இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பெற்றோர் சிலரின் கன்னெஞ்சுத்தனம்

''தீக்குருவி தன் குஞ்சுகளைத் தன்னுடையவையல்லாதவை போலப் பாவித்து அவைகளைக் காக்காமற் கடினகுணம் காட்டும். அவைகளைப்பற்றி அதற்குக் கவலையில்லாதபடிபால் அது (முட்டையிடுவதில்) பட்டவருத்தமும் விருதாவாம்" (யோபு 39; 16.) என யோபு என்னும் மகாத்துமா வசனித்த வாக்கியத்தை நூலாசிரியர்கள் சிலர் பிள்ளைகள் மேல் பட்சமற்ற பெற்றோருக்குப் பொருத்திச் சொல்லுகிறார்கள்.

மிகப் பெலனும் வேகமுமுள்ள இந்தப் பட்சியைப்பற்றிச் சுபாவ நூலோர் அநேக அபூர்வமான விருத்தாந்தங்களை வரைந்திருக்கிறார்கள். அவைகளுள் ஒன்று யாதெனில், தீக்குருவியானது தான் தரையிலிடும் முட்டைகளைப் பாதுகாத்து அடையிருந்து குஞ்சு பொரிக்காமல் தேடாக்கூறாய் விடுவதினால், அவைகள் வனாந்தரத்தில் ஊடாடும் மனுஷர் கையில் அகப்படவும் பாம்புகுடிக்கவும் கான மிருகங்களின் காலுக்குள் மிதிபட்டு நெரியவும் நேரிடுகிறது. இவ்வித அபாயங்களுக்கெல்லாம் தப்பி சூரிய வெப்பத்தினால் பொரிக்கும் குஞ்சுகளை அயலிற் திரியும் தாய்க்குருவியானது கண்டாலும் அவைகளை அணைத்துச் சேர்த்துக்கொள்ளாமல் விலகிவிடுமாம்.

கிறீஸ்துவேதம் உலகிலுதிக்குமுன் இரக்கமற்ற இக்குருவியிலும் கொடிய பெற்றோர் தொகைவகையாயிருந்தார்களெனச் சரித்திரங்களிற் காண்கிறோம். பூர்வகாலத்தில் கிரேக்க தேசத்திற் பெயர் பெற்றிலங்கிய ஸ்பார்த்தாநாட்டில், ஓர் குழந்தை பிறந்தவுடன் அதின் குடும்பத்துக்குச் சேர்ந்த முதியோர் அதைப்பார்வையிட்டு, அது பலமும் அழகுமுள்ளதாயிருந்தால் அதை வளர்க்கவும் அவைகள் அற்றதாய் இருந்தால் கொன்று விடவும் வேணுமென்று தீர்ப்பார்கள்.'

புராதன உரோமைக் கட்டளைச் சட்டத்தின்படி மக்களின் சீவியமும் மரணமும் பிதாவின் அதிகாரத்தின் கீழ் இருந்தன. அகமெம்நொன், மாரியுஸ் லசேனா, தெமெத் திரியா முதலான கல்விமான்களும் வேறநேகருந் தம்மக்களைத் தங்கள் கையாற் கொன்றுவிட்டார்கள். அக்காலம் மனுத்தன்மையற்ற அநேக மாதாக்கள் தங்களரிய குழந்தைகளைச் சற்றேண், தியனா ஆதிய குரூர தெய்வங்களுக்குப் பலி கொடுத்தும் வந்தார்கள். இந்தியாவிலே முற்காலம் சிறுவர்களைக் கங்கை எனும் நதிக்குப் பலியாக அதினுள் எறிந்துவிடும் வழக்கமிருந்தது.

பிளேற்றோ, அரிஸ்தோத்தில், சோலன், லிக்கூர்க்கஸ் முதலாம் வித்துவான்கள் ஆதரவற்ற குழந்தைகளைக் கொல்ல விடைகொடுத்ததுமன்றி, அவைகள் கொல்லப்படும்' வேளை சிலசமயங்களில் தாங்களுஞ் சுமுகமாயிருந்து அக மகிழ்ச்சி கொண்டார்களாம்.

ஆதரவற்ற குழந்தைகளையும் வளர்ந்தவர்களையும் ஊணற்றுத் தெருவீதிகளில் திரியும் நாய்களைப்போலப் பாவித்துக் கொன்றுவிடுவது உத்தமமென்று அமெரிக்காவிலுள்ள அவிசுவாசிகள் சிலகாலத்துக்கு முன்னும் போதித்துவந்தார்கள். கடும்பஞ்சகாலங்களிற் பலமுறையும் பெற்றோர் தம்பிள்ளைகளைப் பட்சித்தார்களென்றுஞ் சரித்திரங்கள் கூறுகின்றன. சிலர் அற்ப ஆதாயத்துக்காகத் தங்களரிய பாலகரைக் கிரயத்துக்கு விற்கவும் துணிந்திருக்கிறார்கள். அல்லது அசட்டையினாலே நோய்வாய்ப்பட்டிருக்கவும் விட்டிருக்கிறார்கள்.

