இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - மூன்று வேதசாட்சிகள்

அலைந்து திரியும் ஆரட்டரி

முதல் ஐந்து ஆண்டுகளில் (1841-1846) டொன் போஸ்கோவின் ஆரட்டரி ஓர் “அலைந்து திரியும் ஆரட்டரியாக" இருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான சிறுவர்களுக்கு ஆரட்டரியின் வளாகங்கள் போதுமான அளவுக்குப் பெரிதாக இல்லாததால், அல்லது அக்கம்பக்கத்தாருக்கு இது ஒரு பெரிய தொந்தரவாக இருந்ததால், அவர் தம் மந்தையை இடம் விட்டு இடம் மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டியிருந்தது. 

சிலர் அவரைத் துன்புறுத்தினார்கள், மற்றவர்கள் அவருடைய பணியைக் கண்டு வியந்து போற்றினார்கள், உதவி செய்தார்கள். ஆனால் நம் திவ்விய அன்னை இந்த எல்லா அலைச்சல்களிலும் அவருக்கு ஆறுதல் தந்தார்கள், அவரை வழிநடத்தினார்கள்.

அவருடைய கனவுகளில் ஒன்று, இன்னுமொரு அற்புதமான காட்சியை அவர் முன் விரித்து வைத்தது. அவர் இதைச் சுருக்கமாக, ஒரு சில மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் 1884-ல் வெளிப் படுத்தினார். ஆனால், அடுத்து வந்த இருபது ஆண்டுக் காலத்தின் போது, கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் தேவாலயத்தை மிகுந்த உணர்ச்சியோடும், ஏறக்குறைய பரவச நிலையிலும் உற்று நோக்கியபோதெல்லாம், இந்தக் கனவின் மிக அற்புதமான அம்சங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடைய வாயினின்று எதிர்பாராமல் வெளிப்பட்டன. நாம் அவரது அருகிலிருந்து, அவருடைய வார்த்தைகளாகிய பொக்கிஷங்களை சேகரித்து, ஒவ்வொரு முறையும் கவனமாக எழுதி வைத்தோம், அதன்பின் அவருடைய இந்தக் கனவைப் பின்வருமாறு திருத்தி எழுத நம்மால் முடிந்தது:

டொன் போஸ்கோ “ரோண்டோ” அல்லது “வால்டோக்கோ” வட்டாரத்தின் வடக்கு எல்லையில் இருப்பதாகத் தோன்றியது. அவர் டோரா ஆற்றை நோக்கி நின்று கொண்டிருந்தார். அச்சமயத்தில்,

இப்போது கோர்ஸோ ரெஜினா மார்கரீத்தா (ரெஜினா மார்கரீத்தா சாலை) என்று அழைக்கப்படுகிற, இரு புறமும் மரங்கள் வரிசையாக நின்ற சாலையோரமாக, சுமார் இருநூறு அடி தூரத்தில், இப்போ துள்ள கொட்டோலெங்கோ சாலை அருகில், மகிமையொளியால் சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த மூன்று அழகிய இளைஞர்களை அவர் காண நேர்ந்தது. அவர்கள் ஒரு வயலின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். 

அந்த வயலில் உருளைக்கிழங்கு, மக்காச் சோளம், அவரை, முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் நடப்பட் டிருந்தன. முன்பு தேபான் போர்ப் படையின் மூன்று வீரர்கள் மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்ட இடமாக ஒரு கனவில் அவருக்குச் சுட்டிக் காட்டப்பட்ட அதே இடத்தில் இப்போது இந்த மூன்று இளைஞர்களும் நின்று கொண்டிருந்தார்கள். தங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி அவர்கள் அவரைச் சைகை காட்டி அழைத்தனர். 

டொன் போஸ்கோ அங்கு விரைந்து சென்றார். அவர்கள் மிகுந்த கருணையோடு அவரை அந்த வயலின் மறு எல்லைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த இடத்தில்தான் கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் கம்பீரமான தேவாலயம் இப்போது நின்று கொண்டிருக்கிறது. 

