தேவமாதாவில் அன்றி, கிறீஸ்துவை வேறு எங்கும் பெற்றுக்கொள்ள முடியாது!

சேசுநாதர் தம் திருமாதாவின் மாம்சத்தின் மாம்சமும், அவர்களது இரத்தத்தின் இரத்தமுமாக இருக்கிறார். ஏவாளைப் பற்றி ஆதாம், "இவள் என் எலும்பின் எலும்பும், என் மாம்சத்தின் மாம்சமுமாக இருக்கிறாள்" (ஆதி 2:23) என்று சொல்ல முடியுமென்றால், மாமரி இன்னும் எவ்வளவோ அதிக உரிமையோடு சேசுவை, "என் மாம்சத்தின் மாம்சமும், என் இரத்தத்தின் இரத்தமுமானவர்' என்று அழைக்க முடியும். ''மாசு மறுவற்ற கன்னிகையிடமிருந்து" எடுக்கப்பட்டு, சேசுவின் மாம்சம் மரியாயின் தாய்மையுள்ள மாம்சமாகவும், அவருடைய திரு இரத்தம் மாமரியின் தாய்மையின் இரத்த மாகவும் இருக்கிறது என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார். ஆகவே சேசுவை மாமரியிடமிருந்து பிரிப்பது என்பதற்கு சாத்தியமே இல்லை.

அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுவதாவது: "நாம் நம் எல்லாச் செயல்களையும் அதிக உத்தம விதமாய், சேசுவின் வழியாக, சேசுவுடன், சேசுவுக்காகச் செய்வதற்கு ஏதுவாக,

அவற்றை நாம் மரியாயின் வழியாக, மரியாயுடன், மரியாயிடம், மரியாயிக்காகச் செய்ய வேண்டும்.

மரியாயின் உணர்வால் நடத்தப்பட விரும்பும் ஆன்மா செய்ய வேண்டியவை : 

(1) தன் சொந்த உணர்வை விட்டு விட வேண்டும். தன் சொந்தக் கருத்துக்களை விட வேண்டும். ஏதாவது ஒன்றைச் செய்யத் துவக்குமுன் அதில் தன் சொந்த விருப்பத்தை ஒதுக்கிவிட வேண்டும். உதாரணமாக, தியானம் செய்யுமுன் திவ்ய பலிபூசை செய்யுமுன், அல்லது பூசை காணுமுன், நற்கருணை அருந்து முன், நம் சொந்த விருப்பத்தை விட்டுவிட வேண்டும். ஏனென்றால், நம்முடைய உணர்வின் இருண்ட தன்மையும், நம் விருப்பம், நம் செயல் இவற்றின் தீமையும், நமக்கு நன்மையானவை போலத் தோன்றினாலும் நாம் அவற்றின்படி நடந்தால், மரியாயின் உணர்வைத் தடை செய்து விடுவோம்.

(2) மாதா எப்படி விரும்புவார்களோ அவ்வாறு நடத்தப்படும்படி நாம் அவர்களின் விருப்பங் களுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும். மரியாயின் கன்னிமை பொருந்திய கரங்களில் நம்மைக் கொடுத்து அங்கேயே நம்மை நாம் விட்டுவிட வேண்டும். எவ்வாறெனில், ஒரு தொழிலாளியின் கையில் விடப்பட்ட கருவியைப் போலவும், அல்லது ஒரு இசை வல்லுனன் கையில் இசைக்கருவி போலவும் அவ்வாறு விட்டுவிட வேண்டும். கடலில் எறியப்பட்ட கல்லைப் போல் நாம் நம்மை மாதாவிடம் இழந்து, கையளித்து விட்டுவிட வேண்டும். இதை ஒரு வினாடியில், ஒரு நினைவால், நம் சித்தத்தின் ஒரு சிறு அசைவால் செய்து விடலாம். அல்லது சில வார்த்தைகளில் பின்வருமாறு அது செய்யப்படலாம்: "என் நல்ல தாயே, என்னை நான் உங்கள் கரங்களில் விட்டு விடுகிறேன்." இவ்வாறு செய்யும் ஐக்கிய முயற்சியில் இனிமை எதையும் நாம் உணராதிருக்கலாம். ஆனால் அதற்காக அது உண்மையில்லாமல் போகாது. ஒருவன் "என்னைப் பசாசுக்குக் கொடுக்கிறேன்" (ஆண்டவர் காப்பாராக!) என்று இதே உண்மையுடன் சொல்வானானால், காணக்கூடிய மாற்றம் எதுவும் அதில் இல்லாதிருந்தாலும், அவன் பசாசுக்கே உண்மையில் சொந்தமாகி விடுகிறான்! அதே போலத்தான்.

(3) ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் போதும், அதற்குப் பின்னும் இடைக்கிடையே இந்த ஐக்கிய அர்ப்பண முயற்சியை நாம் புதுப்பிக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக அப்படிச் செய்கிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக நாம் அர்ச்சிக்கப்படுவோம். அவ்வளவு சீக்கிரமாக கிறீஸ்துநாதருடன் ஐக்கியம் அடைவோம். மரியாயிடம் ஐக்கியம் கொள்வதன் தவிர்க்க முடியாத விளைவுதான் கிறீஸ்துவுடன் நமக்குக் கிடைக்கும் ஐக்கியம். ஏனென்றால் சேசுவின் உணர்வுதான் மரியாயின் உணர்வாக இருக்கிறது" (மரியாயின் மீது உண்மை பக்தி, பக்கங்கள் 200,201).