10 ஜூன் 1944.
மாதா கூறுகிறார்கள்:
நீ இந்த நோட்டுப் புத்தகங்களை கொடுப்பதற்கு முன் என் ஆசீரை அதனுடன் சேர்க்க விரும்புகிறேன்.
இப்பொழுது நீ விரும்புவதாயிருந்தால், கொஞ்சம் பொறுமையோடிருந்து சேசுவின் மறைந்த வாழ்வின் முழு விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். மங்கள வார்த்தை யிலிருந்து அவர் தம் பகிரங்க வாழ்வைத் தொடங்குவதற்காக நாசரேத்தை விட்டுப் புறப்பட்ட நேரம் வரையிலும் உள்ள உரைகள் மட்டுமல்ல, சேசு தமது குடும்பத்தில் வாழ்ந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் உன்னிடம் உள்ளன.
என் குமாரனின் பாலத்துவம், முன்-இளமைப் பருவம், இளைஞ பருவம் இவைகள். சுவிசேஷத்தில் விவரிக்கப்படுகிற அவருடைய வாழ்க்கையின் பரந்த காட்சிகளில் மிகச் சுருக்கமாகவே கூறப்படுகின்றன. சுவிசேஷத்தில் அவர் போதகராகவே விளங்குகிறார். இங்கோ அவர் மனிதனாகக் காட்டப்படுகிறார். மனிதனுக்காக தம்மைத் தாழ்த்துகிற கடவுளாயிருக்கிறார். ஒரு சாதாரண வாழ்க்கையின் தாழ்மையிலும் அவர் புதுமைகளைச் செய்கிறார். புதுமைகளை அவர் என்னிடத்தில் செய்கிறார். ஏனென்றால் என் உதரத்தில் வளருகின்ற என் குமாரனுடன் ஏற்படும் தொடர்பால் என் ஆன்மா உத்தமம் அடைகிறதை நான் உணர்கிறேன். சக்கரியாஸின் வீட்டில் ஸ்நாபகரை அர்ச்சிப்பதிலும், எலிசபெத்தின் பிரசவத்தில் உதவுவதிலும், சக்கரியாசுக்கு பேச்சையும் விசுவாசத்தையும் மீண்டும் கொடுப்பதிலும் புதுமை செய்கிறார். அர்ச். சூசையப்பர் நீதிமானாயிருந்தாலும்கூட, அவரால் கண்டுபிடிக்க முடியாத அவ்வளவு உயர்ந்த உந்நத உண்மையை அடைய அவருடைய உள்ளத்தை ஒளிக்குத் திறந்து கொடுத்தார். இந்த தேவ வரங்களின் பொழிதலினால், எனக்குப்பின், அர்ச். சூசையப்பரே அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவராயிருக்கிறார்.
