கர்தினால் மெர்மில்லோத்தும், நடிகையும்

கர்தினால் மெர்மில்லோத் என்பவரால் சொல்லப் பட்ட பின்வரும் உண்மை நிகழ்ச்சி, உண்மையில் பாவசங் கீர்த்தனத்தால் என்ன செய்ய முடியும் என்பதற்கான ஓர் அழகிய விளக்கமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இந்தக் கர்தினாலின் வாழ்விலேயே நிகழ்ந்ததாகும். இது ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிற இதுபோன்ற ஆயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகும். இது குருக்களுக்கு மிக ஆழ்ந்த ஆறுதலைத் தரும் சம்பவமாக இருக்கிறது.

நம் கர்தினால் அந்தச் சமயத்தில் சுறுசுறுப்பும், ஆழ்ந்த புத்திக்கூர்மையும் உள்ள ஒரு சாதாரண குருவாக இருந்தார். ஆத்மார்த்தமாக எந்த வேலையையும் செய்வார். ஒரு வேலையில் இறங்கினார் என்றால் உண்டு இல்லை என்று கடைசி வரை பார்த்து விடுவார். அரைகுறை வேலை யெல்லாம் அவரிடம் கிடையாது. கடமை என்பது அவருக்கு வெறுமனே புனிதமானது மட்டுமல்ல, மாறாக அது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. அச்சமயத்தில் ஜெனீவாவில் மிகச் சில குருக்கள் மட்டுமே இருந்தார்கள். அங்கு வேதபோதகப் பணியின் கடமைகள் ஒரு பெரும் சுமையாக இருந்தன. அங்கு நிலவிய சூழல் பகைமை நிரம்பியதாக இருந்தது.

ஒரு நாள் முன்னிரவு. உறங்கச் செல்வதற்கு நேரமாகி விட்டது. அவர் மிகவும் களைத்துப் போயிருந்தார். ஏனெனில் அன்று பகலில் அவர் மிகக் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. படுக்கைக்குச் செல்ல அவர் ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, கதவு பலமாகத் தட்டப்படுவதை அவர் கேட்டார். கதவைத் திறந்தபோது, அழகாக உடுத்திய ஓர் இளைஞன் அங்கே நின்றான்; கவர்ச்சியான தோற்றம் உள்ளவனாக இருந்தான். அவன் உள்ளே வந்து, ஒரு பெண் மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவர் வந்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். நிலைமை அவசரமானதா என்று அவர் கேட்டபோது, மறுநாள் மாலையில் அவர் வந்தால் போதும் என்று அவன் கூறினான். அந்தப் பெண்ணின் வீடு தொலைவில் இருந்தது. அது சுவாமி மெர்மில்லோதுக்கு சரிவர பழக்கமில்லாத ஒரு பகுதியில் இருந்தது. ஆகவே அவர் அந்தப் பெண்ணின் முகவரியைக் கவனமாகக் கேட்டுக் குறித்துக் கொண்டார். 

மறுநாள் மாலையில், தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தவராக, அவர் நோயாளியான அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகே வீட்டைக் கண்டுபிடிக்க அவரால் முடிந்தது. அது ஒரு தோட்டத்தின் மத்தியில் இருந்த அழகான மலைவீடு. அதன் ஒரு பக்கத்தில் மனதை மயக்கும் ஜெனீவா ஏரியின் அதியற்புதக் காட்சி தெரிந்தது.

அவர் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து வீட்டை நெருங்கிய போது, இரவு விருந்து ஒன்று நடந்து கொண் டிருப்பதையும், உணவறை பிரகாசமாக இருப்பதையும் கண்டார். மேலும் திறந்திருந்த ஜன்னல்களின் வழியாக மகிழ்ச்சியான குரல்களையும், சிரிப்பொலிகளையும் அவரால் கேட்க முடிந்தது.

இதைக் கண்டு திகைத்துப் போனவராக, அவர் வாசல் அழைப்பு மணியை அடிக்கவே, ஒரு சிப்பந்தியின் உடையணிந்த வாசற்காப்பவன் ஒருவன் வந்து துரிதமாகக் கதவைத் திறந்தான். சுவாமியார் நோயாளிப் பெண்ணைப் பற்றி விசாரித்தார். ஆனால் அப்படி யாரும் அந்த வீட்டில் இல்லை என்றும், அவர் விலாசம் மாறி வந்திருக்கலாம் என்றும் அவன் கூறினான்.

