இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வெளிப்படுத்தப்பட்ட மனசாட்சிகள்!

அடுத்தடுத்த மூன்று இரவுகளாக, சுவாமி ஜோசப் கஃபாஸோ வுடனும், சில்வியோ பெல்லிகோவுடனும்,' கோமகன் சார்ல்ஸ் கேய்ஸுடனும் ரிவால்ட்டா நாட்டுப்புறத்தில் நான் இருப்பதாகக் கண்டேன். 

(சில்வியோ பெல்லிகோ (1789-1854) ஒரு பியெத்மோன்ட்டிய தேச பக்தர் ஆவார். இவர் தம் இளம் பருவத்தின் பெரும் பகுதியை மிலானில் கழித்தார். அங்கே இரகசிய சபையாகிய “கார்போனாரியில்” இணைந்தார். லொம் பார்டியை அப்போது ஆண்ட ஆஸ்திரியர்களால் கைது செய்யப் பட்ட அவர் இருபது ஆண்டுகள் கடுமையாக உழைக்கும்படி தண்டனை பெற்றார். 1830-ல் மன்னிப்புப் பெற்று, ட்யூரின் திரும்பினார். சிறை செல்லும் வரை, அவர் பக்தியற்ற கத்தோலிக்கராகத்தான் இருந்தார். ஆனால் சிறை வாழ்வின் துன்பத்தில், அவர் கடவுளையும் தம் சக மனிதர்களையும் நேசிப்பதாகத் தீர்மானம் செய்து கொண்டார். 1832-ல் அவர் தம் சிறை வாழ்வின் கதையை, ல மியே ப்ரிஞ்ஞோனி என்னும் பெயரில் எழுதினார். இது ரிஸோர்ஜி மெந்தோவின் இலக்கியத்தில் மிகப் புகழ் பெற்ற புத்தகமானது. இந்தச் சமயத்தில் அவர் ட்யூரினுள்ள பரோலோ கோமகளின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  சி1813, நவம்பர் 24 அன்று ட்யூரினில் பிறந்த கேய்ஸ் கோமகன் உள்ளூர் சேசுசபை மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அதன்பின் ட்யூரின் பல்கலைக் கழகத்தில் சட்ட முனைவர் பட்டம் பெற்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற அவர், தமது 32-ம் வயதில் மனைவியை இழந்தார். 1857 முதல் 1860 வரை அவர் பியெத்மோன்ட் பார்லிமெண்ட் உதவித் தலைவராக இருந்தார். அப்போது கத்தோலிக்கக் குருநிலையினரை எதிர்த் தவர்களுக்கு எதிராக அவர் திருச்சபையின் உரிமைகளை வீரத்தோடு பாது காத்தார். 1877-ல் அவர் ஒரு சலேசியத் துறவி ஆனார்; ஒரு வருடத்திற்குப் பிறகு குருத்துவ அபிஷேகம் பெற்ற அவர், டொன் போஸ்கோவுக்குத் தொடர்ந்து பெரும் உதவியாக இருந்து வந்தார். 1882 அக்டோபர் 4 அன்று ஆரட்டரியில் தமது 69-ம் வயதில், தாமே முன்னறிவித்தபடி அவர் இறந்தார்.)

முதல் நாள் இரவில் நாங்கள் அச்சமயம் நிலவிய வேதம் சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். இரண்டாவது இரவில், இளம்பருவத்தினரின் ஆன்ம வழிகாட்டுதல் தொடர்பான நல்லொழுக்கம் சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி விவாதித்து, அவற் றிற்குத் தீர்வு கண்டோம். இதே கனவு இரண்டு முறை வந்த பிறகு, அது மீண்டும் எனக்கு வந்தால், அதைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். டிசம்பர் 30 அன்று, திரும்பவும், அதே இருவரோடு அதே இடத்தில் நான் இருக்கக் கண்டேன். மற்றப் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு, வருடக் கடைசியான மறுநாள் இரவில், நான் உங்களுக்கு வழக்கமாகத் தருகிற வருடாந்தர ஸ்ட்ரென்னாவைத் தர வேண்டியிருக்கிறது என்பதை நான் நினைவுகூர்ந்தேன். ஆகவே, நான் சுவாமி கஃபாஸோ விடம் திரும்பி, “தந்தாய், நீங்கள் எனக்கு மிகப் பிரியமான நண்பராக இருப்பதால், தயவு செய்து என் சிறுவர்களுக்கான ஸ்ட்ரென்னாவை எனக்குத் தாருங்கள்” என்றேன்.

