நடிகை

இந்தக் கடைசிக் கேள்விக்குப் பிறகு, எல்லோரும் மேஜையை விட்டு எழுந்து, அதிக விஸ்தாரமான ஒரு பெரிய அறைக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்தார்கள். சிலர் இன்னமும் உயிரோட்ட மிக்க கேள்விகளால் சுவாமி மெர்மில்லோதைத் துளைத்துக் கொண்டிருக்க, அவர் நல்ல, சந்தோஷமான மனநிலை யோடு அவற்றிற்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார். இறுதியாக, அவர் புறப்பட ஆயத்தமான போது, ஓர் இளம் நடிகை அவரைத் தனியே அழைத்துச் சென்று, “தந்தாய், நான் நாளைக்கு உங்களை சந்தித்துப் பேச முடியுமா? மிக முக்கியமான ஒரு காரியத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. இன்றிரவு உங்களை எங்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டு வந்து சேர்த்த அந்த இளைஞனைப் பற்றிய இரகசியத்தை என்னால் விளக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். எங்களில் சிலருக்கு நீங்கள் அளவிட முடியாத பெரும் நன்மை செய்திருக்கிறீர்கள்'' என்றாள்.

சுவாமி மெர்மில்லோத் உடனே அவளைச் சந்திக்க ஒரு நேரத்தைக் குறித்தார். அதன்பின் அவர் விடைபெற்றுக் கொண்டார். வீட்டு எஜமானி, அவரை அழைத்துச் செல்ல தன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகனம் வரைக்கும் அவரோடு வந்தாள்.

மறுநாள், தனக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் ப்ளான்ஷ் த வோதுவா என்னும் அந்த இளம் நடிகை குருவானவரைக் காண வந்திருப்பதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது.

அவள் விளக்கினாள்: “சுவாமி நான் ஒரு கத்தோலிக்கப் பெண், வழிதவறிப் போன உங்கள் ஆடுகளில் ஒருத்தி. வோதுவா சீமாட்டியின் ஒன்று விட்ட சகோதரி நான். மிக இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்து விட்ட என்னையும் என் சகோதரனையும் தாய்க்குரிய அக்கறையோடு வளர்த்துப் படிக்க வைத்தவர்கள் அந்த சீமாட்டிதான். நான் வாலிப வயதை அடைந்தபோது, உலக இன்பங்களும், வீண் ஆடம்பரங்களிலும் வெகுவாக மூழ்கித் திளைத்தேன். அந்த ஆடம்பரமிக்க சமூகத்தில் என் அழகின் நிமித்தமாகவும், குரல் வளத்தின் காரணமாகவும் நான் வெகுவாக மதிக்கப்பட்டேன், புகழப்பட்டேன், அதனால் படிப்படியாக வீண் கர்வம் என் தலைக்கேறியது. “தெய்வீகக் குரல்'' என்று மக்கள் அழைத்த இனிய குரலை ஒரு கொடை யாகப் பெற்றிருந்த நான், என் அன்பு அத்தையும், சகோதரனும் காட்டிய எல்லா எதிர்ப்புகளையும் மீறி, மேடையேறிப் பாடுவது என்று தீர்மானித்தேன். அது கிட்டத்தட்ட அவர்களுடைய இருதயங்களை உடைத்து விட்டது.

வெற்றி எனக்காகக் காத்திருந்தது. நான் பல வருடங்களாக எங்கள் கம்பெனியின் நட்சத்திரமாக இருந்து வருகிறேன். துரதிர்ஷ்டமான விதத்தில், நான் என் வேத அனுசரிப்பை ஏறக்குறைய முழுவதுமாகக் கைவிட்டு விட்டேன். ஆனால் என் ஜெபமாலை பக்தியை மட்டும் நான் ஒருபோதும் விட்டு விடவில்லை. அதை ஒருபோதும் கைவிட்டு விடாதபடி என் பிரியமுள்ள சகோதரன் தன் மரணப் படுக்கையில் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

கடந்த சில மாதங்களாக என் நட்சத்திர அந்தஸ்தைப் படிப்படியாக நான் இழந்து வருகிறேன். நேற்றிரவு உங்களிடம் கேள்வி கேட்டு அநேகரைச் சிரிக்க வைத்த அந்த இளம் நடிகை என் இடத்தைப் பிடித்துக் கொண் டாள். அது எனக்குக் கடினமானதாக இருந்தாலும், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. எங்கள் தொழிலில் யாரும் எதிர்பார்க்கக் கூடிய காரியம்தான் அது. துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து தாக்கியது. நான் ஒரு சில தடவைகள் மேடையை விட்டே ஒதுக்கப்பட்டேன். இசை நாடகத்தில் எனக்குத் தரப்பட்ட வேடம் பிறரைக் கவரக் கூடியதாக இருக்கவில்லை. இளமை என்னை விட்டு விலகத் தொடங்கி விட்டது. என்னைக் காப்பாற்ற என் பழைய வசீகரமும், கெளரவமும் என்னிடம் இல்லை. என் கிண்ணம் நிரம்பி விட்டது. என் உயிரை மாய்த்துக் கொள்வது என்று நேற்றிரவு நான் தெளிவாக முடிவு செய்து கொண்டேன்.

