புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதற் கதை

நான் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். ஒரு நாள் என் அறையில் உட்கார்ந்து எனக்கு வந்திருந்த கடிதங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அநேக கடிதங்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றாகத் திறந்து வாசித்தேன். கடைசியாக ஒரு நீண்ட உறையை நான் திறக்க வேண்டியிருந்தது. என் பத்திரிகையில் பிரசு ரிக்கும்படி ஒரு கதை வந்திருக்கிறது என நான் உடனே யூகித்துக் கொண்டேன். அது சிறு கதை. முதற் பக்கத்தின் உச்சியில், ''வழக்கம்போல் பணம் கொடுக்கவும்'' என்றெழுதியிருந்தது. அதாவது அந்த கதையை பத்திரிகையில் நான் பிரசுரிப்பதாயிருந்தால் கதையை எழுதினவருக்கு நான் பணம் கொடுக்க வேண்டும்.

நிறுத்தி கவனத்துடன் கதையை நான் வாசித் தேன். அதை எடுத்துக் கொள்வதா? திருப்பி அனுப் புவதா? "கதை நல்ல கதையே. எனினும் அதைத் திருப்பி அனுப்பிவிடவேண்டும். தற்சமயம் கதை எதையும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஏனெ னில் கதைகள் பல ஏற்கனவே என்னிடம் இருக்கின் றன; அல்லாமலும் பணமும் என் கைவசம் அதிகம் இல்லை" என எனக்குள் நான் சொல்லி, அதை மறு நாட் காலையில் திருப்பி அனுப்பும் நோக்கத்துடன் மடித்து மேஜையின் ஒரு பக்கத்தில் வைத்தேன்.

அந்தக் கதையோ என் நினைவை விட்டு நீங்க மறுத்தது. "அது நல்ல கதையாயிற்றே. ஏன் திருப்பி அனுப்பவேண்டும்?' என எனக்குள் யாரோ திரும்பத் திரும்பச் சொன்னாப் போல் இருந்தது. ஆதலின் இரா உணவுக்குப்பின் அதை இன்னொரு முறை வாசித் தேன். நேர்த்தியான கதை, எனினும் பல மாதங் களுக்கு வேண்டிய கட்டுரைகளும் கதைகளும் என் னிடம் குவிந்து கிடந்தன. மேலும் இப்பொழுது செலவைக் குறைத்தாக வேண்டியிருக்கிறது. எப்படி யாவது அதைத் திருப்பி அனுப்புவது என்று தீர் மானித்து அதை உறையிற் போட்டு உறையை மூடி முத்திரையும் வைத்துவிட்டேன். மறுநாட் காலையில் இதர கடிதங்களுடன் அது தபாலுக்கு அனுப்பப் படும்.

அன்று நெடு நேரம் நித்திரை வரவில்லை. அந்தக் கதை என் கண்முன் நின்றது. மறுநாள் எழுந்ததும் அதே நினைவே. ''அதை அனுப்ப வேண்டாம், வைத் துக் கொள். சிறுவர்களுக்கேற்ற இவ்வித நல்ல கதை ஒன்று உனக்குக்கிடைப்பது அரிது வைத்துக்கொள்வைத்துக்கொள்'' என யாரோ என் உள்ளத்தில் சொன்னாப் போலிருந்தது.

அன்று காலையில் கதையைத் திரும்பவும் எடுத் துப் படித்துப் பார்த்தேன். மறுநாளே கதையை எழுதியவருக்கு நல்ல ஒரு கடிதம் எழுதி பணமும் அனுப்பினேன். பின் அதைப்பற்றிய நினைவே என்னை விட்டு அகன்றது.

இரண்டு வாரங்களுக்குப்பின் ஒருநாள் என் கடி தங்களைத் திறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் ஒன்றில் பின்வருமாறு எழுதியிருந்தது: ''சுவாமி,

நீங்கள் அன்புடன் உற்சாகமூட்டி எழுதி அனுப் பிய கடிதமும் பணமும் கிடைத்தன மிகவும் நன்றி. அந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்த துபற்றி மகிழ்கிறேன்.

தந்தையே, நான் இளம் எழுத்தாளன். நான் எழுதியுள்ள முதல் மூன்று கதைகளையும் கத்தோ லிக்க பத்திரிகைகள் விலைக்கு வாங்கியிருக்கின்றன. கடவுளுக்கும் புனித சூசையப்பருக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். உங்களுக்கு நான் என் கதையை அனுப்பியதும், கர்த்தர் பிறந்த திருநாளுக்கு முன் அதற்கான பணம் வரப் பிரார்த்தித்து புனித சூசை யப்பருக்கு ஒரு நவநாள் தொடங்கினேன். பணம் எனக்கு மிகத் தேவை. என் தாய் வியாதியாயிருக் கிறார்கள். உங்களுக்கே கதையை முதலாவதாக அனுப்பினேன். நீங்களும் உடனே அதற்கான பணத் தைக் கொடுத்து விட்டீர்கள். புனித சூசையப்பர் புகழப்படக்கடவாராக.''