இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பதினான்கு மேஜைகள்!

1860 ஆகஸ்ட் 5 அன்று, டொன் போஸ்கோ உதவி செய்ய, டொன் ருவா தமது முதல் ஆடம்பரப் பாடற்திருப்பலியை நிறைவேற்றினார். அந்த நாள் முழுவதும், எல்லோரும் அவருக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டேயிருக்க, அவர் அந்த வாழ்த்துக்களையெல்லாம் டொன் போஸ்கோவை நோக்கித் திருப்பி விட முயன்று கொண்டிருந்தார். இந்நாளின் கொண்டாட்டம் உண்மையான சகோதர நேசத்தின் ஓர் அற்புதமான காட்சியாக இருந்தது. அங்கே அந்நேரத்தில் இருக்காத யாரும், எல்லோருடைய ஆழ்ந்த மகிழ்ச்சியையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

தமது “நல்லிரவு” வாழ்த்துரையில் பின்வரும் கனவைச் சொல் வதன் மூலம் டொன் போஸ்கோ அன்றைய கொண்டாட்டத்தை முடித்து வைத்தார்:

என் சிறுவர்கள் மிக வசீகரமான ஒரு தோட்டத்தில் இருந்ததை நான் கண்டேன். அவர்கள் மூன்று வெவ்வேறு மொட்டை மாடிகள் போன்ற மட்டங்களில், அரங்குகளில் உள்ளது போல் அமைக்கப்பட்டிருந்த பதினான்கு நீண்ட மேஜைகளில் அமர்ந்திருந்தார்கள். எல்லாவற்றிற்கும் உயரத்தில் இருந்த மேஜைகள் எவ்வளவு உயரத்தில் இருந்தன என்றால், அவற்றைக் காண்பதே அரிதாயிருந்தது.

எல்லாவற்றிற்கும் கீழ் வரிசையில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக் கையிலான சிறுவர்கள் ஒரு மேஜையருகில் அமர்ந்திருந்தார்கள். அந்த மேஜையில் குப்பையும் உமியும் கலந்த, நாற்றம் அடிக்கிற, மண்கலந்த ரொட்டித் துண்டுகளைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பரிதாபமான இந்தச் சிறுவர்கள் தங்கள் தீவனத் தொட்டியருகில் இருக்கும் பன்றிகளைப் போலிருந்தார்கள். அந்தக் குப்பையை வீசியெறிந்து விடும்படி அவர்களிடம் சொல்லத்தான் நான் விரும்பினேன். ஆனால் அதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஏன் அப்படிப்பட்ட வெறுப்புக்குரிய மீத உணவு பரிமாறப்பட்டுள்ளது என்று மட்டும்தான் என்னால் கேட்க முடிந்தது. “நாங்கள் எங்களுக் காகவே தயார் செய்த அப்பத்தைத்தான் நாங்கள் உண்ண வேண்டி யுள்ளது. எங்களிடம் இருப்பது இது மட்டும்தான்” என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

இந்த மேஜை சாவான பாவ நிலையைக் குறிக்கிறது. பரிசுத்த வேதாகமம் கூறுவது போல, “அவர்கள் மெய்யான அறிவைப் பகைத்ததுமன்றி, தேவ பயத்தையும் கைக்கொள்ளவில்லை; அவர்கள் என் ஆலோசனையை அலட்சியம் செய்தார்கள், என் கண்டனம் முழுவதையும் புறக்கணித்ார்கள். . . இப்போது அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை உண்பார்கள், தாங்களே தயாரித்ததன் மேல் பிரியங்கொள்வார்கள்” (பழ.1:29-31).

உயர் மட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மேஜைகளின் அருகில் அதிக மகிழ்ச்சியானவர்களாகத் தோன்றிய சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள், நல்ல அப்பத்தை உண்டார்கள். அவர்கள் மிக அழகாக இருந்தார்கள். அவர்களுடைய அழகிய தோற்றமும், பிரகாசமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தன. அவர் களுடைய மேஜைகளும் விசேஷ லினன் துணி விரிக்கப்பட்டு, பளபளக்கும் கிளைவிளக்குகளாலும், மின்னும் அழகிய வேலைப் பாடுகளுள்ள மட்பாத்திரங்களாலும், வர்ணிக்க முடியாத மிகக் கவர்ச்சியான மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தட்டுக் களில் மிகச் சுவையான உணவுகளும், அபூர்வமான பதார்த்தங்களும் இருந்தன. இந்தச் சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாயிருந்தது. இந்த மேஜைகள் மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி பாவிகளின் நிலையைக் குறித்தது.

