இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - ஆரட்டரியின் எதிர்காலம்

அர்ச். ஜான் போஸ்கோ பரோலோ கோமகளுக்குச் சொந்தமான “ரிஃபூஜியோவில்” ஆரட்டரிக்காக இரவலாகத் தரப்பட்டிருந்த இடத்தைக் காலி செய்யும்படி தமக்கு உத்தரவிடப்பட்ட போது, தமக்கு ஆறுதல் தரும் இன்னொரு கனவையும், அல்லது இன்னும் சரியாகக் கூற வேண்டுமானால், கனவுகளின் தொடர் ஒன்றையும் கண்டார். 

1875-ல் சில சலேசிய குருக்களிடம் அவர் அதைப் பின்வருமாறு விவரித்தார்: சண்டையிடும் இளைஞர்கள் ஒரு பரந்த புல்வெளியில் நான் இருப்பதாகத் தோன்றியது. அங்கே மிகப் பெரிய கூட்டமான சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டும், ஆணையிட்டுக் கொண்டும், திருடிக் கொண்டும், இன்னும் பல குற்றங்களைச் செய்து கொண்டும் இருந்தார்கள். 

சண்டையிட்ட இளைஞர்களால் வீசப்பட்ட கற்களால் ஆகாயம் நிறைந்திருந்தது. அவர்கள் எல்லோருமே கைவிடப்பட்ட சிறுவர்கள், நல்லொழுக்கக் கொள்கைகள் எதுவும் கற்பிக்கப்படாதவர்கள். நான் அங்கிருந்து திரும்ப எத்தனித்தபோது, என் அருகில் ஒரு பெருமாட்டியைக் கண்டேன். “அந்தப் பையன்கள் நடுவே சென்று, பணியாற்று” என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

நான் அவர்களை நெருங்கிச் சென்றேன். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும். அவர்களை ஒன்றுகூட்ட என்னிடம் ஓர் இடம் இல்லை. ஆனாலும் நான் அவர்களுக்கு உதவி செய்ய விரும் பினேன். தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களும், என் உதவிக்கு வந்திருக்கக் கூடியவர்களுமான சிலரை நோக்கி நான் திரும்பிப் பார்த்தபடி இருந்தேன். 

ஆனால் அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை, எனக்கு எந்த உதவியும் செய்யவுமில்லை. அதன்பின் நான் அந்தப் பெருமாட்டியிடம் திரும்பினேன். “இங்கே ஒரு இடம் இருக்கிறது” என்று அவர்கள் ஒரு புல்வெளியைச் சுட்டிக்காட்டியபடி கூறினார்கள். “அது ஒரு புல்வெளி மட்டும்தான்” என்று நான் சொன்னேன்.

அவர்கள் பதிலுக்கு, “என் திருமகனும், அவருடைய அப்போஸ்தலர்களும் தங்கள் தலைசாய்க்கவும் இடமில்லாமல் இருந்தார்கள்” (மத். 8:20) என்றார்கள். நான் அந்தப் புல்வெளியில் வேலை செய்யத் தொடங்கினேன். ஆலோசனைகள் தந்தேன், பிரசங்கம் ஆற்றினேன், பாவசங்கீர்த்தனம் கேட்டேன், ஆனாலும் ஏறக்குறைய என் முயற்சிகள் எல்லாமே வீணாய்ப் போவதை நான் கண்டேன். 

தங்கள் பெற்றோரால் கைவிடப்பட்டவர்களும், சமூகத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களுமான அந்தச் சிறுவர்களை ஒன்றுகூட்டி, அவர்களுக்கு அடைக்கலம் தர எனக்கு ஒரு கட்டடம் தேவையாயிருந்தது. அதன்பின் அந்த இராக்கினி என்னை வடக்கு நோக்கி இன்னும் சற்று தூரம் கூட்டிச்சென்று, “பார்!” என்றார்கள். 

தேவாலயங்கள் வேதசாட்சிகள்

நானும் அப்படியே செய்தபோது, அங்கே தணிவான கூரையுள்ள ஒரு சிறு கோவிலையும், ஒரு சிறு முற்றத்தையும், பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களையும் கண்டேன். ஆகவே நான் மீண்டும் என் வேலையைத் தொடங்கினேன். 

ஆனால் அந்த தேவாலயம் மிகவும் சிறியதாக இருந்ததால், நான் அந்தப் பெருமாட்டியிடம் மீண்டும் விண்ணப்பித்தேன். அவர்கள் அதிகப் பெரியதாயிருந்த மற்றொரு கோவிலையும், அதை அடுத்திருந்த ஒரு வீட்டையும் எனக்குச் சுட்டிக் காட்டினார்கள். அதன்பின் அவர்கள் பண்படுத்தப்பட்டிருந்ததும், இந்தப் புதிய கோவிலின் முகப்புக்கு கிட்டத்தட்ட நேர் எதிராயிருந்ததுமான ஒரு நிலத்திற்கு அருகில் என்னைக் கூட்டிச் சென்றார்கள். 

“அத்வெந்தோர், ஆக்டேவியஸ் என்னும் ட்யூரினின் மகிமையுள்ள வேதசாட்சிகள் கொல்லப்பட்ட இந்த இடத்தில், அவர்களுடைய இரத்தத்தால் நனைந்து, அர்ச்சிக்கப் பட்ட இந்த மண்ணின் மீது, கடவுள் ஒரு மிகச் சிறப்பான முறையில் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று அவர்கள் கூறினார்கள். இப்படிச் சொல்லி விட்டு, அவர்கள் தன் பாதத்தை வெளிக்காட்டி, அதைக் கொண்டு அந்த வேதசாட்சிகள் இறந்து விழுந்த துல்லியமான இடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். திரும்பி வரும்போது, அந்த இடத்தை மீண்டும் அடையாளம் காணும்படி, அங்கே ஒரு குறியை இட்டு வைக்க நான் விரும்பினேன்.