அர்ச். சூசையப்பர் என் இல்லத்திற்கு வந்தது முதல் எஜிப்துக்கு ஓடிப்போகிற வரையிலும் எவ்வளவு முன்னேற்றம், அதாவது ஞான முன்னேற்றம் அடைந்தார் என்பதை சிந்தித்துப் பார். தொடக்கத்தில் அவர் அந்தக் காலத்தின் நீதிமானாக மட்டும் இருந்தார். அதன்பின் படிப்படியாக கிறீஸ்தவ காலத்தின் நீதிமானாகிறார். அவர் கிறீஸ்துவின்மேல் விசுவாசம் கொள்கிறார். அந்த விசுவாசத்தில் எவ்வளவோ பாதுகாப்புணர்வோடு ஊன்றிக் கொள்கிறார். நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்குப் புறப்படும் போது: “அப்படியானால் நாம் என்ன செய்வோம்?” என்று அவர் கேட்டது, மனிதனாகிய சூசையை முழுவதும் காட்டுகிறது. அவருடைய மனித முறையிலான பயங்களையும் கவலைகளையும் எடுத்துச் சொல்கிறது. அப்படிப்பட்ட சூசையப்பர் இப்போது நம்பிக்கை பெறுகிறார். பெத்லகேம் குகையில் சேசு பிறக்குமுன் அவர் சொல்கிறார்: “நாளைக்கு எல்லாம் நன்றாயிருக்கும்” என்று. பிறக்கப்போகும் சேசு இந்த நம்பிக்கையால் அவரைத் திடப்படுத்துகிறார். நம்பிக்கை என்பது கடவுளின் கொடைகளுள் மிகச் சிறந்த ஒன்றாகும். இந்நம்பிக்கையைப் பெற்ற சூசையப்பர் சேசுவைத் தொட்டதால் அர்ச்சிக்கப்பட்டு இந்த நம்பிக்கையிலிருந்து துணிவு கொள்ளும் அளவிற்கு முன்னேறுகிறார். அவர் என்மேல் கொண்டிருந்த வணக்கத்திற்குரிய மரியாதையினால் அவர் எப்போதும் என்னால் வழிநடத்தப்பட விரும்பினார். இப்பொழுது அவர் ஞானக் காரியங்களிலும் லெளகீகக் காரியங்களிலும் தாமே நடத்துகிறவராகிறார். குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் ஒரு தீர்மானம் செய்ய தேவை ஏற்படும்போது அதை அவரே செய்கிறார். இதுமட்டுமல்ல, நாங்கள் எஜிப்துக்கு ஓடிப்போன அந்த வேதனையான சமயத்திலும், பல மாதங்களாக அவருக்கு தேவகுமாரனுடன் கிடைத்திருந்த ஐக்கியத்தினால் அவர் அர்ச்சிஷ்டதனத்தினால் நிரப்பப்பட் டிருந்ததால், என்னுடைய துன்பத்தில் அவரே எனக்கு ஆறுதலாயிருந்து சொல்வார்: “நமக்கு வேறு எதுவுமே இல்லாமல் போனாலும், எல்லாவற்றையுமே நாம் எப்போதும் உடையவர்களா யிருப்போம். ஏனென்றால் அவரை (சேசுவை) நாம் கொண் டிருப்போம்” என்று சொன்னார்.
என் சேசு இடையர்களிடம் தமது வரப்பிரசாதப் புதுமை களைச் செய்கிறார். சம்மனசானவர் இடையன் இருந்த இடத்திற்குச் செல்கிறார். அந்த இடையன் சற்று நேரம் என்னைச் சந்தித்ததால் வரப்பிரசாதத்தைப் பெற ஆயத்தமாகி அதற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அதனால் அவன் நித்திய வாழ்வுக்கு மீட்கப்படுகிறான்.
சேசு பரதேச அகதியாய் இருந்தபோதும் தம் சிறிய நாடு நாசரேத்துக்குத் திரும்பியபோதும் எங்கெங்கு சென்றாலும் புதுமைகளைச் செய்தார். ஏனென்றால் அவர் எங்கே இருந்தாலும், அர்ச்சிஷ்டதனமானது, சணற்பு துகிலில் எண்ணெய் பரவுவதுபோல - மலர்களின் நறுமணம் காற்றில் பரவுவதுபோல பரவியது. அது யாரைத் தொட்டதோ, அவர்கள் யாவரும் அவன் பசாசாக இல்லாதிருந்தால், புனிதம் அடைய ஆவலுடையவர்கள் ஆனார்கள். எங்கே இந்த ஆவல் காணப்படுகிறதோ அங்கே நித்திய வாழ்வின் வேரும் காணப்படும். ஏனென்றால் நல்லவனாயிருக்க விரும்புகிறவன் நல்ல தன்மையை அடைவான். இந்த நல்ல தன்மை அவனை கடவுளின் இராச்சியத்திற்கு வழிநடத்திச் செல்லும்.
