இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா கூறுகிறார்கள்

8 ஜூன்  1944.

மேரி நீ கண்டுபிடிக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது.  ஆயினும் இதைவிட அதிக கசப்போடு நான் அழுவதை நீ காண்பாய்.  தற்சமயம் சூசையப்பருடைய புனிதத்தை உனக்குக் காட்டி உன் உள்ளத்தை ஆறுதல்படுத்த விரும்புகிறேன்.

சூசையப்பர் ஒரு மனிதன், அதாவது அவருடைய உள்ளத் திற்கு அவரின் புனிதத்தைத் தவிர வேறு துணை இல்லை.  என்னுடைய அமலோற்பவ நிலையில் கடவுளின்  எல்லாக் கொடைகளும் எனக்கு இருந்தன.  அந்நிலையில் நான் இருந்தேன் என்பதை நான் அறியவில்லை.  ஆயினும் அந்தக் கொடைகள் என் ஆன்மாவில் செயலாற்றி எனக்கு ஞான வலிமையைத் தந்தன.  ஆனால் அவர் அமலோற்பவம் பெற்றிருக்கவில்லை.  மனுUகம் அவரிடத்தில் அதன் பாரச் சுமையுடன் இருந்தது.  அந்தப் பாரத்தோடே, அவருடைய சத்துவங்களின் இடைவிடாத முயற்சியோடு அவர் உத்தமதனத்தை சென்று அடைந்து கடவுளுக்குப் பிரியப்பட வேண்டியிருந்தது.

ஓ!  என் புனித பத்தா!  எல்லாவற்றிலும் அவர் புனிதராயிருந்தார் - வாழ்வின் மிகச் சிறிய காரியங்களிலும் கூட!  தம்முடைய சம்மனசையயாத்த கற்பில் புனிதராயிருந்தார்.  அவருடைய  மனித நேர்மையில் புனிதராயிருந்தார்.  பொறுமை யிலும் செயல்பாடுகளிலும் மாறாத தெளிந்த அமைதியிலும், அடக்கவொடுக்கத்திலும் எல்லாவற்றிலும் புனிதமாயிருந்தார்.  இந்த நிகழ்ச்சியிலும் அவருடைய புனிதம் விளங்குகிறது.  “நீங்கள் இங்கேயே தங்க வேண்டும்” என்று குரு சொல்கிறார்.  அதனால் ஏற்படும் கூடுதல் கஷ்டங்களை அறிந்திருந்தும் அவர்: “என்னைப் பற்றி ஒன்றுமில்லை.  மரியா துயரப்படுவதைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன்.  மற்றபடி நான் கலங்க மாட்டேன்.  எதுவும் சேசுவுக்கு உதவுவதாயிருக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.  அவருடைய சம்மனசையயாத்த இரண்டு நேசங்கள்:  சேசுவும் மரியாயும்.  என் புனித பத்தா உலகில் வேறு எதையும் நேசிக்கவில்லை.  அந்த நேசங்களுக்காகவே அவர் தம்மைப் பலியாக்கினார்.

கிறீஸ்தவக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இன்னும் மற்ற அநேகத் துறைகளுக்கும் அவரைப் பாதுகாவலராகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவர் மரிக்கிறவர் களுக்கும் திருமணமானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் மட்டுமல்ல, கடவுளுக்கென அர்ப் பணிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாவலராக நியமிக்கப்பட வேண்டும்.  தேவ ஊழியத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட அனைவரிலும் அவரைப்போல் தன் கடவுளின் ஊழியத்திற்கு தங்களை யார் அர்ப்பணித்தார்கள்?  எல்லாவற்றையும் ஆண்டவருக்கென அவர் ஏற்றார், எல்லாவற்றையும் தியாகம் செய்தார், எல்லாவற்றையும் தாங்கினார், சுறுசுறுப்பாய் அனைத்தையும் நிறைவேற்றினார் - மகிழ்வான மனத்துடன், மாறா நற்குணத்துடன் அப்படிச்  செய்தார்.  அவரைப் போல் வேறு யார் அப்படிச் செய்தார்கள்?  அவரைப்போல் ஒருவருமில்லை.

இன்னும் ஒன்று இரண்டு குறிப்புகளை உனக்குக் கூற விரும்புகிறேன்.

