தியான யோசனை செய்யுமுன்னும், செய்யும் போதும் கவனிக்க வேண்டிய விவரங்கள்.

1. தியான யோசனையாவது ஏதென்றால் : யாதொரு தேவ இரகசியம், வேத சத்தியம், சுவிசேஷ நிகழ்ச்சி, நீதி வாக்கியம் இவை முதலியவைகளைச் சிந்தையில் நிறுத்திப் புத்தியைக் கொண்டு அதன் அர்த்தம், உண்மை , பயன், நலம் முதலிய விஷயங்களைப் பற்றி யோசிப்பதும், அந்த யோசனைக்குத் தக்கது போல் மனதில் நற்பற்றுதல் பிறப்பிப்பதும், அதற்கு இசைவாய் தன் நடத்தையைச் சீர்படுத்துவதும், ஆகிய இவ்வித முயற்சியே தியான யோசனையாகும்.

உதாரணமாக: சம்மனசுக்கள் உலக ஆதியில் மோட்சத்தில் செய்த பாவத்தைப் பற்றி நீ தியானித்தால் அவர்கள் செய்த ஒரே பாவத்தால் மோட்ச பாக்கியத்தை இழந்து நரகத்தில் எப்படி விழுந்தார்களென்று யோசித்து, நீ எத்தனையோ பாவங்களைச் செய்திருக்கிறாயென்றும், அவைகளுக்காக எவ்வளவு தண்டிக்கப்பட வேண்டியதென்றும் நினைத்து, உன் பாவங்களுக்காக நீ வெட்கப்பட்டு நாணி, பயந்து, இனி பாவத்தைச் செய்ய மாட்டேனென்று தீர்மானம் செய்தால் இதுவே தியான யோசனையாகும்.

2. நீ தியானம் துவக்குமுன் தியானிக்க வேண்டிய பொருளை முன்பே வாசித்து அல்லது ஒருவன் வாசிக்க அல்லது சொல்லக் கேட்டு அதை இரண்டு அல்லது மூன்று பிரிவாய் வகுத்து உன் ஞாபகத்தில் வைத்துக் கொள்.

3. தியானம் செய்யும் நேரம் வந்தால், தகுந்த இடத்தில், சர்வேசுரன் சமூகத்தில் உன்னை நிறுத்தி, சற்று நேரம் நின்று, பின் முழங்காலிலிருந்து நமஸ்காரம் செய்து ஆராதிப்பாயாக. உன் தாழ்மையைக் காட்ட தரையை முத்தி செய்.

4. அதன்பின் உன் புத்தி, மனது, ஞாபகம் , உன் வலிமை, நீ செய்யும் முயற்சிகள் எல்லாவற்றையும் சர்வேசுரனுடைய ஸ்தோத்திர மகிமைக்காக ஒப்புக்கொடு.

5. நீ தியானிக்கும்படி தெரிந்த பொருளை உன் ஞாபகத்தில் சுருக்கமாய் வரச் செய். இது தியான ஆரம்ப முதல் செயல். அதன்பின் நீ தியானிக்கும் பொருள் உன் மனதின் கண் முன் தெளிவாயிருக்கும்படி அந்தப் பொருளுக்குரிய இடத்தை நீ உன் கண்ணால் பார்ப்பதாகத் தியானித்துக் கொள்.

உதாரணமாக : சேசு நாதர் பிறந்ததை நீ தியானித்தால் அவர் பிறந்த மாட்டுத் தொழுவையும், வைக்கோல் மேல் படுத்திருக்கும் தேவ குழந்தையையும், நீ உன் கண்ணால் பார்ப்பதாக உத்தேசித்துக் கொள்.

6. நீ தியானிக்கும் பொருள் வேத வாக்கியம், நீதி வசனம், சத்திய வாக்கியமானால் அது உன் கண்ணுக்குப் புலப்படும்படி ஓர் வகையான ரூபகம் அதற்குக் கொடுக்கலாம். அப்படியே பாவத்தின் பேரில் தியானிக்கையில், உன் ஆத்துமம், சரீரமாகிற சிறைக்குள்ளே அடைபட்டு, புத்தியில்லா மிருகங்களோடு கூடி இருந்து, அழுது புலம்புவதாக உத்தேசிக்கலாம்.

