இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுநாதரின் திருக்காயங்கள்

சிலுவையில்தான் நம் இரட்சணியமும், சோதனைகளுக்கு எதிரான பலமும், உலக இன்பங்களில் பற்றின்மையும் இருக்கின்றன. சிலுவையில் கடவுளின் உண்மையான நேசம் காணப்படுகிறது. ஆகவே, சேசுநாதர் நமக்கு அனுப்பும் சிலுவையைப் பொறுமையோடு சுமக்கவும், நம் மீதுள்ள அன்பிற்காகத் தமது சிலுவையின் மீது மரித்தவராகிய சேசுவின் பொருட்டு, நம் சிலுவையின் மீது மரிக்கவும் நாம் பிரதிக்கினை செய்ய வேண்டும். மரணம் வரைக்கும் துன்பங்களுக்கு நம்மை அமைந்த மனதோடு கையளிப்பதை விட மோட்சம் செல்ல வேறு வழி எதுவும் இல்லை. இவ்வாறு, துன்பத்திலும் கூட நாம் சமாதானத்தைக் கண்டடைய முடியும். சிலுவை வரும்போது, தேவ சித்தத்தோடு நம்மை இணைத்துக் கொள்வதை விட சமாதானத்தை அனுபவிக்க நமக்கு வேறு என்ன வழி உள்ளது? இந்த வழியை நாம் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நம் விருப்பப்படி எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், சிலுவையின் பாரத்திலிருந்து நாம் ஒருபோதும் தப்பித்துக் கொள்ள மாட்டோம். மறு புறத்தில், அதை நல்ல மனதோடு நாம் சுமப்போம் என்றால், அது மோட்சத்திற்கு நம்மைச் சுமந்துசெல்லும், இவ்வுலகில் நமக்கு சமாதானத்தைத் தரும்.

சிலுவையை ஏற்க மறுப்பவன் எதை ஆதாயமாக்கிக் கொள்கிறான்? அவன் அதன் பாரத்தை அதிகரிக்கிறான். ஆனால் அதை அரவணைத்துக் கொண்டு, பொறுமையோடு சுமப்பவனோ அதன் பாரத்தை இலகுவாக்குகிறான், அதன் பாரமே அவனுக்கு ஓர் ஆறுதலாக மாறிப் போகிறது; ஏனெனில் தம்மை மகிழ்விக்கும்படி நல்ல மனதோடு தங்கள் சிலுவையைச் சுமக்கும் அனைவருக்கும் கடவுள் வரப்பிரசாதத்தை அபரிமிதமாகத் தருகிறார். இயற்கை விதியின்படி துன்பத்தில் இன்பம் எதுவுமில்லை; ஆனால் தேவசிநேகம் ஓர் இருதயத்தில் அரசாளும்போது, அந்த இருதயம் தன் துன்பங்களில் இன்பம் காண அது அதற்கு உதவுகிறது.

அழுது புலம்பாமல் துன்பங்களையும், கடும் உழைப்பையும் தாங்குவதில் நாம் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருப்போம் என்றால், மோட்சத்தில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியான நிலை என்ன என்பதை மட்டும் நாம் சிந்திப்போமானால்! துன்பப்படும்படி நமக்குக் கட்டளையிடுபவராகிய சர்வேசுரனுக்கு எதிராக நாம் முறையிடாமலிருந்து, யோப் என்பவரோடு: ""அவர் என்னைத் துன்பத்திலிருந்து விடுவிக்காதிருப்பதும், பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மீறாதிருப்பதுமே எனக்குப் பெரிய ஆறுதலா யிருப்பதாக'' (யோப்.6:10) என்று சொல்வோமானால்! நாம் பாவிகளாயிருந்து, நரகத்திற்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றால், இவ்வுலகிலேயே நாம் தண்டிக்கப்படுகிறோம் என்பது, நமக்குநேரிடும் துன்பங்களில் நமக்குப் பெரும் ஆறுதலாக இருக்க வேண்டும்; ஏனெனில் கடவுள் நித்தியத் தண்டனையிலிருந்து நம்மை விடுவிப்பார் என்பதற்கு இது நிச்சயமான அடையாளமாக இருக்கிறது. இவ்வுலகில் செல்வச் செழிப்போடு இருக்கும் பாவிக்கு ஐயோ கேடு! கசப்பான ஒரு துன்ப சோதனையை அனுபவிப்பவன் யாராயினும், தனக்குத் தகுதியாயிருக்கிற நரகத்தை ஒரு கணம் நோக்கிப் பார்ப்பானாக. இவ்வாறு, அவன் தாங்குகிற வேதனைகள் அவனுக்கு இலகுவாகத் தோன்றும். ஆகவே, நாம் பாவம் கட்டிக் கொண்டோம் என்றால், இதுவே நம் தொடர்ச்சியான ஜெபமாக இருக்க வேண்டும்: ""ஆண்டவரே, உமது திருச்சித்தத்திற்கு எதிரானவனாக நான் இராதபடி, வேதனைகளிலிருந்து என்னை விடுவிக்காமல், அவற்றைப் பொறுமையோடு சுமக்க எனக்குத் தேவையான பலத்தைத் தந்தருளும். பரிசுத்தரின் வார்த்தைகளை நான் எதிர்த்து நிற்க மாட்டேன்; சேசுகிறீஸ்துவோடு எப்போதும் சேர்ந்து, ""ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருக்கிறது'' (மத்.11:26) என்று கூறியபடி, நீர் எனக்கு நியமித்திருக்கிற காரியத்தோடு எல்லாவற்றிலும் என்னை நான் ஒன்றித்துக் கொள்வேனாக.''

