இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நல்ல மனதுள்ளவர்களுக்கு

அன்று கர்த்தர் பிறந்த திருநாளுக்கு முந்தின நாள். நடுக்காட்டில் இருந்த வீட்டில் காட்டிலாகா அதிகாரியான ஜேம்ஸ் அலன் என்பவர் தம் மனைவி, மூன்று வயது மகன், தன் அத்தை ஆகியோருடன் வசித்து வந்தார். அத்தை இருந்தது வெகு பிரயோஜ னமாயிருந்தது. ஏனெனில் ஜேம்ஸ் அலன் வீட்டில் இருப்பது சொற்பநேரமே.

அவர் தம் கடமையில் ஒருபோதும் தவறமாட் டார். இரவென்றும், பகலென்றும் பாராது விழித்தி ருந்து, காட்டிலாகா சட்டங்களை மக்கள் அனுசரிக் கிறார்களா எனக் கவனிப்பார். மீறியவர்களைப் போலீ ஸாரிடம் கையளிப்பார்.

அவர்கள் யாவரும் நல்ல கத்தோலிக்கர். இரண்டு மைல் தூரத்தில் பள்ளத்தாக்கில் இருந்த கோவிலுக்கு தவறாமல் அவர்கள் போய் வந்தனர். குளிராயிருந்தா லும் வெயிலாயிருந்தாலும் ஞாயிறு கடன் திருநாட் பூசைக்குப் போய்வருவார்கள்.

அலனின் மனைவி சுறுசுறுப்பான பெண். தன் மகனை வெகு கவனமாக வளர்த்து வந்தாள். இளம் வயதிலேயே அவனுடைய உள்ளத்தில் பத்தியின் விதைகளை ஊன்றினாள். நல்ல கடவுளையும் சின்ன யேசுவையும் பற்றி அவனுக்கு எடுத்துரைப்பாள்; அவன் கவனமாய்க் கேட்பான். அவள் விதைத்த விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன.

அவ்வருடம் கர்த்தர் பிறந்த திருநாளுக்கு முந் தின நாள், அந்த இல்லத்தில் வெகு குதூகல நாள். சிறுவன் ஜிம்மிக்கென்று கிறிஸ்மஸ் விருட்சம் தயா ரித்திருந்தார்கள். மரத்தை அலங்கரித்திருந்த வெளிச் சத்தையும் சாமான்களையும் பார்த்து ஜிம்மி ஆனந்தத் தால் குதித்தான்.

“கோவிலில் குடில் இருக்கிறது. சின்ன யேசு அதில் பிறந்தார். இடையர்கள் தங்கள் ஆடுகளுடன் யேசுவுக்குக் காவல் செய்கின்றனர்'' எனத் தந்தை கூறியதும், தன்னைக் கோவிலுக்கு எடுத்துச் செல் லும்படி சிறுவன் மன்றாடினான். அன்று அவனைத் தூங்க வைப்பது சிரமமாயிருந்தது. " நீ நல்ல பையனாயிருந்து உடனே தூங்கச் சென்றால் நாளை உன்னைக் கோவிலுக்கு அழைத்துப் போவேன்'' என்ற பின் னரே அவன் படுக்கைக்குச் செல்ல சம்மதித்தான்.

ஜிம்மியை அன்னா அத்தையின் பொறுப்பில் விட்டு அலனும் அவர் மனைவியும் நடுச்சாமப் பூசை காணும்படி கோவிலுக்குச் சென்றனர். மக்கள் பல திசைகளிலிருந்தும் வந்து கோவில் நிறைந்தது. பூசையைப் பத்தியோடு கண்ட எல்லோ ருடைய முகங்களிலும் மகிழ்ச்சியும் சமாதானமும் குடிகொண்டிருந்தது. இரட்சகர் பூமிக்குக் கொண்டு வந்த சமாதானத்தைப்பற்றி பூசை செய்த வயோதிப குரு உருக்கமாகப் பேசியதுடன், எல்லோரும் பகை விரோதத்தை விட்டொழிக்க வேண்டும் எனக் கூறினார்.

அலனுடைய மனைவி தற்செயலாக ஒரு பக்கம் திரும்பியபோது தூணின் நிழலில் ஓர் அந்நியன் நிற்ப தைக் கண்டாள். அந்தப் பரிசுத்த நாளின் ஆராதனை சடங்கில் அவன் பங்கு பற்றியதாகத் தோன்றவிலலை. அவனுடைய உடைகள் அழுக்காயிருந்தன, கோரப் பார்வையுடன் அவன் அடிக்கடி தன் கணவனை நோக்கியது அவளது உள்ளத்தில் பயத்தை விளை வித்தது. அவன் ஏதோ தீமை செய்ய நினைத்திருப்ப தாக அவள் அஞ்சினாள்.