மாமரி அவரை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்

சற்று தூரம் நடந்து செல்லும்போது, டொன்போஸ்கோ அடுத்தடுத்து பல அற்புதங்களைக் கண்டார். இறுதியாக அவர் அதியற்புத அழகும், கம்பீரமும் உள்ளவர்களும், மகிமையை ஆடையாக உடுத்தியவர்களுமாகிய ஒரு இராக்கினிக்கு முன்பாக நின்றார். 

அந்த இராக்கினியைச் சுற்றி வணக்கத்துக்குரிய மனிதர்கள் நின்றார்கள். அவர்கள் அரசர்களின் சபை ஒன்றுக்கு ஒப்பாயிருந்தார்கள். அந்தப் பெருமாட்டி ஓர் அரசி என்பது போல, நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஒளிவீசித் துலங்கும் அணிகளாக, அந்த இராக்கினியின் ஒரு மகிமையுள்ள பரிவாரத்தை உருவாக்கினார்கள். 

இதே போன்ற வேறு பல மக்கள் கூட்டங்களையும் கண்ணுக் கெட்டிய தொலைவு வரைக்கும் காண முடிந்தது. தன் அருகில் வரும்படி அந்த இராக்கினி டொன் போஸ்கோவை சைகை காட்டி அழைத்தார்கள். அவர் அவர்களுக்கு அருகில் சென்ற போது, அவரோடு சேர்ந்து வந்த அந்த மூன்று இளைஞர்களும் முன்று வேதசாட்சிகளான ஸாலுத்தோர், அத்வெந்த்தோர், மற்றும் ஆக்டேவியஸ் ஆகியவர்கள்தான் என்று அந்த அன்னை அவரிடம் சொன்னார்கள். அவர்களே இந்த இடத்தில் பாதுகாவலர்களான புனிதர்களாக இருப்பார்கள் என்ற விதத்தில் இந்த வார்த்தைகளை அவர் புரிந்து கொண்டார்.

அதன்பின், மனதை வசீகரிக்கிற ஒரு புன்னகையோடும், அன்பான வார்த்தைகளோடும், நம் அன்னை, அவர் தம் சிறுவர்களை ஒருபோதும் கைவிடக் கூடாது என்றும், மாறாக, தாம் தொடங்கி யிருந்த வேலையை அவர் இன்னும் அதிக தீர்மானத்தோடு தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் அவரை உற்சாகப்படுத்தினார்கள். அவர் பல கடும் தடைகளை எதிர்கொள்வார் என்றும், ஆனால் தேவ அன்னையிலும், அவர்களுடைய தேவ சுதனிலும் அவர் கொண்டிருக்கும் உறுதியான விசுவாசத்தால் அவை மேற்கொள்ளப்படும் என்றும், ஒதுக்கித் தள்ளப்படும் என்றும் அவர்கள் அவருக்கு அறிவித்தார்கள்.

இறுதியாக, அவர்கள் நிஜமாகவே அங்கிருந்த ஒரு வீட்டை அவருக்குச் சுட்டிக்காட்டினார்கள். அந்த வீடு பினார்டி என்ற பெய ருள்ள ஒரு மனிதருக்குச் சொந்தமானது என்று அவர் பிற்பாடு கண்டு பிடித்தார். இப்போது அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கோவிலும், அதற்கு அடுத்துள்ள கட்டடங்களும் இருக்கும் அதே இடத்தில் ஒரு சிறு தேவாலயத்தையும் அவர்கள் அவருக்குக் காட்டினார்கள். 

அதன்பின் அவர்கள் தன் வலக் கரத்தை உயர்த்தி, அளவற்ற இனிமையுள்ள குரலில், “ஹேக் எஸ்த் தோமுஸ் மேயா; இந்தே க்ளோரியா மேயா - இது என் வீடு; இங்கிருந்தே என் மகிமை புறப்படும்” என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டு டொன் போஸ்கோ எந்த அளவுக்கு நெகிழ்ச்சியுற்றார் எனில், அவர் உடனே விழித்தெழுந்தார். தேவ கன்னிகையும் - அது உண்மையாகவே அவர்கள்தான் - அந்தக் காட்சி முழுவதும் விடியற்காலத்து மூடுபனியைப் போல அவருடைய பார்வையில் இருந்து மங்கி மறைந்தார்கள்.