இது தியான ஆரம்ப இரண்டாம் செயலாகிய இட ரூபிகரம். இதனால் உண்டாகும் பயன் ஏதென்றால், நமது கருத்தும், கவனமும் சிதறிப் போகாமல் கிரகித்த இடத்தைச் சுற்றியே நிற்கும். இப்படி கிரகிப்பது சிலருக்கு எளிதும் வேறு சிலருக்குக் கடினமாயுமாயிருக்கும். ஆனதால் அவரவர் தங்கள் சுபாவ இயற்கைக்குத் தக்கபடி வலுவந்தமின்றி, இதைச் செய்வது ஒழுங்கு. மனோபாவமாகிற சக்தியின் பலமின்மையால் உனக்கு இடம் ரூபிகரிப்பது முடியாதென்று தோன்றினால், இதில் வீணாய் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.

7. எந்தப் பொருளைப் பற்றி நீ தியானித்தாலும், நீ உன் ஆத்தும் நன்மையையே தேடி , உன்னிடத்திலுள்ள துர்க்குணங்களை அடக்கி, உன் நடத்தையை சீராக்கி, நல்லொழுக்கத்துக்கு உன்னைக் கொண்டு வருவது உன் நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி வீணான மனக் கற்பனை செய்து, பிறர் நடத்தையைச் சீர்திருத்த உன்னை மறந்து போவது பெரும் மோசமான தப்பிதம்.

8. தியான யோசனை முடிய பத்து நிமிஷத்துக்கு முன், புத்தியின் யோசனையெல்லாம் நீக்கி சர்வேசுரனுடன் உரையாடி அவரைப் பிரார்த்திக்க முழங்காலிலிரு. அப்போது தகப்பனோடு பிள்ளையும், எஜமானன்முன் ஊழியனும், சினேகிதனோடு சினேகிதனும், பேசு வது போல் உன் குறைகளைச் சொல்லியும், உன் பிரியத்தைக் காட்டி யும் சர்வேசுரனோடு பேசு .

சில சமயம் நடுவரின் முன் குற்றவாளி பயந்து நடுங்கி நிற்பது போல் உன்னைச் சர்வேசுரன் முன் நிறுத்தி அவருடைய தேவ நீதியின் கோபத்தைத் தணிக்க தாழ்மையாய் நீ மன்றாடு. இவ்வகையான ஜெபத்தை சேசுநாதர், தேவமாதா, உனக்குப் பாதுகாவலான புனிதர்கள், இவர்களை நோக்கிச் செய்யலாம்.

9. தியானம் முடிந்தபின் பரலோக மந்திரம், அல்லது அருள்நிறை மந்திரம், அல்லது கிறீஸ்துவின் ஆத்துமமானதே என்ற செபம் சொல்வது வழக்கம்.

10. இரு முறை யோசிப்பது சில சமயங்களில் வெகு பிரயோசன முள்ளது. முதல் முறையில் மனதில் படாதது மறுமுறை நன்றாய்ப் படலாம். இவ்வித தியானத்தில் புத்தியின் யோசனையைக் குறுக்கி, மனதை முக்கியமாய் முயலும்படி செய்து, நல்லுணர்ச்சியும் மன உருக்கமும், பற்றுதலும் உண்டாகப் பிரயாசைப்படுவது நலமா யிருக்கும்.

11. எந்த விஷயத்தின் பேரில் நீ யோசிக்கும் போது உன் மனதில் உருக்கமும், உணர்ச்சியும், பற்றுதலும் உண்டாகின்றதோ அதிலே நீ ஊன்றி நில். அடுத்த விஷயத்தை நினைக்கக் கவலைப்படாதே. பசியுள்ளவன் பசியை ஆற்றும் போஜனம் கண்டால் அதைப் பசியாற உட்கார்ந்து சாப்பிடுவது போல் நீயும் உன் தியான யோசனை மட்டில் செய். ஆத்திரமும், கவலையும், படபடப்பும் உதவாது. அமர்ந்து மெதுவாய் மனதும் கருத்தும் சிதறாமல் செய்.