தேவசிநேகத்தால் ஆளப்படுகிற ஆத்துமம் கடவுளை மட்டுமே தேடுகிறது. ஒரு மனிதன் அன்பிற்காகத் தன் இல்லத்திலுள்ள அனைத்தையும் கொடுத்து விட்ட பிறகு, அவன் அவற்றை ஒன்றுமில்லாமையாகக் கருதி வெறுப்பான் (உந்.சங்.8:7). கடவுளை நேசிப்பவன், அவரை நேசிக்கத் தனக்கு உதவாத அனைத்தையும் நிந்தித்துத் தள்ளுகிறான்; அவன் செய்யும் எல்லா நற்செயல்களிலும், கடவுளின் மகிமைக்காகத் தான் செய்யும் எல்லாத் தவச் செயல்களிலும், உழைப்புகளிலும் அவன் ஆத்துமத்தின் ஆறுதல்களையும், இனிமைகளையும் தேடுவதில்லை. தான் கடவுளை மகிழ்விக்கிறான் என்று அறிந்திருப்பதே அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஒரே வார்த்தையில் கூறுவதானால், அவன் எல்லாக் காரியங்களிலும் தன்னை மறுதலிக்கவும், தனக்குச் சொந்தமான ஒவ்வொரு இன்பத்தையும் புறக்கணிக்கவும் அவன் பெருமுயற்சி கூட செய்கிறான்; அதன்பின், எதைப் பற்றியும் அவன் பெருமையடித்துக் கொள்வதில்லை, எதற்காகவும் வீண்பெருமை கொள்வதுமில்லை ; மாறாக, அவன் தன்னைப் பயனற்ற ஊழியனாக மதிக்கிறான், மிகத் தாழ்மையான இடத்தில் தன்னை வைக்கிறான், தேவ சித்தத்திற்கும், இரக்கத்திற்கும் தன்னை அர்ப்பணிக்கிறான்.

புனிதர்களாவதற்கு நாம் நம் சுவைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். கசப்பானது இனிப்பாகவும், இனிப்பு கசப்பாகவும் தோன்றும் நிலைக்கு நாம் வந்துசேரவில்லை என்றால், கடவுளோடு உத்தமமான ஐக்கிய நிலையை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம். நாளுக்கு நாள் நமக்கு நிகழ்வது போல நம் நாட்டங்களுக்கு எதிரான, சிறியவையும், பெரியவையுமான எல்லாக் காரியங்களையும் அமைந்த மனதோடு ஏற்றுத் துன்புறுவதில்தான் நம் முழுப் பாதுகாப்பும், உத்தமதனமும் அடங்கியுள்ளது. அவற்றை எந்தக் கருத்துக்காக நாம் தாங்க வேண்டுமென ஆண்டவர் ஆசிக்கிறாரோ, அந்த நோக்கத்திற்காக நாம் அவற்றை அனுபவிக்க வேண்டும். நாம் செய்துள்ள பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரிப்பதும், நித்திய வாழ்வைச் சுதந்தரித்துக் கொள்வதும், கடவுளை மகிழ்விப்பதுமே அந்த நோக்கம். இதுவே நம் எல்லாச் செயல்களிலும் நாம் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டிய முதன்மையானதும், மிகுந்த மேன்மையுள்ளதுமான நோக்கமாகும்.

ஆகவே, கடவுள் நமக்கு அனுப்புகிற ஒவ்வொரு சிலுவையையும் ஏற்று அனுபவிக்க நாம் நம்மையே கடவுளுக்கு எப்போதும் அர்ப்பணிப்போம்; கடவுளின் மீதுள்ள அன்பிற்காக ஒவ்வொரு கடும் உழைப்பையும், துன்பத்தையும் தாங்க எப்போதும் தயாராக இருப்பதில் நாம் கவனமாயிருப்போம். இவ்வாறு அவை வரும் போது, அவற்றை அரவணைத்துக் கொள்ள நாம் ஆயத்தமா யிருப்போம். சேசுநாதர் ஒலிவத் தோட்டத்தில் யூதர்களால் கைதுசெய்யப்பட்டு, மரணத்திற்கு இட்டுச் செல்லப்பட்டபோது, இராயப்பரிடம் கூறிய வார்த்தைகளை நாமும் சொல்வோம்: ""பிதாவானவர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தை நான் பானம் பண்ணாதிருப்பேனோ?'' (அரு.18:11). கடவுள் இந்தச் சிலுவையை என் நன்மைக்காகத் தந்திருக்கிறார், அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நான் அவரிடமே சொல்வேனா?

