உலக சிருஷ்டிப்பில் வெளிப்பட்ட தேவஞானமானவரின் அற்புத வல்லமை!

31. ஒரு முழுமையான நித்தியத்திற்குப் பிறகு தாம் ஒளியையும், பரலோகத்தையும், பூலோகத்தையும் உண்டாக்கியபோது, நித்திய ஞான மானவர் தமது பிதாவின் உள்ளரங்கத்திற்கு வெளியே தம்மை வெளிப்படுத்தத் தொடங்கினார். நித்திய ஞானமாகிய வார்த்தையின் வழியாகவே சகலமும் உண்டாக்கப்பட்டன என்று அர்ச். அருளப்பர் கூறுகிறார்: ''அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்டது" (அரு. 1:3; காண். எபி. 1:2; கொலோ. 1:16-17)

நித்திய ஞானமானவர் சகல காரியங்களுடையவும் தாயும், அவற்றை உண்டாக்கியவருமாய் இருக்கிறார் என்று சாலமோன் கூறுகிறார். சாலமோன் அவரைப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் என்று மட்டும் அழைக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர் பிரபஞ்சத்தின் தாய் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு தாய் தன் குழந்தையைப் பேணிப் பராமரிப்பது போலவே சிருஷ்டிகரும் தமது கரங்களின் வேலையை நேசித்து, அதைப் பேணிப் பராமரிக்கிறார் (ஞான. 7:12,21). 

32. எல்லாக் காரியங்களையும் உண்டாக்கிய பின், நித்திய ஞான மானவர் அவற்றைக் கட்டுப்படுத்திப் பராமரித்துப் புதுப்பிக்கும் படியாக, அவற்றில் தங்கியிருக்கிறார் (ஞான. 1:7;7:27). இந்த உன்னதமான உத்தம் அழகாக இருப்பவர்தான் பிரபஞ்சத்தைப் படைத்த பின்னர், நாம் அதில் காணும் அதியற்புதமான ஒழுங்கையும் ஸ்தாபித்தார். சகலத்தையும் வகை வகையாய்ப் பிரித்தவரும், ஒழுங்கு படுத்தியவரும், மதிப்பிட்டவரும், பெருகச் செய்தவரும், கணக்கிட்டவரும் அவர்தான்.

அவரே வானங்களை விரித்தார், சூரிய, சந்திரனையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் உத்தம ஒழுங்கில் ஸ்தாபித் தவரும் அவரே. அவரே பூமிக்கு அடித்தளங்களை இட்டார். கடலுக்குரிய எல்லைகளையும், சட்டங்களையும் நியமித்தவரும், பெருங்கடலின் ஆழங்களை நிர்ணயித்தவரும் அவரே. அவரே மலைகளை உயர்த்தினார், சகல காரியங்களுக்கும், நீரூற்று களுக்கும் கூட, கட்டுப்பாடுகள் விதித்தவர் அவரே. இறுதியாக, "(நான்) அவருடனேயே சகலத்தையும் சீர்ப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் சந்தோஷித்துக் கொண்டும், எக்காலமும் அவர் முன்பாக விளையாடிக் கொண்டும், சர்வ லோகத்திலும் விளையாடிக்கொண்டும் இருந்தேன்'' (பழ. 8:30-31) என்று அவர் கூறுகிறார். 

33. தேவ ஞானமானவரின் இந்தப் பரம இரகசியமான விளையாட்டு, அவர் சிருஷ்டித்த அனைத்திலும் காணப்படும் ஏராளமான வகைகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அளவற்ற எண்ணிக்கையில் படைக்கப்பட்ட சம்மனசுக்களின் வெவ்வேறு பிரிவுகளையும், நட்சத்திரங்களின் பல்வேறுபட்ட ஒளிச்சுடர்கள், மனிதர்களின் வேறுபட்ட மனநிலைகள் ஆகியவை பற்றிய சிந்தனைகளையும் தாண்டி, காலங்கள், பருவநிலைகளின் மாற்றங்களையும், மிருகங்களில் காணப்படும் பலதரப்பட்ட உள்ளுணர்வுகளையும், தாவரங்களின் வெவ்வேறு வகைகளையும், மலர்களின் பல வகையான அழகுகளையும், கனிகளின் வெவ்வேறான சுவைகளையும் கண்டு நாம் பெரும் அதிசய உணர்வால் நிரப்பப்படுகிறோம். "ஞானமுள்ளவன் இக்காரியங்களைப் புரிந்து கொள்ளக் கடவான்" (ஓசே. 14:10; காண். எரேமி. 9:12; சங். 106:43). நித்திய ஞானமானவரிடமிருந்து அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொண்டவன் யார்? அவன் மட்டுமே இயற்கையின் இந்த இரகசியங்களைப் புரிந்து கொள்வான். 

34. புனிதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வது போல, நித்திய ஞானமானவர் இந்தக் காரியங்களைப் புனிதர் களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். சில சமயங்களில், தேனீ, எறும்பு ஒரு தானியக் கதிர், ஒரு மலர், ஒரு புழு போன்ற மிக அற்பமான காரியங்களிலும் கடவுள் வைத்துள்ள அழகு, இணக்கம் மற்றும் ஒழுங்கைக் கண்டு அவர்கள் எந்த அளவுக்கு வியந்து போனார்கள் என்றால், இவற்றின் காட்சியும் கூட அவர்களைப் பரவசத்திலும், பேரின்பத்திலும் மூழ்கடித்தன.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...