எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

பாவங்கள் - அந்த பயங்கரத்துக்குரிய கரியங்களில் எத்தனை நமக்கு எதிராக நிற்கின்றன?

நாம் நம் கடந்தகால வாழ்வின் எழுதப்பட்ட பக்கங்களின் வழியாகப் போய், நமக்கு எதிராக என்ன எழுதப்பட்டுள்ளது என்று பார்ப்போம். முதல் பக்கத்திலேயே ஒரு மிகப் பெரிய கடன் நமக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது - ஜென்மப்பாவம். நாம் மேற்கொண்டு ஓர் எட்டு கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு, அந்தக் கடனே மிகப் பிரம்மாண்டமானதாயிருக்கிறது. அதைச் செய்தவர்கள் நாம் அல்ல; ஆனாலும் அது நமக்கு ஏற்படுத்தியுள்ள சேதம் அளவிட முடியாததாக இருக்கிறது. ஜென்மப் பாவமானது, குற்றம் என்ற முறையில் மிகச் சிறியதாக இருந்தாலும், நம் ஆத்துமத்தில் அது விளைவிக்கிற மிகப் பெரும் ஒழுங்கீனத்தைப் பொறுத்த வரை, மிகப் பெரியதாக இருக்கிறது. அது நமக்கு இவ்வளவு பெரிய நிர்ப்பாக்கியமாக இருந்தாலும், கிறீஸ்துநாதரின் இரட்சணியத்தின் மூலம், உண்மையாகவே நாம் நம் இழப்பை நமக்கு ஆதாயமாக ஆக்கிக் கொள்ள முடியும். எனவே, இங்கே, நம் முதல் பக்கத்திலேயே, நம் ஜென்மப் பாவ நிர்ப்பாக்கியத்திற்கு ஈட்டுத் தொகையாக நம் கணக்கில் ஓர் அளவற்ற தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை நம் ஞானஸ்நான நாளில் செலுத்தப்பட்டது. கிறீஸ்துநாதரின் தெய்வீக இரத்தப் பேறுபலன்கள் நமக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்போது நம் ஜீவிய புத்தகத்தில் பக்கத்தைத் திருப்புவோம். அதில் அடுத்த ஆறு ஆண்டுகள் வெறுமையாக இருப்பதை நாம் காண்கிறோம். அடுத்த 2190 பக்கங்களில் எந்தக் கடனும் பதிவுசெய்யப் படவில்லை. ஆனால் இப்போது மெதுவாகப் போங்கள். இங்கே ஒரு பதிவு இருக்கிறது - அம்மாவிடம் ஒரு மரியாதையற்ற வார்த்தை, சகோதரனுடன் சண்டை, ஒரு பொய், ஒரு சிறு நாணயம் திருட்டு, கீழ்ப்படியாமை, எரிச்சலோடு உதட்டைப் பிதுக்குதல், முதல் தேவநிந்தையான வார்த்தை, கோபம், பேராசை, பொறாமை, வீண் டம்பம் - ஓ, நில், பக்கங்கள் நிறைந்து கொண்டே வருகின்றன. 500 பக்கங்கள் முழுவதுமாக நிறைந்துள்ளன! கடன்கள், அதுவும் எவ்வளவு பெரிய தொகைகள்! 1000 பக்கங்கள், 5000 பக்கங்கள்! எல்லாமே முழுவதுமாக எழுதப் பட்டுள்ளன. ஆனால் உன் வாழ்க்கையோ, அவற்றில் ஒரு கடனுக்குரிய தொகையாகக் கூட ஏற்கப்பட முடியாதது, உன்னால் 10,000 தடவைகள் திரும்பத் திரும்ப சாக முடியாது! எத்தகைய ஒரு பெரும் கடன்! இதை யார் செலுத்தப் போகிறார்கள்? இது செலுத்தப்பட வில்லை என்றால் நரகம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு விதிவிலக்குகள் ஏதும் இருக்கின்றன என்று எண்ணாதே! அர்ச்சிஷ்டவர்களும் கூட, அவர்களது கடன்களை யாராவது திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில் இருக்கிறார்கள் - ஆகவே, நீ அதற்கு மேலானவன் என்று நீ நினைத்தால், உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாய். நரகமே அர்ச். சின்னப்பருக்காகவும், அர்ச். தெரேசம்மாளுக்காகவும் காத்துக் கொண்டிருந்த நீதியுள்ள பாகமாக இருந்தது. நம் பரிதாபத்திற்குரிய பாகத்தைக் காணக் கூட இயலாத அளவுக்கு பாவச் சேற்றில் மிக ஆழப் புதைந்திருக்கிற மிகக் கொடிய ஈனப் பாவிகளாயிருக்கிற நாம் உட்பட அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொருவருக்கும் நரகமே நீதியாயிருக்கிறது. ஓர் அர்ச்சிஷ்டவர் எவ்வளவு மேலானவராயிருக்கிறாரோ, அவ்வளவுக்கு தாம் இருக்கிற இடத்தைக் காண்பதற்கு அவருடைய கண்கள் அதிகத் தெளிவாக இருக்கின்றன. அவர் அர்ச். சின்னப்பருடன் சேர்ந்து, “நானே சகலரிலும் பெரிய பாவியாயிருக்கிறேன்” என்று சொல்கிறார்.

