இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயம்!

முன்பு பெரும் பாவிகளாக இருந்த அந்தப் பெரும் அர்ச்சிஷ்டவர்கள், சேசு எவ்வளவு பொறுமையும் தயாளமும் உள்ளவராக இருக்கிறார் எனபதை உங்களுக்குச் சொல்ல முடியும். தான் பெற்றுக் கொண்டுள்ள நேசத்திற்குப் பதில் நேசம் காண்பிக்க மிகுந்த துணிச்சலோடு மறுககிற ஒருவனிடம் கடவுளின் இருதயம் மட்டும்தான் இவ்வளவு பொறுமையாகவும், இவ்வளவு மென்மையாகவும், இவ்வளவு கருணையோடும் இருக்க முடியும். தனக்காக மரித்த சர்வேசுரனை நேசிக்க வேண்டியிருக்காதபடி, இந்த நிலத்தின் புழு ஒன்று சர்வேசுரனிடமிருந்து விலகி ஓடுகிறது. இறுகிப் போன பாவிகளின் தலைகளுக்குள் எத்தகைய பைத்தியக்காரத்தனமான, எத்தகைய கொடுமையான எண்ணங்கள் படர்ந்து நுழைகின்றன! என்றென்றைக்கும் தங்களை மகிழ்ச்சி யுள்ளவர்களாகச் செய்யக் கூடிய காரியத்தைச் செய்வதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். கடவுளை நேசிப்பது என்பது, பூமியின் மீது மோட்சத்தைக் கொண்டிருப்பதாகும். ஆகவே, புத்தியற்ற ஒரு ஜந்துதான், ஏன், ஒரு பாவிதான் கடவுளிடமிருந்து விலகி ஓடுகிறது, ஆனாலும் பாவியின் பின்னால் கடவுள் ஏன் ஓடுகிறார் என்பதைத்தான் நம்மால் இன்னும் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை. அந்த இரக்கமும், கருணையும் எவ்வளவு பாரதூரமான அளவில் நமக்கு மேலாக இருக்கின்றன என்றால், அவற்றின் ஆழத்தை அளக்கத் துவங்கவே நம்மால் முடியவில்லை. கடவுள் தம் சொந்த, தீய எதிரியைத் துரத்திச் செல்கிறார், அவனை அவர் பிடித்து விடும்போது, விலையுயர்ந்த முத்துக்களால் அவனை நிரப்புகிறார், ஒரு சிறிய பொற்சங்கிலியை அவன் கழுத்தில் போடுகிறார். தம்மால் பிடிக்கப்பட்ட தம் எதிரியை நேச பந்தனத்தால் கட்டி, தம் பிதாவின் வீட்டிற்கு திரும்பவும் நடத்திக் கொண்டு போகிறார். அங்கே அவர் அவனை என்றென்றைக்குமாக ஒரு மகிழ்ச்சியுள்ள இளவரசனாக ஆக்குகிறார். கடவுளும் பாவியும்! எத்தகைய பரம இரகசியங்கள்! எத்தகைய நேசமும், மன்னிக்கிற பொறுமையும் ஒரு புறமும், எத்தகைய தீயதன்மை மறுபுறமும் இருக்கின்றன!