“ஒரு நிபந்தனை: நீங்கள் முதலில் அவர்கள் தங்கள் கணக்கு களை ஒழுங்குபடுத்தும்படி அவர்களிடம் சொல்ல வேண்டும்.”

நாங்கள் ஒரு பெரிய அறையில் நின்றுகொண்டிருந்தோம். அதன் மத்தியில் ஒரு மேஜை இருந்தது. சுவாமி கஃபாஸோவும், சில்வியோ பெல்லிகோவும், கோமகன் கேய்ஸும் மேஜையருகில் அமர்ந்தனர். சுவாமி கஃபாஸோ என்னிடம் கேட்டுக் கொண்டபடி, நான் என் சிறுவர்களைத் தேடி வெளியே சென்றேன். அவர்கள் கூட்டல் கணக்குகள் செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை ஒருவர் பின் ஒருவராக அழைக்க, அவர்கள் தங்கள் விடைத்தாள்களை மேலே குறிப்பிட்ட மனிதர்களிடம் தந்தார்கள். இவர்கள் கணக்குகளைச் சரிபார்த்து, அவற்றை அங்கீகரித்தார்கள், அல்லது நிராகரித்தார்கள். மிகச் சிலர் மட்டுமே வருத்தத்தோடும், கவலையோடும் திரும்பிச் சென்றார்கள். யாருடைய கணக்குகள் சரியாக இருந்தனவோ, அவர்கள் முழு மகிழ்ச்சியோடு வெளியே விளையாட ஓடினார்கள். சிறுவர்களின் வரிசை நீண்டதாக இருந் ததால், இந்தப் பரீட்சை முடிய சற்று நேரமாயிற்று. ஆனால் இறுதி யாக அது முடிவுக்கு வந்தது. அல்லது, சில சிறுவர்கள் இன்னும் உள்ளே வராமல், வெளியே நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கும் வரையில் பரீட்சை முடிந்து விட்டதாக எனக்குத் தோன்றியது.

“அவர்கள் ஏன் உள்ளே வரவில்லை ?” என்று நான் சுவாமி கஃபாஸோவிடம் கேட்டேன்.

“அவர்களுடைய எழுதுபலகைகள் முற்றிலும் வெறுமையாக இருக்கின்றன. நமக்குக் காட்ட அவர்களிடம் கணக்கு எதுவுமில்லை . இது ஒருவன் செய்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டிக் காட்டும் கேள்வி. அவர்கள் தாங்கள் செய்தது எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டட்டும். அதன்பின் நாம் அவர்களுடைய கூட்டுத் தொகையை சரிபார்ப்போம்” என்று அவர் பதிலளித்தார்.

எல்லாக் கணக்குகளும் சரிபார்க்கப்பட்ட பிறகு, நான் இந்த மூன்று கணவான்களோடும் வெளியே சென்றேன். யாருடைய கூட்டுத்தொகைகள் சரியாக இருந்தனவோ, அந்தச் சிறுவர்கள் எல்லோரும் முடிந்த வரை சந்தோஷமாக ஓடியாடி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சி எனக்கு எவ்வளவு சந்தோஷமும், உற்சாகமும் தந்தது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியாது. ஆனாலும் வெறுமனே தனியே நின்றுகொண்டு, ஒரு வகையான ஏக்கத்தோடு விளையாட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த சில சிறுவர்கள் இருந்தார்கள். சிலருடைய கண்கள் கட்டப்பட்டிருந்தன; மற்றவர்களுடைய கண்களுக்கு முன்பாக மூடுபனி இருந்தது, அல்லது அவர்களடைய தலைகளைச் சுற்றி ஓர் இருண்ட மேகம் இருந்தது. சிலருடைய தலைகளிலிருந்து புகை வந்தது, மற்றவர்களின் தலை முழுக்க களிமண் இருந்தது, அல்லது அவை கடவுளுடைய காரியங்கள் எதுவுமின்றி வெறுமையாய் இருந்தன. நான் ஒவ்வொரு சிறுவனையும் அடையாளம் கண்டு கொண்டேன். இப்போது எந்த அளவுக்கு இந்தக் காட்சி என் மனதில் தெளிவாக இருக்கிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரையும் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். பல சிறுவர்களைக் காண வில்லை என்பதையும் நான் விரைவில் உணர்ந்து கொண்டேன். “வெற்று எழுதுபலகைகள் வைத்திருந்த சிறுவர்கள் எங்கே?” என்று நான் வியந்தேன். அவர்களைத் தேடினேன். பயனில்லை. இறுதியாக, மைதானத்தின் தொலைவான மூலையில் சில சிறுவர்களைப் பார்த்தேன். எவ்வளவு பரிதாபமான காட்சியாக அவர்கள் இருந் தார்கள்! ஒரு சிறுவன் மரண வெளுப்போடு தரையில் படுத்துக் கிடந்தான். மற்றவர்கள் ஒரு தணிவான, அசுத்தமான பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தார்கள்; இன்னும் சிலர் அசுத்தமான வைக்கோல் பாய்களின்மீதோ, அல்லது கடினமான வெறுந்தரையிலோ ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் கூட்டுத்தொகைகள் அங்கீகரிக்கப்படாத சிறுவர்கள் அவர்கள். அவர்களுக்குப் பல்வேறு நோய்கள் இருந்தன: அவர்களுடைய நாக்குகளிலும், காதுகளிலும், கண்களிலும் புழுக்கள் மொய்த்தபடி அவற்றை அரித்துக் கொண்டிருந்தன. ஒரு சிறுவனுடைய நாக்கு அழுகியிருந்தது; மற்றொருவனின் வாய் சேற்றால் திணிக்கப்பட்டிருந்தது. மூன்றாவ தாகிய ஒரு சிறுவனின் மூச்சு தொற்றுநோய்க் கிருமிகளால் கெட்ட நாற்றம் வீசியது. மற்றவர்களையும் வேறு நோய்கள் துன்புறுத்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவனுடைய இருதயம் அந்துப்பூச்சிகளால அரிக்கப்பட்டிருந்தன. மற்றொருவனுடைய இருதயம் அழுகிப் போயிருந்தது. மற்றவர்கள் எல்லா வகையான புண்களையும் கொண் டிருந்தார்கள். ஒரு சிறுவனுடைய இருதயம் முற்றிலுமாக அரிக்கப் பட்டு விட்டதாகத் தோன்றியது. இந்த முழுக் காட்சியுமே ஓர் உண்மையான மருத்துவமனைக் காட்சி போல இருந்தது.