தொடக்க முதல் முடிவு வரையிலும், வேறு வேறு தருணங்களைப் பிரதிபலிக்கிற என் குமாரனின் மனுUகத்தை பல்வேறு கூறுகள் வழியாக நீ காண்கிறாய். உன் ஆன்ம குருவுக்குப் பயனுள்ளதெனத் தெரிந்தால், அவர் இந்த பல சம்பவங்களையும் ஒன்றாக முறைப்படுத்தி இடைவெளி விடாமல் சேகரிக்கலாம்.
அனைத்தையுமே ஒரே மொத்தமாக உனக்கு நாங்கள் கொடுத்திருக்க முடியும். ஆனால் இப்படி அது இருக்க வேண்டுமென்பது தேவ பராமரிப்பின் ஏற்பாடு. இது, என் அருமையுள்ள ஆன்மாவே உன்பொருட்டே. உன்மேல் வருத்துவிக்கப்படும் காயங்களுக்கு மருந்தை ஒவ்வொரு உரையிலும் உனக்கு நாங்கள் கொடுத்திருக்கிறோம். உன்னைத் தயாரிப்பதற்காக அதை முன்கூட்டியே உனக்குக் கொடுத்துள்ளோம். சூறாவளி வீசும்போது எதுவுமே உங்களைக் காப்பாற்ற முடியாதுபோல் தோன்றுகிறது. ஆனால் அது அப்படி அல்ல. ஞான நீர்களுக்கடியில் புதையுண்டு உறங்குகிற மனுUகமானது சூறாவளியால் மேலே கொண்டு வரப்படுகிறது. அதில் சுபாவத்துக்கு மேலான சத்தியங்களாகிய இரத்தினங்களும் மேலே கொண்டு வரப்படுகின்றன. அந்த இரத்தினங்கள் உங்கள் இருதயத்திற்குள்ளே விழுந்து, அந்த சூறாவளிக்காகவே காத்திருக்கின்றன. எதற்காக? அவைகள் மீண்டும் மேலே வரும்படியாக. வந்து: “நாங்களும் இங்கே இருக்கிறோம் - எங்களை மறந்து விடவேண்டாம்” என்று சொல்வதற்காக.
மேலும் இந்தச் செயல்முறையானது, அன்பான ஆத்துமமே, தேவ பராமரிப்பின் திட்டம் மட்டுமல்ல, இது காருண்யத்தின் அடிப்படையில் நடப்பது. இப்பொழுது நீ இருக்கிற மனம் சோர்ந்த நிலையில் சில காட்சிகளை உன்னால் எப்படிக் கவனித்திருக்க முடியும்? சில உரைகளுக்கு உன்னால் எப்படிக் காது கொடுத்திருக்க முடியும்? அவை, “எடுத்துரைப்போன்” என்னும் உன்னுடைய அலுவலை நீ செய்ய இயலாத அளவுக்கு உன்னைக் காயப்படுத்தியிருக்கும். ஆகவே அவைகளை நாங்கள் முதலில் உனக்குக் கொடுத்தோம். அதனால் உன் மனம் உடைந்து போவதைத் தடுத்தோம். ஏனென்றால் நாங்கள் கருணை கொண்டவர்கள். உன் துன்பங்களுக்கு ஏற்றவகையில் காட்சிகளையும் வார்த்தைகளையும் பயன்படுத்து கிறோம். அதனால் உன் துயரம் ஒரு கொடிய வேதனையாக மாறாதிருக்கும்படியாக அப்படிச் செய்கிறோம். மேரி, நாங்கள் கொடுமையானவர்களல்ல. நீ எங்களிடமிருந்து மனக்கலக்கமும் கூடுதல் துயரமும் அடையாமல் ஆறுதல் அடையும்படியாகவே நாங்கள் எப்பொழுதும் செயலாற்றுகிறோம். எங்களுக்குத் தேவையெல்லாம் நீ எங்களை நம்ப வேண்டுமென்பதே. அர்ச். சூசையப்பருடன் நீ இப்படிச் சொல்வதே போதுமானதாயிருக்கும்: “சேசு என்னுடன் இருந்தால் எனக்கு எல்லாம் இருக்கின்றன” என்று. உங்கள் உள்ளங்களைத் தேற்றும்படி மோட்ச கொடைகளுடன் உங்களிடம் வருவோம்.
