இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே!

நமது ஆதிப் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் அதி உன்னத தேவனுக்கு ஏற்பட்ட நிந்தை அளவற்றது. அந் நிந்தைக்குத் தகுந்த பரிகாரம் செய்வது ஒரு சிருஷ்டியால் -- அது எவ்வளவு மேன்மை பொருந்திய சிருஷ்டியாயிருந்தாலும் சரி -- கூடாத காரியம். ஆகவே, இவ்வலுவலை நிறைவேற்ற தேவசுதனே மனுவுரு வெடுத்தார்; எளிமையில் பிறந்தார்; வறுமையில் வளர்ந்தார்; இறுதியாக பாடுகள் பல அனுபவித்து, தமது திரு இரத்தமெல்லாம் சிந்தி சிலுவையில் மரித்தார். 

இவ்வாறாக தேவனுக்கு இழைக்கப்பட்ட நிந்தைக்கு முற்றிலும் பரிகாரம் செய்தார்; தேவனின் கோபத்தைத் தணித்தார்; நரகத்தின் வாயிலிருந்து நம்மை மீட்டு இரட்சித்தார்; அடைபட்டிருந்த மோட்ச வாசலை நமக்குத் திறந்து விட்டு, அங்கு போய்ச் சேருவதற்கான வழி வகைகளையும் காட்டிச் சென்றார். எனவே மனுக்குல இரட்சணியம் கிறீஸ்துநாதரால் முற்றுப் பெற்றது. (இதைத் தான் ஆங்கிலத்தில் Objective Redemption என்பர்).

கிறீஸ்துநாதர் நம்மெல்லோரையும் இரட்சித்திருக்கிறார் எனினும் அவ்விரட்சணியத்தால் பயனடைவது நம்மைப் பொருத்த காரியம். “உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள், உன்னையன்றி உன்னை இரட்சிக்க மாட்டார்” என்று அர்ச். அகுஸ்தினார் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. 

அர்ச். அக்குவினாஸ் தோமையார் கூறுவது போன்று, ஒரு மருத்துவன் வியாதிக்காரனுக்கு வேண்டிய மருந்துகளைத் தயாரிப்பது போன்று, நமதாண்டவரும் நாம் மோட்சம் சேர வேண்டியதற்கான வழிவகைகளை வகுத்து வைத்துள்ளார். எவ்விதம் வியாதி குணமடைய வேண்டுமாயின், வியாதியஸ்தன் மருத்துவன் தனக்குத் தயாரித்துள்ள மருந்துகளை உட்கொண்டு அவனது ஆலோசனைப்படி நடக்க வேண்டுமோ, அவ்விதமே, நாமும் மோட்சம் செல்ல வேண்டுமாயின், கிறீஸ்துநாதர் நமக்குத் தந்துள்ள வழிவகைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

அதாவது, திருச்சபையில் சேர்ந்து, அதன் உத்தம பிள்ளைகளாய் நடத்தல் அவசியம். இவ்வாறாக, நமது ஆத்துமங்களை நாம் இரட்சித்துக் கொள்ள வேண்டும் (Subjective Redemption). இதற்கு முதலில் மனிதர் திவ்ய சேசுவின் இரட்சணிய வேலையையும், அவருடைய சுவிசேஷத்தையும் அறிய வேண்டும். சுவிசேஷத்தைப் போதிப்பவர்கள் வேண்டும். திவ்விய சேசு இவ்வுலகில் ஜீவித்தது முப்பத்து மூன்று வருடங்களே; -- அதிலும் மூன்று வருடங்கள் மட்டுமே பாலஸ்தீன் நாட்டில் சுவிசேஷத்தைப் போதித்தார். ஆகவே, உலகின் எத்திசையிலும் வாழும் மனிதர் யாவரும் தமது சுவிசேஷத்தை அறிய வேண்டுமென்பதற்காக நமதாண்டவர் சில மனிதரைத் தெரிந்து கொண்டார். அவர்கள்தான் அப்போஸ்தலர்கள் எனப்படுவோர்.

