இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துவினுடைய மாதாவே!

“சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே” என்னும் வார்த்தைகளில் தேவதாயின் முழு மகத்துவமும் (dignity), மகிமையும் (glory) அடங்கியுள்ளன. எனினும் கன்னிமாமரியை “தேவனின் தாயே” என்று அழைப்பதின் முழுப் பொருளையும் அற்ப மனிதனின் சொற்பப் புத்தியால் கண்டுபிடிக்க முடியாது. எனவே, தேவனாயிருந்தும், மனிதனாய்ப் பிறந்த கிறீஸ்துநாதரைப் பெற்றவர்கள் கன்னிமாமரி என்னும் உண்மையை, “கிறீஸ்துவினுடைய மாதாவே” என்னும் சிறப்புப் பட்டத்தால் பூவுலகோருக்கு எடுத்துக் காட்டுகிறது திருச்சபை.

தான் பெற்ற மகனின் சீரிய குண நலன்களாலும், சிறந்த பிறர்சிநேகச் செயல்களாலும் ஓர் தாய் உலகோரால் போற்றவும் புகழவும் படுவது யாமறிந்த உண்மை. கன்னிமாமரியோ, தேவ சுபாவத்தையும், மனித சுபாவத்தின் சகல பண்புகளையும் சம்பூரணமாய்க் கொண்ட கிறீஸ்துவைத் தன் ஏக மகனாக ஈன்றவர்கள். ஆதலின் அவர்களுடைய மகிமையை வரையறுத்துச் சொல்லல் எளிதல்ல.

நமது ஆண்டவர் மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமானவர். அவரே ஞானம், அறிவு, தயை, தாழ்ச்சி, இரக்கம், சாந்தம், பிறர்சிநேகம், என்னும் எல்லாப் புண்ணியங் களுக்கும் ஊற்றும் ஊறணியுமாயிருக்கிறார். மக்களின் மனதைக் கவரவும், கனிந்துருகச் செய்யவும் கூடிய இப்புண்ணியங்களோடு, அன்பே உருவாக அவதரித்த சேசுநாதர் மானிடருக்குச் செய்துள்ள நன்மைகள், அன்புச் செயல்கள் எண்ணிலடங்கா. 

ஆதித்தாய் தந்தையரின் பாவத்தால் நாம் இழந்த ஞான உயிரை விலைமதிக்கப்படாத தம் இரத்தக் கிரயத்தால் மீண்டும் நமக்கு அடைந்து கொடுத்தவர் அவரே. எங்கும் சமாதானம் நிலவ, சமரச உணர்ச்சியைத் தூண்டி, சாங்கோபாங்க முறைகளைப் போதித்து, சத்திய நெறியை, சமாதான வழியைக் காட்டினவர் கிறீஸ்துநாதரன்றி வேறு யார்? இதனாலன்றோ வேறு எந்த அதிகாரத்தாலும் எதிர்த்துத் தவிர்க்கக்கூடாத தப்பறைகளையும், பாவச் செயல்களையும் கத்தோலிக்கத் திருச்சபை கண்டித்துத் தடுத்து அவற்றிற்கு மாறான உண்மைகளையும் புண்ணியங்களையும் மக்களுக்கு இன்றும் போதித்து வருகின்றது.

அன்றியும் மனிதன் யார், அவனுடைய கடைசிக் கதி எவ்வளவு மகத்தானது, அக்கதியை அடைய அவன் பின்பற்ற வேண்டிய மெய்யான வழி எது என்பதைப் படிப்பித்தவர் நமது ஆண்டவரே. பெற்றோரை நேசித்து, அவர்களுக்குக் கீழ்ப்படிதல் பிள்ளைகளின் கடமை என்பதை நாசரேத்தூரில் பிரமாணிக்கமுடன் நடந்து காட்டினவரும் அவரன்றோ? இன்னும் முதலாளி--தொழிலாளி சச்சரவைச் சமரசப்படுத்தும் வழி, சகோதர ஒற்றுமை, அன்பு என்று அடித்து, அடித்து எடுத்துரைத் தவர் யார்? 

விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் அவைகளிலடங்கிய சகலத்துக்கும் ஆதிகாரணராயிருந்தும் மாடடைக் குடிலில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சிலுவை மரத்தில் மரித்தது யாருக்காக? எதற்காக? அவர் சென்ற சிலுவைப் பாதையில் அவரைப் பின்சென்று, அவருடைய பாடுகளைத் தியானிப்பவர், தம் அனுதினச் சிலுவையைப் பொறுமையோடு சுமக்க வேண்டியதின் இரகசியத்தை அறிகின்றனர். துன்பம் பல நிறைந்த பூலோக வாழ்க்கையை இன்பம் நிறைந்த வாழ்க்கையாக மாற்றுகின்றனர். சுருங்கக் கூறின் உலகத்துக்கு ஒளியும் வழியும், உயிருமாயிருக்கிறவர் கிறீஸ்துநாதர் ஒருவரே.

இந்தத் தேவ மனிதனின் மகிமை பெருமையிலும், புகழ்ச்சியிலும் பங்குபெற உரிமையுள்ளவர் யார்? அவருடைய தாய்; அர்ச். கன்னிமாமரியே கிறீஸ்துநாத ரைப் பெறும் பாக்கியம் பெற்ற கன்னித்தாய். இவை யாவும் நாம் அறிவோம். அறிந்தும், நம் ஆண்டவரையும் அவர் தம் திருத்தாயாரையும் எவ்விதம் நேசிக்கின்றோம்? கிறீஸ்துவர்களாகப் பிறந்தும் கிறீஸ்தவனுக்குள்ள அடை யாளம் எதுவுமின்றி வாழ்பவர் எத்தனைபேர்! 

நம்மை நரக வாயிலிருந்து மீட்டு, தமது இரத்தத்தால் நமது ஆத்துமத்தைக் கழுவி தேவ இஷ்டப்பிரசாத வெண் ணாடையால் அதை அவர் அலங்கரித்தார். நாம் நாடித் தேடுவதோ பாவச் சேறு; விரும்பித் தின்பதோ விலக்கப்பட்ட கனி. நம்மை கடவுளோடு ஐக்கியப்படுத்தி அவரது அன்புக்கு உரியவர்களாக்க, கடவுளான அவர் நம்மில் ஒருவராக இவ்வுலகில் பிறந்தார். நாமோ அவருடைய அன்புக் கட்டளைகளை அடிக்கடி மீறி அவருடைய சிநேகத்தை உதறித் தள்ளுகிறோம். 

இதனினும் மதியீனம் வேறு உண்டா? இதனினும் நன்றிகெட்ட செயல் வேறு இருக்க முடியுமா? நம்மிடம் உணர்ச்சி ததும்பும் ஓர் உண்மையுள்ளம் உண்டானால் நமது நன்றிகெட்ட தன்மையை உணர்ந்து வெட்கமும் துக்கமும் கொள்வோம்; ஆண்டவருக்காக ஜீவிப்பதையே நம் வாழ்க்கை இலட்சியமாகக் கொள்வோம்.

“ஓ மரியாயே! எங்கள் ஆண்டவரைப் பெற்று, அவரின் நேசத் தாயாராகும் பெரும் பேறு பெற்ற எங்கள் அன்னையே! இதோ உமது பிள்ளைகளைக் கருணைக் கண்கொண்டு நோக்கியருளும். உமது பிரிய குமாரனிடத்தில் நீர் கொண்ட நேசத்தால், உமது தாயுள்ளம் அன்பினால் என்றும் பற்றி எரிந்தது போல், எங்கள் உள்ளங்களும் தேவசிநேக அக்கினியால் பற்றியெரியச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.” 


கிறீஸ்துவினுடைய மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!