“எல்லாம் திட்டமிடப்பட்டது. ஏரியில் நான் மூழ்கி இறப்பதற்கு ஓர் இடத்தைக் குறித்துக் கொண்டேன். அது மிக ஆழமான இடம், கரைகளோ மிக உயரமானவை, ஆகவே விரும்பினாலும் தப்பிப்பதற்கு சாத்தியமே இருக்காது. என் பிரியமுள்ள நண்பர்களின் மன்னிப்பைக் கோரி நான் எழுதிய மூன்று கடிதங்கள் இதோ இருக் கின்றன, பாருங்கள்.

“என் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்க முடியாதபடி முத்திரையிடப்பட்டு விட்டதாகவே தோன்றியது. நான் தீர்மானித்திருந்த காரியத்தைச் செய்ய விடாமல் யாரும் என்னைத் தடுத்து விடக்கூடும் என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. நான் பயம் எதையும் உணரவில்லை. என் சொந்த பலத்தை விடப் பெரிதான ஒரு வல்லமையின் கரங்களில் நான் இருந்தேன்.

“நிச்சயமாக, நீங்கள் யாரைக் காண வரும்படி அழைக்கப்பட்டீர்களோ, அந்த நோயாளிப் பெண், மரணம் வரைக்கும் நோய்வாய்ப்பட்டிருந்த அந்தப் பெண் நான்தான். உங்களைக் காண வந்தது என் பிரியமுள்ள சகோதரனின் ஆத்துமமேயன்றி வேறு யாருமில்லை. அவனைப் பற்றிய உங்களுடைய விவரிப்பு உயிரோட்ட முள்ளதாக இருந்தது. அது நான் எந்த விதத்திலும் தவறாக அனுமானிக்க முடியாத அளவுக்கு ஒரு மிகத் தெளிவான பென்சில் சித்திரத்தைப் போல இருந்தது.

“அவன் மனமுடைந்து எழுதிய தனது இறுதிக் கடிதத்தில், கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எனக்காக எப்போதும் ஜெபிப்பதாக வாக்களித்திருந்தான்.

“சுவாமி, அவனும் நீங்களும் சேர்ந்து என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். உங்கள் அக்கறைக்கு நான் தகுதி யுள்ளவள் என்று நீங்கள் நினைத்தால், நான் இப்பொழுதே பாவசங்கீர்த்தனம் செய்யத் தயாராக இருக்கிறேன்.'' 

சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் அந்த நாடகக் கம்பெனியோடு தனக்குள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டாள். மீண்டும் ஒரு முறை அவள் வந்து சுவாமி மெர்மில்லோதைச் சந்தித்தாள். அதன்பின் ஜெனீவாவுக்குச் சென்று விட்டாள்.

அதன்பின் ஒரு வருடத்திற்குள், பரிசுத்த ஜெப மாலையின் சகோதரி டோமினிக் என்பவளிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த சகோதரி வேறு யாரு மல்ல, அந்த முன்னாள் நடிகை ப்ளான்ஷ் த வோதுவாதான். அவள், தான் அடைபட்ட ஜீவியம் நடத்திக் கொண்டிருந்த தனது அர்ச் சாமிநாதர் சபைக் கன்னியர் மடத்திலிருந்து அந்தக் கடிதத்தை எழுதியிருந்தாள். அங்கே தான் உத்தம மான சமாதானத்தை இறுதியாகக் கண்டடைந்து விட்ட தாகவும், தனது "தெய்வீகக் குரலைக்' கடவுளின் மகிமைக் காகத் தான் அர்ப்பணித்து விட்டதாகவும் அவள் எழுதி யிருந்தாள்.

“நீங்கள் விரும்பினால் என் கதையைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் நல்ல தந்தையே. அது சரிசெய்யப் பட முடியாத அழிவிலிருந்து என்னுடையதைப் போன்ற ஆத்துமங்களை இரட்சிப்பதில் உங்களுக்கு உதவக் கூடும்'' என்ற வார்த்தைகளோடு அவள் தன் கடிதத்தை முடித் திருந்தாள். 

பாவசங்கீர்த்தனம் என்ற மாபெரும் தேவ இரக்கப் பொக்கிஷத்தை நமக்குத் தந்ததற்காக நம் தேவனும், ஆண்டவருமானவருக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர் களாக இருக்கக் கடவோம்!