அப்போஸ்தலர் என்னும் சொல் அப்போஸ்தெல்லோ (Apostello) என்னும் கிரேக்கச் சொல்லினின்று பிறந்தது; அச்சொல் தூது முன் அனுப்புதல் எனப் பொருள்படும். ஆனால் அப்போஸ்தலர்கள் வெறும் தூதர்கள் மட்டுமன்று. சேசுவின் அலுவலைத் தொடர்ந்து நடத்திய பிரதிநிதிகள் அவர்கள். அப்போஸ்தலர் என்னும் சொல் பழைய ஏற்பாட்டில் மிக்க அரிதாகவே காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலோ எண்பது தடவை காணப்படுகிறது.

திவ்விய சேசுவுக்கு அநேக சீஷர்கள் இருந்தனர். அவர்களில் பன்னிருவரை விசேஷித்த விதமாய்த் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார் (லூக். 6:13). அவர்கள் இராயப்பர், பிலவேந்திரர், இயாகப்பர், அருளப்பர், பிலிப்பு, பர்த்தலோமேயு, மத்தேயு, தோமையார், அல்பேயின் குமாரனாகிய இயாகப்பர், யூதா ததேயு, சீமோன், கடைசியாக துரோகியான யூதாஸ் இஸ்காரியோத் என்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி இங்கு ஒரு சிறிது கூறுதல் நலம்.

முதல் பாப்பானவரான அர்ச். இராயப்பர், அர்ச். பிலவேந்திரரின் சகோதரர். யதார்த்த குணமுள்ளவர்; திவ்ய கர்த்தர் மீது அவர் கொண்டிருந்த அன்பு அபாரமானது. அவ்வன்பினால் தூண்டப்பட்டு சில சமயங்களில் புத்தியீனமாகவும் நடந்து கொண்டார். சுவிசேஷங்களும், அப்போஸ்தலர் நடபடிகளும் இவரது அன்புச் செயல்களை எடுத்துரைக்கின்றன. இவ்வன்புக்குப் பிரதியன்பாக திவ்விய இரட்சகர் இவரைத் தம் மந்தையின் மேய்ப்பனாக நியமித்தார்.

அர்ச். பிலவேந்திரரது பெயர் அவர் தம் சகோதரரான இராயப்பரின் மேன்மைப் பிரதாபத்தால் மறைந்து விடுகிறது. இவரது ஜீவியம் மறைந்திருந்தாலும், மரணம் எவராலும் மறக்க முடியாததொன்று. சிலுவை யில் மரணமடைந்த அவரது அன்பு மொழிகள், அவைகளைக் கேட்டவர்களுடைய இருதயங்களை உருக்கியதுமன்றி, கண்ணீர் சிந்தி அழவும் செய்தன.

அர்ச். பெரிய இயாகப்பரும், அர்ச். அருளப்பரும் முறையே அண்ணன் தம்பியர்; செபதேயுவின் புதல்வர்கள். “என் பாத்திரத்தை பானம் பண்ணுவீர்களா?” என்று நமதாண்டவர் அவர்கள் இருவரையும் கேட்ட போது, இருவரும் “ஆம்” என்று உடனே பதிலளித்தனர். அர்ச். இயாகப்பர் ஏரோது அக்கிரிப்பா என்பவனால் கொலை செய்யப்பட்டு தாம் கொடுத்த வாக்கின்படி அப்போஸ்தலர்களின் முதல்வராக பாடுகளின் பாத்திரத் தைப் பானம் பண்ணும் பாக்கியமடைந்தார்.

அர்ச். அருளப்பரைப் பற்றி அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. நமதாண்டவர் அவரை எவ்வாறு விசேஷ விதமாக நேசித்தார் என்பதற்கு தமது மார்பில் சாயும் பாக்கியம் கொடுத்ததே தக்க சான்று.

அர்ச். பர்த்தலோமேயு என்பவரைப் பற்றி நமக்குத் தெரிந்தது வெகு சொற்பமே. அத்தி மரத்தடியில் அர்ச். பிலிப்பு என்பவர் கண்ட நத்தானியேலே இவர் என்பது பொது அபிப்பிராயம்.