“ஆனால் இது வயலெட் மாளிகைதானே? இது வாலுவா தெருதானே?'' என்று சுவாமியார் கேட்டார், தாம் கவனமாகக் குறித்துக் கொண்ட முகவரியைக் காட்டியபடி.

“விலாசம் எல்லாம் சரிதான் ஐயா. ஆனால் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இங்கே வியாதிக்காரர்கள் யாரும் இல்லை. மேலும் எனக்குத் தெரியாமல் இப்படி ஒரு செய்தி எப்படி அனுப்பப்பட்டிருக்க முடியும் என்றும் எனக்குப் புரியவில்லை. இங்கே நான்தான் இதுபோன்ற தகவல் களைத் தரும் வேலைகளைச் செய்கிறேன். உங்களைப் போல யாரும் இங்கு வருவதாயிருந்தால், உங்களை வரவேற்கும்படி எனக்குத்தான் உத்தரவுகள் வரும்'' என்று குழப்பத்தோடு கூறினான் அந்த ஊழியன்.

“நான் உன் எஜமானியிடம் பேசலாமா?'' என்று கேட்டார் சுவாமி மெர்மில்லோத்.

“வணக்கத்துக்குரியவரே, நான் வருந்துகிறேன், என் எஜமானி தற்சமயம் இரவு விருந்தில், நண்பர்களுக்காக ஓர் இசை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்றால், நான் அவர்களுக்குத் தகவல் தருகிறேன்.''

“நீ அப்படிச் செய்வாய் என்றால், நான் உனக்குக் கடமைப்பட்டவனாக இருப்பேன். ஏனெனில் இது எனக்கு மர்மமாக இருக்கிறது. மேலும் அவ்வளவு தொலைவிலிருந்து என்னால் திரும்பவும் வர முடியாது'' என்று அவனிடம் கேட்டுக் கொண்டார் சுவாமி மெர்மில்லோத்.

இந்த விசித்திரமான நிகழ்ச்சியைப் பற்றி அந்த வேலையாள் சொல்லக் கேட்டதும், அந்தப் பெண் இயல்பாகவே பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளானாள். தன் விருந்தினர்களிடம் நடந்ததைச் சொல்லி, அந்தக் குருவைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று தன் கணவனிடம் கூறினாள். ஆகவே அவன் குருவை சந்திக்க வரவேற்பறைக்கு வந்தான்.

“சுவாமி, எங்களுக்குத் தெரியாமல் யாரோ உங்களை இங்கு வரும்படி அழைத்துள்ளார்கள் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அது யாராக இருக்கலாம் என்றோ, அல்லது இதுபோன்ற ஒரு செயலை அவன் செய்த நோக்கம் என்னவாக இருக்கும் என்றோ எங்களுக்குத் தெரியவில்லை.

இந்த வீட்டில் நோயாளிகள் யாருமில்லை. நாங்கள் உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இப்போது திரைத் துறையைச் சேர்ந்த சில நண்பர்களுக்காக நாங்கள் ஒரு இசை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் விருந்தில் கலந்து கொள்ள உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக் கிறதா? இல்லையென்றால், நான் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இந்த மர்மமான நிகழ்ச்சியைப் பற்றி நீங்களே விவரிக்கக் கேட்டால் என் மனைவி மிகவும் சந்தோஷப்படுவாள். எங்கள் விருந்தினர்களில் சிலர் கத்தோலிக்கர்கள் என்று நான் நம்புகிறேன். ஆகவே, தயவு செய்து வாருங்கள்.''

சுவாமி மெர்மில்லோத் முதலில் இந்த அழைப்பை நிராகரிக்கத்தான் நினைத்தார். ஆனால் அங்கே ஏதோ நன்மை செய்யத் தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற உணர்வு அவருக்கு ஏனோ தோன்றியது. ஆகவே அவர் அந்த மனிதனிடம், தான் ஏற்கெனவே இரவு உணவை முடித்து விட்டதாகவும், ஆனால் அந்த விருந்தில் சேர்ந்து கொள் வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் பதில் கூறினார்.

