இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இடையர்கள் வந்து சேசுபாலனை ஆராதிக்கிறார்கள். தொடர்ச்சி...

அவர்கள் குகை வாசலுக்கு வருகிறார்கள்.

“போ உள்ளே.” 

“நான் போகவில்லை.” 

“நீ போ.” 

“நான் போக மாட்டேன்.” 

“உள்ளே எட்டியாவது பார்.” 

“லேவி பையா, நீதானே சம்மனசை முதலில் பார்த்தாய்.  எங்களைவிட நீ நல்லவன்.  நீ உள்ளே பார்.” 

முன்பு அவனை பைத்தியம் என்றார்கள்.  இப்பொழுது தங்களால் கூடாததை அவன் செய்யும்படி இப்படி மாற்றிச் சொல்கிறார்கள்.

லேவி தயங்குகிறான்.  பின் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு வாசலுக்குப் போய் அதில் தொங்கிய சூசையப்பரின் மேல் போர்வையை சற்று விலக்கிவிட்டு உள்ளே பார்க்கிறான்... அப்படியே மெய்ம்மறந்து நிற்கிறான்!

“லேவி அங்கே என்ன பார்க்கிறாய்?” என்று மிகத் தாழ்ந்த குரலில் மற்றவர்கள் கேட்கிறார்கள்.

 லேவி சொல்கிறான்: “ஓர் அழகிய அம்மாவைக் காண்கிறேன்.  முன்னிட்டியில் கவிழ்ந்தபடி ஓர் ஆள் நிற்கிறார். ஒரு சிறு குழந்தையின் அழச் சத்தம் மெல்லக் கேட்கிறது.  குழந்தையுடன் அந்த அம்மா பேசுகிறார்கள்.  அவர்களின் குரல், ஆஹா எப்படி இனிமையாயிருக்கிறது!” 

“அந்தம்மா என்ன சொல்கிறார்கள்?” 

மாதா சொல்வதைக் கேட்டுக் கேட்டுச் சொல்கிறான்  லேவி.

“அந்தம்மா சொல்கிறார்கள்: “சின்ன சேசு!  என் சின்ன பாலா! உம் தாயின் நேசமே!” என்கிறார்கள். “அழாதேயும்!  சின்ன மகனே!...” என்று சொல்கிறார்கள்.  “உமக்கு என்ன குளிராயிருக்கிறது!  வைக்கோல் குத்துகிறதோ?  உதவி செய்ய முடியாமல், நீர் அழுவதைப் பார்க்க எனக்கு எவ்வளவு வேதனையாயிருக்கிறது!” என்று சொல்கிறார்கள்.  “என் ஆன்மாவானவரே!  தூங்கும்.  நீர் அழுவதைக் கேட்டு உம் கண்ணீரைக் காண என் இருதயம் பிளக்கிறது” என்கிறார்கள்.  குழந்தையை முத்தமிடுகிறார்கள்.  பிள்ளையின் கால்களை தன் கைகளால் சூடுபடுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.  முன்னிட்டியில் குனிந்து நிற்கிறார்கள்” என்கிறான் லேவி.

“அந்தம்மாவைக் கூப்பிடு.  அவர்கள் கேட்கும்படி கூப்பிடு.”

“மாட்டேன்.  நீர் தான் கூப்பிட வேண்டும்.  நீர்தான் எங்களைக் கூட்டி வந்தீர்.   உமக்கு அவர்களைத் தெரியும்.” 

இடையன் கூப்பிட முயற்சிக்கிறான்.  ஒரு முனகல்  சத்தமே எழும்புகிறது.

அதற்குள் சூசையப்பர் திரும்பிப் பார்க்கிறார்.  வாசலுக்கு வருகிறார்.  பின் கேட்கிறார்:

“யார் நீங்கள்?” 

“நாங்கள் இடையர்கள்.  கொஞ்சம் ஆகாரமும் கம்பளியும் கொண்டு வந்தோம்.  இரட்சகரை ஆராதிக்க வந்திருக்கிறோம்.”

“உள்ளே வாருங்கள்.” 

