இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பதிதர்களும் பிரிவினைவாதிகளும் பாவசங்கீர்த்தனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்!

நாம் இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு சிந்தனையும் உள்ளது. ஆதித் துவக்க காலங்களிலிருந்தே மிகப் பரந்த பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தவையும், முழு மக்களினங்களை உள்ளடக்கியவையுமான கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பதிதர்களாகவும், பிரிவினைவாதிகளாகவும் மாறி, திருச்சபைக்குக் கீழ்ப்படிய மறுத்து வீழ்ச்சியடைந்தார்கள்.

இவர்கள் தாய்த் திருச்சபையின் மீது கசப்பான பகை கொண்டவர்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதன் மீது தாக்குதல் தொடுக்க எப்போதும் தயாராக இருந்து வந்திருக்கிறார்கள். குருக்களிடம் செய்யப்படும் இரகசியப் பாவசங்கீர்த்தனம் மட்டும் கிறீஸ்துநாதரிடமிருந்தே வந்துள்ளது என்ற சத்தியம் தெளிவாக இராதிருந்தால், இவர்கள் இப்படிப்பட்ட ஒரு சத்தியத்தையோ, தேவத்திரவிய அனுமானத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

இனி, உண்மை என்னவெனில், இந்தக் கிறிஸ்தவ அமைப்புகள் பாவசங்கீர்த்தனத்தின் தெய்வீக ஸ்தாபகத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, மாறாக, அதனோடு மனமுவந்து இணைந்தும் இருக்கிறார்கள், அதை அனுசரிக்கிறார்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டது, உரோமையிலிருந்து அவர்கள் பிரிந்ததற்குப் பிறகு அல்ல, மாறாக, அவர்கள் தொடக்க நாட்களிலிருந்தே எப்போதும் அதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள். (பாவசங்கீர்த்தனம் தெய்வீகமான முறையில் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளும் பிரிவினைவாதிகளும், பதிதர்களும் யாரெனில், முக்கியமாக ஆர்த்தடாக்ஸ் சபையினரும், ஆங்கிலிக்கன் சபையினரும் ஆவர்.)

ஆகவே, பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது என்பதற்கு மிக அற்பமானதொரு சான்றும் கூட எங்கும் காணப்படவில்லை. அதற்கு மாறாக, அது தெய்வீகமான முறையில் ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கு அர்ச். அகுஸ்தீனார், அர்ச். எரோணிமுஸ், அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் இன்னும் ஏராளமான ஆதித் திருச்சபைத் தந்தையர்கள் மிகத் தெளிவாக சான்று பகர்ந்திருக்கிறார்கள்.

பாவசங்கீர்த்தனம் செய்யும் வழக்கம் அப்போஸ்தலர்களின் காலத்திலேயே தொடங்கி விட்டதை நம்மால் ஆராய்ந்தறிய முடிகிறது. பெண்களும், குழந்தைகளும் மட்டுமல்ல, மாறாக வலிமை மிக்க அரசர்களும், புகழ் பெற்ற அறிஞர்களும், பெரும் போர்வீரர்களும், எல்லா வகையான மனிதர்களும் பாவ மன்னிப்புப் பெறும் ஏக்கத் தோடும், தாழ்ச்சியோடும் தங்கள் பாவங்களை குருக்களிடம் சங்கீர்த்தனம் செய்தனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

உதாரணமாக, நான்காம் நூற்றாண்டில் அர்ச். அம்புரோஸ் பாவசங்கீர்த்தனங்கள் கேட்கும்போது, அவர் கண்ணீர் விட்டழுவது வழக்கமாக இருந்தது என்பதும், அவர் அழுவதைக் காணும் மிகக் கடினப்பட்டு இறுகிப் போன பாவிகளின் இருதயங்களும் கூட இளகி விடும், அவர்கள் உத்தம மனஸ்தாபத்தோடும், கண்ணீரோடும் பாவசங்கீர்த்தனம் செய்து தங்கள் வாழ்வைத் திருத்தியிருக்கிறார்கள் என்பதும் திருச்சபையின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.