உல்லாசமாகப் பொழுதைப் போக்கிக் கொண் டிருந்த அந்தக் கூட்டத்தினருக்கு குரு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் அந்த விருந்தை நடத்தும் வீட்டு எஜமானியின் அருகில் அமரும்படி அவர் அழைக்கப்பட்டார்.

“உங்களை நான் இதற்கு முன் சந்தித்ததேயில்லை, தந்தாய்'' என்றாள் அந்தப் பெண். “ஆனால் உங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் நடுவே இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனாலும் இது எப்படிப்பட்ட ஒரு வினோதமான அனுபவம்! உங்களைச் சந்திக்க வந்தவன் பார்க்க எப்படியிருந்தான்?''

சுவாமி மெர்மில்லோத் முந்தின இரவில் தம்மை வந்து சந்தித்த இளைஞனின் தோற்றத்தைத் துல்லியமாக விவரித்தார். அவன் கூறிய அதே வார்த்தைகளையும் அவர் அப்படியே கூறினார். அதே சமயம் அவன் தந்த விலாசத் தையும், வீட்டைக் கண்டுபிடிக்க அவன் தந்த குறிப்பு களையும் அவர் அவளுக்குக் காட்டினார்.

“கத்தோலிக்கக் குருக்களாகிய உங்களுக்கு இது போன்ற விசித்திரமான அனுபவங்கள் குறைவுபடுவதே யில்லை. உங்களை இப்படி வந்து அழைக்கும் எல்லா இடங்களுக்கும் நீங்கள் கட்டாயம் போகத்தான் வேண்டுமா, அதுவும் அழைப்பது யார் என்றே தெரியாதபோது?'' என்று அவள் கேட்டாள்.

“ஆம், அம்மணி. எங்கள் குருத்துவ உதவி யாருக் காவது தேவையாயிருந்து, அவர்கள் எங்களுக்கு ஆள் அனுப்பினால், கட்டாயம் போவது எங்கள் வழக்கம். அது எங்கள் கடமையும் கூட'' என்றார் குரு.

“ஆனால் இன்றிரவு நடந்துள்ளது போன்ற அனுபவங்கள் உங்களுக்கு நிறைய கிடைத்துள்ளதா?''

“ஆம். எல்லா விதமான சாகசங்களிலும் நான் ஈடுபட நேர்ந்திருக்கிறது, பலவகையான மனிதர்களை சந்திக்கவும் நேர்ந்திருக்கிறது. ஆனால் கடவுளுக்கு நன்றி, இந்த அழைப்புகளால் ஏராளமான நன்மை செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, மிக அநேக உடைந்த இருதயங்களுக்கு விவரிக்க முடியாத ஆறுதலைத் தரவும் என்னால் முடிந்திருக்கிறது. இன்று கிடைத்தது போன்ற ஓர் அனுபவம் இதற்கு முன் எனக்கு ஏற்பட்டதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் சக குருக்கள் சிலருக்கு இதுபோன்ற மிக விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளன.''

“நீங்கள் சாகசங்கள் என்று அழைக்கிற அந்த சம்பவங்களில் சிலவற்றைத் தயவு செய்து எங்களுக்குச் சொல்லுங்கள், தந்தையே.''

சுவாமி மெர்மில்லோதுக்கு இதை விட நல்ல வாய்ப்புக் கிடைக்காது. ஆகவே அவர் தம் வாழ்வில் நடந்த மிகச் சுவையான, விறுவிறுப்பான சம்பவங்களைச் சொல்லத் தொடங்கினார். எல்லோரும் மிகுந்த ஆர்வத்தோடு அவர் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பல கேள்விகளுக்கு அவர் பதிலும் சொல்ல வேண்டியிருந்தது. அவர் சொல்லும் காரியங்களைக் கேட்க அவர்கள் எவ்வளவு ஆவலாயிருந்தார்கள் என்பதை மிக நன்றாகக் காட்டுகிற அடையாளமாக இந்தக் கேள்விகள் இருந்தன.