எல்லோரும் உள்ளே போகிறார்கள்.  இடையர்கள் கொண்டு வந்த பந்தங்களால் கெபி பிரகாசமடைகிறது.  சிறியவர்களை பெரியவர்கள் முன்னால் தள்ளி விடுகிறார்கள்.

மாதா திரும்பிப் பார்த்து புன்னகை செய்கிறார்கள்.

“வாருங்கள்” என்று கூறி தன் சொல்லாலும் கையாலும் அழைத்து லேவியை, கரத்தால் முன்னிட்டி பக்கத்தில் வரச் செய்கிறார்கள்.  அவனுக்கோ மிகச் சந்தோஷம்.

அர்ச். சூசையப்பரும் அழைக்கிறார்.  அவர்களும் முன்னால் வருகிறார்கள்.  தங்கள் காணிக்கைகளை மாதாவின் பாதங்களின் பக்கத்தில் சில ஆழ்ந்த உணர்வுள்ள வார்த்தைகளைக் கூறி வைக்கிறார்கள்.  குழந்தையைப் பார்க்கிறார்கள்.  அவர் சற்று அழுகிறார்.  அவர்கள் புன்னகையுடன் மகிழ்ந்து உள்ளம் நெகிழ்கிறார்கள்.

மற்றவர்களைவிட கூடுதல் திடமுள்ள ஓர் இடையன் நன்கு பதனிட்ட தோலில் கம்பளி பதித்த ஒரு சிறு விரிப்பை மாதாவிடம் கொடுத்து: “அம்மா உங்கள் பிள்ளையை இதில் கிடத்துங்கள்.  இதை, பிறக்க இருக்கும் என் குழந்தைக்கென நான் தயாரித்தேன்.  இது மிருதுவாகவும், வெதுவெதுப்பாகவும் இருக்கும்” என்கிறான்.

மாதா சேசுவை எடுக்கிறார்கள்.  அந்த விரிப்பால் அவரைச் சுற்றுகிறார்கள்.  பின் அவரை இடையர்களுக்குத் தூக்கிக் காட்டுகிறார்கள்.  அவர்கள் தரையில், வைக்கோலில் முழங்காலிலிருந்தபடி பரவசத்தோடு பார்க்கிறார்கள்.

இடையர்களுக்குத் தைரியம் ஏற்படுகிறது.  மற்றொருவன், “பிள்ளைக்கு ஒரு வாய் பால் கொடுக்க வேண்டும்.  அதைவிட தேனும் நீரும் நல்லது.  ஆனால் இங்கு தேன் இல்லையே.  சிசுக்களுக்கு தேன் கொடுப்பார்கள்...” 

“அம்மா இதோ கொஞ்சம் பால் உள்ளது” என்று அடுத்தவன் எடுத்துக் கொடுக்கிறான்.  மேலும் தொடர்ந்து: “பால் குளிர்ந்து விட்டதே.  சூடாக இருக்க வேண்டுமே.   எலியாசை எங்கே?  அவன் பாலாடு அவனிடம் இருக்கிறது” என்கிறான்.

எலியாஸ் என்பவன்தான் நேற்று மாதாவுக்கு பால் கறந்து கொடுத்த இடைனொயிருக்க வேண்டும்.  ஆனால் அவன் உள்ளே வரவில்லை.  வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.  அவனை வெளி இருட்டில் காண முடியவில்லை.

“உங்களை இங்கு வர வழிகாட்டியது யார்?” 

“ஒரு சம்மனசு வரும்படி சொன்னார்.  எலியாஸ் எங்களுக்கு வழிகாட்டினான்.  அவனை இப்பொழுது எங்கே?” 

எலியாஸ் வெளியில் இருப்பதை அவனுடைய பாலாட்டின் கூப்பிடு சத்தம் காட்டிவிட்டது.

“எலியாஸ் உள்ளே வா.  நீ இங்கு தேவைப்படுகிறாய்.”

எலியாஸ் மருண்டபடி உள்ளே வருகிறான்.  காரணம் எல்லாரும் அவனைப் பார்க்கிறார்கள்.  பாலாடும் அவனுடன் வருகிறது.

