பெற்றோர் சருவேசுரனின் பதிலாளிகள்

பெற்றோரே! ஆண்டவருடைய ஸ்தானாபதிகளாயிருக்கும் உங்களைப் பிள்ளைகள் நேசித்துக் கனம்பண்ணி உங்களுக்கு அமைந்து உதவி புரிந்துவந்தால் சருவேசுரன் இதெல்லாம் தமக்கே செய்தாற்போல் அவர்களை ஆசீர்வதித்து விருத்தியடையப்பண்ணுகிறார்.

சின்னத் தோபியாஸ் தமது பெற்றோரைச் சங்கித்து நடந்ததினால் கர்த்தர் அவருக்கு ஐந்தாந்தலைமுறைமட்டும் தேவபயத்தோடு சீவித்துப் பாக்கியமாய் மரிக்கக் கிருபைசெய்தார். ''தன் பிதாவைக் கனம்பண்ணுகிறவன் தன் பிள்ளைகளால் சந்தோஷம் அடைவான். அவன் செபம்பண்ணும் போது கேட்டருளப்படுவான்” (சர்வபிம். 3;6)

''தன்பிதாவைப் பேணுகிறவன் நீடிய வாழ்வடைவான். தன் தந்தைக்குக் கீழ்ப்படிகிறவன் தாய்க்கு ஆறுதல் கொடுக்கிறான்.'' (சர்வ பிர. 3; 7)

அன்றியும் பிதாமாதாக்களே! தேவனுக்குப் பதிலாளிகளாயிருக்கும் உங்கள் அதிகாரத்தைப் பிள்ளைகள் மதியாமல் உங்களைத் துன்புறுத்தித் துன்மார்க்கராய்ப் போகுங்கால் அவர் தமக்கே இத்துரோகங்கள் செய்யப்பட்டதாகவைத்து அவர்களைத் தண்டிக்கிறார். அப்சலோம் தன் தந்தையாகிய தாவீதிராசாவுக்கு எதிராய் எழும்பிக் கலகஞ் செய்ததற்குத் தண்டனையாக, அவன் போரில் தோற்கடிக்கப்பட்டுப் பின்னிட்டோடும்போது சிந்தூரமரக்கொப்பிற் தொங்கிப் பிதாவின் விருப்பத்துக்கு மாறாய் மூன்று ஈட்டிகளினால் ஊடுருவப்பட்டு மரத்திலேதொங்குகிறவன் சருவேசுரனாலே சபிக்கப்பட்டவன்” (உபா. 21; 23.) என்ற தேவசாபத்தோடு அவலமாய்ச் செத்தான். (2-ம் அரசர் 18;14-15)

தன் பிதாமாதாவின் சொற்கேளாமல் அவர்களால் தண்டிக்கப்பட்டபோதிலும் அவர்களுக்கு அடங்காமற்போகிற முரட்டுத்தனமும் மூர்க்கமுமுள்ள பிள்ளையிருந்தால்.... இசிறவேலர் எல்லாருங்கேட்டுப் பயப்படத்தக்கதாக நகரவாசிகள் அனைவரும் அவனைக் கல்லாலெறிந்து கொன்றுவிடுவார்களாக. (உபா.21;18-21) என்று சருவேசுரன் வேத புத்தகத்தில் கற்பித்திருக்கிறார்.

பெற்றோரே! இவையாவையும் வாசிக்கும்போது உங்கள் மனதில் உண்டுபடும் எண்ணம் என்ன? சருவேசுரன் உங்களுக்கு அளித்திருக்கும் இவ்வளவு மேலான மேன்மையையும் அதிகாரத்தையும் பற்றி அகமகிழ்ந்து பெருமை கொள்ளுகிறீர்களா? பெருமை கொள்ள இடமுண்டு தான்.

ஆனால் ஒருகமக்காரனுக்கு வேண்டிய சரீரபெலம் நிலம் புலம் ஏர் எருதுகளிருந்தும் அவன் கமஞ்செய்யப் பிரயாசப்படாமல் இருந்தால் அவைகளால் பிரயோசனமடைவானா? இல்லை.

அப்படியே நீங்களும் சருவேசுரன் உங்களுக்கு அருளியிருக்கும் மேன்மையையும் அதிகாரத்தையும் தக்கவிதமாய் உபயோகித்துப் பிள்ளைகளைச் சன்மார்க்கராய் வளர்க்காதிருந்தால் அவர்களால் நீங்கள் நன்மையடையமுடியாது.

தேவன் தின்மைக்கல்ல நன்மைக்கே உங்களுக்குப் பிள்ளைகளைத் தந்திருக்கிறார். அவர்களால் நன்மையடையவேண்டுமாகில் அவர்கள் மட்டில் உங்களுக்குள்ள கடமைகளைச் சரியாய் அனுசரிக்க வேண்டும். அக்கடமைகள் எவையென்று வரும் அதிகாரங்களிற் காட்டப்படும். .