இந்தக் காட்சி என்னை அதிர வைத்தது. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை . “இது எப்படி நடக்க முடியும்?” என்று நான் என்னையே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிறுவனிடம் நான் சென்று அவனிடம்:

“நீ உண்மையிலேயே இன்னான்தானே?” என்று கேட்டேன்.

“ஆம். அது நான்தான்” என்று அவன் பதில் சொன்னான்.

“உனக்கு என்ன ஆயிற்று?”

“இது என் சொந்த செயல், என் சொந்த தானியத்தின் மாவு. நான் எதை விதைத்தேனோ, அதையே அறுவடை செய்தேன்!”

நான் மற்றொரு சிறுவனிடம் கேள்வி கேட்டபோது, அவனும் இதே பதிலைத்தான் கூறினான். நாம் கடும் வேதனையை உணர்ந்தேன். ஆனாலும் இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிற காரியத்தால் விரைவில் நான் தேற்றப்பட்டேன்.

இதற்கிடையே, இந்தச் சிறுவர்களைப் பார்த்து மனமிரங்கி, நான் சுவாமி கஃபாஸோவிடம் திரும்பி, அதற்கு ஒரு தீர்வு காணும்படி கெஞ்சினேன். “என்னைப் போலவே உங்களுக்கும், செய்யப்பட வேண்டியது என்ன என்று நன்றாகத் தெரியும். நீங்களே அதைக் கண்டுபிடியுங்கள்” என்று பதிலளித்தார் அவர்.

“குறைந்தபட்சம் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குரிய ஸ்ட்ரென்னாவையாவது எனக்குத் தாருங்கள்” என்று தாழ்ச்சி யோடும், ஆனால் நம்பிக்கையோடும் நான் வற்புறுத்தினேன்.

தம்மைப் பின்தொடரும்படி சைகை செய்துவிட்டு, அவர் திரும்பவும் இல்லத்திற்குச் சென்று, ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டு, பொன்னாலும், வெள்ளியாலும் மின்னிக் கொண்டிருந்த ஒரு மிக அழகான மண்டபத்திற்கு இட்டுச் செல்லும் கதவைத் திறந்தார். ஓராயிரம் சுடர்களைக் கொண்டு கண்ணைப் பறிக்கும் கொத்து விளக்குகளால் அந்த மண்டபம் கண்ணைக் குருடாக்கும் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. கண்ணால் பார்க்க முடிந்த வரைக்கும், அது நீளத்திலும், அகலத்திலும் முடிவில்லாமல் விரிந்து கொண்டே சென்றது. அதன் மத்தியில் எல்லா வகையான இனிப்பு களும், பெரிய அளவும், கசப்புச் சுவையுமுள்ள அப்பங்கள், பிஸ்கட்கள் ஆகியவை நிரம்பியிருந்த ஒரு மிகப் பெரிய மேஜை இருந்தது. அவற்றில் ஒரே ஒரு பதார்த்தமும் கூட ஒருவனைத் திருப்திப்படுத்தப் போதுமாயிருந்திருக்கும். அந்தக் காட்சியைக் கண்டதும், ஓடிப் போய், இந்த விருந்தை உண்டு மகிழும்படி என் சிறுவர்களை அழைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வால் நான் உந்தப்பட்டேன். ஆனால் சுவாமி கஃபாஸோ என்னைத் தடுத்து நிறுத்தினார். “சற்றுப் பொறும்!” என்றார் அவர். “எல்லோரும் அல்ல, யாருடைய கூட்டுத்தொகைகள் அங்கீகரிக்கப்பட்டனவோ, அவர்கள் மட்டுமே இந்த இனிப்புகளைச் சுவைக்க முடியும்.”