அவரது நண்பரான அர்ச். பிலிப்பு, அர்ச். ஸ்நாபக அருளப்பரை மெசியா என்று எண்ணி அவரைத் தேடி வந்தார். சுவிசேஷத்திலிருந்து அவரது பெருந்தன்மையும், பிறர் துன்பப்படுவதைக் கண்டு மனமுருகும் ஈரமுடைமை யும் நமக்குப் புலப்படுகிறது. எபேசுஸ் நகர் மேற்றிராணி யாரான பொலிக்கிராட்டெஸ் என்பவர் பிலிப்பு ஓர் இல்லறவாசியென்றும், அவரது புதல்வியர் கன்னியராக ஜீவித்தனரென்றும் கூறுகிறார்.

அர்ச். சீமோனைப் பற்றி நமக்குத் தெரிந்த தெல்லாம் அவர் கானான் தேசத்தவர் என்பதே.

சுவிசேஷகரான அர்ச். மத்தேயு ஓர் ஆயக்காரன். தாம் எழுதிய சுவிசேஷத்தில் தம்மைப் பற்றி ஒரே ஒரு முறை மட்டுமே குறிப்பிடுகிறார். அதுவும், தான் எவ்வாறு இஸ்ராயேலரின் இகழ்ச்சிக்கு இலக்காயிருந்த குலத்தவரென்றும், இருப்பினும் திவ்விய சேசு தம்மைத் தேர்ந்தெடுத்தாரென்றும் காட்டவேயொழிய வேறல்ல.

அர்ச். தோமையார் கள்ளங்கபடற்ற எதார்த்தவாதி. ஆயினும் சேசுநாதர் உயிர்த்தெழுந்ததை அவரால் எளிதில் நம்ப முடியவில்லை; அவரைக் கண்டபின்னரோ, “என் ஆண்டவரே, என் தேவனே” என்று விசுவாச உச்சாரணம் செய்கிறார். 

சேசுநாதர் மரித்த லாசரை உயிர்ப்பிக்கச் செல்லும் சமயம், சீஷர்கள் அவரை நோக்கி, “சுவாமி, இப்பொழுதுதானே யூதர்கள் உம்மைக் கல்லால் எறியத் தேடினார்கள்; திரும்பவும் அங்கே போகிறீரோ?” என்றார்கள் (அரு. 11:8). தோமையாரோ, தம்முடைய உடன் சீடர்களைப் பார்த்து, “அவரோடுகூட மரிப்பதற்கு நாமும் போவோமாக” என்றார் (அரு.11:16). இவர் நம் நாட்டுக்கு வேதம் போதிக்க வந்தாரென்பதும், கடைசியாக மைலாப்பூரிலுள்ள பரங்கி மலையில் (St. Thomas Mount) வேதத்திற்காகக் கொல்லப்பட்டார் என்பதும் பரம்பரைக் கூற்று.

அர்ச். சின்ன இயாகப்பரும் அர்ச். யூதாவும் சகோ தரர்கள். துவக்கத்தில் இவ்வுலக நலன்களையே தேடி வந்தனர். இஸ்பிரீத்துசாந்து அவர்கள் மேல் இறங்கி வந்த பின்போ, அவர்கள் முற்றும் மாறினர். யூதா ஓர் நிரூபத்தை எழுதியுள்ளார். யாகப்பர் புதிதாகத் தோன்றிய திருச்சபை யின் பெயர் பெற்ற மேற்றிராணிமார்களுள் ஒருவராய்த் துலங்கினார். இவரும் ஒரு நிரூபத்தை எழுதியுள்ளார்.

தனது திவ்விய குருவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த துரோகியான யூதாஸின் கதி என்ன என்பதை நாமறிவோம். காலியான அவனுடைய ஸ்தானத்தைப் பூர்த்தி செய்ய, மத்தியாஸ், பர்னபாஸ் என்ற இருவர் நியமிக் கப்பட்டனர். இவ்விருவரில் அர்ச். மத்தியாஸ் தெரிந்து கொள்ளப்பட்டார்.

