இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆத்தும இரட்சணிய தாகம்!

ஆத்தும இரட்சணியத்தின் மீதும், மனிதர்களின் ஆன்மாக்களில் தேவசிநேகத்தின் வளர்ச்சிக்கான தாகமும் நேசத்தினின்றே புறப்படுகின்றன என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். அதன்பின் அவர் தொடர்ந்து, ஆன்ம தாகம் இல்லாதவன் தான் கடவுளை நேசிக்கவில்லை என்று காட்டுகிறான், கடவுளை நேசிக்காதவன் இழக்கப்படுகிறான் என்கிறார். "கடவுளை மகிமைப்படுத்த நீ விரும்பினால், அதற்கு, ஆன்மாக்களின் இரட்சணியத்திற்காக உழைப்பதை விட சிறந்த வழி இல்லை'' என்று அர்ச். லாரென்ஸ் யூஸ்தீனியன் கூறுகிறார். "ஆத்தும தாகமுள்ள பத்து குருக்களை எனக்குத் தாருங்கள், நான் உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன்'' என்று அர்ச். பிலிப் நேரியார் அடிக்கடி கூறுவது வழக்கம். கீழ்த்திசையில் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் ஒற்றை ஆளாக சாதிக்காதது என்ன இருந்தது? அர்ச். பேட்ரிக்கும், அர்ச். வின்சென்ட் ஃபெரரும் ஐரோப்பாவில் செய்யாதது என்ன இருந்தது? குருக்கள் உலகின் இரட்சகர்களாக இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.

ஆன்மாக்களின் இரட்சணியத்தைக் கடவுள் எவ்வளவு ஏக்கத்தோடு ஆசிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, மனிதனின் மீட்பிற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை தியானிப்பது போதுமானது. ""நான் பெறவேண்டிய ஸ்நானம் ஒன்று உண்டு; அது நிறைவேறுமளவும் எவ்வளவோ நெருக்கிடைப் படுகிறேன்'' (லூக்.12:50) என்று சேசுகிறீஸ்துநாதர் கூறியபோது, அவர் இந்த ஆசையைத்தான் தெளிவாக வெளிப்படுத்தினார். மனிதர்கள் இரட்சிக்கப்படும்படியாக மீட்பின் அலுவல் நிறைவேறுவதைக் காண அவர் கொண்டிருந்த ஏக்கப்பற்றுதலின் காரணமாக, அவர் தாம் தவித்துச் சோர்ந்து போவதாக உணர்ந்தார். இதிலிருந்து, ஆத்துமங்களின் இரட்சணியத்தை விடக் கடவுளுக்கு உகந்ததும், அதிகப் பிரியமானதும் வேறு எதுவுமில்லை என்ற நியாயமான முடிவுக்கு அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் வருகிறார். அவருக்கு முன்பாக அர்ச். ஜஸ்டின், மற்றவர்களை அதிக நல்லவர்களாக்க உழைப்பதை விட கடவுளுக்கு அதிகப் பிரியமானது எதுவுமில்லை என்று கூறியிருந்தார். நம் ஆண்டவர் ஒரு முறை ஒரு பரிசுத்த குருவானவரிடம்: ""பாவிகளின் இரட்சணியத்திற்காக உழைப்பாயாக, ஏனெனில் இதுவே எனக்கு அனைத்திலும் அதிகப் பிரியமானது'' என்றார். இந்த அலுவல் கடவுளுக்கு எவ்வளவு பிரியமானது என்றால், அலெக்சாந்திரியாவின் கிளமெண்ட் கூறுவது போல, மனிதனின் இரட்சணியமே கடவுளின் ஒரே கவலையாக இருக்கிறது. இதன் காரணமாக, அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் ஒரு குருவிடம் பேசும்போது, "கடவுளை மகிமைப்படுத்த நீ விரும்பினால், அதற்கு, ஆன்மாக்களின் இரட்சணியத்திற்காக உழைப்பதை விட சிறந்த வழி இல்லை'' என்றார். அர்ச். பெர்னார்ட் கூறுகிறபடி, உலகம் முழுவதையும் விட ஒரே ஒரு ஆன்மா கடவுளின் கண்களில் அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது. மேலும், அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பரின் கருத்துப்படி, உன் உடைமைகளை யெல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதை விட, ஒரே ஒரு ஆத்துமத்தை மனந்திருப்புவதன் மூலம் நீ கடவுளை அதிகம் மகிழ்விக்கிறாய். மந்தையினின்று பிரிந்து போன ஒரே ஒரு ஆட்டின் மீட்பு முழு மந்தையின் மீட்பைப் போல கடவுளுக்குப் பிரியமானது என்று தெர்த்துல்லியன் உறுதிப்படுத்துகிறார். ""என்னைச் சிநேகித்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவசுதனைப் பற்றும் விசுவாசத்தினாலே ஜீவிக்கிறேன்'' என்று அர்ச். சின்னப்பர் எழுதினார் (கலாத்.2:20). சேசுக்கிறீஸ்துநாதர் எல்லா மனிதர்களுக்காகவும் மரித்தது போலவே, எந்தத் தயக்கமுமின்றி ஒரே ஒரு ஆன்மாவுக்காகவும் மரித்திருப்பார் என்று இந்த வார்த்தைகள் குறித்துக் காட்டுவதாக அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். காணாமல் போன நாணயணத்தைப் பற்றிய உவமையின் மூலம் நம் ஆண்டவரும் இதையே நாம் புரிந்து கொள்ளச் செய்கிறார். ""மனிதன் கடவுளின் கடவுளாக இருப்பது போலவும், கடவுளின் சொந்த, தெய்வீக இரட்சணியம் மனிதனைச் சார்ந்திருப்பது போலவும், மனிதன் இல்லாமல் தாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பது போலவும், மனிதர்கள் அல்ல, மாறாக தாம்தாமே பாராட்டப்படும்படியாக அவர் தேவதூதர்கள் அனைவரையும் அழைக்கிறார்'' என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார்.