ஆனால் அங்கே ஒரு குச்சி அல்லது கல்லைக் கூட என்னால் காண முடியவில்லை. ஆயினும், அந்த இடத்தை நான் என் மனதில் தெளிவாகக் குறித்துக் கொண்டேன். அது அந்தப் பரிசுத்த வேதசாட்சிகளின் சிற்றாலயத்தின் உட்புற மூலையோடு மிகச் சரியாகப் பொருந்தியிருந்தது. இந்தச் சிற்றாலயம் முன்பு அர்ச். அன்னம்மாள் சிற்றாலயம் என்று அழைக்கப்பட்டு வந்தது; கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரி தேவாலயத்தின் முக்கிய பீடத்தை நோக்கி ஒருவன் நிற்கும்போது, அவனுக்கு இடப்பக்க முள்ள முன்பக்க மூலையோடுதான் அந்த நிலம் இணைந்திருந்தது.

இதற்கிடையே, மிகப் பெரும் எண்ணிக்கையிலான, தொடர்ந்து அதிகரித்து வந்த சிறுவர் கூட்டம் ஒன்றால் நான் சூழப் பட்டிருக்கக் கண்டேன். ஆனாலும் நான் என் இராக்கினியையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால், சிறுவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த வளாகங்களும், வசதிகளும் கூட விரிவடைந்து கொண்டே செல்வதை நான் கண்டேன். 

அதன்பின் நான் மிகப் பிரமாண்டமான ஒரு கோவிலைக் கண்டேன். மிகச் சரியாக அந்த தேபான் படை யணியின் வீரர்கள் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டு விழுந்ததாக என் இராக்கினிசுட்டிக்காட்டியிருந்த இடத்திலேயே அந்த தேவாலயம் இருந்தது. அதைச் சுற்றிலும் மிக அதிகமான கட்டடங்கள் இருந்தன. மத்தியில் ஓர் அழகிய நினைவு மண்டபம் நின்றது. 

கீழ்ப்படிதலின் நாடா

இந்தக் காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, இன்னும் உறங்கிக் கொண்டிருக்கையிலேயே நான் எனக்கு உதவி செய்து கொண்டிருந்த குருக்களையும், குருநிலையினரையும் கண்டேன்; ஆனால் சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் போய்விட்டார்கள். மற்றவர்களை என்னோடு தங்கியிருக்கச் செய்ய நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்தேன், ஆனால் சற்று நேரத்திற்குப் பிறகு, அவர்களும் என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய்விட்டார்கள். அதன்பின் நான் மீண்டும் ஒரு முறை அந்த இராக்கினியிடம் திரும்பி உதவி கேட்டேன். “அவர்களை உன்னுடனேயே இருக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று

அறிய விரும்புகிறாயா?” என்று கேட்ட இராக்கினி, “இந்த நாடாவை எடுத்து, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளைக் கட்டு” என்று அறிவுரையும் தந்தார்கள். பக்தி வணக்கத்தோடு நான் அந்த வெள்ளை நாடாவை அவர்களுடைய கையினின்று எடுத்தேன். அதன் மீது கீழ்ப்படிதல் என்னும் வார்த்தை எழுதப்பட்டிருந்ததை நான் கவனித்தேன். 

நான் உடனடியாக இதை முயற்சி செய்து பார்க்க விரும்பி, தாங்களாகவே விரும்பி ஊழியம் செய்ய வந்த இந்த மனிதர் களுடைய நெற்றிகளை அந்த நாடாவால் கட்டத் தொடங்கினேன். அந்த நாடா அற்புதங்களைச் செய்தது. நான் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கையில், என் உதவி யாளர்கள் அனைவரும் என்னை விட்டுச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, என்னுடனேயே தங்கி விட்டார்கள். இவ்வாறு எங்கள் சபை பிறந்தது.

நான் இன்னும் மிக ஏராளமான காரியங்களைக் கண்டேன். ஆனால் அவற்றை இப்போது விவரிக்க வேண்டிய தேவையில்லை. அந்நேரம் முதல் ஆரட்டரிகள், சபை, வெளியாட்களின் அந்தஸ்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைக் கையாள வேண்டிய விதம் ஆகியவை தொடர்பாக, உறுதியான, அசைவுறாத நிலத்தில் நான் நடந்து வந்திருக்கிறேன். 

எழக்கூடிய எல்லாச் சிரமங்களையும் நான் ஏற்கனவே முன்கூட்டியே கண்டிருக்கிறேன். அவற்றை வெற்றி கொள்வது எப்படி என்று அறிந்தும் இருக்கிறேன். என்னால் துல்லியமாக, அங்குலம் அங்குலமாக, என்ன நடக்கப் போகிறது என்று காண முடிகிறது, எந்தத் தயக்கமும் இன்றி நான் முன்னேறிச் செல்கிறேன். 

(கனவுகளில்) கோவில்களையும், பள்ளிகளையும், விளையாட்டுத் திடல் களையும், சிறுவர்களையும், எனக்கு உதவி செய்த துறவற ஊழியர்களையும் குருக்களையும் நான் கண்டு, இந்த முழு அப்போஸ்தலத் துவத்தையும் நடத்திச் செல்வது எப்படி என்று கற்றுக் கொண்ட பிறகுதான், நான் அவற்றை மற்றவர்களுக்குச் சொல்ல விரும்பினேன், அது உண்மையாகவே நிகழ இருப்பது போல அவர்களிடம் பேசினேன். 

இதனால்தான் ஏராளமான மக்கள் நான் முட்டாள் தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தார்கள், எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நம்பினார்கள்.