மூன்றாம் பாகம்.

தியானம் நன்றாய்ச் செய்யும்படி இது மட்டும் சொன்ன குணங்கள் அன்றி இன்னுமோர் முக்கிய இலட்சணமிருக்கின்றது.

தியான முயற்சிகள் எவ்வளவு மேன்மையும் பிரயோசனமும் உள்ளவைகளாயினும், அவைகள் உனக்கு எவ்வளவு அவசியமென்று நீ மனதில் நன்கு உணர்ந்த போதிலும், அவைகளைச் செய்யும்படி உனக்கு திடமான மனசு மாத்திரம் இல்லாமல் போனால், மற்ற யோசனை நியாயங்கள் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் போலும், கடலில் கரைத்த புளி போலும், ஒரு பயனும் கொடுக்காது.

மனதின் வலிமை காரிய வெற்றிக்கு முக்கிய சாதனம், மனம் உண்டானால் வருத்தமும் பிரயாசையும் ஒன்றும் தோன்றமாட்டாது. மனம் உண்டானால் சாக்கும் போக்கும் வாயில் வராது. மனமுண்டானால் சலிப்பும் அயர்வும் முறைப்பாடும் நினைவிலும் நெருங்காது. ஞானத் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்ய எனக்கு மனதுண்டு என்று இயல்பாய் மனதறியச் சொல்லித் துவக்குகிறவன் தேவகிருபையால் நன்றாய்ச் செய்து முடிப்பான்.

இவ்வித இயல்பான மனவலிமை யாரிடம் இல்லையோ அவன் ஒன்றும் துணிந்து செய்யான். எல்லாம் இவனுக்குப் பிரயாசை யாய்த் தோன்றும். ஆயிரம் சாக்குப்போக்குகள் அவன் ஞாபகத்தில் வரும். "அப்பா! வாய் பேசாமல் மெளனங்காக்க யாரால் கூடும். நாக்கரிப்பை அடக்க மருந்துண்டா? இங்குமங்கும் கண்ணைத் திருப்பி பார்க்காமல் நட்டுவைத்த கல்லைப் போல் நிற்க, மனுஷ னால் கூடுமா? எட்டு நாள் மட்டும் வீட்டு வேலையைக் கவனியாமல் பெட்டிப்பாம்பு போல் அடங்கி இருக்க யார் சம்மதிப்பார்? நாள் முழுதும் யோசித்து யோசித்து தியானித்தால் மண்டை தெறித்து பிளந்து போகாதா? மூளை கலங்கி பித்துக் கொள்ளாதா? அன்றியும் நான் என்ன , உலகத்தை வெறுத்த சந்நியாசியா? வனவாசியா?" என்று இவ்விதமாய் வீணாய்ப் புலம்பி தவிப்பார்கள்.

தியானப் பிரசங்கம் செய்பவர் எவ்வளவு பிரயாசையுடன் விவரித் துப் பேசினாலும், அவர் சொல்லும் வார்த்தை இப்பேர்ப்பட்டவர் களுக்கு, மனித நடமாட்டமில்லாத நெடுங்காட்டில் உரத்துப் பலயாய் கத்தி வீணாய்ப் பேசும் குரலுக்குச் சமானமாகும். கண்ட பலன் ஒன்றுமில்லை. கால் நஷ்டம் வேலை நஷ்டத்தோடு ஆத்தும் நஷ்டமாய் முடியும்.

எதற்கும் மனது வேண்டும். அதிலும் ஆத்தும் இரட்சணிய விஷயமாய்ச் செய்யும் தியான முயற்சிகளுக்கு உறுதியான மனசு இல்லாவிட்டால் நன்மையான யாதொன்றும் செய்வது அரிது. "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம், மற்றவை எல்லாம் பிற" என்பது சிறந்த வாக்கு.

இதன் கருத்தேதென்றால்: எந்தச் செய்கையும் திண்மை பெற்று நலந்தர வேண்டுமானால் அதற்கு மனதின் திண்மையே இன்றியமையாத சாதனம், மற்றதெல்லாம் இதற்குப் பின். இதனால், தியானம் செய்ய வருகிறவர்கள் தியானத்தின் பலனைப் பூரணமாய் அடைய ஆசையாயிருந்தால் இந்தத் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்ய நான் மனதாயிருக்கிறேனென்று துணிந்து சொல்வார்களாக.

இந்த உறுதியான மன வலிமை உண்டானால், தியானத்தின் வெற்றிக்கு உதவியாயிருக்கும் வழிகளை எல்லாம் பிரமாணிக்கமாய் வஞ்சகமின்றி நீங்கள் பயன்படுத்துவீர்கள். இந்த வழிகள் இன்னவை என்று போகப் போக சொல்லிக் காண்பிப்போம். ஆனால் இப்போது அவைகளில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதை மாத்திரம் இங்கே சுருக்கமாய்ச் சொல்லுகிறோம்.

தியான நாட்களில் அடிக்கடி சேசுநாதரையும், தேவமாதா வையும் பார்த்து, புத்திக்குப் பிரகாசமும், மனதுக்கு உறுதியும் கொடுக்கும்படி ஜெபிப்பது முதற் காரியம். இரண்டாவது, தியானப் பிரசங்கங்களை வாசித்தாலும் கேட்டாலும், கருத்தோடும் கவனத் தோடும் நிதானமாய்க் கேட்டு, கேட்ட தியானத்தின் பொருள் தன் மனசில் பதிந்து நன்றாய்ச் பதியும்படி அதன் பேரிலேயே பலமுறை சிந்தித்து யோசிப்பது அவசியம்.

நீ சாப்பிட்ட உணவு நன்றாய்ச் செரிமானமானால்தான், அது உன் உடலில் சார்ந்து உனக்கு இரத்தப்பசை ஊட்டி ஆரோக்கியம் கொடுக்கும். மூன்றாவது, தியானம் செய்கிறவர்களுக்காகக் குறித்திருக்கும் ஒழுங்கு களை எல்லாம் வஞ்சனையின்றி உண்மையுள்ள குணத்தோடு ஜாக்கிரதை யாய் அநுசரிக்க தீர்மானிக்க வேண்டும்.

நாலாவது, ஒரு நாளில் பல முறை தேவ நற்கருணை சந்திக்கப்போய், சேசுநாதர் சுவாமியிடம் தன் குறைகளைச் சொல்லி, இரந்து மன்றாடி, ஆறுதலும், உதவியும் புத்தித் தெளிவும், உறுதியுள்ள மனதும் கேட்க வேண்டும். இவை களையெல்லாம் ஒழுங்காய் உங்களால் இயன்ற வரையில் நீங்கள் செய்தால், சேசுநாதர் சுவாமி, தியான முயற்சிகள் வெற்றியாய் முடிந்து உங்கள் ஆத்தும் இரட்சணியம் கடைசியில் நீங்கள் பெறும்படி கிருபை செய்வார்.

பாவிகளின் தஞ்சமும் நமது அன்புள்ள தாயுமாகிய தேவ ஆண்டவள் இந்தத் தியான காலத்தில் உங்களுக்குத் தேவையா யிருக்கும் வரங்களும் உதவியும் பூரணமாய் உண்டாகும்படி தம்முடைய தேவகுமாரன் சேசுநாதரிடம் மன்றாடுவார்களாக!