“தம்பி நீயா!” சூசையப்பர் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்.  மாதா அவனைப் பார்த்துப் புன்முறுவலோடு: “நீ நல்லவன்” என்கிறார்கள்.

ஆட்டின் பாலைக் கறந்து கொடுக்கிறார்கள்.  மாதா ஒரு சணல் துகிலின் ஓரத்தை பாலில் நனைத்து பாலனின் உதடுகளில் வைக்க அவர் அதை உறிஞ்சிப் பருகுகிறார்.  எல்லாரும் புன்னகை செய்கிறார்கள்.  வாயில் வைத்த லினன் துகிலோடு திருக்குழந்தை கம்பளியின் கதகதப்பில் கண்ணயர்வதைக் கண்ட அவர்களின் புன்சிரிப்பு அதிகமாகிறது.

ஒரு இடையன் கூறுகிறான் : 

“நீங்கள் இங்கே தங்க முடியாது.  குளிரும் ஈரமுமாக இவ்விடம் இருக்கிறது... மிருகங்களின் வாடையும் அதிகம் வீசுகிறது.  இது நல்லதல்ல - இரட்சகருக்கு இது நல்லதல்ல.” 

மாதா அதற்குப் பதிலாக: “ஆம்.  ஆனால் பெத்லகேமில் இடமில்லையே” என்று பெருமூச்சுடன் சொல்கிறார்கள்.

“கவலைப்படாதீர்கள்.  நாங்கள் உங்களுக்கு ஒரு வீடு பார்க்கிறோம். ”

 எலியாஸ் கூறுகிறான்: “நான் என் எஜமானியிடம் சொல்கிறேன்.  அவர்கள் நல்லவர்கள்.  தன் சொந்த அறையையே தர வேண்டுமானாலும் கூட அதை உங்களுக்குத் தருவார்கள்.  விடிந்ததும் போய்ச் சொல்கிறேன்.  அவர்கள் வீடு ஜனங்களால் நிறைந்திருக்கிறது.  அப்படியிருந்தாலும் உங்களுக்கு இடம் தேடித் தருவார்கள்.” 

“குழந்தைக்காவது கிடைத்தால் போதும்.  நானும் சூசையும் தரையில் படுத்துக் கொள்வோம்.  பிள்ளைக்குத்தான்...” 

“கவலைப்படாதீர்களம்மா.  அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.  எங்களுக்குக் கூறப்பட்டதை நாங்கள் அநேகரிடம் சொல்லுவோம்.  உங்களுக்கு ஒன்றுக்கும் குறையிராது.  தற்சமயம் எங்கள் வறுமையில் உங்களுக்கு நாங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்களோ இடையர்கள்...” 

“நாங்களும் ஏழைகள்தான்.  அதனால் உங்களுக்குப் பதில் செய்ய எங்களால் கூடாது” என்கிறார் சூசையப்பர்.

“ஓ!  எங்களுக்கு அது வேண்டாம்.  உங்களால் கொடுக்கக் கூடுமாயிருந்தாலும் நாங்கள் அதை விரும்ப மாட்டோம்.  ஆண்டவர் எங்களுக்குப் பதில் செய்து விட்டார். எல்லாருக்கும் சமாதானத்தை அவர் வாக்களித்திருக்கிறார்.   “நல்மனமுள் ளவர்களுக்கு சமாதானம்” என்று சம்மனசுக்கள் கூறினார்கள்.   ஆனால் அதை ஆண்டவர் எங்களுக்கு ஏற்கெனவே தந்து விட்டார்.  ஏனென்றால் சம்மனசு சொன்னார், இந்தக் குழந்தைதான் இரட்சகர், கிறீஸ்துவாகிய ஆண்டவர் என்று.  நாங்கள் வறியவர்கள்;  அறிவில்லாதவர்கள்.  ஆனாலும் தீர்க்கதரிசிகள் கூறியிருப்பது எங்களுக்குத் தெரியும்.  இரட்சகர்தான் சமாதானத்தின் பிரபு.  மேலும் அவரை வந்து ஆராதிக்கும்படி கூறினார்.  அதனாலேயே தம் சமாதானத்தை எங்களுக்குத் தந்தார்.  உந்நத பரமண்டலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமை உண்டாகக் கடவது.  இங்கே அவருடைய  கிறீஸ்துவுக்கும் மகிமை உண்டாகக் கடவது.  அவரைப் பெற்ற ஸ்திரீயே, நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!  நீங்கள் பரிசுத்தமுள்ளவர்கள்.  ஏனென்றால் அவரைப் பெற்றெடுக்கும்  தகுதி பெற்றீர்கள்.  எங்கள் இராக்கினியாக இருந்து எங்களுக்குக் கட்டளையிடுங்கள்;  உங்களுக்கு மகிழ்ச்சியோடு நாங்கள் ஊழியம் புரிவோம்.  உங்களுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?” 

