மிக உத்தமமான பிறர்சிநேகம் உன் அயலானின் ஞான நன்மைகளில் நீ காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் அடங்கி யுள்ளது. ஒரு சக மனிதனின் ஞானத் தேவைகளிலிருந்து அவனை விடுவிப்பது, அல்லது அவனது ஞான நலத்திற்கு அவசியமானதைச் செய்வது, அவனுடைய உடலுக்குக் காட்டப்படும் பிறர்சிநேகத்தை விட எவ்வளவோ மேலானதாக இருக்கிறது. ஏனெனில் ஆத்துமத்தின் மகத்துவம் மாம்சத்தின் தாழ்ந்த நிலையை வெகுவாகக் கடந்ததாக இருக்கிறது. ஆத்துமத்திற்குக் காட்டப்படும் பிறர்சிநேகம் முதலாவதாக, நம் அயலானின் தவறுகளைத் திருத்துவதில் அனுசரிக்கப்படுகிறது. ""தவறின வழியினின்று பாவியை மனந் திரும்பச் செய்தவன் அவனுடைய ஆத்துமத்தை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக் கடவான்'' (யாகப். 5:20) என்று அர்ச். யாகப்பர் அறிவிக்கிறார். ஆனால் மறு பக்கத்தில், அர்ச். அகுஸ்தினார் இது பற்றி, ஓர் அயலான் தன் ஆத்துமத்தைச் சீரழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அவனைத் திருத்த முயலாமல் அலட்சியமாக இருப்பவன், மற்றொருவன் தன் அவமான, ஆங்கார வார்த்தைகளைக் கொண்டு செய்யும் பாவங்களை விட, தன் மெளனத்தைக் கொண்டு அதிக கனமான பாவங்களைச் செய்கிறான் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். ""அவன் அழிந்து போவதை நீ பார்க்கிறாய், ஆனால் அதைப் பற்றி நீ கவலைப்படவில்லை; அவனுடைய கண்டன வார்த்தைகளை விட உன் மெளனம் அதிகக் குற்றமுள்ளது'' என்று இப்புனிதர் கூறுகிறார். அவனை எப்படித் திருத்துவது என்று உனக்குத் தெரியவில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லாதே. மற்றவர்களின் தவறுகளைத் திருத்துவதற்கு, ஞானத்தை விடப் பிறர் சிநேகமே அதிகமாகத் தேவை என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். தகுந்த நேரத்தில் நேசத்தோடும், இனிமையோடும் அவனைத் திருத்த முயற்சி செய். அது பலன் தரும். நீ மடாதிபதியாக இருந்தால், உனக்குக் கீழுள்ளவர்களைத் திருத்துவது உன் பதவியின் காரணமாக உன் கடமையாக இருக்கிறது. இல்லையென்றால், பலன் கிடைக்கும் என்று நீ எதிர்பார்க்கும் போதெல்லாம் பிறரைத் திருத்துவதற்குப் பிறர்சிநேகச் சட்டத்தின்படி நீ கடமைப்பட்டிருக்கிறாய். மலையோரத்தில், பெரும் பாதாளத்தின் விளிம்பில் ஒரு குருடன் நடந்து போவதைக் கண்டும், அவன் இருக்கும் ஆபத்தான நிலை பற்றி அவனை எச்சரிக்காமலும், இவ்வாறு அவனது அநித்திய மரணத்திலிருந்து அவனை விடுவிக்காமலும் இருக்கும் ஒருவனுக்கு அது ஒரு கொடூரமான பாவமாக இருக்காதா? ஆனால் நித்திய சாவினின்று ஓர் அயலானை விடுவிக்க உன்னால் இயலும் என்ற நிலையிலும் அதை அலட்சியம் செய்வது, இன்னும் மிகப் பெரிய கொடூரச் செயலாக இருக்கும். உன் அறிவுரை பலனற்றுப் போகும் என்று விவேகத்தோடு நீர் தீர்மானிப்பாய் என்றால், குறைந்த பட்சம் இதற்குத் தீர்வு காணக்கூடிய மற்றொருவனிடம் முந்தினவன் இருக்கும் நிலை பற்றி எடுத்துச் சொல். ""இது என் வேலையல்ல, இதற்காக நான் எந்த முயற்சியும் செய்ய மாட்டேன்'' என்று சொல்லாதே; காயீன் இப்படித்தான் பேசினான். ""நான் என்ன, என் தம்பிக்குக் காவலாளியா?'' என்று அவன் கேட்டான் (ஆதி.4:9). முடிந்த போது தன் அயலானை அழிவினின்று காப்பாற்றுவது ஒவ்வொருவர் மீதும் சுமந்த கடமை. ""ஒவ்வொருவனுக்கும் அவனுடைய அயலானைக் குறித்து அவர் கட்டளை கொடுத்திருக்கிறார்'' என்று சர்வப் பிரசங்கி கூறுகிறார் (17:12).
