இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கெட்டவர்களுக்கு சமாதானமில்லை!

சமாதானம்! என்ன சமாதானம்? இல்லை என்கிறார் சர்வேசுரன். "கெட்டவர்களுக்கு சமாதானமில்லை'' (இசை.48:22). ஒருவனுக்கு வலிமை மிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அவனால் சமாதானமாய் உண்ணவோ, உறங்கவோ முடியாது; கடவுளையே தன் எதிரியாகக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா?!

இருதயத்தைத் திருப்திப்படுத்த இயலாத இவ்வுலக இன்பங் களும், செல்வங்களும் வீண் என்று மட்டும் சாலமோன் சொல்லாமல், அவை ஆத்துமத்தை சஞ்சலப்படுத்தும் வேதனைகள் என்றும் கூறுகிறார். ""எல்லாம் விழலும், ஆத்துமத்திற்கு சஞ்சலமுமா யிருக்கின்றன'' (சங்கப்.1:14). பரிதாபத்திற்குரிய பாவிகள்! தங்கள் பாவங்களில் இன்பம் காணலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், ஆனால் கசப்பையும், மனவுறுத்தலையும் மட்டுமே அவர்கள் காண்கிறார்கள்: ""அவர்கள் வழிகளில் அழிவும் நிர்ப்பாக்கியமும் இருக்கின்றன. சமாதானத்தின் வழியை அவர்கள் அறிந்ததில்லை'' (சங்.13:3). சமாதானம்! என்ன சமாதானம்! இல்லை என்கிறார் ஆண்டவர்: ""கெட்டவர்களுக்கு சமாதானமில்லை'' (இசை.48:22). முதலாவதாக, பாவம் தன்னோடு தேவ பழிவாங்குதல் பற்றிய கடும் அச்சத்தைக் கொண்டு வருகிறது. ஒருவனுக்கு வலிமை மிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அவனால் சமாதானமாய் உண்ணவோ, உறங்கவோ முடியாது; கடவுளையே தன் எதிரியாகக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா? ""தீமை செய்பவர்களுக்கு அஞ்சுங்கள்'' (பழமொழி.10:29). ஒரு நில நடுக்கமோ, இடி முழக்கமோ உண்டானால், பாவத்தில் வாழ்பவன் எப்படி நடுங்காமலிருப்பான்! அசையும் ஒவ்வொரு இலையும் கூட அவனை எச்சரிக்கிறது: ""பேரச்சத்தின் ஓசை எப்போதும் அவன் காதுகளில் இருக்கிறது'' (யோபு.28:1). தன்னைத் துரத்துபவனைக் காணாவிடினும், அவன் பறந்தோடுகிறான். ""எவனும் துரத்தாமலே தீயவன் பறந்தோடிப் போகிறான்'' (பழ.28:1). அவனைத் துரத்துவது யார்? அவனுடைய சொந்தப் பாவமே. காயின் தன் சகோதரனான ஆபேலைக் கொன்றபின்: ""ஆகவே, என்னைக் காண்கிற எவனும் என்னைக் கொல்வானே!'' என்றான் (ஆதி.4:4). எவனும் அவனைக் காயப்படுத்த மாட்டான் என்று ஆண்டவர் அவனுக்கு உறுதி தந்த போதிலும் - இல்லை, அது அப்படி இருக்காது - வேதாகமம் கூறுவது போல, காயின் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும் ஓர் அகதியாக இருந்தான்: ""காயின் பூமியின்மீது பரதேசியாய் சஞ்சரித்தான்'' (ஆதி.4:16). காயினைத் துன்பப்படுத்தியது அவனுடைய சொந்தப் பாவங்களே அல்லாமல் வேறு என்ன?

மேலும், பாவம் தன்னோடு மனவுறுத்தலையும்--இடை விடாமல் அரித்துத் தின்னும் அந்தக் கொடூரமான புழுவையும்-- கொண்டு வருகிறது. ஈனப் பாவி, நாடகத்திற்கும், நடனங்களுக்கும், விருந்துகளுக்கும் போகிறான். ; அவனது மனசாட்சி அவனிடம்: ""நீ கடவுளின் பகைவனாக இருக்கிறாய்; நீ இறக்க நேர்ந்தால், எங்கே செல்வாய்?'' என்று கேட்கிறது. மனவுறுத்தல் இவ்வாழ்விலும் கூட எவ்வளவு பெரிய வாதை என்றால், அதிலிருந்து தப்பிப்பதற்காகச் சிலர் தற்கொலை செய்து விடுகிறார்கள். இவர்களில் ஒருவன் அவநம்பிக்கையின் காரணமாக நான்று கொண்ட செத்த யூதாஸ் ஆவான். மற்றொருவனைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கப் படுகிறது: அவன் ஒரு குழந்தையைக் கொலை செய்தபின், மன உறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு துறவி ஆனான். ஆனால் துறவறத்திலும் கூட சமாதானத்தைக் கண்டடைய முடியாமல், அவன் ஒரு நீதிபதியிடம் போய், தன் குற்றத்தை அவரிடம் ஒத்துக் கொண்டு, மரண தண்டனைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டான். 