மனித கொடைகளையும் மனித செளகரியத்தையும் உனக்கு நான் வாக்களிப்பதில்லை. அர்ச். சூசையப்பர் பெற்ற சுபாவத்துக்கு மேலான ஆறுதல்களையே உனக்கும் வாக்களிக்கிறேன். இதை எல்லாரும் அறிந்திருக்கட்டும். ஞானிகள் அளித்த கொடைகள் எளிய அகதிகளின் தேவைகளில் மின்னலைப்போல் வேகமாய் மறைந்துவிட்டன. அவைகளைக் கொண்டு ஒரு வீட்டையும் வாழ்க்கைக்கு அவசியமான தட்டுமுட்டுகளையும் உணவுப் பொருள்களையும் எங்களுக்கு வேலை கிடைக்கிற வரையிலும் வாங்கினோம்.
யூத ஜனங்கள் எப்போதும் ஒருவர்க்கொருவர் உதவி செய்து வந்துள்ளனர். ஆனால் எஜிப்தில் இருந்த யூதர்கள் ஏறக்குறைய எல்லாரும் இம்சிக்கப்பட்ட அகதிகளாகவே இருந்தனர். அவர்களிடம் போய்ச் சேர்ந்த எங்களைப் போலவே அவர்களும் ஏழைகளாயிருந்தனர். எங்களிடம் இருந்த கொஞ்சப் பொருளில் எஜிப்தில் குடியேறுவதற்கான செலவுபோக நாங்கள் மிச்சம் பிடித்ததை, சேசு பெரியவரானபோது பயன்படுத்த விரும்பினோம். அது நாங்கள் திரும்பி வருவதற்கும், நாசரேத்திற்கு வந்தபின் வீட்டையும், பட்டரையையும் சீர்ப்படுத்திக் கொள்வதற்கும் போதுமானதாக மட்டும் இருந்தது. ஏனென்றால் காலம் மாறுகிறது. ஆயினும் மனித பேராசை அப்படியே உள்ளது. அது அடுத்தவர்களின் தேவைகளை வைத்து அவர்களை கொடுமையாக உறிஞ்சி விடுகிறது.
சேசு எங்களோடிருந்தார் என்பதற்காக எந்த லெளகீக செல்வமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சேசுவிடம் ஐக்கியம் இல்லாதிருக்கும்போதே உலக செல்வம் கிடைக்க வேண்டுமென்று உங்களில் பலர் எதிர்பார்க்கிறீர்கள். “ஆத்துமத்திற்குரிய காரியங்களையே தேடுங்கள்” என்று அவர் கூறியதை இவர்கள் மறக்கிறார்கள். மற்றதெல்லாம் அநாவசியம். கடவுள் உணவையும் தருகிறார். மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் தருகிறார். ஏனென்றால் உங்கள் ஆன்மாவின் பேழையாக சரீரம் இருக்கும் வரையிலும் உங்களுக்கு உணவு தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால் முதன்முதலாக உங்கள் ஆத்துமத்திற்காக அவருடைய வரப்பிரசாதத்தைக் கேட்டு மன்றாடுங்கள். மற்றவை உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும்.
மனித முறையில் பார்த்தால், சூசையப்பர் சேசுவிடம் கொண்ட ஐக்கியத்தினால் அவருக்குக் கிடைத்ததெல்லாம் கவலைகளும் களைப்பும் இம்சைகளும் பட்டினியும்தான். வேறு எதுவும் அவருக்குக் கிடைத்ததில்லை. ஆனால் அவர் சேசுவையே நோக்கமாகக் கொண்டிருந்ததால் இவையெல்லாம் அவருடைய ஆத்தும சமாதானமாகவும் சுபாவத்துக்கு மேலான மகிழ்ச்சியாகவும் மாற்றப்பட்டன. அர்ச். சூசையப்பர்: “நமக்கு வேறு எதுவும் இல்லாவிட்டாலும் நாம் எல்லாவற்றையும் கொண்டிருப்போம். ஏனென்றால் நாம் சேசுவைக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னாரே, அந்த நிலைக்கு உன்னைக் கொண்டு செல்ல நான் விரும்புகிறேன்.