ஆனால் சூரியனுதிக்க இருள் படிப்படியாய் மறைந்து விடுவதுபோல், கிறிஸ்துவேதம் உதித்துப் பரந்த ஊர் தேசங்களிலெல்லாம் இக்குரூர செயல்களும் தீவிரமாய் மறைந்து போகின்றன. எக்காலமும் இத்திருவேதத்தின் முதலலுவல்களிலொன்று பெற்றோருக்குப் பிள்ளைகள்மேலுள்ள பாரமான கடமைகளைப் படிப்பிப்பதேயாம். இப்படிப்பினையை அநேக பெற்றோர் கைக்கொண்டதினால் ஆதிகாலந்தொட்டுத் திருச்சபையிற் திரளான சுத்தவாளரும் வேதபாரகரும் வேதசாட்சிகளும் மகாத்துமாக்களும் விளங்கிவந்திருக்கிறார்கள்.

நாலாம் நூற்றாண்டில் அந்துசா என்னுமோர் புண்ணியவதி அருளப்பரென்னும் தன் ஏக மகனைச் சிறுப்பந்தொட்டுச் சன்மார்க்கராய் வளர்த்து வித்தியாசாலைக்கனுப்பியபோது, அவரைப் படிப்பித்த லிபானியுஸ் என்னும் அஞ்ஞானப் பண்டிதர் அவருடைய போக்குவாக்கையும் குணம் நடை உடை பாவனைகளையும் குறிப்பாய்க் கவனித்திருந்து ""கிறீஸ்தவர்களுக்குள் எவ்வளவு ஆச்சரியமான மாதாக்கள் இருக்கிறார்கள்'' என்று பிரமிப்பாய்ச் சொல்வாராம். இந்த அருளப்பர் தாம் பிற்காலம் பெருஞ் சாதுரியராகிக் கிறிசோஸ்தம் அதாவது பொன்வாய் அருளப்பரென்று அழைக்கப்பட்டுத் திருச்சபையிலே பெரிய அர்ச்சியசிஷ்டரும் வேதபாரகருமாய் விளங்கினார். இவ்வித பல உதாரணங்களை இந்நூலின் வேறிடங்களில் எடுத்துக்காட்டுவோம்.

எக்காலமும் திருச்சபையிலே தர்மசிந்தனையுள்ள ஆயிரக்கணக்கான ஆடவர்களும் மாதர்களும் உலகத்தைவிட்டுத் துறவிகளாகி அனாத பிள்ளைகளைத் தொகையாகச் சேர்த்து, அவர்களுக்காக பிச்சையிரந்தும் பிரயாசப்பட்டுழைத்தும் அன்ன வஸ்திரங்கொடுத்தும் கல்வியறிவூட்டுவதில் தங்கள் சீவியகாலத்தைக் கழித்துவருகிறார்கள். அர்ச்சியசிஷ்டர்களான வின்சென் டீ போல், யோண்பப்திஸ்ற் தெலசால் முதலானோர் வறிய பிள்ளைகளுக்காக ஏற்படுத்தியிருக்கும் சபைக்குச் சேர்ந்தவர்கள் ஏழைக் குழைந்தைகளுக்கும் இளைஞருக்கும் செய்துவரும் நன்மைகளை உலகங் கண்ணாரக்கண்டுங் காதாரக் கேட்டுமிருக்கின்றது.

இரக்கம் நிறைந்த பரிசுத்தமாதாவாகிய திருச்சபை அந்நியதேசங்களிற் கணக்கற்ற பிள்ளைகள்படும் வறுமை தனிமை முதலிய இடர்களைக்கண்டு, ஐரோப்பாவிலுள்ள பெருந்தொகையான துறவிகளைப் பிரதேசங்களுக்கனுப்பி அவர்கள் ஆங்காங்கு தருமசாலைகள் திறந்து ஏழைக்குழந்தைகளின் ஆத்தும சரீரத்துக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து அவர்களை ஆட்படுத்திவிடும்படி செய்துவருகின்றது.

இக்காலத்திலும் அஞ்ஞான இருளில் அமிழ்ந்தியிருக்கும் சீனா முதலிய தேசங்களிலே பலமனைவிகளை வைத்திருக்கும் துர்வழக்கத்தினால் சென்மிக்கும் கணக்கற்ற குழந்தைகளில் அநேகரைப் பெற்றோர் பிறந்தவுடனே பல உபாயங்களாலும் கொன்றுவிடுகிறார்கள். அல்லது வழிப்போக்கர் எடுத்துக்கொண்டுபோகும்படி வாசல்களிலும் வெளித்திண்ணைகளிலும் தெருவீதிகளிலும் போட்டு விடுகிறார்கள்.

இப்படிக் கைநெகிழப்பட்ட பச்சைக் குழந்தைகளையும் அங்கங்குள்ள துறவறச்சபையார் பவித்திரமாய் எடுத்துக்கொண்டுபோய் வளர்த்துவருவது பிறசமயத்தோரும் பரிபூரணமாய் அறிந்த விஷயம். இத் தருமசாலைகள் உலகெங்கும் அதிவிஸ்தாரமாய்ப் பரந்திருக்கும் திருப்பாலர் சபையாரின் பரோபகார உதவியைக்கொண்டு நடைபெற்றுவருகின்றன.

பெற்றோர் அனைவரும் பிள்ளைகள்மேல் மெய்யான அன்பும் இரக்கமும் உடையவர்களாயிருப்பார்களானால் மேற்கூறிய குரூர செயல்கள் நடக்குமா? அல்லது அன்னியரின் அடைக்கலமும் ஆதரவும் பிள்ளைகளுக்குத் தேவையாயிருக்குமா?