அந்தோ, என் சேசுவே, என் மீட்பரே, உண்மையான விசுவாசத்தைக் கொண்டுள்ளவர்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்! ஓ சர்வேசுரா, மனுக்குலத்தின் பெரும் பகுதி பிரமாணிக்கமின்மை மற்றும் தப்பறையின் இருளில் புதைக்கப்பட்டுக் கிடக்கிறது! மனிதர்களின் இரட்சணியத்திற்காக நீர் மரணம் வரைக்கும், அதுவும் சிலுவை மரணம் வரைக்கும் உம்மைத் தாழ்த்தினீர். ஆனால் அதே மனிதர்களோ நன்றியற்றவர்களாக உம்மை அறிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆ, எல்லாம் வல்ல சர்வேசுரா, உன்னதமான, அளவற்ற நன்மைத்தனமே, நான் உம்மை மன்றாடுகிறேன், எல்லா மனிதரும் உம்மை அறிந்து நேசிக்கச் செய்தருளும்.

ஆன்ம தாகம் நேசத்திலிருந்து புறப்பட்டு வருகிறது என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். எனவே, அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறபடி, நம் அயலானின் நலனில் நமக்குள்ள தாகத்தை விட நம் பிரமாணிக்கத்திற்கும், அன்பிற்கும் வேறு சிறந்த நிரூபணத்தைக் கடவுள் கொண்டிருக்க முடியாது. அர்ச். இராயப்பர் தம்மை நேசிக்கிறாரா என்று நம் இரட்சகர் மும்முறை அவரைக் கேட்டார்: ""யோனாவின் குமாரனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?'' (அரு.21:17). இராயப்பரின் அன்பை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, ஆன்மாக்களின் மீது அக்கறை கொண்டிருப்பதை இராயப்பரின் அன்புக்கு வேறு நிரூபணத்தை சேசுநாதர் அவரிடம் கேட்கவில்லை. ""அவர் அவரிடம், என் ஆடுகளை மேய் என்றார்'' (அரு.21:17). ""நீ என்னை நேசிக்கிறாய் என்றால், உண் பணத்தைத் தூர எறிந்து விடு, உபவாசமிரு, கடும் உழைப்பினால் உன்னையே உருக்கிக் கொள் என்றெல்லாம் சேசுநாதர் இராயப்பரிடம் கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. என் ஆடுகளை மேய் என்று மட்டும்தான் அவர் சொல்கிறார்'' என்று அர்ச். கிறிசோஸ்தோம் கூறுகிறார்.

அர்ச். தெரேசம்மாள் வேதசாட்சிகள் மற்றும் கடவுளின் திராட்சைத் தோட்டத்தின் பரிசுத்த வேலையாட்களின் வரலாறுகளை வாசித்த பிறகு, முந்தினவர்களை விடப் பிந்தினவர்கள் பாவிகளின் இரட்சணியத்திற்காக உழைப்பதன் மூலம் கடவுளுக்குத் தரும் மாபெருஐம் மகிமையின் காரணமாக, பிந்தியவர்களின் மீதே தான் நேசப் பொறாமை கொண்டதாகக் கூறினாள். ஆன்ம இரட்சணிய அலுவலில் ஈடுபட்டிருந்த குருக்களின் பாதங்கள் பட்ட தரையை முத்தமிடுவது அர்ச். சியென்னா கத்தரீனம்மாளின் வழக்கமாக இருந்தது. பாவிகளின் இரட்சணியத்தின் மீது அவளுக்கு இருந்த தாகம் எவ்வளவு தீவிரமானதாக இருந்தது என்றால், எந்த ஓர் ஆன்மாவும் நரகத்திற்குள் நுழையாதபடி, அந்த வாதைகளின் ஸ்தலத்தின் வாயிலில் தான் வைக்கப்பட வேண்டுமென அவள் ஆசித்தாள். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏராளமான ஆன்மாக்கள் அழிந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். செயலற்றவர்களாக, அவர்களது அழிவைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாக மட்டும் நாம் இருந்து விடப் போகிறோமா?