இறுதியாக, எல்லாவற்றையும் விட உயரத்தில் இருந்த மேஜையில் என்னால் விவரிக்க முடியாத ஒரு வகையான அப்பம் இருந்தது. அது தங்க, சிவப்பு நிறமாயிருந்தது. சிறுவர்களின் ஆடை களும், முகங்களும் கூட அதே நிறங்களில் இருந்தன. அவை ஒரு பிரகாசமான ஒளியை வீசிக் கொண்டிருந்தன. இந்த எல்லாச் சிறுவர் களும் மகிழ்ச்சியால் ததும்பிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒவ்வொருவனும் தன் மகிழ்ச்சியை மற்றவர்களோடு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்தனர். அவர்களுடைய அழகும், ஒளியும், அவர்களுடைய மேஜையின் மகத்துவமும் மற்ற எல்லா ருக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தன. இந்த மேஜைகள் தங்கள் ஞானஸ்நான மாசற்றதனத்தைப் பழுதின்றிக் காத்துக் கொண்ட வர்களின் நிலையைக் குறித்தது. பரிசுத்த வேதாகமம் மாசற்றவர் களையும், மனந்திரும்பிய பாவியையும் பற்றிச் சொல்வது போல: “எனக்குச் செவிகொடுத்திருப்பவன் பயமின்றி இளைப்பாறுவான்; தீமைகளைப் பற்றிய அச்சமின்றி, சமாதானத்தை அனுபவிப்பான்” (பழ.1:33).

இந்தக் கனவில் அனைத்திலும் அதிக ஆச்சரியத்திற்குரிய அம்சம் என்னவெனில், இந்தச் சிறுவர்களில் ஒவ்வொருவனையும் நான் அறிந்திருந்தேன் என்பதுதான். இதன் காரணமாக, அவர்களில் ஒருவனை இப்போது நான் காணும்போது, அந்த மேஜைகளில் ஒன்றில் அவன் உட்கார்ந்திருப்பதை நான் உடனடியாகக் காண்பது போலிருக்கிறது.

இந்த அசாதாரணக் காட்சியால் நான் வசீகரிக்கப்பட்டிருக் கையில், சற்று தூரத்தில் ஒரு மனிதனை நான் கவனித்தேன். நான் அவரிடம் ஓடி, கேள்விகள் கேட்க நினைத்தேன். ஆனால் வழியில் கால் இடற, நான் கண்விழித்து விட்டேன். உங்களுக்கு ஒரு கனவைச் சொல்லுமாறு நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். நானும் அப்படியே செய்து விட்டேன். கனவுகளுக்குரிய மதிப்புக்கு மேல் அதிக முக்கியத்துவத்தை இந்தக் கனவுக்கு நீங்கள் தர வேண்டாம்.

மறுநாள் டொன் போஸ்கோ ஒவ்வொரு சிறுவனிடமும், அவன் கனவில் அமர்ந்திருந்த மேஜை எது என்று கூறினார். அவர்கள் எவ்வளவு உயரத்தில் அல்லது எவ்வளவு தாழ்நிலையில் நின்று கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுவதற்காக அவர் அவர்களை உச்சத்திலிருந்த மேஜை முதல் அனைத்திற்கும் கீழே இருந்த மேஜை வரை வரிசைப்படுத்தி நிற்க வைத்தார். ஒருவன் கீழ்நிலையிலுள்ள ஒரு மேஜையிலிருந்து மேலேயுள்ள ஒரு மேஜைக்குப் போக முடியுமா என்று கேட்கப்பட்ட போது, எல்லாவற்றிற்கும் மேலே உள்ள மேஜையைத் தவிர மற்ற எல்லா மேஜைகளுக்கும் செல்லமுடியும் என்று அவர் பதிலளித்தார். அந்த முதல் மேஜையிலிருந்து தவறி விழுந்தவர்கள் இனி அதை அடைய முடியாது. ஏனெனில் அந்த மேஜை தனிப்பட்ட விதமாக தங்கள் ஞானஸ்நான மாசற்ற தனத்தைக் காத்துக் கொண்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய எண்ணிக்கை சிறிதாக இருக்க, மற்ற மேஜை களருகில் அமர்ந்திருந்தவர்களின் எண்ணிக்கையோ மிகப் பெரிதாயிருந்தது.