சக்கரியாஸ் ஒரு குரு.  சூசையப்பர் குரு அல்ல.  ஆனால் கவனி, குரு அல்லாத சூசையப்பர் குருவினுடையதை விட அதிக மோட்சதன்மையான ஆன்மாவைக் கொண்டிருக்கிறார்.  சக்கரியாஸ் மனித முறைப்படி நினைக்கிறார்.  மனித முறைப்படியே வேதாகமத்திற்கு விளக்கம் கூறுகிறார்.  ஏனென்றால் அவர் தமக்கிருக்கிற நல்ல மனித உணர்வால் தாம் நடத்தப்பட அனுமதிக்கிறார்.  அப்படி அவர் செய்வது இது முதல் தடவை அல்ல.  அதற்காக அவர் தண்டிக்கப்பட்டார்.  மறுபடியும், அவ்வளவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அவர் அப்படித் தவறுகிறார்.  அருளப்பரின் பிறப்பு பற்றி அவர்:  “நான் வயோதிகனும், என் மனைவி மலடியுமாயிருக்கையில் அது எப்படி நடக்கும்?” என்றார்.  இப்பொழுது:  “மெசையாவின் பாதையை எளிதாக்குவதற்காக அவர் இங்கேயே வளர்க்கப்பட வேண்டும்” என்கிறார்.  மிக நல்லவர்களிடமும் நீங்காமல் நிலைத்திருக்கிற நுட்பமான அகங்காரத்தோடு அவர் சேசுவுக்கு தான் உதவ         முடியும் என்று நினைக்கிறார்.  உதவுவதென்பது சூசையப்பர் சேசுவுக்கு ஊழியம் செய்து உதவியாக இருக்க ஆசிப்பது         போலல்ல, சேசுவுக்கு போதிப்பதால் உதவ நினைக்கிறார்... அவருடைய நல்ல நோக்கத்திற்காக கடவுள் அவரை மன்னித்தார்.  ஆயினும் “போதகருக்கு” போதகர்கள் தேவையா?

தீர்க்கதரிசனங்களின் உண்மைக் கருத்தை அவர் காணச் செய்ய நான் முயன்றேன்.  அவரோ என்னிலும் தான் அதிகமாகக் கற்றவர் என்று உணர்ந்து அவ்வுணர்வை தம் முறைப்படியே பயன்படுத்தினார்.  நான் கூறியதை அழுத்திச் சொல்லி அவரை மீறியிருக்கலாம்.  ஆனால் இதுவே நான் உனக்குத் தர விரும்பும் அடுத்த குறிப்பு:  அவரை, அவர் குரு என்ற மேன்மையினிமித்தம் நான் மதித்தேன், அவரின் அறிவின் நிமித்தமல்ல.

பொதுவாக ஒரு குரு எப்போதும் கடவுளால் ஒளி பெறுகிறார்.  “பொதுவாக” என்கிறேன்.  அவர் ஒரு உண்மையான குருவாயிருந்தால் அவர் ஒளி பெறுகிறார்.  குருவின் ஆடையல்ல அவரை வசீகரம் செய்வது, அவருடைய ஆன்மாவே.  ஒருவர் உண்மையான குருவா எனத் தீர்மானிப்பதற்கு அவருடைய ஆன்மாவிலிருந்து என்ன வெளிவருகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.  என் சேசு கூறியபடி அர்ச்சிக்கிறவைகளும் அசுத்தப்படுத்துகிறவைகளும் ஆன்மாவிலிருந்து வருகின்றன.  அவையே ஒருவனுடைய முழு நடத்தையையும் நிர்ணயிக்கின்றன.  ஆகவே ஒருவர் உண்மையான குருவாயிருந்தால் அவர்  பொதுவாகக் கடவுளால் ஏவுதல் பெறுகிறார்.  அப்படியில்லாத வர்களுக்காக நாம் சுபாவத்திற்கு மேலான பிறர்சிநேகத்துடன் வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஆனால் என் குமாரன் உன்னை இந்த இரட்சண்ய அலுவலில் ஏற்கெனவே ஈடுபடுத்தியுள்ளார்.  ஆகவே இதற்கு மேல் நான் கூறவில்லை.  உண்மையான குருக்களின் எண்ணிக்கை பெருகு வதற்காக துன்பப்படுவதில் மகிழ்ச்சி கொள்.  உன்னை வழிநடத்துகிறவரின் வார்த்தைகளில் அமைதியுடன் ஊன்றி இரு.  அவருடைய ஆலோசனைகளை நம்பு, கீழ்ப்படி.  உனக்குக் கொடுக்கப்படும் ஆலோசனை எப்போதும் முழுச் சரியாக இல்லாவிடினும், கீழ்ப்படிதல் உன்னை எப்போதும் காப்பாற்றும்.

