இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா கூறுகிறார்கள்

2 ஏப்ரல்  1944.

“நம் அயலார் மட்டிலுள்ள நம் பிறர் சிநேகத்தின் முதல் காரியம், பிறர் மேல் சிநேகமாயிருப்பதே.  இது வார்த்தையில் விளையாடுவதாக உனக்குத் தோன்றக் கூடாது.  தேவ சிநேகம் இருக்கிறது, பிறர் சிநேகமும் இருக்கிறது.  பிறர் சிநேகம் என்பதில் நம்மை நேசிப்பதும் அடங்கியுள்ளது.  ஆனால் பிறரை நேசிப்பதைவிட நம்மை நாம் நேசித்தால் அப்போது நாம் பிறர் சிநேகமுடையவர்களல்ல, சுயநலமுடையவர்கள்.  அனுமதிக்கப் பட்ட காரியங்களிலும் கூட. அயலாரின் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கும் அளவிற்கு நாம் புனிதமுடையவர்களாயிருக்க வேண்டும்.  என் பிள்ளைகளே!  தாராளமுளளவர்களுக்கு கடவுள் தம் வல்லமையாலும் தாராளத்தாலும் வேண்டியதையெல்லாம் தருகிறார் என நிச்சயமாயிருங்கள்.

இந்த நிச்சயம்தான் என்னை என் உறவினள் இருந்த நிலையில், அவளுக்கு உதவி செய்யும்படி என்னை எபிரோனுக்குக் கொண்டு வந்தது.  மனித முறைப்படி உதவி செய்யும் ஆர்வமுடன் நான் வந்தேன்.  ஆனால் அளவு கடந்து வழங்கும் தம் வழக்கப்படி கடவுள், எதிர்பாராத, சுபாவத்துக்கு மேலான உதவியையும் அருளினார்.  சரீர உதவி புரிய நான் சென்றேன்.  கடவுள் என் நற்கருத்தின் வழியாக எலிசபெத்தம்மாளின் உதரத்தின் கனியை அர்ச்சித்தார்.  அதன் மூலமாக ஸ்நாபகர் முன்கூட்டியே அர்ச்சிப்படைந்தார்.  வழக்கத்திற்கு மாறான வயதில் கர்ப்பந்தரித்திருந்த வயது சென்ற ஏவாளின் குமாரத்தியின் சரீர வேதனையையும் நீக்கியருளினார். 

அஞ்சாத விசுவாசமுடையவளும், நம்பிக்கையுறுதியுடன் கடவுளின் சித்தத்திற்குப் பணிகிற ஸ்திரீயுமான எலிசபெத்தம்மாள், எனக்குள் வைத்து மூடப்பட்டிருந்த பரம இரகசியத்தை அறியும் தகுதி பெற்றாள்.  அவளுடைய உதரத்தில் காணப்பட்ட குலுங்குதலின் வழியாக தேவ ஆவியானவர் அவளுடன் பேசினார்.  தனது புனித தாயிடமிருந்து தன்னைப் பிரித்ததும், அதே சமயம் அவளுடன் தன்னை இணைத்ததுமாகிய, நரம்புகளாலும் மாம்சத்தாலும் ஆன திரைகளினூடே ஸ்நாபகர், வார்த்தையானவரை அறிமுகப்படுத்தும் தம் முதல் உரையை ஆற்றினார்.

ஆண்டவருடைய தாயாக இருக்கும் என் பாக்கியத்தை நானும் அவளிடம் மறுக்கவில்லை.  ஏனென்றால் அந்தச் செய்தியை அறிய அவள் தகுதி பெற்றிருந்தாள்.  ஒளியானவரும் தம்மை அவளுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.  அதை மறுப்பது கடவுளுக்கு நீதியின்படி கொடுக்கப்பட வேண்டிய புகழ்ச்சியை மறுப்பதாயிருந்திருக்கும்.  அந்தப் புகழ்ச்சியை  நான் என்னுள் தாங்கியிருந்தேன்.  அதை நான் யாரிடமும் சொல்லக் கூடாததாயிருந்ததால், செடிகளிடமும், மலர்களிடமும், நட்சத்திரங்களிடமும், சூரியனிடமும், பாடும் பறவைகளிடமும், பொறுமையுள்ள செம்மறி ஆடுகளிடமும், சலசலத்து ஓடும் தண்ணீரிடமும், மோட்சத்திலிருந்து இறங்கி என்னிடம் வந்து என்னை முத்தமிட்ட பொன்மய ஒளியிடமும் அதை நான் மீண்டும் மீண்டும் கூறினேன்.  ஆனால், நாமே நம் ஜெபங்களைச் சொல்வதை விட சேர்ந்து அவைகளைச் சொல்வது அதிக இனிமையாக இருக்கின்றது.  என் பாக்கியத்தை உலகமெல்லாம் அறிய நான் விரும்பினேன் - எனக்காக அல்ல, ஆனால் எல்லாரும் ஆண்டவரை வாழ்த்துவதில் என்னுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.

