இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இனி பாவம் செய்வதில்லை என்ற உறுதியான, பொதுவான, நற்பயனுள்ள பிரதிக்கினை

மூன்றாவதாக, இனி ஒருபோதும் பாவம் செய்வதில்லை என்ற பிரதிக்கினை நல்ல பாவசங்கீர்த்தனத்திற்கு அவசியம். இந்தப் பிரதிக்கினை உறுதியானதாகவும், பொதுவானதாகவும், நற்பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

முதலாவதாக, அது உறுதியானதாக இருக்க வேண்டும். இந்தப் பாவத்தை இனி ஒருபோதும் கட்டிக்கொள்ளக் கூடாது என்றே நான் விரும்புவேன்; கடவுளை இனி ஒருபோதும் நோகச் செய்யக் கூடாது என்றே நான் விரும்புவேன் என்று சிலர் சொல்கிறார்கள். அந்தோ! இந்த ""நான் விரும்புவேன்'' என்ற வார்த்தைகள், பிரதிக்கினை உறுதியானதாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. உறுதியான பிரதிக்கினையைக் கொண்டிருப்பதற்கு, நீ தீர்மானமான சித்தத்தோடு: இனி ஒருபோதும் இந்தப் பாவத்தைக் கட்டிக் கொள்ள மாட்டேன்; நான் இனி ஒருபோதும் வேண்டுமென்றே கடவுளை நோகச் செய்ய மாட்டேன்'' என்று நீ சொல்ல வேண்டும்.

இரண்டாவதாக, அது எல்லாப் பாவங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பாவசங்கீர்த்தனம் செய்பவன் எந்த விதிவிலக்குமின்றி, அதாவது எல்லா சாவான பாவங்களையும் தவிர்த்து விடுவதாகப் பிரதிக்கினை செய்ய வேண்டும். அற்பப் பாவங்களைப் பொறுத்த வரை, இந்த தேவத்திரவிய அனுமானம் செல்லுபடியாவதற்கு, அவற்றில் ஒரு வகைப் பாவத்தைப் பற்றி மனஸ்தாபப்படுவதும், அதைத் தவிர்க்க உறுதியான பிரதிக்கினை செய்வதும் போதுமானது. ஏனெனில் வேண்டுமென்றே செய்யப் படாத அற்பப் பாவங்களைத் தவிர்ப்பது இயலாத காரியம்.

மூன்றாவதாக, அது நற்பயன் தருவதாக இருக்க வேண்டும். அதாவது, தான் பாவசங்கீர்ததனம் செய்யும் பாவங்களில் மீண்டும் ஒருவன் விழாதிருப்பதற்கான வழியை அவன் பயன்படுத்தும்படி அது செய்ய வேண்டும். அது மீண்டும் பாவம் செய்வதற்கான நெருங்கிய பாவசந்தர்ப்பத்தை அவன் தவிர்க்கும்படி செய்ய வேண்டும். ஒருவன் அடிக்கடி எந்த சந்தர்ப்பத்தில் ஒரு கனமான பாவத்தில் விழுகிறானோ, அல்லது நியாயமான காரணமின்றி, மற்றவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் பாவத்தில் விழ அவனே தூண்டுதலாக இருந்திருக்கிறானோ, அந்த சந்தர்ப்பமே நெருங்கிய பாவசந்தர்ப்பம் எனப்படுகிறது. பாவசங்கீர்த்தனம் செய்பவர்கள் பாவத்தை விட்டு விடுவதாக வெறுமனே பிரதிக்கினை மட்டும் செய்வது போதாது. அதற்குரிய சந்தர்ப்பத்தை அடியோடு விலக்குவது பற்றி அவன் பிரதிக்கினை செய்வதும் அவபசியம். இல்லாவிடில், அவர்கள் ஆயிரம் முறை பாவ மன்னிப்புப் பெற்றிருந்தாலும், அவர்களுடைய எல்லாப் பாவசங்கீர்த்தனங்களும் செல்லாதவையாக ஆகி விடும். ஏனெனில் ஒரு சாவான பாவத்திற்கான சந்தர்ப்பத்தை விலக்கத் தீர்மானமின்றி இருப்பதுவும் தன்னிலேயே ஒரு சாவான பாவமாக இருக்கிறது. மேலும், நான் என் நல்லொழுக்க வேதசாஸ்திரம் என்னும் நூலில் கூறியுள்ளது போல, சாவான பாவங்களுக்குரிய நெருங்கிய சந்தர்ப்பத்தை விலக்க உறுதியான பிரதிக்கினை இன்றி பாவ மன்னிப்பு ஆசீர்வாதம் பெறுபவன், ஒரு புதிய சாவான பாவத்தைக் கட்டிக்கொள்கிறான், இவ்வாறு அவன் தேவதுரோகம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான்.

