ஸ்நாபகரின் விருத்தசேதனம்.

4 ஏப்ரல்  1944.

எலிசபெத்தின் இல்லம் மகிழ்ச்சி கொண்டாடுகிறது.  அன்று விருத்தசேதனத்தின் நாள்.

எல்லாம் அழகோடும் ஒழுங்கோடும் இருக்கும்படி மரியா கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அறைகள் எல்லாம் ஒளியோடு பிரகாசமாயிருக்கின்றன.  அழகிய துகில்கள், மிகச் சிறப்பான அலங்கரிப்புகள் எல்லா இடத்திலும் ஜொலிக்கின்றன.  நிறைய ஆட்கள் வந்திருக்கிறார்கள்.  பற்பல ஆட்கூட்டங்களுக்கு நடுவே மரியா துரிதமாய் நடந்து சென்று காரியங்களைச் செய்கிறார்கள்.  மிக அழகான வெண்ணுடை அணிந்து அழகுறக் காட்சியளிக்கிறார்கள்.  

எல்லாராலும் ஒரு பெருமாட்டியாக மதிக்கப்பட்ட எலிசபெத்தம்மாள் தன் விழாவைக் மகிழ்ந்து கொண்டாடுகிறாள்.  அமுதுண்டு நிம்மதியடைந்த குழந்தை அவள் மடியில் கிடத்தப் பட்டிருக்கிறது.

விருத்தசேதன நேரம் வந்து விட்டது.

“இவனுக்கு சக்கரியாஸ் என்று பெயரிடுவோம்.  உமக்கு வயதாகி விட்டது.  உம் பெயரால் பிள்ளை அழைக்கப்படுவதே சரியாகும்” என்று பெரிய ஆண்கள் கூறுகிறார்கள்.

“அப்படியல்ல.  அவனுடைய பெயர் கடவுளின் வல்லமைக்கு சாட்சி கூற வேண்டும்.  அவனுக்கு அருளப்பன் என்று பெயரிட வேண்டும்” என்கிறாள் எலிசபெத்தம்மாள்.

“ஆனால் நம் பந்துக்களில் (உறவினர்களில்) யாருக்கும் அருளப்பன் என்ற பெயர் இல்லையே” என்கிறார்கள் அவர்கள்.

“அதனால் ஒன்றுமில்லை.  அருளப்பன் என்றே அவனுக்குப் பெயரிட வேண்டும்” என்று எலிசபெத் மீண்டும் சொல்லுகிறாள்.

அவர்கள் சக்கரியாசிடம்:  “உம்முடைய அபிப்பிராயம் என்ன?  உம்முடைய பெயரையே பிள்ளைக்கு இட வேண்டும் என்பதுதானே?” என்கிறார்கள்.

“இல்லை” என்று அவர் தலையசைக்கிறார்.  பின் தன் எழுது பலகையை எடுத்து “அவன் பெயர் அருளப்பன்” என்று எழுதுகிறார்.  அவர் அதை எழுதின உடனே அவருடைய நாவு கட்டவிழ்க்கப்பட அவர் வாய் திறந்து:  “ஏனென்றால் அவருடைய தந்தையாகிய எனக்கும் அவன் தாய்க்கும் ஆண்டவருடைய புதிய ஊழினொகிய அவனுக்கும் கடவுள் ஒரு பெரும் வரம் தந்துள்ளார்.  அவன் ஆண்டவரின் மகிமைக்கென தன் வாழ்வைச் செலவிடுவான்.  உலகத்திலும் தேவனுடைய கண் முன்பாகவும் எக்காலத்திற்கும் பெரியவன் என்றழைக்கப்படுவான்.  ஏனெனில் மனந்திரும்பிய இருதயங்களை அவன் மிக உந்நதருக்குக் கொடுப்பான்.  சம்மனசானவர் அப்படிக் கூறினார்.  ஆனால் நான் அதை விசுவசிக்கவில்லை.  இப்பொழுது நான் விசுவசிக்கிறேன்.  ஒளி இப்பொழுது என்னில் இருக்கிறது.  ஒளியானது நம் நடுவில் இருக்கிறது.  ஆனால் நீங்கள் அதைப் பார்ப்பதில்லை.  காணப்படாதிருப்பதே அதன் நியதி.  காரணம், மனிதரின் ஆன்மாக்கள் பளுவுற்று அசமந்தமாகியுள்ளன.  ஆயினும் என் குமாரன் அதைக் காண்பான்.