திவ்விய சேசுவால் விசேஷவிதமாய்த் தெரிந்து கொள்ளப்பட்ட அர்ச். சின்னப்பரும் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார். திருச்சபையைத் துன்புறுத்திய இவர் அற்புதமாய் மனந்திரும்பி திருச்சபையைப் பரப்புவதில் அல்லும் பகலும் அயராது உழைத்தார். கடைசியாக, உரோமாபுரியில் அர்ச். இராயப்பருடன் வேதத்திற்காகக் கொல்லப்பட்டார். இவர் எழுதியுள்ள நிரூபங்கள் பதினான்கு.

அர்ச். சின்னப்பரோடு அஞ்ஞானிகளை மனந்திருப் பும் வேலையில் ஒத்துழைத்த அர்ச். பர்னபாஸும் ஓர் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.

இனி, இவ்வப்போஸ்தலர்களுக்குத் தேவதாய் எவ்விதம் இராக்கினியாவார்கள் என்று பார்ப்போம்.

“ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின் கீழ் சந்திரனும், சிரசின் மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஒரு கிரீடமும் இருந் தது” என்று காட்சியாகமத்தில் (12:1) சொல்லப்பட் டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள ஸ்திரீ நம் மாதா வென்றும், அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடத்தில் துலங்கும் பன்னிரு நட்சத்திரங்கள் பன்னிரு அப்போஸ் தலர்களைக் குறிக்கிறதெனவும் வேதசாஸ்திரிகள் விளக்கிக் கூறுகின்றனர்.

தவிர, சிலுவையடியில் அர்ச். அருளப்பர் வழியாக தேவதாயை நமக்கும், விசேஷமாக அப்போஸ்தலர்களுக் கும் தாயாக நியமித்தார் நமதாண்டவர். மேலும், திவ்விய இரட்சகர் மோட்சத்திற்கு எழுந்தருளிய தினத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்து இறங்கிவரும் நாள் வரை அப்போஸ்தலர் களைத் தேற்றுகிறார்கள் இந்த இராக்கினி.

மனிதருக்குக் கிறீஸ்துநாதரைப் பற்றிப் போதிக்கவும், அவருடைய இராச்சியத்தை இவ்வுலகில் பரப்புவதற்கும் அனுப்பப்பட்டவர்கள் அப்போஸ்தலர்கள். அதற்காக அப்போஸ்தலர்கள் அனைவரும் தங்களால் ஆவன செய்ததுமன்றி தங்கள் உயிரையும் பலியாக்கினர். எனினும் தேவதாய் இவர்களுக்கெல்லாம் மேலாக, பன்மடங்கு சிறந்த விதத்தில் இவ்வப்போஸ்தல அலுவலை நிறைவேற்றினார்கள். ஆகவே தேவமாதா “அப்போஸ்தலர்களின் இராக்கினி” என்பதில் என்ன சந்தேகம்?

“அர்ச். மரியாயே, அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே, இவ்வுலகிலிருக்கையில் நீர் அப்போஸ்தலர் களுக்கு ஆறுதலாகவும், உற்ற துணையாகவும் இருந்தீரே. தாயே, அப்போஸ்தலர்களின் அலுவலைத் தொடர்ந்து நடத்தும் பரிசுத்த பாப்பரசர், மேற்றிராணிமார், குருக்கள் யாவருக்கும் இத்துன்ப காலத்தில் ஆறுதலும் உதவியும் அளித்தருளும். உமது மன்றாட்டின் உதவியால் அவர்கள் தங்கள் ஆன்ம இரட்சணிய அலுவலில் என்றும் வெற்றியே காண்பார்களாக! விசுவாசிகளாகிய நாங்களும் இத் திருத்தொண்டில் அவர்களோடு ஒத்துழைக்க, எங்களுக்கு வேண்டிய நன்மனதையும், ஆன்ம இரட்சணிய ஆவலையும் அடைந்து தந்தருளும்.” 


அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.!