ஓ வீணாக்கப்பட்டு விட்ட வாழ்வே! ஓ என் தேவனே, உம்மை நோகச் செய்தபின் நான் பட்ட வேதனைகளை உம்மை மகிழ்விக்கும் கருத்தோடு நான் அனுபவித்திருந்தேன் என்றால், மோட்சத்திற்காக எவ்வளவு அதிகமான பேறுபலனை இப்போது நான் பெற்றிருப்பேன்! ஆ, என் ஆண்டவரே, எதற்காக நான் உம்மை விட்டுப் பிரிந்து, உமது வரப்பிரசாதத்தை இழந்து போனேன்? ஒரு குறுகிய கால, விஷமேறிய இன்பங்களுக்காக! அவையோ எனக்குச் சொந்தமான அடுத்த கணமே மாயமாக மறைந்து விட்டன, ஆனதால் என் இருதயத்தை அவை முட்களும், கசப்பும் நிறைந்ததாக விட்டுச் சென்றன. ஆ, என் பாவங்களே, நான் ஆயிரம் தடவை உங்களை வெறுத்துச் சபிக்கிறேன். என் சர்வேசுரா, எவ்வளவோ பொறுமையோடு என்னை சகித்துக் கொண்ட உமது இரக்கத்தை நான் வாழ்த்திப் போற்றுகிறேன். என் சிருஷ்டிகரும் மீட்பரு மானவரே, எனக்காக உம் உயிரைக் கையளித்தவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை நான் நேசிப்பதால், உம்மை நோகச் செய்ததற்காக என் முழு இருதயத்தோடும் மனஸ்தாபப்படுகிறேன்.