அதைப் பற்றி எடுத்துக் கூறுவான்.  அதன் பக்கமாய் இஸ்ராயேலில் நீதியுள்ளவர்களின் இருதயங்களைத் திருப்புவான்.  ஓ! அதை விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.  ஆண்டவரின் வார்த்தையை எப்பொழுதும் விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.  ஓ! நித்தியரான சர்வேசுரா!  ஓ!  இஸ்ராயேலின் தேவனே!  நீர் உம்முடைய மக்களைச் சந்தித்து அவர்களை மீட்டதினால் நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக!  உம்முடைய ஊழினொகிய தாவீதின் வீட்டிலே வல்லமையுள்ள ஒரு இரட்சகரை எங்களுக்கு எழும்பச் செய்ததினால் நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக!  எங்கள் எதிரிகளிட மிருந்தும் எங்களைப் பகைக்கிற எல்லாரின் கைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவதற்காக முற்காலத்திலிருந்தே உமது புனித தீர்க்கதரிசிகளின் வாயிலாக நீர் வாக்களித்தபடியும், எங்கள் முன்னோருக்கு இரக்கம் காட்டவும், நீர் உம்முடைய புனித உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளினீர். எங்கள் பிதாவாகிய ஆபிரகாமுக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது இதுவே.  பயத்திலிருந்து விடுதலையையும் எங்கள் எதிரிகளின் கையிலிருந்து மீட்பையும் தருவோமென்றும், மோட்சத்தில் உமக்கு ஊழியம் செய்யவும் எங்கள் வாழ்நாளெல்லாம் உமது சமூகத்தில் பரிசுத்தத்தோடும் நீதியோடும் உமக்கு ஊழியம் செய்யும்படி அனுக்கிரகம் செய்வோம் என்றும் சொல்லியிருந்தீர். நீயோ பாலனே...” இவ்வாறு முடிவு வரை வசனிக்கிறார் (லூக். 1:76-79).

அங்கு கூடியிருந்தவர்கள் குழந்தைக்கு இடப்பட்ட பெயரைப் பற்றியும், நடந்த அற்புதத்தைப் பற்றியும் சக்கரியாஸ் உரைத்த வாக்கியங்களைப் பற்றியும் ஆச்சரியப்படுகிறார்கள்.

சக்கரியாஸ் இவ்வார்த்தைகளைப் பேசவும் எலிசபெத் தம்மாள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, மாதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகின்றாள்.

விருத்தசேதனத்தை நான் காணவில்லை.  ஸ்நாபகரை விருத்தசேதனத்திற்குப் பிறகு கொண்டு வருகிறதையே காண்கிறேன்.  பிள்ளை வீறிட்டு அழுது கொண்டிருக்கிறான்.  அவன் அழுகையை ஒருவராலும், எலிசபெத்தினாலும் கூட நிறுத்த முடியவில்லை.  ஒரு சிறு குதிரைக் குட்டி போல் உதைக்கிறான்.  மாதா ஸ்நாபகரைக் கையில் வாங்குகிறார்கள்.  வாங்கி அவனை சாந்தப்படுத்தி அமர்த்துகிறார்கள்.  சற்று நேரத்தில் குழந்தை அமைதியடைந்து அமைதியாகப் படுத்துவிடுகிறான்.

சாரா கூறுகிறாள்: “பாருங்கள்!  அவனை அவள் எடுத்தால் மட்டும்தான் அவன் அமைதியாயிருக்கிறான்” என்று.

வந்திருந்தவர்கள் வீட்டை விட்டு மெல்லப் புறப்படுகிறார்கள்.  அந்த அறையில் மாதாவும் பாலன் ஸ்நாபகரும் எலிசபெத்தும் மாத்திரம் இருக்கிறார்கள்.

சக்கரியாஸ் வருகிறார்.  கதவைச் சாத்தி விட்டு கண்ணீர் நிறையும் கண்களுடன் மாதாவைப் பார்க்கிறார்.

