இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இராட்சத மிருகங்களின் கூட்டம்!

1865, பிப்ரவரி 24 அன்று, தாம் ஒரு சில நாட்களாக குனேயோ என்னுமிடத்திற்குப் போயிருந்தது ஏன் என்று சபையினருக்குச் சொல்லிவிட்டு (அங்கே அவர் ஆயரோடு தங்கி யிருந்தார்.) டொன் போஸ்கோ தொடர்ந்து பின்வரும் கனவை விவரித்தார்:

முதல் நாள் இரவில் நான் பதினொரு மணி வாக்கில் படுக்கச் சென்றேன். உடனே உறங்கியும் விட்டேன். வழக்கம் போல, நான் கனவு காணத் தொடங்கினேன். ஒரு பழமொழி சொல்கிறபடி, நாக்கு எப்போதும் வலியெடுக்கிற பல்லை நோக்கியே திரும்புவது போல, நான் ஆரட்டரியில் என் அன்பிற்குரிய சிறுவர்களோடு இருப்பதாகக் கனவு கண்டேன். நான் என் எழுதுமேஜை அருகில் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. அதே வேளையில் நீங்கள் மிக உற்சாகமாகவும், உல்லாசமாகவும் கத்திக் கொண்டும், விளையாடிக் கொண்டும், அங்குமிங்கும் ஓடிக் கொண்டும் இருந்தீர்கள். இந்த இரைச்சல் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஏனெனில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, பசாசு எவ்வளவுதான் முயன்றாலும் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க அதனால் முடியாது என்று எனக்குத் தெரியும். இந்தப் பெரும் ஆரவாரத்தைக் கேட்டு நான் மகிழ்ந்து கொண்டிருந்தபோது, திடீரென்று எல்லா இரைச்சலும் நின்று விட்டது. ஒரு மரண அமைதி மைதானத்தை ஆளத் தொடங்கியது. எச்சரிக்கை உயர்வோடு நான் எழுந்து நின்று, என்ன நடந்தது என்று பார்த்தேன்.

ஓய்வறைக்குள் நான் கடந்து போனபோது, திடீரென அச்சமூட்டும் இராட்சத மிருகம் ஒன்று வெளிப்பக்கக் கதவின் வழியாக உள்ளே பாய்ந்து வந்தது. நான் இருப்பதை உணராதது போலத் தோன்றிய அது, தன் தலையையும், கண்களையும் தரையை நோக்கித் தாழ்த்தியபடி, தன் இரையின்மீது பாய இருக்கும் ஒரு மிருகத்தைப் போல நேராக முன்னேறி வந்தது. உங்கள் பாதுகாப்பு பற்றி நடுக்கம் கொண்டவனாக, உங்களுக்கு எதுவும் நடந்திருக்குமோ என்று நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அப்போது, என் ஓய்வறையில் இருந்த ஒன்றைப் போல, அந்த மைதானம் முழுவதுமே இராட்சத மிருகங்களால் நிறைந்திருந்ததை நான் கண்டேன். ஆனால் அவை சற்று சிறியவையாயிருந்தன. என் சிறுவர்களே, நீங்கள் சுவர்களையும், முகப்பு மண்டபங்களையும் நெருக்கிக் கொண்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தீர்கள். ஆனால் உங்களில் பலர் மைதானத்தில் இறந்து விட்டவர்களைப் போலக் கிடந்தீர்கள். இந்தப் பரிதாபமான காட்சி எவ்வளவு அச்சமூட்டுவதாக இருந்தது என்றால், நான் அலறியபடி விழித்தெழுந்தேன். இதன் மூலம் ஆயர் தொடங்கி, கடைசி வேலையாள் வரை எல்லோரையும் நான் எழுப்பி விட்டேன்.

என் அன்புச் சிறுவர்களே, பொதுவாகப் பேசும்போது, கனவுகளுக்கு நாம் எந்தக் கவனமும் தரக்கூடாதுதான். ஆனாலும் அவை நமக்கு நல்லொழுக்கப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும்போது, அவற்றைப் பற்றி நாம் சிந்திக்கலாம். சில காரியங்கள் ஏன் நடக் கின்றன என்று அறிந்து கொள்ள நான் எப்போதும் முயன்று வந்திருக் கிறேன். இந்தக் கனவைப் பொறுத்த வரையும் கூட, நான் அப்படியே செய்வேன். அந்த அரக்க ஜந்து பசாசாக இருக்கலாம். அவன்தான் எப்போதும் நம்மை அழிக்க முயன்றுகொண்டே இருக்கிறான். சில சிறுவர்கள் அவனால் தாக்கப்பட்டு விழுந்தார்கள். அதே வேளையில் மற்றவர்கள் காயப்படாமல் தப்பித்தார்கள். அவனுக்கு அஞ்சாமல் இருப்பது எப்படியென்றும், வெற்றிகரமாக அவனை எதிர்த்து நிற்பது எப்படியென்றும் நான் உங்களுக்குக் காட்டட்டுமா?

கேளுங்கள்: இரண்டு காரியங்களைக் கண்டு பசாசு மரண பயம் கொள்கிறது. அவை: பக்தியார்வத்தோடு வாங்கும் திவ்விய நன்மைகள், மற்றும் அடிக்கடி செய்யும் திவ்விய நற்கருணை சந்திப்புகள்.

நம் ஆண்டவர் உங்களுக்கு நிறைய வரங்களை வழங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அடிக்கடி அவரைச் சந்தியுங்கள்.

ஒரு சில வரங்களை மட்டுமே அவர் தர வேண்டுமென விரும்புகிறீர்களா? அரிதாக மட்டும் அவரை சந்தியுங்கள்.

பசாசு உங்களைத் தாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அபூர்வமாகவே திவ்விய நற்கருணையை சந்தியுங்கள். 

பசாசு உங்களிடமிருந்து பயந்தோட வேண்டுமென விரும்பு கிறீர்களா? அடிக்கடி இயேசுவைச் சந்தியுங்கள். 

பசாசின்மீது வெற்றி கொள்ள விரும்புகிறீர்களா? இயேசுவின் திருப்பாதங்களின் அருகில் தஞ்சமடையுங்கள். 

பசாசால் மேற்கொள்ளப்பட விரும்புகிறீர்களா? இயேசுவைச் சந்திப்பதைக் கைவிட்டு விடுங்கள்.

என் பிரியமுள்ள சிறுவர்களே, நீங்கள் பசாசை வெற்றி கொள்ள விரும்பினால், திவ்விய நற்கருணையை சந்திப்பது அத்தியாவசியமானது. ஆகவே அடிக்கடி இயேசுவைச் சந்தியுங்கள். அப்படிச் செய்வீர்கள் என்றால், பசாசு உங்களுக்கு எதிராக ஒருபோதும் வெற்றி பெறாது.