பூசை முடிந்தது. கணவனும் மனைவியும் வீட்டை நோக்கி நடந்தனர். அந்த அந்நியனைப்பற்றி அவள் தன் கணவனை வினவினாள். "அவனுடைய பெயர் டிக். காட்டில் ஒரு மானைச் சுட்டதற்காக சென்ற ஆண்டில் அவனை நான் கைது செய்தேன். சிறை வாசத் தண்டனையை முடித்துவிட்டு நேற்று அவன் வெளியே வந்தான். என் மேல் அவன் வர்மமாயிருக் கிறான் என நினைக்கிறேன். என்ன செய்வது? கடமை யை நிறைவேற்ற வேண்டுமல்லவா?" என அலன் மொழிந்தார்.

"அவன் உங்களுக்கு ஏதாவது தீமை செய்வான் என நீங்கள் பயப்படவில்லையா? அவன் உங்களை இன்று கோவிலில் பார்த்த பார்வை அச்சத்தை வீளை விக்கிறது'' என மனைவி கூறியதும், அவர் “அப்படி பெருந் தீங்கு ஏதும் செய்யமாட்டான்'' என்றார்.

அவர்கள் வீட்டை அணுகுகையில் அன்னா அத்தை ஓடி வந்தாள். "ஐயோ, ஜிம்மியைக் காணோமே, எங்கு போனானோ தெரியவில்லையே. நாயைக் கட்டியிருக்கிறதா எனப் பார்க்கப்போனேன். திரும்பி வந்து பார்க்கையில் ஜிம்மியைக் காணோம். வீட்டிலும் தோட்டத்திலும் நன்றாகத் தேடிப் பார்த் தேன். சிறுவன் அகப்படவில்லை'' என்றாள்.

அலனின் மனைவி உடனே கோவிலில் கண்ட அந்நியனை நினைத்தாள். இன்னொரு முறை மூவரும் சேர்ந்து வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்து கடவுளை நோக்கி மன்றாடினார்கள்.

அந்த அந்நியன் கோவிலைவிட்டுப் புறப்பட்டு தன் குடிசையை நோக்கி நடந்தான். தன்னைச் சிறைக்கு அனுப்பிய அலனை பழிவாங்கும் விதத்தை அவன் யோசித்துக்கொண்டு வழி நடக்கையில் "அப்பா, அப்பா'' என ஒரு சிறுகுழந்தை கத்தியது அவனு டைய செவியில் விழுந்தது.

குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த குழந்தையை டிக் தன்கையில் எடுத்தான். “அப்பா, அப்பா, கோவி லுக்கு, குடிலைப் பார்க்கணும்'' என சிறுவன் கத்தி னான். ''தம்பி. உன் அப்பா யார், சொல். அப்பா விடம் கொண்டு சேர்க்கிறேன்'' என டிக் கேட்ட போதிலும் சிறுவன் முன் போல "அப்பா, கோவி லுக்கு, குடிலைப் பார்க்கணும்'' என்றான். சிறுவனின் கழுத்தில் தொங்கிய சிறு சுரூபத்தை அச்சமயம் டிக் பார்த்தான். நெருப்புக்குச்சியைப் பற்றவைத்து அதில் எழுதப்பட்டிருந்ததை வாசித்தான். “ஜேம்ஸ் அலன், காட்டிலாகா பங்களா, கரடி மலை'' என அதில் எழுதியிருந்தது. ''ஆஹா! நீ அலனுடைய மகனா? பழிக்குப்பழி வாங்க சந்தர்ப்பம் இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. சரி, சரி, உன் தகப்பனுக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கப்போகிறேன். உன்னைத் தேடியலையட்டும், பெரும் பணத்தொகை வாங்கிக்கொண்டு நான் உன்னைத் திருப்பிக் கொடுப் பேன்'' என அவன் சொல்லி, குழந்தையின் முதுகை தடவிக் கொடுத்து, அப்பாவிடம் அவனைக் கொண்டு போவதாகக் கூறி, தன் குடிசையை நோக்கி நடந் தான். சூதுவாதில்லாக் குழந்தை ஜிம்மி தன் இரு சிறு கரங்களையும் அவனுடைய கழுத்தைச் சுற்றிப் போட்டு, தலையை அவனது மார்பில் சாய்த்துத் தூங்கினான்.

டிக் தன் குடிசையை அடைந்ததும், சிறுவனைக் கட்டிலில் கிடத்தி, அவனருகில் அமர்ந்து என்ன செய்வதென்று சிந்திக்கலானான். ஒன்றிரண்டு நாள் குழந்தையை அங்கேயே வைத்துக்கொண்டு, பெருந் தொகை கொடுத்து குழந்தையை மீட்டுப்போகும்படி அலனுக்குச் சொல்லிவிட அவன் தீர்மானித்தான்....... சிறுவன் படுக்கையில் புரண்டு, தன் தாய் தந்தை சின்னயேசு இவர்களைப்பற்றி தூக்கத்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். சிறுவனுடைய முகம் சம்மனசின் முகத்தை ஒத்திருந்தது. அவனுடைய சுருட்டை மயிர் பொன் நிறமாயிருந்தது, முகத்துக்கு ஒரு கிரீடம் போல் விளங்கியது. டிக் என்பவனுடைய கையின் பெரும் விரலை அவன் நம்பிக்கையுடன் பற் றிப் பிடித்திருந்தான்.