அதற்கு மாதா பதில் கூறுகிறார்கள்:

“நீங்கள் என் குமாரனை நேசிக்கலாம்.  இதே நல்ல எண்ணங்களை எப்பொழுதும் கொண்டிருங்கள்.” 

“ஆனால் உங்களுக்கு?  உங்களுக்கு ஏதும் விருப்பமா?  குழந்தையின் பிறப்பைப் பற்றி அறிவிக்க வேண்டிய உறவினர் உங்களுக்கு யாரும் இல்லையா?” 

“இருக்கிறார்கள்.  ஆனால் வெகு தொலைவில், யஹப்ரோனில்...” 

அப்போது எலியாஸ்:  “நான் போய்ச் சொல்லுகிறேன்.  அவர்கள் யார்?” 

“குருவான சக்கரியாஸும் என் சகோதரி எலிசபெத் தம்மாளும்.” 

“சக்கரியாஸ்!  ஓ!  எனக்கு அவரை நன்றாகத் தெரியுமே!  கோடை காலத்தில் மலைப் பகுதியில் நல்ல மேய்ச்சல் இருக்குமாதலால் நான் அங்கே போவதுண்டு.  அவருடைய மந்தையை மேய்க்கிறவர் என் நண்பர்.  உங்களுக்கு ஓர் இடம் கிடைத்தவுடன் நான் சக்கரியாஸிடம் புறப்படுகிறேன்.” 

“நன்றி எலியாஸ்.” 

“நீங்கள் எனக்கு நன்றிசொல்ல வேண்டாம் அம்மா.  ஓர் ஏழை இடைனொகிய நான், குருவிடம் சென்று “இரட்சகர் பிறந்திருக்கிறார்” என்று அறிவிப்பது எனக்குப் பெரும் மகிமையாச்சுதே.” 

“நீ அப்படிச் சொல்லாமல், “உம்முடைய உறவினளான நாசரேத் மரியம்மாள் சொல்லியனுப்புகிறாள்:  சேசு பிறந்திருக்கிறார், நீங்கள் பெத்லகேமுக்கு வரவேண்டும்” என்று சொல்ல வேண்டும்.” 

“அப்படியே சொல்கிறேன்.” 

“தேவன் உனக்கு சன்மானமளிப்பாராக.  எலியாஸ் உன்னை நான் நினைவில் வைத்துக் கொள்வேன்.  உங்கள் ஒவ்வொரு வரையும்தான்.” 

“அம்மா உங்கள் பிள்ளையிடம் எங்களைப் பற்றிச் சொல்வீர்களா?” 

“நிச்சயமாகச் சொல்வேன்.” 

“என் பெயர் எலியாஸ்.” 

“என் பெயர் லேவி.”

“என் பெயர் சாமுவேல்.”

“என் பெயர் ஜோனா.”

“என் பெயர் ஈசாக்.”

“என் பெயர் தோபியாஸ்.”

“என் பெயர் ஜோனத்தான்..”

“என் பெயர் தானியேல்.”

“என் பெயர் சிமையோன்.”

“என் பெயர் அருளப்பன்.”

“என் பெயர் யோசேப்.  இவன் பெஞ்சமின், நாங்கள் இரட்டைப் பிள்ளைகள்.”

“உங்கள் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வேன்” என்கிறார்கள் மாதா.