ஆனால்: நான் இத்தகைய ஓர் ஆளிடமிருந்து பிரிந்தால், இத்தகைய ஒரு நட்பை விட்டு விலகினால், துர்மாதிரிகை அதன் விளைவாக இருக்கும். அது பிறருடைய பேச்சுக்கு ஒரு சந்தர்ப்பமாகி விடும் என்று சிலர் சொல்லக் கூடும். இதற்கு நான் பதில் சொல்கிறேன்: நீங்கள் சொல்வது தவறு. இதற்கு மாறாக, இந்த சந்தர்ப்பத்தை அகற்றாதிருப்பதன் மூலம்தான் அந்த நட்பைப் பற்றி அறிந்தவர்களுக்கு நீங்கள் ஒரு பாவசந்தர்ப்பமாக இருப்பீர்கள். உங்களுக்கு முன்பாக அவர்கள் பேசவில்லை என்றாலும், உங்கள் நடத்தை குற்றமுள்ளது என்று அவர்கள் நினைப்பார்கள் என்பதில் உறுதியாயிருங்கள். ஆனால், ""இத்தகைய ஒருவரிடமிருந்து என்னைப் பிரித்துக் கொள்வது நாகரீகமற்ற செயலாகவும், நன்றி யற்றதனமாகவும் கூட இருக்கும், ஏனெனில் அவர் எனக்கு உதவுகிறார், எனக்குப் பணிவிடை புரிகிறார், என் பிரச்சினைகளிலிருந்து என்னை விடுவிக்கிறார்'' என்று நீ சொல்லலாம். ஆம், அத்தகைய ஒருவர் கடவுளிடமிருந்து நீ விலகவும், இங்கே நீ ஒரு மகிழ்ச்சியற்ற வாழ்வு வாழவும், மறுவுலகில் இன்னும் அதிகக் கொடிய துன்ப வாழ்வு வாழவும் உனக்கு உதவுகிறார். இத்தகைய ஒருவரைத் தவிர்ப்பது நாகரீகமற்ற, அல்லது நன்றியற்ற செயலா?

நாகரீகமும், நன்றியறிதலும் முதலில் சேசுநாதருக்கே உரியன. அவர் அளவற்ற மகத்துவமுள்ள அரசராக இருக்கிறார். அவரிடம் இருந்து நாம் மிகப் பெரும் நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அப்படியிருக்க, உன் ஆசாபாசம்தான் நீ இந்த விதத்தில் பேசச் செய்கிறது என்றும், நித்திய அழிவிற்கு உன்னை இட்டுச் செல்ல இத்தகைய சாக்குப்போக்குகளை நீ தேடும்படி அது செய்கிறது என்றும் நீ காணவில்லையா? ஆ! சேசுகிறீஸ்துநாதரின் திரு இருதயத்திற்கு இனியும் எந்த வேதனையும் தந்து விடாதே. அர்ச். லுட்கார்ட் ஓர் ஆபத்தான நட்பில் மோசமான விதத்தில் சிக்கியிருந்த போது, சேசுநாதர் அவளுக்குத் தோன்றி, மிகக் கொடூரமாகக் காயப்படுத்தப்பட்டிருந்த தமது திரு இருதயத்தை அவளுக்குக் காட்டினார். புனிதை உடனே தன் பாவத்திற்காக அழத் தொடங்கினாள். உடனே தன் நண்பனிடம், சேசுகிறீஸ்துவைத் தவிர வேறு யாரையும் நேசிக்கத் தன்னால் முடியாது என்றும், அவரையே தனது மணவாளராக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறி, அவள் அவனை விட்டுப் பிரிந்தாள். அப்போது முதல் அவள் தனது மணவாளருடைய அன்பிற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ஒரு புனிதை ஆனாள்.