 ஆயினும் கடவுள் நம்மிடம் குறைவான பொறுமையோடு இருக்கிறாரா? அல்லது இங்கு விளக்கப்பட்டுள்ள பாவியை விட நாம் குறைவான தீமையுள்ளவர்களாக இருக்கிறோமா? எத்தகைய அதிகப்படியான வரப்பிரசாதங்களை நாம் பெற்றிருக்கிறோம், எத்தகைய சோம்பலுள்ள ஊழியத்தை நாம் அளித்திருககிறோம் என்பதை நாம் ஒரு கணம் சிந்திப்போமானால், தன் கருணையுள்ள தந்தையிடமிருந்து ஓடிப்போன அந்தத் தீய பாவியிடம் அவர் தயாளத்தோடு இருந்ததை விட நம்மிடம் கடவுள் அதிக தயாளத்தோடு இருக்கிறார் என்று சொல்வது மிகையாகாது என்றே நான் கருதுகிறேன். நம்முடைய பலவீனமான, எரிச்சலும், முறுமுறுப்புமுள்ள, அரை மனதோடு கூடிய, உற்சாகமற்ற ஊழியம் கடவுளின் பார்வையில் அதே அளவு அருவருப்புக்குரியதாக இருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் அதிகப் பெரிதான கொடைகளைப் பெற்றுக் கொண்டோம். அதிகப் பெரிதான காரியங்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கப் படுகின்றன. இருந்தாலும், மற்ற மனிதர்களைப் போல நாம் கொள்ளையர்களாகவோ, கொலைகாரர்களாகவோ அல்லது விபச்சாரம் செய்கிறவர்களாகவோ இல்லை என்று நாம் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய பரிசேயத்தனமுள்ள பெருமிதம், அல்லது சுய திருப்தி கடவுளின் பார்வையில் கடும் அருவருப்புக்குரியதாக இருக்கிறது. நம்முடைய இந்த மந்தத் தன்மையுள்ள சுய திருப்தியிலேயே நாம் நிலைத்திருந்தால், விபச்சாரம் செய்வோரும், கொலைகாரரும் நமக்கு முன்பாக மோட்சத்திற்குள் போவார்கள்.

நம் மட்டில் சேசுவின் பொறுமையுள்ள இருதயத்தைப் பற்றி நாம் ஒரு கணம் நின்று சிந்தித்துப் பார்ப்போம். எவ்வளவு காலம் அவர் நம் வாசலில் நின்று தட்டிக் கொண்டிருந்தார்? நாம் அவருக்கு சிறிது தாராளம் காட்டும்படி நமக்காக எவ்வளவு காலம் காத்திருந்தார்? ஓ, நம் இருதயங்களில் நாம் கொண்டிருக்கிற விக்கிரகங்களை அவற்றின் சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளும்படி அவர் எவ்வளவு காலம் கெஞ்சிக்கொண்டும், இரந்து கொண்டும் இருந்தார்? நம் விசேஷ நண்பர்கள், நம் நேசத்திற்குரிய சுயம், அல்லது வெறும் குப்பையான ஏதாவது இந்த உலகப் பொருள். நம் அயலானின் உணர்வுகளைக் காயப்படுத்துவது அவரைக் காயப்படுத்துகிறது என்பதால், அதை ஒருபோதும் செய்வதில்லை என்று நாம் அரை மனதோடு பாவசங்கீர்த்தனத்தில் வாக்களித்ததை அவர் எத்தனை தடவைகள் கேட்டிருக்கிறார். ஆயினும் அப்படி வாக்களித்து பத்தே நிமிடங்களுக்குப் பிறகு, நாம் அவரை ஏற்கனவே காயப்படுத்தியிருக்கிறோம். பரிதாபத்திற்குரிய ஈனப் பாவிகளாகி நம்மிடம் எந்த ஒரு மனிதப் பிறவியாவது தொடர்ந்து இப்படி நல்லதாகவும், பொறுமையானதாகவும் இருக்க முடியுமா? இல்லை. கடவுளின் இருதயம் மட்டுமே இப்படி அளவற்ற தயாளமும், பொறுமையும் உள்ளதாக இருக்கிறது. இத்தகைய நிஜங்களுக்கு முன்பாக, நாம் கடவுளால் எவ்வளவோ தயாளத்தோடு நடத்தப்படுவதால், நாமும் நம் எதிரிகளிடமும் தயாளமும், கருணையுமுள்ளவர்களாக இருக்க முயற்சி செய்வோமாக. உன் அயலானை உன் இருதயத்திலிருந்து நீ மன்னிக்கவில்லை என்றால், உன் பிதாவும் உன்னை மன்னிக்க மாட்டார். அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவைகள் உன்னை மன்னிக்க வேண்டியிருப்பதால், உன் அயலானால் நீ எத்தனை தடவை நோகடிக்கப்படுகிறாய் என்பதைக் கணக்கிடாதே. தொடர்ந்து அவனை மன்னித்துக் கொண்டிரு.


பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!