 எந்தச் சிலுவையாவது மிக பாரமானதாகத் தோன்றும் போதெல்லாம், ஜெபத்திடம் நாம் தஞ்சமடைவோம். அப்போது அதைப் பலனுள்ள முறையில் அனுபவிக்கக் கடவுள் நமக்குப் பலம் தருவார். அப்போது, ""இக்காலத்தின் துன்ப துரிதங்கள் இனி நம்மிடத்தில் வெளிப்படப் போகிற மகிமைக்குச் சரிதகைமை யானதல்ல என்று எண்ணுகிறேன்'' (உரோ.8:18) என்ற அர்ச். சின்னப்பரின் வார்த்தைகளை நாம் தியானிப்போம். ஆகவே, துன்பங்கள் நம்மை வாதிக்கும்போதெல்லாம் நம் விசுவாசத்திற்கு உயிரூட்டிக் கொள்வோம்; முதலில், சிலுவையின் மீது நமக்காக மரண அவஸ்தைப்பட்டவரை நோக்கி நம் கண்களைத் திருப்புவோம். மேலும் மோட்சத்தை, கடவுள் தமது நேசத்திற்காகத் துன்புறுபவர்களுக்கு ஆயத்தம் செய்திருக்கிற ஆசீர்வாதங்களை நோக்கிப் பார்ப்போம்; இவ்வாறு செய்தால், நாம் பலவீன இருதயமுள்ளவர்களாக இருக்க மாட்டோம். மாறாக, நாம் துன்புறும்படி அவர் நமக்குத் தருகிற வேதனைகளுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம், இன்னும் அதிக வேதனைகளை அவர் நமக்கு அனுப்ப வேண்டுமென்று ஆசைப்படுவோம். ஓ புனிதர்கள் இவ்வுலகில் தாங்கள் பட்டம் பதவிகளையும், இன்பங்களையும் கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றியல்ல, மாறாக, சேசுகிறீஸ்துவுக்காகத் தாங்கள் துன்பப்பட்டார்கள் என்பதைப் பற்றியே இப்போது மோட்சத்தில் அக்களிக்கிறார்கள்! கடந்து செல்லும் அனைத்தும் அற்பமானது; நித்தியமானது மட்டுமே மேன்மையானது, அது ஒருபோதும் கடந்து போவதில்லை.

ஓ என் சேசுவே, ""நம்மிடம் (மனந்திரும்பி) வாருங்கள், நாமும் உங்களை நோக்கி வருவோம்'' (சக்கரி.1:3) என்று நீர் என்னிடம் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலாக இருக்கின்றன! சிருஷ்டிகளின் நிமித்தமாகவும், என் இழிவான நாட்டங்களின் காரணமாகவும் நான் உம்மை விட்டுப் பிரிந்தேன்; இப்போது அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மை நோக்கித் திரும்புகிறேன்; உம்மை நேசிக்க நான் ஆசித்தால், நீர் என்னைப் புறக்கணிக்க மாட்டீர் என்று நான் நம்புகிறேன்; ஏனெனில் என்னை அரவணைத்துக் கொள்ள நீர் ஆயத்தமாயிருப்பதாக என்னிடம் நீர் கூறியிருக்கிறீர். ஆகவே, உம் வரப்பிரசாதத்திற்குள் என்னை ஏற்றுக் கொள்ளும். இனி ஒருபோதும் நான் உம்மை விட்டுப் பிரியாதபடி நீர் எவ்வளவு பெரிய நன்மையாக இருக்கிறீர் என்றும், என் மீது நீர் கொண்டுள்ள அன்பின் மிகுதியையும் நான் அறியச் செய்தருளும். ஓ என் சேசுவே, என்னை மன்னியும்! ஓ என் நேசரே, உமக்கு எதிராக நான் கட்டிக்கொண்ட பாவங்களை எனக்கு மன்னியும். உமது அன்பை எனக்குத் தாரும். அதன்பின் உமது சித்தப்படி என்னை நடத்தும்; உமது சித்தப்படி என்னைத் தண்டியும், உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றையும் என்னிடமிருந்து விலக்கும். உலகம் முழுவதும் என்னிடம் வந்து, தனது செல்வங்கள் அனைத்தையும் எனக்குத் தந்தாலும், உம்மை மட்டுமே நான் ஆசிக்கிறேன், வேறு எதையுமல்ல என்று நான் அறிக்கையிடுகிறேன். ஓ என் மாதாவான மரியாயே, உங்கள் திருச்சுதனிடம் எனக்காகப் பரிந்துபேசுங்கள். நீங்கள் கேட்கிற எதையும் அவர் உங்களுக்குத் தந்தருளுகிறார். உங்களில் நான் என் நம்பிக்கையை வைக்கிறேன்.