பேச விரும்புகிறார்.  மவுனமாகிறார்.  மாதாவின் முன்பாக வந்து முழந்தாளிடுகிறார்.  “ஆண்டவருடைய எளிய ஊழியனை ஆசீர்வதியும், ஆசீர்வதியும் ஏனென்றால் உம்மால் ஆசீர்வதிக்க முடியும். ஆண்டவரை உம் உதரத்தில் தாங்கியிருக்கிறீர்.  என்னுடைய தவறை நான் ஒப்புக்கொண்டு, எனக்குக் கூறப்பட்ட யாவற்றையும் நான் விசுவசித்தபோது, ஆண்டவரின் வார்த்தை எனக்குக் கிடைத்தது.   உம்மையும் உம் பாக்கியமான கதியையும் நான் காண்கிறேன்.  யாக்கோபின் தேவனை உம்மிடத்தில் நான் ஆராதிக்கிறேன்.  மீண்டும் குருவாகியுள்ள நான் நித்திய பிதாவை ஆராதிக்கக்கூடிய முதல் ஆலயம் நீர்தான்.  நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர்.  ஏனெனில் உலகத்திற்கு வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டீர்.  இப்பொழுது உலகத்திற்கு அதன் இரட்சகரைக் கொண்டு வருகிறீர்.  உமது மகத்துவத்தை இதற்கு முன் நான் கண்டு கொள்ளாததை மன்னியும்.  நீர் இங்கு வந்தபோது எல்லா வரப்பிரசாதங்களையும் கொண்டு வந்தீர். ஏனெனில் ஓ வரப் பிரசாதத்தால் நிறைந்தவரே!  நீர் எங்கெங்கு சென்றாலும் கடவுள் தம் அற்புதங்களைச் செய்கிறார்.  நீர் உட்புகும் இல்லங்கள் புனிதம் பெற்றவை.  உம் குரலைக் கவனிக்கும் செவிகளும் நீர் தொடும் சரீரங்களும் இருதயங்களும் புனிதம் பெற்றவையே.  ஏனெனில் ஓ உந்நதரின் தாயே!  தீர்க்கதரிசிகளின் கன்னிகையே!  கடவுளின் மக்களுக்கு இரட்சகரைக் கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டவரே!  நீர் வரப்பிரசாதங்களைப் பொழிகின்றீர்!” என்று கூறுகிறார்.

தாழ்ச்சி நிரம்பியவர்களாக மாமரி முறுவலுடன் கூறுகிறார்கள்:

“ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக!  புகழ் அவர் ஒருவருக்கே!  என்னிடமிருந்தல்ல, அவரிடமிருந்தே வருகிறது.  அதை அவர் உமக்குத் தருகிறார்.  நீர் ஆண்டவரை நேசிக்கும் படியாகவும், என்னுடைய குமாரன் பிதாப்பிதாக்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆண்டவரின் நீதிமான்களுக்கும் திறக்கவிருக்கும் சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பெற்றுக் கொள்ள நீர் தகுதி பெறும்படியாகவும், வரவிருக்கும் ஆண்டுகளில் உத்தமதனத்தை நீர் அடைய உதவியாக அவ்வரப்பிரசாதத்தை அவர் உமக்குத் தருகிறார்.  மேலும் இப்பொழுது நீர் பரிசுத்தருக்கு முன்பாக மன்றாடக் கூடியவராயிருப்பதால் தேவனுடைய அடிமையாகிய எனக்காக வேண்டிக் கொள்ளும்.   ஏனெனில் தேவ குமாரனுக்குத் தாயாயிருப்பது மோட்ச ஆனந்தமானால், இரட்சகரின் தாயாயிருப்பது மிகவும் ஆழமான துயரமாகும்.  எனக்காக வேண்டிக் கொள்ளும், ஏனெனில் என் துயரத்தின் பாரம் மணிக்கு மணி கூடிக்கொண்டேயிருக்கிறதை நான் உணருகிறேன்.  அதை என் வாழ்நாள் முழுவதும் நான் தாங்க வேண்டியுள்ளது.  அதன் ஒவ்வொரு பாகமும் எனக்குத் தெரியவில்லையாயினும், உலகம் முழுவதுமே ஒரு ஸ்திரீயாகிய என் தோளின் மேல் வைக்கப்படுவதை விட அதிக பளுவாக உணருகிறேன்.  நான் அதை மோட்சத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டியுள்ளது.  பரிதாபத்திற்குரிய பெண் நான், நான் மட்டுமே அதைத் தாங்க வேண்டியிருக்கும்.  என் குழந்தையே!  என் குமாரனே!  ஆ! சக்கரியாஸே, உம்முடைய பிள்ளையை நான் தாலாட்டினால் அழாமலிருக்கிறான்.  ஆனால் என்னுடைய குமாரனை, நான் தாலாட்டி அவருடைய வேதனையை, சாந்தப்படுத்த என்னால் கூடுமா?... கடவுளின் குருவே, எனக்காக வேண்டிக் கொள்ளும்.  புயலில் சிக்கிய மலர்போல் என் இருதயம் நடுங்குகிறது. நான் மனிதர்களைப் பார்க்கிறேன்.  அவர்களை நேசிக்கிறேன்.  ஆனால் அவர்களுடைய முகங்களுக்குப் பின்னால் எதிரி தோன்றக் காண்கிறேனே!  அவர்களை கடவுளுடையவும் என் குமாரன் சேசுவினுடையவும் பகைவர்களாக அவன் ஆக்குகிறானே!...” 