உன் இருதயம் உடைந்திருக்கிறதென்பதை நான் அறிவேன். உன் மனமும் மங்கிப் போயிருக்கிறது. உன் உயிரும் குன்றி வருகிறது. ஆனால் மேரி!... நீ சேசுவுக்கு சொந்தமாயிருக்கிறாயா? நீ அவருக்கு சொந்தமாயிருக்க விரும்புகிறாயா? அவர் எங்கே, எப்படி இறந்தார்? என் அன்புப் பிள்ளாய், அழு. ஆனால் தைரியமாக நிலைத்து நில். வேதசாட்சியம் என்பது, வேதனை எந்த வகையில் வருகிறது என்பதிலல்ல, வேதசாட்சி எவ்வளவு மாறா மனத்தோடு அதை அனுபவிக்கிறான் என்பதில் அடங்கியிருக்கிறது. இவ்வாறு, ஒரு ஆயுதத்தால் கொல்லப்படுவது வேதசாட்சிய மென்றால், உள்ளத்தின் துயரமும் அவ்வாறே வேதசாட்சியம்தான் - அதே நோக்கத்திற்காக அது தாங்கப்பட்டால். நீ என் குமாரனுக்காகவே வேதனைப்படுகிறாய். உன் சகோதரர்களுக்காக நீ செய்வதெல்லாமும், அவர்கள் இரட்சிக்கப்பட விரும்புகிற சேசுவுக்காகவே. இவ்வாறு உன் வேதனை வேதசாட்சியமே. அதிலே நிலைத்திரு. நீயாக எதையும் செய்யத் தேடாதே. வேதனையின் நெருக்குதல் மிகக் கூடுதலாயிருக்கிறது; அதனால் நீயே உனக்கு வழிகாட்டிக் கொள்ளவும், உன் மனித சுபாவத்தை அடக்கி, அழாமல் அது தடுக்கவும் போதிய பலனைக் கொண்டிருக்க உன்னால் முடியாது. நீ செய்ய வேண்டியதெல்லாம், துயரம் உன்னை வேதனைப்படுத்துவதை எதிர்க்காமல் விட்டுவிடுவதே. சேசுவிடம்: “எனக்கு உதவி செய்யும்” என்று நீ சொல்வதே போதுமானது? உன்னால் செய்யக்கூடாததை அவர் உன்னில் செய்வார். அவரில் தங்கியிரு. எப்போதும் அவரில் தங்கியிரு. அவரிடமிருந்து வெளியே வர விரும்பாதே. நீ அதை விரும்பாவிட்டால் நீ வெளியே வர மாட்டாய். நீ எங்கேயிருக்கிறாய் என்று காணக்கூட விடாதபடி உன் துயரம் அவ்வளவு ஆழமாயிருந்தாலும், நீ எப்போதும் அவரிலேயே இருப்பாய்.
உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்: “பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக!” எப்போதும் உன் இருதயத்தின் கூக்குரல் இதுவாக இருக்கட்டும் - நீ மோட்சத்தில் இதைச் சொல்லும்வரை. ஆண்டவருடைய வரப்பிரசாதம் எப்போதும் உன்னுடன் இருப்பதாக!
- மரியாயே வாழ்க -
“கடவுள்-மனிதன் காவியம்” முதல் புத்தகம் முற்றும்.
(இரண்டாம் புத்தகம்: சேசு கிறீஸ்துவின் பகிரங்க வாழ்வின் முதல் ஆண்டு)