பிதாவுடனான தொடர்பில் நித்திய ஞானமானவர்!

16. இஸ்பிரீத்து சாந்துவானவர் நமது பலவீனத்திற்கு ஏற்றபடி தம்மை மாற்றிக் கொண்டு, ஞான ஆகமத்தில், நித்திய ஞானமானவரைப் பற்றிய வர்ணனையை நமக்குத் தருகிறார். இந்த வர்ணனையை அவர் நமக்காகவே உருவாக்கினார்.

"நித்திய ஞானமானது கடவுளின் வல்லமையின் ஆவியாயும், சர்வ வல்லபமுள்ளவரின் மகிமையிலிருந்து புறப்படும் பிரகாசமுள்ள கதிராகவும் இருக்கிறது. ஆனதால் அதனிடத்தில் மாசொன்றும் அணுகாது. அது நித்திய பிரகாசத்தின் ஒளியுமாய், கடவுளுடைய மகத்துவத்தின் மாசில்லாத கண்ணாடியுமாய், அவரது நன்மைத்தனத்தின் சாயலுமாயிருக்கிறது" (ஞான. 7:25, 26). 

17. சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் பாத்மோஸ் தீவில் இருந்த போது, அவர் கண்ட ஒரு பரவசக் காட்சியில் காட்டப்பட்ட தெய்வீக அழகின் பிரதான், நித்திய வடிவமாக இருக்கிறார். அருளப்பர் இந்தக் காட்சியைக் கண்டு "ஆதியிலே (நித்திய ஞான மானவரும், சர்வேசுரனுடைய திருச்சுதனுமான) வார்த்தை இருந் தார். அந்த வார்த்தை சர்வேசுரனிடத்தில் இருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார்" (அரு.1:1) என்று அதிசயித்தபடி கூறினார். 

18. தமது ஆகமத்தில் சாலமோன் அடிக்கடி பேசுகிற (சிராக் 1:4,8; 24:14) நித்திய ஞானம் இதுவே. ஆதியிலும், யுகங்களுக்கு முன்னும் அது சிருஷ்டிக்கப்பட்டது -- அதாவது உருவாக்கப் பட்டது என்று அவர் அவரைப் பற்றிக் கூறுகிறார்.

தேவ ஞானமானவர் தம்மைப் பற்றியே பேசும்போது, "பூர்வங் களில், பூமி உண்டாகுமுன்னமே, நித்தியந்தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன். பாதாளங்கள் இன்னும் இருக்க வில்லை. நான் ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன்" என்று கூறுகிறார் (பழ. 8:23,24). 

19. பிதாவாகிய சர்வேசுரன் நித்தியத்திலும், காலத்திலும் தமது திருச்சுதனாகிய நித்திய ஞானமானவரின் இராஜரீக அழகால் வெகுவாகப் பூரிப்படைந்திருந்தார். தம் திருச்சுதனின் ஞான ஸ்நானத்தின் போதும், அவரது மறுரூபத்தின் போதும் பிதாவானவர் இந்த தமது மகிழ்ச்சிக்குத் தாமே நேரடியாக சாட்சியம் கூறினார். "என் நேச குமாரன் இவரே, இவர்பேரில் நான் பூரண பிரியமா யிருக்கிறேன்" (மத் 17:5; மத். 3:17; காண்க : எண்க ள் 55, 98).

மறுரூபத்தின் போது அப்போஸ்தலர்கள் ஒரு கண நேரம் மட்டும் கண்ட இந்தக் கண்ணைப் பறிக்கிற, புரிந்து கொள்ள முடியாத மகத்துவப் பேரொளி அவர்களை மகிழ்ச்சியால் நிரப்பியது, பரவச நிலையின் சிகரங்களுக்கு அவர்களைச் சுமந்து சென்றது:

இல்லுஸ்த்ரே குயித்தாம் (செர்னிமுஸ்) 
சுப்லிமே, செல்ஸும், இந்த தெர்மினும்,
ஆந்திக்குயியுஸ் சேலோ எத் சாவோ: 

அதாவது, இந்த நித்திய ஞானமானவர்,

மகத்துவப் பேரொளி மிக்கவராகவும், 
பக்திக்குரியவராகவும், பிரமாண்டமானவராகவும்,
அளவற்றவராகவும், 
பிரபஞ்சத்தை விடப் புராதனமானவருமாக இருக்கிறார்.

அவரது அழகையும், உன்னத மென்மையையும் பற்றிய மிக மிக மங்கலான ஒரு காட்சியைத் தரக் கூட இயலாமல் என் வார்த்தைகள் தவறிப் போகின்றன, அவருடைய உன்னதத் தன்மைக்கு முன் அவை ஒன்றுமில்லாமல் போகின்றன. ஏனெனில் அவரைப் போதுமான அளவுக்கு உருவகப்படுத்த எந்த மனித னால் முடியும்? அவரைப் பிரமாணிக்கமுள்ள முறையில் சித்தரித்துக் காட்ட எவனால் முடியும் ? மேன்மை மிக்கவராகிய சர்வேசுரா, தேவரீர் மாத்திரமே அவர் யாராக இருக்கிறார் என்று அறிந்திருக்கிறீர், யாருக்கு வெளிப்படுத்த தேவரீர் சித்தமாயிருக் கிறீரோ, அவர்களுக்கு அவரை வெளிப்படுத்தவும் தேவரீர் வல்லவராயிருக்கிறீர் (மத் 11:27; லூக் 10:22 காண்க).


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...