தமது இனத்தாரின் இரட்சணியத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு, சிறிது காலம் சேசுக்கிறீஸ்துநாதரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கத் தாம் சித்தமாயிருப்பதாக அர்ச். சின்னப்பர் கூறினார்: ""மாம்ச உறவின் படி எனக்கு உறவினர்களாகிய என் சகோதரருக்காக நானே கிறீஸ்து நாதரை விட்டுச் சபிக்கப்பட்டவனாயிருக்க விரும்புவேன்'' (உரோ. 9:3). அனைவரும் இரட்சிக்கப்படும்படியாக, உலகில் எத்தனை பாவிகள் இருக்கிறார்களோ, அத்தனை முறை மரணங்களை ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக அர்ச். பொனவெந்தூர் அறிக்கையிட்டார். தம்மால் தொடர்ந்து ஆத்துமங்களுக்கு உதவி செய்ய முடியும் என்றால், தம் சொந்த இரட்சணியத்தின் உறுதிப்பாட்டோடு இறப்பதைவிட, அந்த உறுதி இன்றி வாழ்ந்து கொண்டிருப்பதையே தாம் விரும்புவதாக அர்ச். இஞ்ஞாசியார் கூறுவது வழக்கம். ""ஆனிமாம் ஸால்வாஸ்தி; ஆனிமாம் தூவாம் ப்ரேதெஸ்தினாஸ்தி - வேறு ஒருவனின் ஆத்துமத்தை இரட்சிப்பதன் மூலம் நீ உன் சொந்த இரட்சணியத்தை முன்குறித்து வைக்கிறாய்'' என்று அர்ச். அகுஸ்தினார் கற்பிக்கிறார். மேலும், அர்ச் யாகப்பர், தவறின வழியினின்று பாவியை மனந்திருப்பியவன் அவனது ஆத்துமத்தை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவான் என்று எழுதியிருக்கிறார் (5:20).

சேசுநாதர் ஒருமுறை வணக்கத்துக்குரிய செராஃபினா த காப்ரி என்பவளிடம்: ""என் மகளே, உன் ஜெபங்களால் ஆத்துமங்களை இரட்சிக்க எனக்கு உதவி செய்'' என்றார். அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாளிடம்: ""மதலேன், கிறீஸ்தவர்கள் எப்படிப் பசாசின் கரங்களில் இருக்கிறார்கள் என்று பார். என் தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் தங்கள் ஜெபங்களால் அவர்களை விடுவிக்காவிடில், அவர்கள் விழுங்கப்படுவார்கள்'' என்று அவர் கூறினார். இதன் காரணமாக, இந்தப் புனிதை தன் துறவற சகோதரிகளிடம்: ""என் சகோதரிகளே, கடவுள் நம்மை உலகிலிருந்து பிரித்து வைத்திருப்பது நம் சொந்த நன்மைக்காக மட்டுமல்ல, மாறாக, பாவிகளின் நன்மைக்காகவும்தான்'' என்று அறிவித்தாள். மற்றொரு சந்தர்ப்பத்தில், ""இழக்கப்பட்ட ஏராளமான ஆத்துமங்களுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டும். பக்திப் பற்றுதலோடு நாம் கடவுளிடம் அவர்களுக்காக மன்றாடியிருந்தோம், என்றால், ஒருவேளை அவர்கள் தண்டனைத் தீர்ப்படைந்திருக்க மாட்டார்கள்'' என்றாள் அவள்.

ஓ என் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே, நீர் பூமியில் செய்து கொண்டிருந்த அதே வேலையைச் செய்ய, அதாவது என் எளிய உழைப்பைக் கொண்டு, ஆத்துமங்களின் இரட்சணியத்தில் உமக்கு உதவ என்னையும் நீர் அழைத்ததற்காக, நான் எப்படிப் போதுமான அளவுக்கு உமக்கு நன்றி செலுத்துவேன்? மிகக் கனமான விதத்தில் உம்மை நோகச் செய்து, மற்றவர்களும் உம்மை நோகச் செய்யக் காரணமாக இருந்த பிறகு, இந்த மகத்துவத்திற்கு நான் எப்படித் தகுதி பெற்றேன்? என் பலம் முழுவதையும் கொண்டு நான் உமக்கு ஊழியம் செய்வேன். இதோ, உமக்குக் கீழ்ப்படியுமாறு என் உழைப்பு முழுவதையும், என் இரத்தத்தையும் கூட நான் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். உமக்குத் தகுதியுள்ளபடி அனைவராலும் நீர் நேசிக்கப்படுவதைக் காண்பதைத் தவிர வேறு ஆசை எதுவும் எனக்கில்லை. மகா பரிசுத்த மரியாயே, எனக்காகப் பரிந்து பேசுபவர்களே, ஆன்மாக்களை மிக அதிகமாக நேசிப்பவர்களே, எனக்கு உதவி செய்யுங்கள்.