக அல்ல.  தம் பத்தினியுடையவும் இனிய பாலகனுடையவும் வாழ்வை அவற்றால் கூடுதல் செளகரியமாக்க அவரால் கூடும் என்பதற்காகவே.  சூசையப்பரிடம் பேராசை இல்லை.  அவர் ஓர் உழைப்பாளி.  தொடர்ந்து உழைப்பார்.  ஆனால் தம்முடைய அன்பாக இருக்கிற “அவ்விருவரும்” செளகரியமா யிருக்க வேண்டுமென்று கவலையாயிருக்கிறார்.  அந்தக் காணிக்கைகள் (எஜிப்துக்கு) ஓடிப் போவதற்கும் அங்கே அகதி வாழ்விற்கும் அதன்பின் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதற்கும் உதவுமென்று சூசையப்பராவது ஞானிகளாவது அறியவில்லை.  அகதி வாழ்வில் ஐசுவரியங்கள் காற்றால் சிதறப்படும் மேகங்களைப்போல் மறைந்து போகுமே!  தாய்நாட்டில் அவர் எல்லாவற்றையும், வாடிக்கைக்காரர்களையும், வீட்டுத் தட்டுமுட்டுகள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  வீட்டின் சுவர்கள் மட்டுமே அங்கு இருந்தன.  அவை கடவுளால் காப்பாற்றப்பட்டிருந்தன.  காரணம் அங்குதான் வார்த்தையானவர் கன்னிகையுடன் இணைக்கப்பட்டு மாம்சமானார்.

சூசையப்பர் தாழ்ச்சியுடனிருந்தார்.  உள்ளபடியே அவர் கடவுளுடையவும் கடவுளின் தாயுடையவும் உந்நதருடைய பதியினுடையவும் காப்பாளராயிருந்தும் அவர் தேவனுடைய அடியார்களின் சேணங்களின் கால்தாங்கிகளைப் பிடித்திருக்கிறார்.  அவர் ஒரு வறிய தச்சன், காரணம் நீடித்த மனித நிர்ப்பந்தங்கள் தாவீதின் வம்சத்தாருக்கு அரச செல்வங்கள் இல்லாமல் செய்துவிட்டன.  ஆயினும் அவர் எப்போதும் ராஜகுலத்தவர்தான்.  அரசர்க்குரிய பழக்கவழக்கங்களும் அவரிடம் உண்டு.  அவரைப் பற்றியும் இவ்வாறு கூற வேண்டும்:  “உண்மையிலேயே அவர் உயர்ந்தவராயிருந்ததினால் தாழ்ச்சியுடனிருந்தார்.” 

இறுதியாக, ஒரு கனிவான, குறிப்பிடக்கூடிய பாடம்:

சேசு பாலனுக்கு இன்னும் ஆசீர்வதிக்கத் தெரியவில்லை.  மாமரி அன்னைதான் அவருடைய கரத்தைப் பிடித்து அப்புனித கிரிகையைச் செய்ய அதை வழிப்படுத்துகிறார்கள்.

எப்போதுமே சேசுவின் கரத்தைப் பிடித்து அதை வழிப்படுத்துவது மாமரிதான்.  இப்பொழுதும் அப்படித்தான். இப்பொழுது சேசு ஆசீர்வதிக்க அறிவார்.  ஆனால் சில சமயங்களில் ஆணியால் துளைக்கப்பட்ட அவருடைய கரம் களைத்து, மனமற்று கீழே விழுந்து விடுகிறது.  ஏனென்றால் ஆசீர்வதித்துப் பயனில்லை என்பது அவருக்குத் தெரிகிறது.  என் ஆசீர்வாதத்தை நீங்கள் அழித்து விடுகிறீர்கள்.  என் கரம் எரிச்சலாலும் கீழே விழுகிறது.  ஏனென்றால் நீங்கள் என்னைச் சபிக்கிறீர்கள். இந்த வெறுப்பை என் கரத்திலிருந்து மாமரிதான் தன் முத்தங்களால் அகற்றுகிறார்கள்.  ஆ! என் தாயின் முத்தம்!  யாரால் அதைத் தட்ட முடியும்?   பின் தன்னுடைய மெல்லிய தடுக்க முடியாத அன்புள்ள விரல்களால் அவர்கள் என் மணிக்கட்டைப் பிடித்து, நான் ஆசீர்வதிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.  என் தாயை நான் தட்டமுடியாது.  ஆனால் நீங்கள் அவர்களிடம் செல்ல வேண்டும்.  சென்று அவர்களை உங்களுக்காக பரிந்து பேசுபவராகக் கொள்ள வேண்டும்.

மாமரி உங்களுக்கு இராக்கினியாயிருப்பதற்கு முன்பே எனக்கு இராக்கினியாயிருக்கிறார்கள். உங்கள் மேலுள்ள அவர்களுடைய அன்பு எத்தகைய சலுகைகளை உங்களுக்குச் செய்கிறதென்றால் ஒருவரும் அதை எண்ணிப் பார்க்கவோ கண்டுபிடிக்கவோ இயலாது.  ஒரு வார்த்தையும் பேசாமல் தன் கண்ணீர்களினாலும் என் சிலுவையின் ஞாபகத்தைக் கொண்டும் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறார்கள்.  ஆகாயத்தில் அந்த சிலுவை அடையாளத்தை நான் வரையும்படி செய்கிறார்கள்.  செய்து, “நீரே இரட்சகர்;  ஆதலால் இரட்சியும்” என்று எனக்குச் சொல்கிறார்கள்.

அன்புள்ள பிள்ளைகளே!  ஞானிகள் வந்த நிகழ்ச்சியின் காட்சி தரும் “விசுவாச சுவிசேஷம்” இதுவே.  இதை தியானியுங்கள்.  கண்டுபாவியுங்கள்.  உங்கள் நன்மைக்காகவே.