இந்த நடிகர், நடிகையரின் குழு அவர் சொன்ன எல்லாக் காரியங்களையும் கேட்பதில் மிகுந்த வினோதப் பிரியம் காட்டினார்கள். ஒரு கத்தோலிக்கக் குருவை சந்திப்பது அவர்களில் பலருக்கு இதுவே முதல் முறை. குருக்களைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த கண்ணோட் டத்திலிருந்து இவர் நிச்சயமாக மிகவும் வித்தியாசமாக இருந்தார். பாவசங்கீர்த்தனம் என்பது எவ்வளவு அற்புத மான காரியம் என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்வதன் மூலம் அவர் அவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். இதற்காக அவர் அதிகமான வார்த்தைகளைப் பயன் படுத்தவில்லை, மாறாக அவர் விவரித்த சம்பவங்களே அதற்குப் போதுமானவையாக இருந்தன. அவை அவர்கள் முன்பு ஒருபோதும் கேள்விப்பட்டிராதவை. இப்போதுதான் முதல் முறையாகத் தங்கள் வாழ்வில் இந்தத் தகவல்களை அவர்கள் பெறுகிறார்கள்; இந்தக் குருவின் வெளிப் படையான கள்ளங்கபடற்ற தன்மை, அவர் சொல்பவை அனைத்தும் உண்மைதான் என்று அவர்கள் உணரும்படிச் செய்தன. மேலும் அவர் சொன்ன அனைத்தும் எவ்வளவு மனிதத் தன்மையானவையாகவும், உண்மையுள்ளவையாகவும் இருந்தன என்றால், அவை நேரடியாக அவர் களுடைய இருதயத்தைப் பாதிப்பவையாக இருந்தன.

தாம் எதிர்கொள்ள வேண்டியிருந்த சில புகழ்பெற்ற விடுதலைவாத சிந்தனையாளர்களைப் பற்றியும், கத்தோ லிக்கத் திருச்சபையின் போதனைகளைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த நகைப்பிற்குரிய கருத்துக்களைப் பற்றியும் கூட பல நல்ல கதைகளை அவர் சொன்னார்.

ஆயினும், பாவசங்கீர்த்தனத்தைப் போல வேறு எதுவும் அவர்களிடம் மிக அதிகமான ஆவலைத் தூண்ட வில்லை. அதைப் பற்றிய எல்லா உண்மைகளையும் அறிந்து கொள்ள அவர்கள் விரும்பினார்கள்.

அங்கிருந்த இளம் நடிகைகளில் ஒருத்தி, “நான் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் சில மணி நேரம் இருந்து, என் பிரியமுள்ள சகோதரிகளின் சிறு சிறு பாவங்கள் எல்லா வற்றையும் கேட்க விரும்புகிறேன்'' என்றாள்.

 அவளுடைய இந்தக் குறிப்பு பலத்த சிரிப்போடு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

உடனே இடைமறித்தார் சுவாமி மெர்மில்லோத்: “ஆ, என் பிரியமுள்ள பெண்ணே, ஒரு மேல்வாரியான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், பாவசங்கீர்த்தனத்தில் சொல்லப்படும் பாவங்கள் அனைத் தினுடையவும் பயங்கரங்களைப் பற்றியும், அவற்றைச் சொல்பவர்களின் இருதயம் உடைந்த நிலை பற்றியும் நீங்கள் மிகக் கொஞ்சமாகவே அறிந்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லத் துணிகிறேன். ஒரே சமயத்தில் மணிக் கணக்காக என் பாவசங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந் திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தையும், களைப்பையும் உண்டாக்கும் கடினமான வேலை என்று நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன். ஆனாலும் அதற்கேயுரிய தனிப்பட்ட ஆறுதல்களையும் அது கொண்டுள்ளது. அவை அந்தக் களைப்பை வெகுவாகத் தணித்து விடுகின்றன.

