இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கூப்பிட்டது யார்?

வில்லியம் மூன்று வயதுச் சிறுவன். சிலுவை அடையாளம் வரைய அவனுக்குத் தெரியும்; சிறு ஜெபங்களும் சில அவன் அறிவான். அவனுடைய நல்ல தாய் கடவுளுக்கு உகந்தவள். அப்பா, அம்மா என்னும் வார்த்தைகளுக்குப்பின் யேசு, மரி என்னும் இனிய நாமங்களை தன் சிறு மகனுக்குக் கற்பித்தாள். ரோஸி இரண்டாவது குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகிறது. அவளால் ஒரு வார்த்தை முதலாய்ப் பேச முடியாது.

சனிக்கிழமை மத்தியானத்துக்குப்பின் வில்லியம், ரோஸி இவர்களின் தாய் சாமான்கள் வாங்கும்படி கடைக்குப் போகவேண்டியிருந்தது. அந்தக் கடை, தெருவின் கடைசியில் இருந்தது. போய்வர வெகு நேரம் பிடிக்காது. குழந்தைகள் இருவரும் மேன் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். உறங்கி விழிக்குமுன் போய் வந்துவிடலாம். வில்லியம் ஓர் அறையில் படுத்திருந்தான். ரோஸி தாயின் படுக்கை யறையில் இருந்தாள். வீட்டில் வேறெவரும் கிடை யாது.

கடைக்குப்போக ஏற்ற நேரம் அது. வெளியேறும்படி அவள் மெதுவாகக் கதவைத் திறந்தாள். கதவைப் பூட்ட இருந்த சமயத்தில் "அம்மா'' என்ற குழந்தையின் குரல் ஒன்று மேன்மாடியிலிருந்து வந்தது. அது வில்லியம் போட்ட சத்தமாயிருக்கவேண் டும், அவன் எதைக் கண்டோ பயப்பட்டிருக்கிறான் போலும் என நினைத்துக்கொண்டு, தாய் அவன் இருந்த அறைக்குச் சென்றாள். அங்கு அவன் சுகமாய் நித்திரை செய்து கொண்டிருந்தான்.

“வில்லியம் கூப்பிடுகிறான் என்றல்லவா நான் நினைத்தேன். எவ்வளவு சத்தமாய்க் கூப்பிட்டான்'' என அவள் தனக்குள் சொல்லிக்கொண்டே, கடைக் குப் போகும்படி வெளிக் கதவைத் திறந்தாள். ''அம்மா! அம்மா!!'' என்னும் குரல் திரும்பவும் கேட் டது. அந்தக் குரலில் பயமும் தொனித்தபடியால், அவள் கையிலிருந்த பணத்தையும் அவசரத்தில் கீழே போட்டு விட்டு மாடிக்கு விரைந்து சென்றாள்.

வில்லியம் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அசையவே இல்லை. முன் இருந்த நிலையிலேயே படுத் திருந்தான். முகத்தில் அழகிய புன்முறுவல் காணப் பட்டது. அவன் கனவு உலகில் நடமாடிக்கொண் டிருக்கவேண்டும். அந்நிலையில் அவன் பயந்து கூக் குரலிட்டிருக்க முடியாது.

தாய்க்கு விஷயம் என்ன என்று விளங்கவில்லை. ஏதோ ஆபத்து வரப்போகிறது என்னும் பயம் அவள் உள்ளத்தை நிரப்பியது. எனினும் கடைக்குப் போகும்படி மூன்றாம் முறையாக கதவைத் திறந்தாள். அதைப் பூட்ட இருக்கையில் ''அம்மா, அம்மா, சீக்கிரம் வாருங்கள்” என்னும் சத்தம் கேட்டது. பெரும் ஆபத்திலிருப்பவனின் குரல்போல் இருந்தது.

தாய் ஒரே ஓட்டமாய் வில்லியம் படுத்திருந்த அறைக்குப் போனாள். அவன் இன்னும் அயர்ந்த நித்திரை செய்து கொண்டிருந்தான். சத்தமின்றி அந்த அறையின் கதவைச் சாத்தினாள். கடைக்குப் போகும் எண்ணம் அகன்றது. கதவினருகில் இருந்த தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு, "யேசுவே, யேசுவே, உமது நேச மக்களைக் காப்பாற்றும். ஆபத்து வருகிறாப்போல் தோன்றுகிறது'' என்றாள்.

உடனே அவளுக்கு கைக்குழந்தையின் நினைவு வந்தது. இந்தச் சத்தத்தில் அவள் விழித்திருக்க வேண்டும் என நினைத்து அவளைப் பார்க்கப் போனாள். சத்தமின்றி கதவைத் திறந்தாள். இரண்டு அழகிய சிறு கண்கள் தன்னை வரவேற்கும் என தாய் நினைத் தாள். அதற்கு மாறாக, அவள் கண்டது அவளைத் திடுக்கிடச் செய்தது. அலறிக்கொண்டு படுக்கையை நோக்கி ஓடினாள். குழந்தை, கட்டிலிற்கிடந்த துணி களுக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந் தாள். நல்ல நேரத்தில் அவள் சேர்ந்து குழந்தையைக் காப்பாற்றினாள்.

கூப்பிட்டது யாரென இப்பொழுது அவளுக்கு விளங்கியது. நல்ல கடவுளுக்கு மனமார நன்றி செலுத்தினாள்.