“நாங்கள் திரும்ப வேண்டும்... ஆனால் மீண்டும் இங்கு வருவோம்.  மற்றவர்களையும் அவரை ஆராதிக்க அழைத்து வருவோம்.” 

“பாலனை இங்கே விட்டுவிட்டு நாம் நம் மந்தைகளிடம் எப்படித் திரும்பிச் செல்வது?” 

“நமக்கு அவரைக் காண்பித்த சர்வேசுரனுக்கு மகிமை யுண்டாவதாக!” 

“அவருடைய உடுப்பை முத்தமிட விடுவீர்களா அம்மா?” என்று ஒரு சம்மனசுக்குரிய புன்னகையுடன் கேட்கிறான் லேவி.

மாதா வைக்கோலில் அமர்ந்து சேசுவின் பாதங்களை ஒரு லினன் துகிலில் சுற்றி அவரைத் தூக்கி, முத்தமிடக் கொடுக்கிறார்கள்.  இடையர்கள் மிகுந்த வணக்கத்துடன்  தரைபடப் பணிந்து துகிலால் மூடப்பட்ட அத்திருப் பாதங்களை முத்தமிடுகிறார்கள்... எல்லாரும் கண்ணீர் பெருக்குகிறார்கள்.

புறப்படும்போது சற்று தூரம் பின்னங்காட்டியே நடந்து, தங்கள் இருதயங்களை அங்கு விட்டுவிட்டவர்களாய் திரும்பிச் செல்கிறார்கள்.

இவ்வாறு காட்சி முடிவடைகிறது.  மாதா வைக்கோலில் அமர்ந்திருக்க பாலன் அவர்கள் மடியில் இருக்கிறார்.  சூசையப்பர் தன் முழங்கை முன்னிட்டியில் படிய பாலனைப் பார்த்தபடி ஆராதிக்கிறார்.


சேசு கூறுகிறார்:

“இன்று நான் பேசுவேன்.  நீ அதிக களைப்பாயிருக்கிறாய்.  ஆயினும் கொஞ்சம் கூடுதல் பொறுமையோடிரு.  இது திவ்ய நற்கருணைத் திருநாளுக்கு முந்தின நாள்.  என்னுடைய திரு இருதய அப்போஸ்தலர்களைப் பற்றி நான் கூறியதுபோல, நற்கருணையைப் பற்றியும், அதன் பக்தியைப் பரப்பிய அர்ச்சிஷ்டவர்களைப் பற்றியும் நான் பேசலாம்.  ஆனால் நான் வேறொன்றைப் பற்றியும், என் சரீரத்தை ஆராதித்து, அதன் பக்திக்கு முன்னோடிகளாயிருந்த ஒரு வகுப்பாரை பற்றியும் பேச விரும்புகிறேன்:  அதாவது இடையர்களைப் பற்றி.  மனிதனான வார்த்தையானவருடைய சரீரத்தை முதலில் வழிபட்டவர்கள் அவர்களே.

மாசில்லாக் குழந்தைகள்தான் முதல் வேதசாட்சிகள்  என்று ஒரு தடவை உன்னிடம் கூறினேன்;  என் திருச்சபையும் அப்படியே கூறுகின்றது.  இந்த இடையர்கள்தான் கடவுளுடைய சரீரத்தை முதலில் வழிபட்டவர்கள் என்று இப்பொழுது கூறுகிறேன்.  நற்கருணை மீது பற்றுள்ள ஆன்மாக்கள்!   அவர்களிடம் என் சரீரத்தை வழிபடுவதற்குரிய எல்லாத் தகுதிகளும் இருந்தன.

உறுதியான விசுவாசம் அவர்களிடம் இருந்தது:  சம்மனசானவர் கூறியதை உடனே, கேள்வியெழுப்பாமல் அவர்கள் விசுவசித்தார்கள்.

தாராள குணம்:  தங்கள் பொருள்களையெல்லாம் தங்கள் ஆண்டவருக்குக் கொடுத்தார்கள்.