அங்கே அழகியதும், ஆறுதலளிப்பதுமான பல காரியங்களை நாங்கள் கேட்கிறோம். ஆனால் இருதயத் தைப் பிளப்பவையும், கேட்பவர்களைக் கடும் வேதனை யால் நிரப்புபவையுமான கதைகளையும் கூட நாங்கள் அங்கே கேட்க வேண்டியிருக்கிறது. எல்லா வகுப்பு களையும் சேர்ந்த, செல்வந்தர்களும், ஏழைகளும், முதியவர் களும், இளையவர்களுமான ஆண்களும் பெண்களும் எங்களிடம் வந்து, தங்கள் இருதயங்களின் மிக ஆழமான இரகசியங்களை எங்களிடம் கொட்டுகிறார்கள். அந்த இருதயங்கள் விவரிக்கப்பட முடியாத ஒரு துக்கத்தால் கிழிக்கப்படும் அளவுக்குப் பசாசால் தவறாக வழிநடத்தப் பட்டும், ஏமாற்றப்பட்டும் இருப்பதை நாங்கள் காண் கிறோம். மேலும் அவை சரிசெய்யப்பட மிகவும் கடினமான பெரும் பாவங்களாலும், தீர்வே இல்லாத பெரும் கசப்பாலும் நிரம்பியிருப்பதையும் நாங்கள் அறிந்து கொள் கிறோம்.''

இப்படிச் சொல்லி விட்டு, அவர் ஜன்னலை நோக்கித் திரும்பி, வெளியே ஏரியில் நூற்றுக்கணக்கான உல்லாசப் பயணிகளைச் சுமந்தபடி வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்த ஓர் உல்லாசப் படகை அவர் சுட்டிக் காட்டி, அந்த இளம் நடிகையிடம் இப்படிக் கூறலானார்: “அந்தப் படகை இவ்வளவு வேகத்தில் இயக்குவது என்ன என்று நினைக்கிறீர்கள்? நீராவியின் உந்து சக்திதான் அல்லவா? என்றாலும் அதன் இயந்திரத்தில் ஒரு பெரும் விபத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறு கருவி இல்லை யென்றால், அதே உந்துசக்தி மிக எளிதாக அந்தப் படகையும், அதில் இருப்பவர்களையும் மூழ்கடித்து, ஏரியின் ஆழத்திற்குக் கொண்டு போய்விட முடியும் என்பது உங்களுக்குத் தெரியாதா? அந்த சிறிய கருவிதான் நீராவியின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிற பாதுகாப்பு விசையாகிய வால்வ் ஆகும். கொதிகலனிலுள்ள நீராவியின் அழுத்தம் ஏறக்குறைய வெடிக்கும் நிலையை எட்டும் போது, அந்த வால்வ் தானாகவே திறந்து, அதிகப்படியான நீராவியை வெளியேற்றி விடுகிறது. அதனால்தான் அந்த உல்லாசப் படகு முழுப் பாதுகாப்போடு தன் வழியில் செல்கிறது.

மனித இருதயம் ஒரு கொதிகலனைப் போன்றது. பெரும் அழுத்தத்தைக் கூட அதனால் தாங்க முடிகிறது. ஆனாலும் ஓர் உயர் அழுத்த நிலையை எட்டும்போது, மேற் கொண்டு அதை அதனால் தாங்க முடியாமல் போகிறது. கடும் வேதனையும், துக்கமும், இடைவிடாத ஏக்கமும், ஓயாத கவலையும் மனிதனால் தாங்க முடியாத அளவுக்கு சில சமயங்களில் பாரமாகி விடுகின்றன. நமது பலவீன சுபாவத்தால் தாங்க முடியாத அளவுக்கு அந்த பாரம் அதிகமாக இருக்கிறது. நமக்கு அதிலிருந்து நிவாரணம் தேவைப்படுகிறது.

பாவசங்கீர்த்தனமே அந்த பாதுகாப்பு வால்வ் ஆகும். அங்கே ஓர் உடைந்த இருதயம், தன் வேதனையைத் தணித்து, தனக்கு ஆறுதல் தருகிற பரிமளத் தைலத்தைப் பெற்றுக் கொள்கிறது; அங்கே பலவீனர்களும், தள்ளாடு பவர்களும், தைரியமற்றவர்களும் ஆற்றலையும், பலத் தையும் பெற்றுக்கொள்கிறார்கள். சந்தேகங்கள் விரட்டப் படுகின்றன, அச்சங்கள் விலக்கப்படுகின்றன, மிகவும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் ஆறுதலைக் கண்டடைகிறார்கள், மிக இருட்டான அவநம்பிக்கை அகற்றப்பட்டு, நம்பிக்கையின் பிரகாசமான ஒளி மீண்டும் அந்த சோர்ந்து போன ஆத்துமத்திற்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தருகிறது'' என்றார் குரு.