அப்படியிருந்தும் அந்த மண்டபம் விரைவாக சிறுவர்களால் நிரம்பி விட்டது. நான் அந்தச் சுவையான அப்பங்களையும், பிஸ்கட்களையும் துண்டுகளாக உடைத்து அவற்றை சிறுவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினேன். ஆனால் மீண்டும் சுவாமி கஃபாஸோ என்னைத் தடுத்தார். “இங்குள்ள எல்லோரும் இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாது. எல்லோரும் இவற்றிற்குத் தகுதி பெறவில்லை” என்று அவர் கூறினார். அதன்பின் சில சிறுவர்களை அவர் எனக்குச் சுட்டிக் காட்டினார். அவர்களுடைய கூட்டுத்தொகைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்களுடைய கண்களின்மீது ஒரு மூடுபனி, அல்லது அவர்களுடைய இருதயங்களில் களிமண் இருந்தது. அல்லது அவர்களுடைய இருதயங்கள் கடவுளுடைய காரியங்கள் இன்றி வெறுமையாக இருந்தன. புண்களால் நிறைந்திருந்தவர்கள் அந்த மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப் படாதது போலவே, இவர்களும் இந்தத் தின்பண்டங்களை உண்ணாதபடி விலக்கப்பட்டார்கள்.

அவர்களுக்கு இனிப்புகளில் கொஞ்சம் வழங்க என்னை அனுமதிக்கும்படி நான் சுவாமிகஃபாஸோவிடம் கெஞ்சினேன். “அவர் களும் என் பிரியத்துக்குரிய குழந்தைகள்தான்” என்று நான் சொன் னேன். “மேலும் இங்கே இந்தப் பண்டங்கள் ஏராளமாக இருக்கின்றன.”

“முடியாது. ஆரோக்கியமானவர்கள் மட்டுமே இந்த இனிப்புகளைச் சுவைக்க முடியும். மற்றவர்கள் இந்தப் பதார்த்தங் களின் சுவையை உணர மாட்டார்கள். இவற்றை உண்டால் அவர் களுக்கு நோய்தான் வரும்."

நான் அதற்கு மேல் ஒன்று சொல்லாமல், எனக்குச் சுட்டிக் காட்டப்பட்டவர்களுக்கு அவற்றைப் பரிமாறத் தொடங்கினேன். பரிமாறி முடித்ததும், நான் அவர்கள் எல்லோருக்கும் ஒரு தாராள மான உதவியையும் செய்தேன். மிகுந்த ருசியோடு சிறுவர்கள் அவற்றை ரசித்து உண்பதைக் கண்டு நான் உண்மையாகவே மகிழ்ந் தேன் என்று நான் சொல்ல வேண்டும். அவர்களுடைய முகங்களில் மிளிர்ந்த மகிழ்ச்சி அவர்களை எந்த அளவுக்கு உருமாற்றியது என்றால், மேற்கொண்டு அவர்கள் அதே சிறுவர்களைப் போலத் தோன்றவில்லை. 

எந்த இனிப்பையும் சுவைக்க அனுமதிக்கப்படாமல் மண்டபத்தில் இருந்த சிறுவர்கள் ஒரு மூலையில் நின்று கொண் டிருந்தனர். நான் அவர்களுக்காக எவ்வளவு வருத்தப்பட்டேன் எனில், அவர்களுக்கும் சிறிது தர என்னை அனுமதிக்கும்படி சுவாமி கஃபாஸோவிடம் கெஞ்சினேன்.