தாழ்ச்சி: அவர்கள், மனித முறைப்படி, தங்களிலும் வறியவர்களை அணுகினார்கள்.  அந்த ஏழைகளை சிறுமைப்படுத்தாமல் எளிய தன்மையுடன் நடந்து கொண்டார்கள்.  தங்களை அவர்களுடைய ஊழியர்கள் என்று கூறினார்கள்.

ஆவல்: அவர்களால் கொடுக்கக் கூடாததை பிறர் சிநேகத்தால் அடைய முயற்சி செய்தார்கள்.

உடனடியான கீழ்ப்படிதல்:  மாதா சக்கரியாசிடம் அறிவிக்க விரும்புகிறார்கள்.  எலியாஸ் உடனே செல்கிறான்.  அதை அவன் பிந்திப் போடவில்லை.

முடிவாக அன்பு:  அவர்கள் குகையைவிட்டுச் செல்வதற்கு வருந்தினார்கள்.   தங்கள் இருதயத்தை விட்டுவிட்டுச் சென்றார்கள் என்று நீ கூறுகிறாய்.  நீ கூறுவது சரியே.

ஆனால் என்னுடைய நற்கருணை தேவதிரவிய அனுமானத்தின் மட்டிலும் இவ்வாறு நடைபெற வேண்டிய தில்லையா?

இன்னொரு குறிப்பும் உள்ளது.  அது முற்றிலும் உனக்குத்தான்:  சம்மனசானவர் தன்னை யாருக்கு முதலில் காண்பித்தார்?  மாமரியின் அன்பான வார்த்தைகளைக் கேட்கும் தகுதி யாருக்குக் கிடைத்தது?  லேவி என்னும் சிறுவனுக்கு!  குழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கிறவர்களுக்கே கடவுள் தம்மைக் காண்பிக்கிறார்.  அவர்களுக்குத் தமது மறைபொருள் உண்மைகளையும் வெளிப்படுத்துகிறார்.  அவர்கள் தம்முடைய தெய்வீக வார்த்தைகளையும் மரியாயின் மொழிகளையும் கேட்க அனுமதிக்கிறார்.  குழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கிறவர் களுக்கு லேவியின் புனித துணிச்சல்  ஏற்படவும் செய்யும்.  அவர்கள்: “நாம் சேசுவின் ஆடைகளை முத்தமிடுவோம்” என்று சொல்கிறார்கள்.  அவர்கள் அதை மரியாயிடம் சொல்கிறார்கள்.  ஏனென்றால் மாமரியே எப்போதும் சேசுவை உங்களுக்குத் தருபவர்கள்.

மாமரியே நற்கருணையைத் தாங்குபவர்கள்.   அவர்களே உயிருள்ள நன்மைப் பாத்திரம்.  மரியாயிடம் போகிறவர்கள் என்னைக் கண்டடைகிறார்கள்.  மாதாவிடம் என்னைத் தரும்படி கேட்கிறவர்கள் அவர்களிடமிருந்து என்னைப் பெற்றுக் கொள்வார்கள்.  “உங்கள் சேசுவை நான் நேசிக்கும்படி அவரை எனக்குத் தாருங்கள்” என்று மரியாயிடம் ஒரு சிருஷ்டி கேட்கும்போது என் தாய் பூக்கும் புன்னகையால் மோட்சம் அதிகமான மகிழ்ச்சியடைவதால் அதன் ஒளி நிறங்கள் கூடுதல் பிரகாசமடைகின்றன.

ஆதலால் நீங்கள் மரியாயிடம்:  “சேசுவின் ஆடையை நான் முத்தமிடத் தாருங்கள்;  அவருடைய காயங்களை நான் முத்தமிடக் கொடுங்கள்” என்று கேளுங்கள்.  அதை விடவும் துணிவாக:  “நான் மகிழ்ச்சியடையும் பொருட்டு உங்கள் சேசுவின் நெஞ்சில்  நான் தலைசாய்க்கட்டும்” என்று சொல்லுங்கள்.

வா.  ஓய்வு கொள்.  தொட்டிலில் சேசுவைப்போல் சேசுவுக்கும் மாதாவுக்கும் மத்தியில்.