மாமரி வெளிறிக் காணப்படுகிறார்கள்.  அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.


மாதா கூறுகிறார்கள்:           

தன் பாவங்களை ஒப்புக் கொண்டு அதற்காக மனஸ்தாபப் பட்டு தாழ்ச்சியும் நேர்மையுமுள்ள இருதயத்தோடு சங்கீர்த்தனம் செய்கிறவனைக் கடவுள் மன்னிக்கிறார்.  மன்னிப்பது மட்டுமல்ல, அவனுக்கு சன்மானமளிக்கிறார்.  ஓ!  தாழ்ச்சியும் நேர்மையும் உள்ளவர்களுக்கு என் ஆண்டவர் எவ்வளவு நல்லவராயிருக்கிறார்!  அவரை விசுவசிக்கிறவர்களுக்கும் நம்புகிறவர்களுக்கும் எப்படி நல்லவராயிருக்கிறார்!

உங்கள் ஆத்துமங்களைப் பாரமாக்கி சுவையற்றதாக்கு கிறவைகளை அகற்றுங்கள்.  ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு உங்கள் ஆத்துமங்களைத் தயாரியுங்கள்.  அந்த ஒளி இருட்டில் வெளிச்சமாகவும், ஒரு வழிகாட்டியாகவும் புனிதமான ஆறுதலாகவும் இருக்கின்றது.

ஓ!  கடவுளுடைய புனிதமான சிநேகமே!   அவருடைய பிரமாணிக்கமுள்ளவர்களின் பேரானந்தமே! எதற்கும் இணையில்லாத செல்வமே! உன்னைக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனிமையில் இரான்.  ஒருபோதும் நம்பிக்கையிழப்பின் கசப்பை உணர மாட்டான்.  ஓ பரிசுத்த சிநேகமே!  நீ துயரத்தை அகற்றி விடுவதில்லை.  ஏனென்றால், மனிதாவதாரமான ஒரு கடவுளுக்கு விதிக்கப்பட்டிருந்தது துயரமே.  அதுபோல் மனிதனுக்கும் அது அப்படி இருக்க முடியும்.  ஆனால் நீ இத்துயரத்தின் கசப்பில் இனிமை சேர்க்கிறாய்.  ஒரு பிரகாசத்தையும் அன்பு ஸ்பரிசத்தையும் அதனுடன் கலக்கிறாய்.  அது ஒரு பரலோக தொடுதலோடு சிலுவையை எளிதாக்குகிறது.

மேலும் தெய்வீக தாராளம் உங்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கும்போது, நீங்கள் பெற்றுக் கொண்ட கொடையை கடவுளுக்கு மகிமையளிப்பதற்காகப் பயன்படுத்துங்கள்.  ஒரு நல்ல பொருளை ஆபத்துள்ள ஆயுதமாக்குகிற அறிவற்றவர்களைப் போல் இராதேயுங்கள்.  தங்கள் செல்வத்தை துன்ப பரிதாபமாக மாற்றுகிற ஊதாரிகளைப் போல் இராதேயுங்கள்.

என் பிள்ளைகளே! எதிரியானவன் அதாவது என் சேசுவுக் கெதிராகத் தன்னையே வீசியெறிகிறவன் உங்கள் முகத்தின் பின்னால் நிற்பதை நான் காண்கிறவர்களாகிய நீங்கள், எனக்கு மிஞ்சிய துயரத்தைத் தருகிறீர்கள்.  மிதமிஞ்சிய துயரம் அது!  எல்லாருக்கும் வரப்பிரசாதத்தின் ஊற்றாக இருக்க நான் விரும்புகிறேன்.  ஆனால் உங்களுள் மிக அநேகர் வரப்பிரசாதத்தை விரும்பவில்லை. வரப்பிரசாதமற்ற ஆத்துமத்தோடு “வரங்கள்” வேணுமென்று கேட்கிறீர்கள்.  வரப்பிரசாதத்தின் எதிரிகளாக நீங்கள் இருக்கையில் அது உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