கடவுள் பாவிகளைப் புயல்வீசும் கடலுக்கு ஒப்பிடுகிறார். "துன்மார்க்கரோ, அடங்க அறியாது கொதித்தெழும் கடலைப் போல்... இருக்கிறார்கள்'' (இசை.57:20). நான் உன்னிடம் கேட்கிறேன்: யாராவது ஒருவனை நாடக அரங்குக்கு, அல்லது நடன அரங்குக்கு, அல்லது ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்று, அங்கே அவனைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டால், அங்கே நடைபெறும் கேளிக்கைகளை அவனால் அனுபவிக்க முடியுமா? பாவியின் நிலையும் அதுதான். உலக உல்லாசங்களுக்கு நடுவில், ஆனால் கடவுள் இன்றி இருக்கிற அவனது ஆத்துமம் தலைகீழாகத் திருப்பப்பட்டது போல் இருக்கிறது. அவன் உண்ணலாம், குடிக்கலாம், நடனமாடலாம்; ஆடம்பரமான உடைகள் அணிந்து, பிறரால் மதித்துப் போற்றப்படலாம், கெளரவிக்கப்படலாம், அல்லது பெரும் உலக செல்வங்கள் அவனுக்குச் சொந்தமாகலாம். ஆனால் அவன் சமாதானத்தைக் கொண்டிருக்க மாட்டான்: கெட்டவர்களுக்கு சமாதானமில்லை. சமாதானம் கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது; கடவுள் தம் எதிரிகளுக்கு அல்ல, தம் நண்பர் களுக்கே அதைக் கொடுக்கிறார். இவ்வுலக இன்பங்கள் வறண்டு போகின்றன என்று அர்ச். வின்சென்ட் ஃபெரர் கூறுகிறார்; அவை இருதயத்திற்குள் நுழைவதில்லை: ""எங்கே தாகம் இருக்கிறதோ, அங்கே ஊடுருவிச் செல்லாத நீர்த்தாரைகள் அவை.'' பாவி அழகிய பின்னல் வேலை செய்த விலையேறப்பெற்ற உடைகளை அணியலாம், அல்லது தன் விரலில் அற்புதமான வைர மோதிரம் அணியலாம்; தன் விருப்பப்படி அருமையான அறுசுவை விருந்தாடலாம்; ஆனால் அவனது பரிதாபமான இருதயம் முட்களும், கசப்பும் நிரம்பியதாகவே நிலைத்திருக்கும்; ஆகவே செல்வங்களும், இன்பங்களும், கேளிக்கைகளும் அவனைச் சூழ்ந்திருந்தாலும், எப்போதும் அமைதியற்றவனாகவும், சிறு பிரச்சினைக்கும் வெறி பிடித்த நாயைப் போல கோப வெறி கொள்பவனாகவுமே நீ அவனைக் காண்பாய். கடவுளை நேசிப்பவனோ, தனக்கு விரோதமான காரியங்கள் நிகழும்போது, தேவ சித்தத்திடம் தன்னைக் கையளித்து, சமாதானத்தைக் கண்டடைகிறான். ஆனால் தேவ சித்தத்திற்கு விரோதியாக இருப்பவனால் இதைச் செய்ய முடியாது. ஆகவே தன்னை அமைதிப்படுத்தும் வழியை அவன் அறியாதிருப்பான். அந்த மகிழ்ச்சியற்ற மனிதன் பசாசுக்கு ஊழியம் செய்து, மனவேதனையையும், கசப்பையும் மட்டுமே அந்தக் கொடுங்கோலனிடமிருந்து கூலியாகப் பெறுகிறான். ஆ, தேவ வார்த்தை ஒருபோதும் தவற முடியாததாக இருக்கிறது. ""உனக்கு அனைத்தும் மிகுதியாகி, மன மகிழ்ச்சியுடனும், இருதயக் களிப் புடனும் நீ இருக்கையில், உன் தேவனாகிய கர்த்தருக்கு நீ ஊழியம் செய்யாமல் போனதால், பசி வேதனைப்பட்டு, தாக வேதனைப்பட்டு, நிர்வாணம் முதலிய சகல குறைவும், வெறுமையும் பட்டு, கர்த்தர் உனக்கு எதிராக அனுப்பும் சத்துருக்களுக்கு ஊழியம் செய்வாய்'' (உபா.28:47,48) என்று அது கூறுகிறது. பழிவாங்கத் துடிக்கும் மனிதன், தன்னையே பழிதீர்த்துக் கொள்ளும்போதும், பரிசுத்த கற்பில்லாத மனிதன், தான் இச்சித்துத் தேடியதை அடைந்த பின், பேராசையுள்ளவன் தான் நாடியதைப் பெற்றுக் கொண்டபின், எந்தத் துன்பத்தைத்தான் அனுபவிக்க மாட்டான்! ஓ எத்தனை பேர்! அவர்கள் தங்களை அழித்துக் கொள்ளும் விதமாக இப்போது அனுபவிக்கும் துன்பங்களைக் கடவுளுக்காக மட்டும் அனுபவித் திருப்பார்கள் என்றால், உண்மையாகவே அவர்கள் பெரும் புனிதர்களாக ஆகியிருப்பார்கள்!அவர்கள் தங்களை அழித்துக் கொள்ளும் விதமாக இப்போது அனுபவிக்கும் துன்பங்களைக் கடவுளுக்காக மட்டும் அனுபவித் திருப்பார்கள் என்றால், உண்மையாகவே அவர்கள் பெரும் புனிதர்களாக ஆகியிருப்பார்கள்!

என் சர்வேசுரா, என் சர்வேசுரா, நான் ஏன் உம்மை இழந்து போனேன்; உம்மை விற்று எதை வாங்கிக் கொண்டேன்? நான் செய்துள்ள தீமையை இப்போது நான் அறிந்திருக்கிறேன்; இப்போது உமது அன்பை இழப்பதைக் காட்டிலும், அனைத்தையும், உயிரையும் கூட இழக்கவும் நான் தீர்மானம் செய்திருக்கிறேன். நித்திய பிதாவே, சேசுகிறீஸ்துநாதரின் அன்பிற்காக, எனக்கு ஒளி தாரும்; நீர் எவ்வளவு மேலான நன்மைத்தனமாயிருக்கிறீர் என்றும், உமது வரப்பிரசாதத்தை நான் இழக்கும்படியாக, பசாசு எனக்குத் தரும் இன்பங்கள் எவ்வளவு அருவருப்புக்குரியவை என்றும் நான் அறிந்து கொள்ளச் செய்தருளும்; நான் உம்மை நேசிக்கிறேன்; ஆயினும் இன்னும் அதிகமாக உம்மை நேசிக்க நான் விரும்புகிறேன். நீரே என் ஒரே சிந்தனையும், ஒரே ஆசையும், ஒரே நேசமுமாக இருக்க எனக்கு வரமருளும். உமது திருக்குமாரனின் பேறுபலன்களின் வழியாக உமது நன்மைத்தனத்திலிருந்து நான் எல்லாவற்றையும் பெறறுக்கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன். மரியாயே, என் மாதாவே, சேசுகிறீஸ்துநாதரின் மீது உமக்குள்ள அன்பைக் குறித்து, மரணம் வரையில் அவருக்கு ஊழியம் செய்யவும் அவரை நேசிக்கவும் எனக்கு வேண்டிய ஒளியையும், பலத்தையும் பெற்றுத் தர உம்மை மன்றாடுகிறேன்.