அதை சக்கரியாஸிடம் வெளியிடாதிருக்கும்படி விவேகம் என்னைத் தடுத்தது.  வெளியிட்டிருந்தால் அது கடவுளுடைய கைங்கரியத்தைத் தாண்டுவதாயிருந்திருக்கும்.  நான் சர்வேசுரனின் பத்தினியும், தாயுமாக இருந்தாலும் இன்னும் நான் அவருடைய அடிமைதான்.  அளவற்ற விதமாக அவர் என்னை நேசித்திருக்கிறார் என்பதற்காக ஒரு கட்டளை விஷயத்தில் நான் அவருக்குப் பதிலாகவோ அவரை மிஞ்சியோ செயல்படக் கூடாது.

எலிசபெத் தன் புனிதத்தினால் அதைக் கண்டுபிடித்து மவுனம் காத்தாள்.  ஏனென்றால் புனிதனாயிருப்பவன் எப்போதும் பணிவும் தாழ்ச்சியும் உடையவனாயிருக்கிறான்.

கடவுளின்  கொடை நம் நன்மைத்தனத்தை அதிகரிக்க வேண்டும்.  அவரிடமிருந்து எவ்வளவு அதிகம் பெற்றுக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக நாம் கொடுக்க வேண்டும்.  ஏனென்றால் நாம் எவ்வளவுக்கு அதிகமாகப் பெற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அவர் நம்முடனும் நமக்குள்ளும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.  ஆகவே அவர் எவ்வளவிற்கு அதிகமாய் நம்முடனும் நமக்குள்ளும் இருக்கிறாரோ அவ்வளவிற்கு அவருடைய உத்தமதனத்தை அடைய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதனால்தான் நான் என்னுடைய வேலையைப் பிந்த வைத்து எலிசபெத்திற்காக உழைத்தேன்.  எனக்கு நேரமில்லாமல் போகக் கூடுமென்று நான் பயப்படவில்லை.  சர்வேசுரனே காலத்தின் அதிபதியாயிருக்கிறார். சாதாரணமான காரியங்களில் கூட அவரை நம்பியிருக்கிறவர்களுக்கு அவர் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்.  சுயநலம், காரியங்களைத் துரிதப்படுத்துவதில்லை, அவற்றைப் பிந்த வைக்கிறது.  பிறர் சிநேகம் பிந்த வைப்பதில்லை, அது துரிதப்படுத்துகிறது.  இதை எப்போதும் நினைவில் கொள்.

எலிசபெத்தம்மாளின் வீட்டில் எவ்வளவு சமாதானம் இருந்தது!  நான் சூசையப்பரைப் பற்றியும்... உலக இரட்சகராகிய என் குமாரனைப் பற்றியும் கவலைப்பட்டிராவிட்டால் நான் மகிழ்ச்சியாயிருந்திருப்பேன்.  ஆனால் ஏற்கெனவே சிலுவை, தன் நிழலை என் வாழ்வில் படிய விட்டிருந்தது. தீர்க்கதரிசிகளின்  குரல்கள் துக்க மணியைப் போல் எனக்குக் கேட்டன.

என் பெயர் மரியா.  என் இருதயத்தில் கடவுள் ஊற்றிய இனிமையுடன்  கசப்பும் எப்போதும் கலந்திருந்தது.  என் குமாரனின் மரணம் வரையிலும் அது அதிகமதிகமாய் கூடி வந்தது. ஆனால் மேரி, கடவுள் தம் மகிமைக்காக, பலியான்மாக்களாக நம்மை அழைக்கும் போது, ஓ! பலவீனர்களைத் திடப்படுத்தி, மோட்சத்தை அவர்கள் அடையக் கூடியவர்களாக்கும்படி, அப்பமாக நம் வேதனையை மாற்றுவதற்காக மாவரைக்கும் இயந்திரத்தில் தானியத்தைப் போல் அரைக்கப்படுவது இனிமையாகவே இருக்கிறது.

இப்பொழுது இது போதுமானது.  நீ மகிழ்ச்சியாகவும் களைப்பாகவும் இருக்கிறாய்.  என் ஆசீரோடு இளைப்பாறு.