தேவைப்படும்போது, நம் அயலானுக்கு, குறிப்பாக அவனது ஆன்ம தேவைகளில் உதவி செய்யும்படி மன ஜெபத்தையும் கூட நாம் தவிர்க்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று அர்ச். பிலிப் நேரியார் கூறுகிறார். அர்ச். ஜெர்த்ரூத்தம்மாள் ஒரு நாள் ஜெபத்தில் ஆழ்ந்திருக்க விரும்பினாள். ஆனால் ஒரு பிறர்சிநேகச் செயலை அவள் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே ஆண்டவர் அவளிடம்: ""எனக்குப் பதில் சொல் ஜெர்த்ரூத்: நான் உனக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயா, அல்லது நீ எனக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயா?'' என்று கேட்டார். ""நீ கடவுளிடம் செல்ல விரும்பினால், தனியாக அவரிடம் போகாதபடி அக்கறை எடுத்துக் கொள்'' என்று அர்ச். கிரகோரியார் சொல்கிறார். அர்ச். அகுஸ்தினார் தம் பங்கிற்கு, ""நீ கடவுளை நேசிக்கிறாய் என்றால், அனைவரையும் கடவுளின் அன்பிற்குள் இழுத்து வா'' என்கிறார். நீ கடவுளை நேசித்தால், அவரை நீ மட்டும் தனியாக நேசிக்காதபடி அக்கறை காட்டு, மாறாக, உன் உறவினர்கள் அனைவரையும், உன்னோடு தொடர்பு கொண்டுள்ள அனைவரையும் அவரது அன்பிற்குள் கொண்டு வர நீ உழைக்க வேண்டும்.
பிறருக்கு நன்மாதிரிகை தரும்படியாக, மற்றவர்களும் உன்னைப் போலவே செய்யும்படி அவர்களைத் தூண்டுவதற்காக, மன ஜெபத்திலும், அடிக்கடி நன்மை வாங்குவதிலும் பக்தியும் ஒறுத்தலும், அர்ப்பணமும் உள்ளவனாகத் தோன்றுவது வீண் பெருமையின் காரியம் அல்ல. ""மனிதர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் படிக்கு, உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரக்கடவது'' (மத்.5:16).
ஆகவே, உன்னால் முடிந்த வரை, வார்த்தைகளையும், செயல்களையும், குறிப்பாக ஜெபங்களையும் கொண்டு அனைவருக்கும் உதவி செய்ய முயற்சி செய். ""மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் நாமத்தினால் பிதாவிடமிருந்து எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார்'' (அரு.16:23) என்ற தமது வார்த்தைகளின் மூலம், நமக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்களையும் கேட்டருள்வதாக நம் ஆண்டவர் வாக்களிக்கிறார் என்று அர்ச். பேசிலோடு சேர்ந்து அநேக வேதபாரகர்கள் கற்பிக்கிறார்கள். வழியில் அவர்கள் எந்தத் தடையையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நிபந்தனை. இதன் காரணமாக, பொது ஜெபத்திலும், திவ்ய நன்மை வாங்கியபின் உன் நன்றியறிதலிலும், உன் திவ்ய நற்கருணை சந்திப்புகளிலும் பரிதாபத்திற்குரிய பாவிகளுக்காகவும், அவிசுவாசிகளுக்காகவும், பதிதர்களுக்காகவும், கடவுளின்றி வாழும் அனைவருக்காகவும் ஜெபிக்க நீ ஒருபோதும் தவறக் கூடாது.
தமது மணவாளிகள் பாவிகளுக்காகச் செய்யும் ஜெபம் சேசுநாதருக்கு எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது! அவர் ஒரு முறை வணக்கத்துக்குரிய கேப்ரியின் செராஃபினா என்ற துறவற சகோதரியிடம்:""என் மகளே, உன் ஜெபங்களால் ஆத்துமங்களை இரட்சிக்க எனக்கு உதவி செய்'' என்றார். அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாளிடம் அவர்: ""மதலேன், கிறீஸ்தவர்கள் எப்படிப் பசாசின் கரங்களிலேயே இருக்கிறார்கள் என்று பார்! என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் ஜெபங்களால் அவர்களை விடுவிக்காவிடில், அவர்கள் கடித்து விழுங்கப்படுவார்கள்'' என்றார். இதன் காரணமாக இப்புனிதை தன் துறவற சகோதரிகளிடம்: ""என் சகோதரிகளே, இவ்வுலகிலிருந்து கடவுள் நம்மைப் பிரித்திருப்பது நம் நன்மைக்காக மட்டுமல்ல, மாறாக, பாவிகளின் நன்மைக்காகவும் தான்'' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். மற்றொரு சந்தர்ப்பத்தில் அவள் அவர்களிடம்: ""என் சகோதரிகளே, இழக்கப்படும் ஏராளமான ஆன்மாக்களுக்காக நாம் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்; பக்தியார்வத்தோடு நாம் அவர்களுக்காகக் கடவுளிடம் பரிந்துபேசியிருந்தோம் என்றால், ஒருவேளை நித்திய சாபத்திற்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள்'' என்றாள். இதன் காரணமாகவே அவளது வரலாற்றில், பாவிகளுக்காக ஜெபிக்காமல் அவள் தன் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்கியதில்லை என்று நாம் வாசிக்கிறோம். ஓ, எத்தனை ஆன்மாக்கள் சில சமயங்களில், குருக்களின் பிரசங்கங்களை விட அதிகமாகத் துறவிகளின் ஜெபங்களால் மனந்திருப்பப் படுகிறார்கள்! ஒரு குறிப்பிட்ட போதகர் விளைவித்த பலன்களுக்குக் காரணம் அவருடைய பிரசங்கங்கள் அல்ல, மாறாக, போதக மேடையில் அவருக்கு உதவியாயிருந்த ஒரு பொதுநிலைச் சகோதரரின் ஜெபங்களே என்று ஒரு முறை அவருக்கு வெளிப் படுத்தப்பட்டது. மேலும், குருக்கள் ஆன்மாக்களின் இரட்சணியத்திற்காக உண்மையான ஆர்வத்தோடு உழைக்கும் படியாக, நாம் குருக்களுக்காக வேண்டிக்கொள்வதிலும் அக்கறை கொண்டிருக்க வேண்டும்.