நரகம் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது! நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கு ஒருவர் தேவைப்படுகிறார்! ஒரு தெய்வீக ஆளுக்குக் குறையாத ஒருவர் நம்மை இரட்சிக்கத் தேவைப்படுகிறார். இவ்வளவு அதிகமான அளவில் நமக்கு ஒருவர் தேவைப்படுகிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இரட்சிக்கப்பட மாட்டோம். ஏனென்றால் தாம் பாவிகளுக்காக, அதாவது தாங்கள் பாவிகள் என்று ஒப்புக் கொள்கிறவர்களுக்காக வந்ததாக சேசுநாதர் கூறினார். ஆகவே, நாம் பாவிகள் என்ற முறையில் நம் இரட்சகராகிய சேசுவிடம் போனால், அவர் நம் பாவப் பரிகாரப் பலியாக இருப்பார். அவர் நம் கடன்களைத் தம்மேல் சுமந்து கொண்டு, ஓர் அச்சத்திற்குரிய மரணத்தைக் கொண்டு அதைத் திருப்பிச் செலுத்துவார். அதிகப்படியான தாராளத்தைக் கொண்டு, நமக்காக அதைத் திருப்பிச் செலுத்த அவர் எவ்வளவு ஆவலாக இருக்கிறார் என்பதை நமக்குக் காட்டும்படி, அவர் தமக்காக சகலத்திலும் அதிக வேதனையானதும், மிக இழிவானதும், மிகுந்த அவமானத்திற்குரியதுமான ஒரு மரணத்தைத் தேர்ந்து கொள்வார்.

இந்த ஒரு கருத்தை சிந்தித்துப் பார் - நம் இரட்சகரின் துன்பங்களை நீ பிரிக்க முடியாது. அவர் எனக்காகக் கொஞ்சம் துன்பப்பட்டார், மீதமுள்ள துன்பங்களை அவர் மற்ற பாவிகளுக்காக அனுபவித்தார் என்று நீ சொல்ல முடியாது. வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரேயொரு பாவி நீதான் என்பது போல அவை எல்லாவற்றையும் உனக்காக மட்டுமே அவர் அனுபவித்தார். அது ஏன் அப்படி? ஏனென்றால் அவர் சர்வேசுரனாக இருக்கிறார். சர்வேசுரனுடைய வேலைகளை நீ பிரிக்க முடியாது. அவர் தனிப்பட்ட முறையில் உனக்காக மரித்தார். உனக்காக மட்டுமே அவர் மீண்டும் இறங்கி வந்து மரித்தார் என்றாலும் அது உனக்கு எந்த விதத்திலும் மேலதிக நன்மை எதையும் செய்து விடாது. நீ அவருக்குக் கடன்பட்டிருக்கிற நன்றிக்கடன் மிகப் பெரியதாக இருக்கிறது. அரை மனதாக நீ செய்கிற ஓர் ஊழியம் நியாயமானதுதான் என்று நீ நினைத்தால், அப்போது உன் ஆன்ம கொள்கைகள் பரிதாபத்திற்குரிய முறையில் குழம்பிப் போகின்றன. இதைப் பற்றி எவ்வளவு அடிக்கடி நாம் நினைக்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமதிகமாக இதற்கெல்லாம் என்ன பொருள் என்பதை நாம் உணரத் தொடங்குவோம்.

கிறீஸ்து நாதரின் திருப்பாடுகளின் மீதான தியானம் நம் கல்லான இருதயங்களை உருகச் செய்கிற அடுப்பாக இருக்கிறது. அது, நேசத்தின் காரணமாக நமக்காக மரித்த மாபெரும் கடவுளை நாம் நேசிக்கச் செய்கிறது.


எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பலியாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!