“இல்லை. இப்போதும் இல்லை. முதலில் அவர்களைக் குணமாக்குங்கள்” என்றார் அவர். நான் அவர்களையும், வெளியில் இருந்த வேறு பலரையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந் தேன். அவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரிந்திருந்தது. நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக அவர்களில் சிலர் அந்து அரித்த இருதயங்களைக் கொண்டிருந்தனர். நான் சுவாமி கஃபாஸோவிடம் திரும்பி, “அவர்களுக்கு என்ன மருந்து கொடுப்பது என்று தயவு செய்து எனக்குச் சொல்ல மாட்டீர்களா?” என்று கேட்டேன். அவரோ மீண்டும், “அதை நீங்களே கண்டுபிடியுங்கள். என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும்!” என்று கூறி விட்டார்.

மீண்டும் எல்லாச் சிறுவர்களுக்கும் தர எனக்கு ஒரு ஸ்ட்ரென்னாவைத் தரும்படி நான் அவரிடம் கேட்டேன்.

“மிக நல்லது, நான் உங்களுக்கு ஒரு ஸ்ட்ரென்னா தருகிறேன்” என்று கூறிய அவர், புறப்படுவது போலத் திரும்பி, ஒவ்வொரு தடவையும் முந்தினதை விட சற்று அதிக சத்தமாக மூன்று தடவைகள், “விழிப்பாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! விழிப்பா யிருங்கள்!” என்று கூவினார். இந்த வார்த்தைகளைச் சொன்னதும் அவரும், அவருடைய தோழர்களும் மறைந்து விட்டார்கள். நான் விழித்தெழுந்து, படுக்கையில் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன். என் தோள்கள் பனிக்கட்டி போலக் குளிர்ந்திருந்தன.

இதுதான் என் கனவு. நீங்கள் விரும்புகிறபடி இதற்கு அர்த்தம் கொடுத்துக் கொள்ளுங்கள். இது வெறும் கனவுதான். ஆனால் அதிலுள்ள ஏதாவது நம் ஆன்மாக்களுக்கு நன்மையானதாக இருக்கும் என்றால், அதை எடுத்துக் கொள்வோம். ஆயினும், வெளியாட்களிடம் இதைப் பற்றி நீங்கள் பேசுவதை நான் விரும்ப மாட்டேன். நீங்கள் என் குழந்தைகள் என்பதால்தான் இதை நான் உங்களுக்குச் சொன்னேன். இதை மற்றவர்களுக்கு நீங்கள் சொல்வதை நான் விரும்பவில்லை.

இதற்கிடையே, நான் உங்களுக்கு உறுதி தருகிறேன்: உங்களை நான் எப்படிக் கனவில் கண்டேனோ, அப்படியே நீங்கள் என் மனதில் இருக்கிறீர்கள். நோய்வாய்ப்பட்டவன் யார், அப்படி இராதவன் யார், அந்த இனிப்பைச் சுவைத்தவன் யார், சுவைக்காதவன் யார் என்று என்னால் சொல்ல முடியும். ஒவ்வொரு சிறுவனின் நிலையையும் இங்கே நான் வெளிப்படுத்தப் போவதில்லை. ஆனால் தனியாக அதைச் செய்வேன்.

இப்போது, புத்தாண்டுக்கான ஸ்ட்ரென்னா இதோ: “அடிக்கடியும், உண்மையோடும் பாவசங்கீர்த்தனம் செய்தல், அடிக்கடியும், பக்தியோடும் திவ்ய நன்மை வாங்குதல்.”


பின்குறிப்பு: வரலாற்று ஆசிரியரின் குறிப்பு:

இந்தக் கனவில் சுவாமி கஃபாஸோ வேத அனுசரிப்பு, நல்லொழுக்கம் ஆகியவை சார்ந்த காரியங்களையும், சில்வியோ பெல்லிகோ (அறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி) கல்வி, அவரவர் வேலை சார்ந்த கடமைகள் ஆகியவற்றையும், கோமகன் கேய்ஸ் (கல்வியறிஞர், உயர் குடிப் பிறந்த ஒரு பரிசுத்தமான மனிதர். இவர் தம் 60-ம் வயதில் சலேசிய சபையில் சேர்ந்தார்.) ஒழுங்கு சார்ந்த காரியங்களையும் கவனித்துக் கொள்வதாகத் தோன்றுகிறது.

இனிப்பு பிஸ்கட்கள் இப்போதுதான் ஆண்டவருக்கு ஊழியம் செய்யத் தொடங்கியுள்ளவர்களின் உணவைக் குறிப்பதாகத் தோன்றுகிறது; அமாரெட்டி (கசப்பான அப்பங்கள்) உத்தமதனத்தின் பாதையில் முன்னேறி விட்டடவர்களுக்காக.