பெற்றோர் அன்பு

பிள்ளைகளைச் சீராய்வளர்ப்பதிலுள்ள பிரயாசம், கவலை, செலவு முதலியவைகளைப் பெற்றோர் அனுபவத்தால் அறிவார்கள். இவைகளையெல்லாம் இலகுவாக்கும் பொருட்டுத் தயாபர சருவேசுரன். தாய் தந்தையருக்கு வேண்டிய மேன்மையையும் அதிகாரத்தையுமன்றி, பிள்ளைகள் மேல் உருக்கமான அன்பையும் அருளியிருக்கிறார். இவ்வன்பு அவர்களுக்கு ஒரு இயற்கையான கொடை, இது பிள்ளைகள் மேல் பெற்றோருக்கு இயல்பாயுள்ளபடியால் அல்லவோ பிள்ளைகளை நேசிக்கும்படி பெற்றோருக்குச் சருவேசுரன் விசேஷ கற்பனையைக் கொடுக்கவில்லை.

அன்பு மிகவேகமும் வல்லமையுமுள்ளது. அது பஞ்சபூதியங்களிலொன்றாகிய நெருப்புக்கு ஒப்பிடப்படும். நெருப்பு குளிர்ந்ததை அனலாக்கும். இருளை நீக்கி ஒளியைத்தரும். சடப்பொருட்களின் கனத்தைக்குறைத்து அவைகளை இலேசாக்கும். இவ்வாறே அன்பும் தன்னாற் பிறக்கிற அலுவல்களிலுள்ள அலுப்பையும் பிரயாசத்தையும் குறைத்து அவைகளை இலேசும் இன்பமுமாக்கும்.

பிள்ளையை வளர்ப்பதிலுள்ள வருத்தத்தை இலகுவாக்கும்பொருட்டே அப்பிள்ளை பிறக்கும் போது பராபரன தாயிடத்திற் பாலும் பட்சமும் சுபாவமாய்ச் சுரக்கச் செய்கிறார். இந்தப்பட்சத்தினாலேதான் தாய் தன்பிள்ளைக்கு அடிக்கடி பாலூட்டி, வேண்டிய சமயங்களில் இராவிராவாய் நித்திரை விழித்து, அதையழவிடாமல் தாலாட்டி உறங்கச்செய்து, அதற்கு யாதேனும் நோய் வரும்போது தன் சுகத்தையும் பேணாமல், ஊணுறக்கமில்லாமல், கஸ்தியைச் செலவைப்பாராமல் எவ்விதத்திலும் அந்த நோயைக்குணமாக்கவேண்டிய பிரயாசமெல்லாம் படுகிறாள். பாலகர் விளையாட்டுக்காக அவளை எவ்வளவு அரிகண்டப்படுத்தினாலும் அது அவளுக்கு அலுப்பாயிராமல் ஆனந்தமாயிருக்கப்பண்ணுவதும் அன்பேயாம்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மேலுள்ள பட்சத்தினால் இனிமையான ஒரு கொடுங்கோன்மைக்கு உள்ளாயிருக்கிறார்களென்று அர்ச். கிறிசோஸ்தம் அருளப்பர் சொல்லுகிறார். தாய் தந்தையர் எவ்வித அபாயங்களையும் நட்டங்களையும் கஸ்திவருத்தங்களையும் அனுபவித்துத் தங்கள் பிள்ளைகளை உயிருக்குயிராய்ச் சிநேகிக்கப்பண்ணுவது இவ்வினிய கொடுங்கோன்மையேயாம். சிறிதுகாலத்துக்குமுன் ஊர்காவற்றுறையில் நல்ல குடும்பத்தைச்சேர்ந்த்த ஓர் இளந்தாய் தன் பிள்ளைகளைக் கிணற்றடியில் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும்போது சவிரிமுத்து என்னும் அவள் மகன் தற்செயலாய் அக்கிணற்றில் விழுந்துவிட்டான்.

இதைக்கண்ட தாயானவள் தன் உயிரைப்பார்த்தாளா? மாரி மழையினால் கிணறும் நிறைந்திருக்கிறதே, நீந்தவுந் தெரியாதே; இப்படியிருக்கக் கூபத்திற் குதித்தால் மகனோடு தானும் மாண்டுபோவாளேயென்று யோசனை பண்ணினாளா? பயப்பட்டாளா அல்லது தாமதித்தாளா? இல்லை. பெற்றவளுக்குத்தெரியும் பிள்ளையின் அருமை. தன் பிள்ளை மோசம்போகிறதே என்ற துயரத்தைத் தாங்க மாட்டாமல் உடனுக்குடனே கிணற்றில் பாய்ந்துவிட்டாள். இப்படி தன் உயிரைப் பாராமல் சட்டெனக் கிணற்றுள் குதிக்கச் செய்தது தாயின் நேசமென்னும் இனிய கொடுங்கோன்மையல்லவா?

வேதாகமஞ் சொல்வதுபோல ''திரளான தண்ணீர் நேசத்தை அவிக்கமாட்டாது; வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டா.... '' உன்னதகவி 8;7) தாயும் பிள்ளையும் எட்டாத தண்ணீரில் இறக்கவேண்டியதேசகசமானாலும் தேவாதீனமாய் அவள் குழந்தையையும் தீங்கில்லாமல் தூக்கிக்கொண்டு தப்பி விட்டாள்.

இப்படியே பொதுவாய்ப் பெற்றோர் தம்மக்கள்மட்டில் இயல்பாக அன்புள்ளவர்களாயிருக்கிறார்கள். சிலரோ இதற்கு மாறாய்ப் பிள்ளைகள் மட்டில் கல் நெஞ்சுத்தனமுள்ளவர்களாயும், இன்னுஞ்சிலர் மிதமிஞ்சிய முறைகேடான அன்புள்ளவர்களாயும் இருந்துவருகிறார்கள். இங்கு நாம் இந்தக் கல்நெஞ்சுத்தனத்தினாலும் முறைகேடான அன்பினாலும் விளைகிற தீமைகளை விவரித்து அவ்விரண்டையும் கண்டித்த பின்பு, பெற்றோர் பிள்ளைகளை நேசிப்பதற்கான உத்தம முறையை விளக்கிக் காட்டக் கருதுகின்றோம்.