இதைப் பார்த்ததும் அவனுடைய உள்ளத்தில் ஒரு போர் தொடங்கியது. “நானும் ஜேம்ஸ் அலனும் விரோதிகள். அது இந்தக் குழந்தையின் குற்ற மல்லவே. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டாலும் வேறு சந்தர்ப்பம் கிடைப்பதரிது'' என டிக் சிந்தித்துக்கொண்டிருக்கையில் கோவிலில் குருவானவர் சொன் னது அவனுடைய நினைவுக்கு வந்தது: ''ஒவ்வொரு வனும் தன் முழு இருதயத்துடன் தன் சகோதர னுக்கு மன்னிப்பளிக்கட்டும்.'' தூங்கிக் கொண் டிருந்த சிறுவனை டிக் இன்னொருமுறை நோக்கினான். பெத்லெகேம் குடிலில் பிறந்த குழந்தையும் இதைப் போலவே இருந்திருக்க வேண்டும் என நினைத்தான். திடீரென அவன் முழந்தாளிட்டு, நம்பிக்கையுடன் தன் விரலைப் பிடித்திருந்த கரத்தை முத்தமிட்டு குழந்தையைத் தன் கரங்களில் எடுத்து நன்றாக மூடி வெளியேறினான்.

சிறுவன் காணாமற்போன செய்தி அதற்குள் எங் கும் பரவிவிட்டது. அலனுடைய நண்பர்கள் யாவ ரும் திரண்டு குழந்தையைத் தேடத் தீர்மானித்தார் கள். அவர்கள் யாவரும் புறப்பட இருக்கையில் திடீரென மெலிந்து வளர்ந்த ஓர் உருவம் அவர்கள் கண்ணிற் பட்டது. அவன் டிக் என அலன் அறிந்த தும் அந்நேரத்தில் அவன் எதற்காக அங்கு வருகிறான் என அவர் அதிசயித்தார். டிக் அலனை சிறிது அலட் சியமாகப் பார்த்து விட்டு, "ஏதாவது காணாமற் போனதா?" என்றான். “காணாமற் போனதா? என்றா கேட்கிறாய். தமாஷ் பேசவேண்டிய நேரம் இதல்ல. எங்கள் குழந்தையைக் காணோம். தேடுவதற்காகவே நாங்கள் புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம். என் மகனை எங்காவது கண்டாயா?'' என அவன் கேட் டான்.

''கண்டேன் எனக் கருதுகிறேன்” என டிக் கூறிக் கொண்டு போர்வையை அகற்றி, குழந்தையைக் காண்பித்தான். அலன் நன்றி மிகுதியினால் டிக்கை அரவணைத்தார். அவருடைய மனைவி சந்தோஷத்தி னால் கண்ணீர் வடித்தாள். அதற்குள் ஜிம்மி விழிக்க, அவன் மேல் முத்தமாரி பொழிந்தனர். கடைசியாக சிறுவன் படுக்கையில் கிடத்தப்பட்டதும் சின்ன யேசுவைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

டிக் வீட்டினுள் அழைக்கப்பட்டான். குழந்தை யைக் கண்ட விதத்தையும், பெருந் தொகையை மீட் புக்கிரயமாகக் கேட்க யோசித்ததையும், அந்த மாசற்ற குழந்தையைப் பார்த்ததும் நடுச்சாமப் பூசையில் கேட்ட பிரசங்கம் நினைவுக்கு வந்ததையும் உடனே தன் எண்ணம் மாறியதையும் அவன் எடுத் துக்கூறி, "இனி நான் நல்லவனாக ஒழுகப் போகிறேன். கடவுள் எனக்கு உதவி செய்வாராக'' என்றனன்.

ஜிம்மியைக் காப்பாற்றி பத்திரமாய்க் கொண்டு வந்ததற்காக அலனும் அவருடைய மனைவியும் அவ னுக்கு இன்னொருமுறை நன்றி கூறினர். தன் நன்றி யின் குறியாகவும், டிக் மேல் தனக்குள்ள நம்பிக்கை யைக் காண்பிக்கவும் டிக்கைத் தமக்கு உதவி அதி காரியாக அலன் வைத்துக்கொண்டார். அவனுடைய வேலை காட்டிலாக்காச் சட்டங்களை மக்கள் அனுசரிக் கிறார்களா எனக் கவனிப்பது. டிக் சம்மதித்தான். அன்று கிறிஸ்மஸ் விருந்துக்கு வருவதாக வாக் களித்து டிக் தன் குடிசையை நோக்கிப் புறப்பட் டான். நெடுநாட்களாக அவன் சுகித்தறியாத அமைதி யும் ஆனந்தமும் அவனுடைய உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. "பூமியில் நல்ல மனதுள்ளவர் களுக்கு சமாதானம்” என்னும் வசனங்கள் அவனு டைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.