உனக்குத் தெரியும்:  நாங்கள் கீழ்ப்படிந்தோம்.  அதுவே நல்லதாயிருந்தது.  ஏரோது குழந்தைகளின் படுகொலையை பெத்லகேமுடனும், அதன் சுற்றுப்புறங்களுடனும் நிறுத்திக் கொண்டான் என்பது உண்மையே.  ஆனால் சாத்தான், யூதர்களின் எதிர்கால அரசரைக் கொல்லும்படி அப்படிப்பட்ட பகையை இன்னும் விரிவாகவும் பரவலாகவும் ஆக்கி, பலஸ்தீனாவில் அதிகாரமுடைய அனைவரும் அதே கொடுமையைச் செய்ய தூண்டியிருக்க முடியாதா?  அவன் அப்படிச் செய்திருக்க முடியும். கிறீஸ்துவின் ஆரம்ப நாட்களில் அடிக்கடி நிகழ்ந்த அற்புதங்கள் ஜனத்திரள்களுடையவும் அதிகாரத்திலிருந்தவர்களுடையவும் கவனத்தை ஈர்த்தபோதும் அப்படி நடந்திருக்க முடியும்.  அவ்வாறானால், இம்சிக்கப்பட்ட யூதர்களுக்கு புகலிடமாயிருந்த எஜிப்துக்கு, நாசரேத்திலிருந்து பலஸ்தீன் நாடு முழுவதையும் கடந்து, ஒரு சிறு குழந்தையுடன், அப்படிப்பட்ட கொடுமை நடந்து கொண்டிருக்கையில் எப்படிப் பயணம் செய்திருக்க முடியும்?  நாங்கள் எஜிப்துக்கு ஓடிப்போனது அதே அளவு கஷ்டமாக இருந்தாலும், பெத்லகேமிலிருந்து ஓடுவது எளிதாக இருந்தது.

கீழ்ப்படிதல் எப்போதும் உன்னைக் காப்பாற்றும்.  அதை நினைவில் வைத்திரு.  ஒரு குருவுக்கு மரியாதை கொடுப்பது எப்போதுமே கிறீஸ்தவப் பயிற்சியின் அடையாளமாகும்.  தங்கள் அப்போஸ்தல ஆர்வத்தை இழந்து போகிற குருக்களுக்கு ஐயோ கேடு!  சேசுவும் இதைக் கூறியுள்ளார்.  ஆயினும் குருக்களை வெறுப்பது தங்களுக்குச் சரி எனக் கருதுகிறவர்களுக்கும் கேடுதான்.  ஏனென்றால் அவர்கள் மோட்சத்திலிருந்து இறங்குகிற உண்மையான அப்பத்தை வசீகரம் செய்து பரிமாறுகிறார்கள்.  அந்தத் தொடர்பு அவர்களைப் புனிதமாக்குகிறது - அவர்கள் முற்றிலும் புனிதமாயிரா விட்டாலும், ஒரு பரிசுத்த பூசைப் பாத்திரத்தைப் போல அவர்களை ஆக்குகிறது.  அவர்கள் அதற்கு கடவுளுக்குப் பதில் சொல்வார்கள்.  நீங்கள் அவர்களை அப்படிக் கருதி மற்ற எதைப் பற்றியும் சஞ்சலப்படாதேயுங்கள்.  அவர்களுடைய கட்டளையின் பேரில் மோட்சத்தை விட்டு, அவர்களுடைய கரங்களால் உயர்த்தப்படும்படி கீழே இறங்கி வருகிற உங்கள் ஆண்டவராகிய சேசுவைவிட நீங்கள் அதிக கட்டுப்பாடு காட்ட வேண்டாம்.  அவரிடமிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.  அவர்கள் குருடராயிருந்தால், அவர்கள் செவிடராயிருந்தால், அவர்களுடைய ஆன்மா செயலற்றுக் கிடந்தால், தங்களுடைய அலுவலுக்கு நேர்மாறாக அவர்கள் தவறுகள் நிரம்பிய குஷ்டரோகிகளாயிருந்தால், கல்லறைகளிலிருக்கிற பிரேதங்களாக அவர்கள் இருந்தால், அவர்களைக் குணப்படுத்தி உயிரூட்டும்படி சேசுவைக் கூப்பிடுங்கள்.

உங்கள் மன்றாட்டாலும் உங்கள் துன்பங்களினாலும், ஓ பலியாகும் ஆன்மாக்களே!  அவரை அழையுங்கள்.  ஓர் ஆத்துமத்தை இரட்சிப்பது என்பது தன் ஆத்துமத்தையே மோட்சத்திற்கு முன்குறிப்பதாகும்.  ஒரு குருவின் ஆத்துமத்தை இரட்சிப்பது ஒரு பெருந்தொகையான ஆன்மாக்களை இரட்சிப்பதாகும்.  ஏனென்றால் ஒவ்வொரு புனித குருவும் ஆன்மாக்களை கடவுளிடம் இழுக்கும் வலையாக இருக்கிறார்.  ஆதலால் ஒரு குருவை இரட்சிப்பது, அதாவது அவரை அர்ச்சிப்பது - மீண்டும் அர்ச்சிப்பது, இந்த ஞான வலையை உண்டாக்குவதாகும்.  அதில் அகப்படும் ஒவ்வொன்றும் உங்களுடைய நித்திய மகுடத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஒளியாகும்.

சமாதானமாய்ப் போ.”