பெரிய வெள்ளிக்கிழமையின் பெரிய மறைபொருள் நெருங்குகிறது.  அது ஆலயங்களில் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் அதை உங்கள் இருதயங்களிலே நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டியது அவசியம்.  கொல்கொத்தாவிலிருந்து இறங்கியவர்களைப் போல உங்கள் மார்பில் அறைந்து கொண்டு “மெய்யாகவே இந்த மனிதன் தேவ குமாரனான இரட்சகராயிருந்தார்” என்று சொல்ல வேண்டும்.  “சேசுவே உமது திருநாமத்தினிமித்தம் எங்களை இரட்சியும்” என்று சொல்லுங்கள்.  “பிதாவே எங்களை மன்னியும்” என்றும், “நான் அபாத்திரன்.  ஆனால் தேவரீர் என்னை மன்னித்து என்னிடம் வருவீராகில் என் ஆன்மா குணமடையும், இனிமேல் பாவஞ் செய்ய நான் விரும்பவில்லை.  ஏனெனில் இனி நான் நோய்ப்பட்டு உமக்குப் பகைவனாவதற்கு நாம் விரும்பவில்லை” என்று கூற வேண்டும்.

பிள்ளைகளே, என் குமாரனின் வார்த்தைகளைக் கொண்டு செபியுங்கள்.  உங்கள் பகைவர்களுக்காக பரம பிதாவைப் பார்த்து, “பிதாவே இவர்களை மன்னியும்” என்று சொல்லுங்கள்.  உங்கள் தப்பறைகளினால் மனம் வெறுப்படைந்து அகன்றுவிட்ட தந்தையைக் கூப்பிட்டு அழையுங்கள்:  “தந்தையே, பிதாவே, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?  நான் பாவியானவன்.  நீர் என்னைக் கைநெகிழ்ந்தால் நான் அழிந்து போவேன்.  பரிசுத்த பிதாவே திரும்பவும் என்னிடம் வாரும்.  நான் இரட்சிக்கப்படும்படி வாரும்.” உங்கள் நித்திய நலனை, உங்கள் ஆத்துமங்களை, பசாசுக்களிட மிருந்து காயப்படாமல் அதைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஒருவரிடம் ஒப்படையுங்கள்:  “பிதாவே என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்.”  நீங்கள் தாழ்ச்சியுடனும் சிநேகத்துடனும் உங்கள் ஆத்துமத்தை சர்வேசுரனிடம் ஒப்படைப்பீர்களானால், அவர், ஒரு தகப்பன் தன் சிறு குழந்தையை வழிநடத்துவதுபோல் அதை நடத்துவார்.  அதைத் தாக்க எதையும் அனுமதிக்க மாட்டார்.

உங்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதற்காக சேசு தம் மரண அவஸ்தையில் ஜெபித்தார்.  அவருடைய பாடுகளின் இக்காலத்தில் அதை நான் உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்.

நீ, மேரி, தாயான என் மகிழ்ச்சியைக் கண்டு அதனால் கவர்ந்திழுக்கப்படுகிறாயே!  இதை நினைத்து ஞாபகத்தில் நிறுத்து:  எப்போதும் அதிகரித்துக்கொண்டே வந்த துயரத்தின் மூலமே நான் கடவுளைக் கொண்டிருந்தேன்.  அத்துயரம் தேவனுடைய வித்துடன் எனக்குள் இறங்கி வந்தது.  ஒரு மாபெரும் விருட்சத்தைப் போல், தன் நுனியால் பரலோகத்தை அது எட்டும்வரை வளர்ந்து வந்துள்ளது.  பின் அது என்னுடைய மாமிசத்தின் மாமிசமானவரை உயிரற்ற நிலையில் என் மடிமீது நான் பெற்றபோது, அவருடைய சித்திரவதைகளைக் கண்டு அவற்றை எத்தனையென்று நான் எண்ணியபோது, என்னுடைய துயரத்தின் கடைசித்துளி வரையிலும் நான் உட்கொள்வதற்காக அவருடைய கிழிக்கப்பட்ட இருதயத்தை நான் தொட்டபோது, அத்துயர விருட்சத்தின் வேர்கள் நரகத்தை எட்டின.”